வேங்கடம் முதல் குமரி வரை 4
குன்றக்குடி அடிகளார்
வேங்கடம் முதல் குமரி வரை
(நான்காம் பாகம்)
- பொருநைத் துறையிலே -
கலைமாமணி
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
கலைஞன் பதிப்பகம்
10 கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை - 600017
RS. 70.00
VENKATAM MUTHAL KUMARI VARAI - IV)
by
Τho. Μu. ΒΑSΑΚΑRΑ ΤΟΝDΑΙΜΑΝ
First Edition : 1962
Fourth Edition : 2001
Published by
KALAIGNAAN PATHIPAGAM
10 Kannadhasan Salai
T. Nagar, Chennai - 600 017
Typeset
LaserPoirt
Chennai- 600 083.
Printed at
Sakthi Printers,
Chennai - 600 021.
முன்னுரை
"வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.
இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்கி வைகைக் கரையில் நடந்து பொருநைத் துறையிலே படிந்து கன்னிக்குமரி சந்நிதிவரை செல்கிறது. இத்துடன் தமிழ் நாட்டுத் தலயாத்திரையும் ஒருவாறாக முடிவுறுகிறது. இனி வடநாட்டுத் தலயாத்திரையைத் துவங்கவேண்டியதுதான். அந்தத் தல வரலாற்றுக் கட்டுரைகளும் வேங்கடத்ததுக்கு அப்பால் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிட எண்ணம். இறை அருள் கூட்ட வேணும்.
கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்தன. அப்போது அவைகளைப் பாராட்டி எழுதிய அன்பர் பலர். அவர்கள் தந்த ஊக்கமே இக்கட்டுரைகள் நூல் வடிவில் வருவதற்கு காரணமாயிருந்தது. அந்த அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி.
இந்த நான்காம் தொகுதியில் ஒரு நல்ல முகவுரையைச் சகோதரர் திரு. சா. கணேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அது ஓர் அரிய ஆராய்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அவர்களோடு நான் இருபது வருஷங்களுக்கு மேலாகத் தொடர்பு கொண்டவன். அவர்கள் நடத்தும் கம்பன் பணியில் எல்லாம் பங்கு கொண்டவன். அவர்கள் ஆசியுடன் இப்புத்தகம் வெளிவருவது ஒரு பாக்கியம் என்றே கருதுகின்றேன். அவர்கள் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.
என் இலக்கிய வாழ்வை செப்பம் செய்தவர்கள் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள், அவர்களுக்கும் முன்னால் என்னிடம் அன்பு கொண்டிருந்தவர்கள் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள். அவர்கள் நினைவு என் உள்ளத்தில் என்றும் பசுமையாகவே இருக்கிறது. பொருநைத் துறையிலே என்ற நூலை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
புத்தகம் வெளிவருவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள் புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிற்கு மேலாக இக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக உருவில் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பம் நன்றியும்.
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்
முகவுரை
"வடவேங்கடம்; தென் குமரி,
ஆய் இடை
தமிழ் கூறும் நல் உலகம்”
(வடக்கில் வேங்கட மலையையும், தெற்கில் குமரி முனையுைம், கொண்ட நிலப்பரப்பே தமிழ் மொழி பேசும், உயர்ந்தோர் பொழும் நன்னாடு) என்று தமிழ் நாட்டின் எல்லையே, பனம்பாரனார் என்னும் பழந்தமிழ்ப் பெரியார் உணர்த்தி நிற்கிறார். தமிழ் நாட்டை ‘நல் உலகம்' என்றது ஏன்? நன்மை பயப்பதும், மேலவர் வாழ்வதுமான நாட்டையே நல் உலகம் என்னலாம் இல்லையா?
ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அன்பும், அறனும், செறிந்து பண்பும் பயனும் மலர வாழ்ந்து காட்டியும், தேர்ந்துரைத்தும் வான்புகழ் பூத்த நல்லோர்களை உலகினுக்குத் தந்தது இந்நாடு, அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே மனிதப் பிறவியின் பயன் என்பதை உணர்த்தி, வாழ்வாங்கு வாழ, வழி வகுத்த மேலோர்கள் நிரம்பிய நாடு இது. இந்நாட்டு இலக்கியங்கள் முழுவதுமே மக்களை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி காட்டுவனவாகும். இகத்தில் உள்ள இன்பத்திற்கு ஓர் அளவு கோலாய் அமைவதுடன், பரத்தில் உள்ள இன்பத்தை உணர்த்தும் நல் ஓவியமாகவும் தமிழர் இலக்கியம் அமையும்.
இலக்கியங்களை எல்லாம் தொகுத்து, வகுத்து, பகுத்தறிவோமானால் பல்வேறுபட்ட வகைகள் இருப்பதை உணர்வோம். துறையாலும் முறையாலும் வேறுபட்டவை ஆனாலும், நெறியாலும் முடிவாலும் மாறுபடாமை தமிழ் கூறும் நல் உலகத்தின் அருமையாகும். அதனாலேதான் எந்த மொழியையும் விடத் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் மலிந்து பொலிகின்றன. சிருங்காரத் துறையில் பிரபந்தம் இயற்றினாலும் பெரும்பாலோர் கடவுளையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டனர். மன்னர் போன்ற மானிடர் மீது பாடியவர்களும் கூட இறைவன் தன்மையைப் புலப்படுத்த மறந்தாரில்லை. பல்வேறு காலங்களில், பல்வேறு துறைகளில், பல்வேறு புலவர்களால் முன்னர் பாடப் பெற்ற தனிப்பாடல்களைத் திரட்டித் தொகை நூல் (Anthology) ஆக்கினார்கள் பின் வந்தவர்கள். அவர்கள் கூட, அதற்கு, இறைவணக்கம் இன்றியமையாதது என்று கருதி எழுதிச் சேர்த்தனர் என்றால் நாட்டு மக்களில் மனத்தில் கடவுளுணர்ச்சி எவ்வளவு ஊறிக்கிடக்கிறது. என்பதை சொல்லவா வேண்டும்.
தமிழ் நாட்டுத் தொன்மையும், தட்ப வெப்பமும், சூழ்நிலையும், உண்டி முதலியனவும், சேர்ந்து மக்களை எளிய வாழ்வினராகவும் உயர்ந்த பண்பினராகவும் ஆக்கிவிட்டன. அந்த மனப்பண்பின் சிகரமே இன்று தமிழ் நாடு முழுவதும் வானளாவிய விமானங்களுடனும் கோபுரங்களுடனும் கோயில்களாக ஓங்கி உலகறிய விளங்குகின்றன. சுருக்கமாகச் சொன்னால் மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள கோயில்கள் அனைத்தையம் எண்ணிக் கூட்டிப் பார்த்தால் தமிழகம் ஒன்றில் மட்டும் உள்ள கோயில்களின் தொகைக்குக் குறைவேதான், இது உண்மை; வெறும் புகழ்ச்சி அல்ல.
அதனாலே யன்றே!, மாணிக்கவாசகப் பெருமான் 'எந்நாட்டவருக்கும் இறைவனாய் உள்ளவனை' 'தென்னாடு உடைய சிவன்!' என்றுரைக்கிறார்! 'சிவன்' என்றால் ஏதோ பூச்சுக்காரர்களுக்கே உரியவன் என்று கொண்டு நாம் இடர்ப்பட, வேண்டாம். 'சிவன்' என்றால் நன்மை பயப்பவன் 'நன்றுடையான்' என்றே பொருள். கடவுளைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான பெயர்களுள் 'சிவன்' என்பதும் ஒன்று. அந்தக் கடவுள் தென்னாட்டையே தன்னாடாகக் கொண்டு விட்டானாம். அதையே சிவலோகமாகவும் ஆக்கிக் கொண்டு விட்டானாம் அந்த அப்பு ஆர் சடையப்பன். 'நல் உலகம்' 'சிவலோகம்' இரண்டும் ஒரு பொருளையே தருவன என்பதை யாரே அறியார்?
ஏன் இறைவன் தமிழ்நாட்டைத் தன்னாடாக ஆக்கிக் கொண்டான்? இங்குதான் பண்ணோடு தமிழ் பாடும் பக்த மணிகள் பல்லோர் இருக்கின்றனர். சொல்லிலும், பொருளிலும் எல்லையில்லாப் பரம்பொருளைக் காண்பவர்கள் இருக்கின்றனர். 'பார்க்குமிடம் எங்கலும் நீக்கமற நிறைந்துள்ளான், போக்கும் வரவும் இல்லாப் புண்ணியன்' என்றுணர்பவர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
அதற்கெல்லாம் மேலாக, பாடலொடு ஆடல் பயின்றிடவும், வேதமொடு ஆகம விழுநூல் கற்றிடவும், சிற்ப முதலிய தெய்விகக் கலைகளைத் தேர்ந்திடவும், வாணிக, நீதி மன்றங்கள் கூடிடவும், எல்லாக் கலையும், எல்லாப் பணியும், எல்லாப் பொருளும் ஈசனதே என்னும் மெய்யுணர்வு மலர்ந்திடவும், தக்கதோர் இடமாய் தழைத்தலை கோயில்கள். கல்வியால் அறிவும், அறிவால் ஒழுக்கமும் வளர்ந்து அவை கலை மலர்ந்து இன்ப மனம் பரப்பி மக்களை மக்களாக வாழவைப்பதும் கோயில்கள்தாம். ஆலாதாலன்றோ 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதை உலக நீதியாய்க் கொடனர் தமிழ்ப் பெரு மக்கள். அந்த நீதிப்படி ஊர்கள் தோறும் கோயில்கள் ஓங்குவதாயிற்று. கோயில் மிகுதியால் மக்களின் சீலமும் பண்பும் சிறந்து, வாழ்வும் உயரலாயிற்று.
அத்தகைய நல் உலகத்தில், சிவலோகத்தில், ஆம் இந்தத் தமிழ் நாட்டில் நிறைந்து சிறந்து பயன் கொழிக்கும் கோயில்கள் எத்தனை எத்தனையோ! சிற்பத் திறமை, கலை நுணுக்கம், மூர்த்தி அழகு. உருவ அமைதி, பாவப்பொலிவு, தத்துவச் செறிவு முதலிய வேறுபாடுகள்தாம் எத்தனை எத்தனைபோ! தல மகிமை, தீர்த்தச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை, புராணக் கோட்பாடு, இன்னும் என்னென்னவோ அருமைப்பாடுகள். இவற்றையெல்லாம் நானும் நீங்களும் எப்படி கண்டு, அறிந்து துய்த்து மகிழ முடியும்? இதற்கென்று எங்காவது பள்ளிகள் உண்டா? அல்லது, ஏதாவது பாடம் சொல்லும் வகுப்புகளாவது உண்டா ?
நாமுந்தான் கோயில்களுக்குப் போகிறோம். பக்தியில் நாம் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்பதும் உண்மையாக இருக்கலாம். பெரும் பொருள் செலவு செய்து பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறோம்; பலநாள் தங்கிக் கால பூஜைகள் ஒன்றுகூடத் தவறாமல் கண்டு தொழுகிறோம். பாடு கிடக்கிறோம்; நோன்பிருக்கிறோம். அத்துடன் நமது கடமை முடிந்ததென்று திரும்பி விடுகிறோம்.
ஆனால் சிலர் இருக்கிறார்கள். கோயில்களுக்கெல்லாம் செல்வார்கள், பக்தியுடன் மூர்த்திகளைப் பரிவார்கள். விபூதி தீர்த்தம், துளவம் முதலிய பெற்றுக் கொண்டதும் அர்ச்சகருடன் அளவளாவுவார்கள், ஓதுவார்கள் முதலிய வயதானவர்களைக் கண்டால் கேள்வி மழை மொழிவார்கள். மூர்த்தியைக் காண்பார்கள், கண்ணக் கவர்வனவற்றின்பால் கருத்தையும் பதித்துக் கூர்ந்து நோக்குவார்கள். ஏதாவது ஐயம் ஏற்பட்டாலோ அன்றி மேலும் தெளிவு தேவைப் பட்டாலோ, கண்ணை மூடக் கொண்டு பார்ப்பார்கள். பின்னர் ராபர்ட் சீவெல், கில்ஹார்ன், பர்னல்பூலர், ஹீரா, ஹூல்ட்ஸ், ஜோவா துப்ரே, பெர்சி பிரவுன் என்று ஏதேதோ வாய்க்கு வழங்காத பெயரை எல்லாம் உச்சரிப்பார்கள். அப்புறம் ஐயம் தீர்ந்து தெளிவு எற்பட்டு விட்டதற்கு அறிகுறியாக “ஓஹோ! சரிதான்; அதானே பார்த்தேன்" என்று தமக்குதாமே ஆறுதலைந்து நடையைக் கட்டி கொண்டு விடுவார்கள்.
நம்மைப் போன்றவர்கள் கிட்டே வந்து “என்ன ஐயா, இதில் என்ன விசேடம்?” என்று கேட்டால் “இந்தக் 'கர்பெல்' இருக்கிறதே இது எந்த பீரியடா இருக்கலாம் என்று யோசித்தேன். 'வேவ்லைன்' இருப்பதாலே மகேந்திரனுக்குப் பின் காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது” என்ககூறுவார். 'கார்பெல்' என்றால் நமக்கு ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டுத் தூணின் மேலே, பழுவை ஏற்றி தூணின் மையத்திற்குக் கொணர்வதற்காக தமிழனால் வைக்கப்பெற்ற அதற்குத் தமிழில் 'போதிகை' என்று பெயர் என்பது, பாவம் அவருக்குத் தெரியாது. இவர்கட்கு கலையார்வம் நிரம்ப உண்டு. பிறமொழி அறிஞர்கள் எழுதிய விளக்க அல்லது ஆராய்ச்சி நூல்களைப் படித்துவிட்டு அதன் மூலமாக நம் நாட்டு கலைமுறைகளைத் தெரிந்து கொண்டு மதித்துப் போற்ற முன் வந்தவர்கள். அவர்களுள்ளும் மிகச் சிலர் இருக்கிறார்கள், முற்கூறப்பட்டவர்களில் இவர்கள் ஒரு அளவு வேறுபட்டவர்களும் ஆவார்கள். ஓவியம், சிற்பம், படிமம், முதலியவற்றை ஆங்கில நூல்களின் மூலமும், தமிழ் நூல்களின் மூலமும் தெரிந்து கொண்டு பின்னர் நூல்களைத் தூரத்தே வைத்துவிட்டு நேரே பொருளோடு உறவாடத் தொடங்கி விடுவார்கள். வேலைப் பட்டறைகளையெல்லாம் சென்று காண்பார்கள். வேலை முறைகளையும் வித்தியாசங்களையும் மனதில் வாங்கிக்கொண்டு விடுவார்கள். நிர்மாண வகைகள், வர்க்க பேதங்கள், மூர்த்தி பேதங்கள், ஆசன முறைகள், அஸ்த முத்திரைகள் முதலியவற்றில் தெளிவு ஏற்படுத்திக் கொண்டு விடுவார்கள். தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுச் செய்திகள், பக்திப் பாடல்கள், புராணத் தத்துவங்கள், தல புரானைக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் இவற்றிலெல்லாம் கருத்தைச் செலுத்தி கவினுடைபவற்றை மனத்திலும், கையேட்டிலும் பதித்துக் கொண்டு விடுவார்கள்.
இப்படித் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட பிறகு சொல்லையும், சுவையையும், கல்லையும், செம்பையும் எல்லாம் சுவைத்துச் சுவைத்து இன்புறும் இயல்பினராகி விடுகிறார்கள். பின்னர் அவற்றை அணுகுவதில் அவர்கட்கு அச்சமோ, அன்றி சங்கோஜமோ கூட ஏற்படுவதில்லை. அகம் ஓட்டிய, ஒன்றிய, உறவே கொண்டு விடுவார்கள். அப்படித் தோய்ந்து துய்க்கும் கலையன்பர் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும்.
அத்தகைய சிறு தொகையினருள் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் ஒருவர். அவருடன் கல் பேசும்; செம்பு இசை பாடும்; சுதைகள் எல்லாம் நடமாடும். அவற்றை எல்லாம் அவர் காண்பார்; நோக்குவார்; தேர்ந்து தெளிவார். அத்துடன் அமைவரா? நண்பர்களை எல்லாம் கையைப் பிடித்து இட்டுச் செல்வார். சில முரண்டுகளைக் காதைப் பிடித்து இழுத்தும் செல்வார். கலைச் செல்வங்களின் முன்னே கொண்டு நிறுத்தி எல்லோரையும் துய்க்கும்படியம் செய்து விடுவார்! தாயின்புறுவதைக் கண்டு உலகின்புறச் செய்யும் வித்தையிலும் கைதேர்ந்தவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள், எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், கலைப் பணியால் கடவுள் நம்பிக்கையையும் தெய்வ பக்தியையும் வித்திட்டு லிளையச்செய்த புண்ணியனாகவும் அல்லவா விளங்குகிறார். அவர்களை எல்லாம் தலயாத்திரை செய்ய வேண்டும் என்ற வேட்கை கொள்ளவும் செய்துலிட்ட அருமையைப் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?
இலக்கிய ரசலையும், கலைப் பித்தமும், பக்தி ஈடுபாடும் ஒருசேரப் பெற்ற தனி வழியை கடைப்பிடித்துச் செல்லுபவர் ஆனதால் ஒன்றில் ஒருசிக்கல் ஏற்பட்டால் மற்றொன்று வந்து கைகொடுத்துத் தீர்த்து வைத்து விடுகிறது. அவருக்கு. 'சிக்கல் விடுபடாதோ' என்று பிறர் மயங்கக் கூடிய இடங்களில் அந்தச் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளாமல் லாகவமாக அதைத் தாண்டி அப்பாற் சென்று விடுகிறார் இவர். பல இடங்களில் பெருமையாகப் புகழ்பாடுவதைக் கண்டு யாவரும் மகிழ்கிறோம். சில இடங்களில் கிண்டல் செய்வதைச் சிலர் ரசிக்க முடியாதவர்களாயிருக்கிறார்கள். என்றாலும், உண்மையை உணர்பவர்கள் யாரும் அதைக் குறை கூற மாட்டார்கள். கிண்டல் செய்வதற்கு மனத்துணிச்சல் மட்டுப் போதாது. களங்கமற்ற உள்ளத்தில் அரும்பிய எல்லையற்ற ஈடுடாடு வேண்டும். அப்பொழுது தான் கிண்டல் பயன் தருவதாக இருக்கும். வெறும் மனத்துனிச்சலிலிருந்து வெளிப்படுவது கேவலம் வட்சையாகத்தான் அமையும்.
யதார்த்த வாழ்வில் அல்லது நாடகம், சினிமா போன்ற துறைகளில் அசம்பாவிதம் என்று கருதி ஒதுக்கப்படும் தோற்றம், கல்லிலும் செம்பிலும் உருவாகி ஆலயங்களுல் இருப்பதை நாம் அசம்பாவிதம் என்று எண்ணியதாவது உண்டா? அலது நம்மனையார் உள்ளத்தில் விகார எண்ணங்களை அவை உண்டாக்கியதாவதுண்டா ? தாயின் மடியில் கிடந்து பாலருந்தும் நிர்மமான குழந்தைகளைப் போன்றுதானே நாம் எல்லாம் கலையமுதை, அழகமுதைப்பருகி அமைதி பெற முயன்று கொண்டிருக்கிறோம். இல்லையா? அப்படித்தான் உள்ளத்தில், விசாரமோ, வெறுப்போ, பகமையோ சிறிதுமின்றிக் கிண்டல் செய்வது ஒரு அருமையான வேண்டத்தக்க பணி; கலையும் கூட அந்த கலையும் கைவரப் பெற்றவர் சகோதரர் பாஸ்கரன் அவர்கள்.
"குலவித்தை கல்லாமற் பாகம் படும்" என்ற முதுமொழிக்கு பாஸ்கரன் அவர்கள் ஒரு சான்று. பாட்டனார் ஒரு நல் கவிஞர் தந்தையாரோ சிறந்த ஓவியப் புலவர். இலக்கிய உணர்வும், ஓவிய உணர்வும் இவர்க்குப் பரம்பரையாய் கிட்டிய செல்வம். நேர்மைக்கும் செம்மைக்கும் பெயர் பெற்ற வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களுடன் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புண்டு. அவர்களுடன் பலகாலம் நெருங்கிப் பழகிய நற்பேறு இவருக்கு எதையும் ஆராய்வதற்குரிய நெறிமுறைக்கு ஆக்கம் தந்தது என்று சொல்லலாம். அதற்கெல்லாம் மேலாக ரசிகமணி டி.கே.சி. அவர்களுடன் இருந்த உறவும், ஈடுபாடும்தான் இவருக்கு எல்லா வல்லமையும் கொடுத்தவை என்று கூற வேண்டும். விஷயத்தை அணுகுவது. ஆய்வது, தேர்வது, துய்ப்பது, எடுத்து விளக்குவது போன்றவற்றில் ஒரு தனி ஆற்றல் ஏற்படச் செய்தது அந்த உறவே என்று சொல்வோமானால் தவறில்லை.
இப்படியாகப் பெற்ற நலன்களை எல்லாம் பேணிக் காத்து, வளர்த்துச் சீரிய முறையில் உலகிற்களிக்க உதவிய மற்றொன்றையும் நாம் மறத்தற்கில்லை. அதுதான் இளமையிலிருந்தே பல்வேறு இடங்களில் பணியாற்றிய காலங்களில் கிடைத்த ஓய்வையும், ஏற்படுத்திக் கொண்ட ஓய்வையும் தல யாத்திரைக்கும், இலக்கிய வரலாற்று சிற்பப் பணிக்குமே பயன்படுத்திக் கொண்ட அந்த ஆர்வம் இருக்கிறதே அதைத்தான் நாம் பாராட்ட வேண்டும். எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
"வேங்கடம் முதல் குமரிவரை" என்று பொதுத் தலைப்பு அமைத்துக் கொண்டதே ஓர் அருமை. பண்டைத் தமிழன் மரபுப்படி, பெயர் அமைந்திருக்கிறது என்று உவகை ஏற்படும் அதே காலத்தில், வாசகர்களை எல்லாம் தென்றிலின் இன்பத்தை அனுபவிக்கச் செய்வதைப் போல், தெற்கு நோக்கி அழைத்துச் செல்லும் அருமை எண்ணி எண்ணி மகிழக் கூடியதாக இருக்கிறது.
“வேங்கடம் முதல் குமரி வரை” தொகுதியில் நான்காம் பகுதி இது. இதில் 30 கட்டுரைகள் உள்ளன. இலக்கியப் பூங்கா ஒருபுறம்; சிற்பக் கலைக்கூடம் மறுபுறம்; ஆராய்ச்சிட் பட்டறை இன்னொரு புறம்; பக்திப் பஜனைக் கூடம் வேறொருபுறம்; வரலாற்றுக் கதைக் கூடம் பிறிதொரு புறம் என்று இப்படியாகப் பல்வேறு துறைகளையும் இந்தக் கட்டுரை உலகிலே காணலாம்.
அன்புடன், ஆர்வத்துடன், உள்ளே செல்லுவோம். விருப்பு வெறுட்பின்றி அணுகுவோம். அருமை பெருமைகளை நன்றாக அனுபவிப்போம். நம்மை எல்லாம் இட்டுச் செல்லும் சகோதரர் பாஸ்கரன் அவர்கள் நம்முடன் இருந்து தக்கபடி உதவுவார். இனியும் முன் வாயிலில் காத்துக் கொண்டிருப்பானேன்? வாருங்கள், உள்ளே நுழைவோம், வாழ்க பாஸ்கரன்; வளர்க அவர் பணி" என்று! வாழ்த்திக் கொண்டே!
கம்பன் அடிட்பொடி
சா. கணேசன்
சமர்ப்பணம்
தமிழப்பெரும்கவி - முதுபெரும் புலவர்
அமரர்
வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார்
அவர்களுக்கு
நான்காம் பதிப்பின் முன்னுரை
“வேங்கடம் முதல் குமரி” வரை என்ற பொதுத் தலைப்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள நான்கு தொகுப்புகளின் நான்காவது பதிப்பு இது, எங்கள் தந்தையார் திரு. பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேற்கொண்ட திருப்பணி, தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிக் கட்டுரை எழுதத் தொடங்கியது தான். அந்தத் துறையில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்கள் தொண்டைமான் அவர்களை மேலும் ஊக்குவித்து அவர்கள் எழுதிய கட்டுரைகளையெல்லாம் தொடராகக் கல்கியில் வெளியிட்டு உற்சாகம் ஊட்டினார்கள்.
மகாகவி பாரதி பாடியது போன்று: “காவிரி தென் பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி" தீரங்களிலே, என்றோ நமது முந்தையோர்களால் எழுப்பப்பட்ட திருக்கோயில்களுக்கெல்லாம் தொண்டைமானவர்கள் காமிராவும் கையுமாகச் சென்று. அந்தக் கோயில்களின் வரலாற்றுப் பின்னணி, இலக்கியப்பெருமை, சிற்பச் செல்வங்கள் ஆகிய சிறப்புக்களையெல்லாம் கண்டு, தெளிந்து அவற்றை, படங்களுடன் கட்டுரைகள் வாயிலாகத் தமிழ் மக்கள் முன் வைக்கத் தலைப்பட்டார்கள். கல்கி இதழில் வாராவாரம் கட்டுரைகள் வெளி வரத் தொடங்கியபோது நல்ல வரவேற்பும் கிடைத்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் நம்பிக்கையும் நாட்டமும் உடையவர்கள் கட்டுரையைப் படித்த சூட்டோடு அந்தந்த ஊர்களுக்கு யாத்திரை கிளம்பியதும் உண்டு, பக்தர்கள், கலை அன்பர்கள் எல்லோருக்கும் இந்தத் தொகுப்பு வழிகாட்டியாகவும், கையேடாகவும் உதவியது என்றால் அது வெறும் புகழ்ச்சியில்லை.
வணக்கத்துக்குரிய காஞ்சி முனிவரவர்களும், தருமையாதீன குருமகா சந்நிதானம் அவர்களும் கூட, இந்தக் கட்டுரைகளைப் படித்து அனுபவித்ததோடு அமையாமல், தொண்டைமானவர்களைத் தங்கள் தங்கள் மடங்களுக்கே வரவழைத்துப் பாராட்டி, பட்டமும் நல்கி இந்தத் திருப்பணிக்குத் தங்கள் நல்லாசிகளை வழங்கியிருக்கிறார்கள். எத்தகைய பேறு அது திரைப்படத் தொழில் அதிபர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள், முதல் பதிப்பு வெளி வந்ததும் அதனை அந்த ஆண்டின் சிறந்த புத்தகமாகக் கொண்டு ஆயிரம் ரூபாய் பரிசளித்து கோலாகலமாகப் பாராட்டு விழாவும் நடத்தியிருக்கிறார். கோவை நன்னெறிக் கழகத்தாரும் தங்கள் பங்குக்கு இந்தத் தொகுதிகளில் ஒன்றின் வெளியீட்டு விழாவைக் கோவையில் கொண்டாடிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
"வேங்கடம் முதல் குமரி வரை" முதல் பதிப்பு 1960 ஆம் ஆண்டு, திருநெல்வேலி எஸ்.ஆர்.எஸ், புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் 3000 படிகள் வெளியிட்டார்கள். அவர்கள் ஆர்வம் வீண் போகவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள்ளகவே அத்தனை படிகளும் லிற்பனையாகி விட்டன. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1964 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பைக் கொனர்ந்தார்கள், அவையும் நாளாவட்டத்தில் விற்பனையாகி விட்டன. கைவசம் படிகள் இல்லாத காரணத்தால், டெல்லியிலிருந்தும், கல்கத்தாவிலிருந்தும், பூனாவிலிருந்தும், தமிழ் நாட்டு ஊர்களிலிருந்தும் அன்பர்கள் புத்தகம் கேட்டு எழுதிய போது அனுப்பமுடியாத நிலையில் மிகுந்த மனச்சங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருந்தது. சூழ்நிலைகள் சரிவர அமையாததால் உடனடியாக மறு பதிப்பைக் கொண்டு வர இயலாது போய் விட்டது. அருமைத் தந்தையார் அவர்களின் மறைவுக்குப் பின், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது பதிப்பு வெளிவந்தது. இதனை வெளியிட சென்னை அபிராமி நிலையம் முன் வந்தது.
மூன்றாவது பதிப்பும் விற்பனை ஆகிவிட்டதால், அன்பர்கள் விரும்பிக் கேட்கும்போது தரமுடியாத சூழ்நிலை. அப்போதுதான் மறுபதிப்புக்கான அவசியத்தை உணர்ந்தேன். நான்காம் பதிப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் ஆர்வத்துடன் முன் வந்திருக்கிறது. முதல் பதிப்பின் போதே, இந்த நான்கு தொகுப்புக்களுக்கும் என் தந்தையாரின் உற்ற நண்பர்களாக விளங்கிய நால்வர் அற்புதமான முகவுரைகளைத் தந்து உதவியிருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி உணர்ந்து சொல்லும் சத்தியப் பிரமாணமாக அவை இந்தத் தொகுப்பினை அரண் செய்கின்றன. இதைவிட அருமையாக வேறு யார் சொல்லக் கூடும்? ஆகவே, இந்தப் புதிய பதிப்பிற்கும் அந்தப் பழைய முகவுரைகளையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நால்வரின் அன்புக்கும் தலைதாழ்த்தக் கடமைப் பட்டிருக்கிறேன்.
தொண்டைமானவர்கள் இந்தக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்த சமயம், முதலில் நூற்றெட்டுக் கோயில்களைத்தான் தேர்ந்தெடுத்து எழுதுவதாக இருந்தது. ஆனால் எழுதி முடித்தபோது 121 கோயில்கள் இடம் பெற்றன. தொகுப்பு வெளியிடப்பட்ட பின்னர் விடுபட்டுப்போன மற்ற கோயில்களைப் பற்றிய கட்டுரைகளும் வெளியாயின. அவற்றை எல்லாம் தொகுத்து, இந்தத் தலைப்பின் கீழ் ஐந்தாம் பாகமாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தை அண்மையில் கலைஞன் பதிப்பகம் நிறைவேற்றித் தந்திருக்கிறது. “வேங்கடம் முதல் குமரி வரை” தொகுப்புக்குக் கிடைத்த வரவேற்புதான், தொண்டைமானவர்கள் வேங்கடத்துக்கு அப்பாலும் சென்று அங்குள்ள திருக் கோயில்களின் மூர்த்தங்களையும், கலைச் செல்வங்களையும் கண்டு சொல்லப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. அந்தக் கட்டுரைகளும் அபிராமி நிலையத்தின் வெளியீடாகவே “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. “வேங்கடத்துக்கு அப்பால்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பையும் கலைஞன் பதிப்பகமே வெளியிட ஆர்வம் காட்டுகிறது. தமிழ் நாட்டில் மட்டுமன்று, இந்தியத்திருநாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பெருமக்களும், ஏன் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழன்பர்களும் இந்த நூல்கள் வெளிவரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்,
தமிழ் இனத்தின் கலையுணர்வு, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் வளர்ப்புப் பண்ணையாகவே தமிழகத்துத் திருக்கோயில்கள் விளங்கி வந்திருக்கின்றன- என்றென்றும் அவை அங்கே பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையுடன் இந்த நான்காவது பதிப்பினையும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன் வைக்கிறோம். இந்த நான்காம் பதிப்பினை நல்ல முறையில் கொணர்ந்திருக்கும் கலைஞன் பதிப்பகத்தாருக்கு நன்றி சொல்லப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.
ராஜேஸ்வரி நடராஜன்
பாஸ்கர நிலையம்
சாஸ்திரி நகர்
சென்னை - 20
பொருளடக்கம்
எண்
பக்கம்
1. பழநி ஆண்டவன்
...
19
2. விஜயாலய சோழீச்சரம்
...
29
3. திருமெய்யம் சத்திய மூர்த்தி
...
37
4. பிள்ளையார் பட்டிப் பிள்ளையார்
...
44
5. திருப்புத்துர் திருத்தளிநாதர்
...
52
6. திருக்கோட்டியூர் திருமால்
...
58
7. காளையார் கோயில் காளீசர்
...
66
8. ராமேச்சுரத்து ராமலிங்கர்
...
75
9. புல்லாணி ம்பெருமான்
...
83
10. உத்தரகோச மங்கைக்கு அரசு
...
89
11. பூவணத்துப் புனிதர்
...
98
12. திருவாதவூர் அண்ணல்
...
105
13. திருமோகூர்க் காளமேகர்
...
112
14. அழகர்கோயில் அழகன்
...
118
15. மதுரை மீனாக்ஷி
...
126
16. பரங்குன்றம் மேயபரன்
...
135
17. ஸ்ரீ வில்லிப்புத்துர் ஆண்டாள்
...
143
18. சங்கரன்கோயில் சங்கர நாரணர்
...
151
19. குற்றாலத்துறை கூத்தன்
...
159
20. தென்காசி விசுவநாதர்
...
168
21. பாபநாசத்துப் பாப விநாசர்
...
175
22. மன்னார் கோயில் வேதநாராயணன்
...
182
23. திருநெல்வேலி உறை செல்வர்
...
189
24. கிருஷ்ணாபுரத்து வேங்கட நாதன்
...
198
25. ஸ்ரீ வைகுந்தத்துக் கள்ளப்பிரான்
...
205
26. ஆழ்வார் திருநகரி ஆழ்வார்
...
213
27. செந்தில் ஆண்டவன்
...
221
28. வானவாமலைத் தோத்தாத்திரிநாதர்
...
230
29. திருக்குறுங்குடி அழகிய நம்பி
...
238
30. சுசீந்திரம் தாணுமாலயன்
...
246
31. கன்னிக் குமரி
...
254
வேங்கடம் முதல் குமரி வரை
- பொருநைத் தரறையிலே -
1. பழநி ஆண்டவன்
'மணங் கமழ் தெய்வத்து இளநலம்' காட்டுபவன் முருகன் என்பார் நக்கீரர். இளைஞனாக, அழகனாக மட்டும் இருப்பவன் இல்லை முருகன். சிறந்த அறிஞனாசுவும் இருக்கிறான். ஞானப் பழமாக அன்னைக்கும், ஞான குருவாகத் தந்தைக்கும் அமைந்தவன் என்றல்லவா அவனைப் பற்றிய வரலாறுகள் கூறுகின்றன? ஞானப் பழமாக அவன் நிற்கிற நிலைக்கு ஒரு நல்ல கதை. அன்னை பார்வதியும் அத்தன் பரமசிவனும் கயிலை மலையிலே அமர்ந்திருக்கிறார்கள் ஒரு நாள். அங்கு வந்து சேருகிறார், கலகப் பிரியரான நாரதர். வந்தவர் சும்மா வரவில்லை . கையில் ஒரு மாங்கனியையுமே கொண்டு வருகிறார். அதனை ஐயனிடம் கொடுத்து அவன்தன் ஆசி பெறுகிறார். அவனுக்குத் தெரியும் இவர் செய்யும் விஷமம். அந்த விஷமத்திலிருந்து தானே பிறக்கவேண்டும் ஒரு நன்மை. நாரதர் தந்த கனியைச் சிவபிரான் அன்னை பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதிக்கு ஓர் ஆசை, மக்கள் இருவருக்கும் கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு களிக்கலாமே என்று. அந்த எண்ணம் தோன்றிய உடனேயே, மக்கள் இருவரும்-விநாயகரும் முருகனும்தான் வந்து சேருகின்றனர். அதற்குள் நினைக்கிறார் சிவபெருமான், அக்கனி மூலம் ஒரு பரீட்சையே நடத்தலாமே என்று. உங்கள் இருவருக்குள் ஒரு பந்தயம். யார் இந்த உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இக்கனி என்கிறார் தம் பிள்ளைகளிடம்.
இந்தப் போட்டியில் மூஷிகவாகனனான விநாயகர் வெற்றி பெறுவது ஏது என்று நினைக்கிறான் முருகன். தன் மயில் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'ஜம்' என்று வான வீதியிலே புறப்பட்டு விடுகிறான் அவன். பிள்ளையார், நிறைந்த ஞானவான் அல்லவா? அவர் தம் வாகனத்தில் எல்லாம் ஏறவில்லை . மிக அமைதியாகக் காலால் நடந்தே அன்னையையும் அத்தனையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுகிறார். மாங்கனிக்குக் கைநீட்டுகிறார். 'என்னடா? உலகம் சுற்றியாகி விட்டதா? என்று தந்தை கேட்டால், 'உலகம் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றினால் உலகத்தையே சுற்றியதாகாதா? என்று எதிர்க் கேள்வி போடுகிறார். இந்தப் பதிலை எதிர்க்க முடியாமல் கனியைக் கொடுத்து விடுகிறார் அத்தனும், போட்டியில் வெற்றி பெற்ற மகனாம் விநாயகருக்கு. உலகம் எல்லாம் சுற்றி அலுத்து வந்த முருகன் விஷயம் அறிகிறான். 'அடே! இந்த அண்ணன் கனியைத் தன் மூளையை உபயோகித்து அல்லவா பெற்றுவிட்டான்? நாமும் இன்று முதல் ஞானவானாகவே விளங்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
ஞானம் பெறத் தடையாயிருக்கும் தனது உடைமைகளை எல்லாம் துறக்கிறான். கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டு வெளியேறிவிடுகிறான். தாயாம் பார்வதிக்கோ தன் பிள்ளை இளவயதிலேயே காவி உடுத்திக் கோவணாண்டியாகப் போவதில் விருப்பம் இல்லை. அதனால் பிள்ளையைப் பார்த்து. 'அப்பா! நீயே ஞானப் பழமாக இருக்கும் போது நாங்கள் வேறு உனக்குப் பழம் கொடுக்க வேண்டுமா? என்று கூறிச் சமாதானம் செய்கிறாள். முன் வைத்த காலைப் பின் வாங்காத ஞானப்பழமான முருகன் பழநி மலை மீது நின்று விடுகிறார். பழம் நீ என்பது தான் பழநி என்று ஆகியிருக்கிறது என்பது புராண வரலாறு, இல்லை , இந்த இடம் பொதினி என்று இருந்திருக்கிறது. பொதினி என்ற பதமே மருவிப் பழநி என்று ஆயிற்று என்று கூறுவர் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர்கள். அதற்கு அகநானூற்றில் உள்ள,
வண்டு படத் துதைந்த கண்ணி யொண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி யாங்கன்
என்னும் மாமூலனார் பாட்டையும் ஆதாரங்காட்டுவர். பொதினியாயிருக்கட்டும், இல்லை பழம் நீ எனவே இருக்கட்டும். பழநி ஒரு பழமையான தலம். அங்கே கோயில் கொண்டிருப்பவன் முருகன். அந்தப் பழநி ஆண்டவன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
பழநி, திண்டுக்கல்-பொள்ளாச்சி லயனில் திண்டுக்கல்லுக்கு வட மேற்கே 36 மைல் தொலைவில் இருக்கிறது. ரயிலிலே செல்லலாம். கார் வசதியுடையவர்கள் காரிலும் செல்லலாம். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லிலிருந்து, கோவையிலிருந்து எல்லாம் பஸ் வேறே செல்கிறது. பழநியில் தங்குவதற்கும் நல்ல வசதிகள் நிறைய உண்டு, தேவஸ்தானத்தார் கட்டியிருக்கும் சத்திரம் விசாலமானது, வசதி அதிகம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்று பர்லாங்கு தூரத்தில் சத்திரம். அங்கிருந்து ஐந்து பர்லாங்கு தூரத்தில் அடிவாரம். அதுவரை வண்டியில் செல்லலாம். முன்னமேயே சொல்லியிருக்கிறேன், பழநி ஆண்டவன் மலை மேல் ஏறி நிற்கிறான் என்று. ஆதலால் மலை ஏறியே அவன் கோயில் செல்ல வேண்டும்.
மலை ஏறுமுன் மலையையே வலம் வருதல் வேண்டும் கிரிச்சுற்று என்பர் இதனை. இது அண்ணாமலையில் சுற்றியது போல் அவ்வளவு அதிக தூரம் இல்லை. ஒரு மைலுக்குக் குறைவாகவே இருக்கும். பழனிமலை சுமார் 450 அடி உயரமே உள்ளது. அதன் மீது ஏற 660 படிகள் நல்ல வசதியாக விசாலமான மண்டபங்களுடன் கட்டப் பட்டிருக்கின்றன. ஏறுவது சிரமமாக இராது. என்றாலும் வயோதிகர்களும், பெண்களும் சிரமமில்லாது ஏற யானைப் பாதை என்று ஒன்று இருக்கிறது. கொஞ்சம் அதிக தூரம் வளைந்து செல்லும். அதன் வழி ஏறினால் கொஞ்சமும் சிரமம் தோன்றாது. இப்பொழுது மலைக்கு செல்வதற்கு இழு மோட்டார் வண்டிப் பாதை அமைத்திருக்கிறார்கள். காசைக் கொடுத்து ஏறி அமர்ந்தால் சிரமமில்லாது மலை சேர்ந்து விடலாம். என்றாலும் படிக்கட்டுகளின் வழியாக ஏறுவதே முறை. வழியில் உள்ள இடும்பன் கோயில், குராவடிவேலவர் சந்நிதி எல்லாம் கண்டு தொழுது மேற்செல்லுதல் கூடும். அடிவாரத்தில் ஒரு பிள்ளையார். அவரை வணங்கியே மலை ஏறுவோம். முதலிலேயே ஒரு விசாலமான மண்டபம். கோலை பி.எஸ்.ஜி. கங்கா நாயுடு கட்டியது. அந்த மண்டபத்தில் இரண்டு மூன்று நல்ல சிலா வடிவங்கள்.
கண்ணிடந்து அப்பும் கண்ணப்பரும் காளத்திநாதரும் ஒரு தூணிலே, மாமயிலேறி விளையாடும் முருகன் ஒரு தூணில். இன்னும் தேவயானை திருமணம் என்னும் சிலைகள் உண்டு. இவை நிரம்பப் பழைய காலத்தியவை அல்ல என்றாலும், பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை.
இனி மலை ஏறலாம். பாதிப்படி ஏறியபின் வேள் ஆவி மரபில் வந்த வையாபுரிக் கோமான் உருவச் சிலை தாங்கிய மண்டபம் வரும், அங்கிருந்து பழநி நகரையும் மலையையும் அடுத்துள்ள வையாபுரிக் குளத்தையும் காணலாம். நல்ல அழகான காட்சி. மேலும் சில படிகள் ஏறினால் இடும்பன் கோயிலும் குரா அடி, வேலவர் கோயிலும் வரும். இடும்பன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?
தமிழ் முனிவனான அகத்தியருக்கு ஓர் ஆசை, தாம் கையிலையிலே பூசித்த சிவகிரி, சக்திகிரி என்னும் குன்றுகளையும் தென் திசைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று. இது அவரால் முடிகிற காரியமாக இல்லை. அவரை வணங்க வந்த இடும்பாசுரன் என்பவனிடம் தம் விருப்பத்தை நிறைவேற்றச் சொல்கிறார்.
அவனோ மிக்க பலசாலி. இரண்டு குன்றுகளையுமே பேர்த்தெடுத்து அவற்றை ஒரு காவு தடியில் கோத்து, தன் தோளில் சுமந்து தென் திசை நோக்கி வருகிறான். தென் திசை வந்தவன் களைப்பாறக் காவு தடியை இறக்கி வைக்கிறான். இளைப்பாறிய பின் திரும்பவும் தூக்கினால் காவு தடியைத் தூக்க முடியவில்லை. மலைகளைப் பெயர்க்க முடியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபோது இந்த மலைகளில் ஒன்றின்பேரில் குராமர நிழலிலே மழலை முதிர்ந்த கனிவாயுடன் ஒரு சிறுவன் நிற்பதைக் காண்கிறான் இடும்பன்.
அவனாலேயே தன் காவு தடியைத் தூக்க முடியவில்லை என்று எண்ணிய இடும்பன் அவனை மலையைவிட்டு இறங்கி ஓடிப்போகச் சொல்கிறான், அவன் மறுக்க, இவன் அவன்மேல் பாய்கிறான். ஆனால் அடியற்ற மரமாக அங்கேயே விழுகிறான். இடும்பன் மனைவி ஓடி வந்து கதறுகிறாள், அகஸ்தியரும் வந்து சேருகிறார். இளங்குமரனோ அதுவே இருப்பிடம் என்று கூறுகிறான். அன்று முதல் இடும்பனைப்போல் யார் காவு தடி. தூக்கிவருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பதாகக் குமான் வாக்களிக்கிறான். இடும்பன் எடுத்துவந்த சிவகிரி, சக்திகிரியே இன்று பழநிமலை, இடும்பன் மலையென நிற்கிறது அங்கே. காவு தடிபிலிருந்தே காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இப்படித்தான் இடும்பன், அருள் பெற்றுப் பழநி மலையிலே பாதி வழியிலே நிற்கிறான். குராவடி வேலவருமே அங்கே கோயில் கொள்கிறார். இவர்களையெல்லாம் வணங்கி விட்டு மேலும் படி ஏறினால் மலைமேல் விரிந்திருக்கும் விசாலயான பிராகாரத்துக்கு வந்து சேருவோம். மலை மேல் கட்டிய கோயில் என்றாலும் பெரிய கோவில்தான். தென்றல் அடிவருட அக்கோயிலுள் மேற்கு நோக்கியவனாகப் பழநி ஆண்டவர் நிற்கிறார். மில்காரர்கள் கட்டியிருக்கும் வித்யாதர மண்டடத்தைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். அங்குள்ள மணி மண்டபத்தைக் கடந்துதான் மகா மண்டபத்துக்கு வந்து சேர வேணும். அங்கு இடப்பக்கத்தில் சுப்பிரமணிய விநாயகர் சிலை ஒன்று ஐம்பது வருஷங்களுக்கு முன் நகரத்தார்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அங்கு விநாயகருக்கு வணக்கம் செலுத்திவிட்டே ராஜகோபுரவாயிலைக் கடந்து செல்ல வேண்டும், கோபுரம் 63 அடி உயரமே உள்ள சின்னக்கோபுரம்தான். இனத அடுத்துத்தான் மாரவேள் மண்டபம். இதனை 34 கற்றூண்கள் தாங்கி நிற்கும். இதை அடுத்தே தட்சிணாமூர்த்திக்கும் மலைக் கொழுந்தீசருக்கும் மலைநாச்சியம்மைக்கும் தனித்தனி சந்நிதிகள்.
இதைக் கடந்தே நவரங்க மண்டபம். இதே மண்டபத்தின் வடபக்கத்திலேதான் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே விழாக் காலங்களில் எழுந்தருளும் சின்னக் குமாரரும் இருக்கிறார். இங்குள்ள சண்முகர் வெளியில் எழுந்தருளுவதே இல்லை. இந்த மண்டபத்தையெல்லாம் கடந்தே அர்த்த மண்டபம் வரவேணும், அங்கிருந்தே கருவறையில் தண்டேந்திய கையனாய் நிற்கும் தண்டாயுதபாணியைத் தொழவேண்டும். தண்டாயுத பாணியின் முகத்தில் ஒரு கருணா விலாசம். அருள் கலந்த திருநோக்கு, புன்னகை தவழும் உதடுகள், மதாணி விளங்கும் மார்பு. ஒரு கையை அரையில் வைத்து ஒரு கையில் தண்டேந்தி நிற்கும் நேர்த்தியெல்லாம் கண்குளிரக் கண்டு மகிழலாம். இவர் அபிஷேகப் பிரியர். காலை உதயமானது முதல் இரவு எட்டு மணி வரையில் அபிஷேகங்கள் நடந்து கொண்டிருக்கும். பன்னீர், சந்தனம், திருநீறு என்று மாத்திரம் அல்ல. நல்ல பஞ்சாமிர்த அபிமேகம் அவருக்குப் பிரீதியானது. அவருக்குப் பிரீதியோ என்னவோ பக்தர்களுக்குப் பிரீதியானது. அந்த மூர்த்தி போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவராயிற்றே, அவர் சிலை வடிவில் இருந்தாலும் அது சிலையல்ல. ஒன்பது வகை மருந்துச் சரக்குகளால் ஆகிய நவ பாஷாணத்தை ரஸக் கட்டாய்த் திரட்டிச் செய்யப்பட்டவராயிற்றே. அவர் மேனியில் வழிந்து வரும் எப்பொருளுமே மக்களது நோய்களையெல்லாம் தீர்க்கவல்லது. உயிர்களின் பிறவிப் பிணியையே நீக்கவல்ல ஆண்டவன் உடற்பிணி தீர்ப்பது என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமே இல்லைதானே?
இந்த ஆண்டவனைப் பற்றி ஓர் ஐயம் அன்பர்களுக்கு. இவன் மொட்டை ஆண்டியா, சடை ஆண்டியா என்று. சாதாரணமாக வெளியிட்டிருக்கும் படங்கள் எல்லாம் இவனைத் தலையை முண்டிதம் செய்து கொண்ட மொட்டையாண்டியாகத்தான் காட்டுகின்றன. அது காரணமாகவே அந்தப் படங்களைப் பூசையில் வைத்துக்கொள்ளப் பலர் துணிவதில்லை. அவன் மொட்டையாண்டியாயிற்றே. நம்மையும் மொட்டை அடித்து விடுவானோ என்று. ஆனால் மூர்த்தியின் வடிவை அபிஷேக காலத்தில் கூர்ந்து நோக்குவோர்க்குத் தெரியும். அவன் மொட்டை ஆண்டி அல்ல சடையாண்டியே என்று. மேலும் அவனை வணங்குபவர், அவனிடம் பிராத்தனை செய்து கொள்பவர் எல்லா நலங்களும் பெறுகிறார்கள் என்பதும் கண்கூடு. தமிழ்நாட்டு அறிஞன் அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். 'மக்கள் இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் தாம் உடைமை என்று கருதுகிற பொருள்களில் உள்ள ஆசையை விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விடவிடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டு இயற்பால பல.
என்பதே அவர் சொன்ன அருமையான குறள். உண்மைதானே? உலக மக்களுக்கு எல்லா நன்மைப் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன் அந்த உலகத்து உடைமைகளிலேயே பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும்? ஆதலால்தான் அவன் தன் உடைமைகளை யெல்லாம் துறக்கிறான். அவன் துறவு கோலம் பூணுவது மக்களுக்கு அவர்கள் வேண்டும் பேறுகளையெல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான் நாம் பெறற்கரிய பேறுகனை எல்லாம் பெற முடிகிறது. அவன் துறலியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருளுடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன் துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்குப் பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?
இந்தப் பழநி ஆண்டவர் வழிபாடு வேறொரு வகையில் சிறப்புடையதும் ஆகும். இங்கு வருவார் தொகையில் தமிழர்களைவிட அதிகம் மலையாள நாட்டினரே. மேலும் இந்துக்களே அன்றி முகம்மதியர்களும் குடும்பத்துடன் வந்து சந்நிதிக்குப் பின்புறத்தில் சந்தனக் காப்பிட்டுத் தூபம் காட்டி பாத்தியா ஓதி வணங்கிச் செல்கின்றனர். இப்படி எல்லாம் சர்வ சமய சமரசம் வளர்ப்பவனாகப் பழனி ஆண்டவன் அங்கு நின்று அருள் புரிகிறான் என்றால் அது போற்றுதற்குரியதுதானே? பழனி ஆண்டவருக்கு மாதம் தோறும் திருவிழாக்களும் உண்டு. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தைப்பூசம் முதலிய விழாக்களில் எல்லாம் திருத்தேர் - சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுத் தெருவீதியில் உலா வரும். தங்கத் தேர் ஒன்று ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று மலைமீது உள்ள பிராகாரத்திலேயே உலா வரும்.
எல்லாம் சரிதான், நக்கீரர் பாடிய அந்தத் திரு முருகாற்றுப் படையில் வரும் ஆவினன் குடிதான் பழநி என்பார்களே அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அந்த ஆவினன் குடிக்கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. இதுவே ஆதி கோயில். நக்கீரரால் மாத்திரமல்ல, ஒளவையாராலும் சிறப்பித்துப்பாடப் பெற்றது. ஒளவையார் காலத்தில் இதனைச் சித்தன் வாழ்வு என்று அழைத்திருக்கிறார்கள்.
நல்லம்பர் நல்லகுடி
உடைத்து; சித்தன் வாழ்வு
இல்லம் தொறும் மூன்று
எரி உ.டைத்து; - நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன்
வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
என்று நல்ல தமிழ்ப் பாட்டிலேயே அல்லவா இந்தச் சித்தன் வாழ்வு இடம் பெற்று விட்டது? திருவாவினன் குடிக் கோவிலிலேதான், திருமகள், காமதேனு, சூரியன், நிலமகள், அக்னி முதலிய ஐவரும் தொழுது பேறு பெற்றிருக்கிறார்கள், ஐவருக்கும் கற்சிலைகள் இன்னும் இருக்கின்றன கோயிலில், இங்குள்ள மூர்த்தி குழந்தை வேலாயுதசாமி. இக்கோயில் ஐம்பது வருஷங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
பழநி ஆண்டவனைப் பாடிய பெருமக்களுக்குள்ளே மிகச் சிறப்பு வாய்ந்தவர் அருணகிரியார் தான்.
பழனம் உழவர் கொழுவில் எழுது
பழப் பழநி அமர்வோனே.
என்று மலைமேல் உள்ள ஆண்டவனையும்,
ஆவல் கொண்டுவிறாலே சிராடவே
கோமளம் பலசூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
என்று ஆவினன்குடி மக்களையும் பாடி மகிழ்ந்திருக்கிறார். பழநியைப் பற்றிக் கந்தர் அவங்காரத்திலும் ஒரு நல்ல பாட்டுப் பாடி இருக்கிறார் அருணகிரியார்.
படிக்கின்றிலை பழநித் திருநாமம்
படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை
மூசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம்
மேற்கொள விம்மி, விம்மி,
நடிக்கின்றிலை நெஞ்சமே
தஞ்சம் எது? நமக்கு இனியே.
என்ற பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பரவலாம்
என்ன, இங்கு சிற்பச் சிறப்புகள் ஒன்றுமே இல்லையா, என்று நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. பழங்காலத்துச் சிற்பங்கள் அதிகம் இல்லைதான் என்றாலும், ஊருக்கு மேல்புறமாக ஓடும் சண்முக நதிக்கரையிலே பழநிக்கு வடக்கே மூன்று கல் தொலைவில் ஒரு பெரிய தோப்பினிடையே பெரியாவுடையார் கோயில் என்று ஒன்று இருக்கிறது அதனைப் பழநியில் உள்ளவர்கள் பிரியாவுடையார் கோயில் என்பார்கள். சிறிய கோயிலே என்றாலும் சமீபகாலத்தில் உருவான நல்ல கற்சிலைகள்
கிருஷ்ணாபுரம்
பல இருக்கின்றன. அவற்றில் தட்சிணாமூர்த்தி மிகமிக அழகு வாய்ந்தவர். அவகாசம் உடையவர்கள் வண்டி வைத்துக் கொண்டு அங்கு சென்று கண்டு தொழுது திரும்பலாம்.
கோயில் பழைய கோயில் என்று அங்குள்ள 16 கல்வெட்டுகள் கூறும். இது தவிர, பழநியின் சுற்றுக் கோயில்களும் பல உண்டு, பட்டத்து விநாயகர், வேணுகோபாலப் பெருமாள், சங்கிலி பரமேசுவரர், வேளீசுவரர் எல்லோரும் இருக்கிறார்கள் இங்கே. எல்லோருமே ஆண்டவனை மலைமேல் ஏற்றிவிட்டு அவன் கால் நிழலில் ஒதுங்கி வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். பழநிமலையில் நல்ல மூலிகைகள் பல கிடைக்கின்றன. அதனாலேயே வைத்தியசாலைகள் பல இவ்வட்டாரத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்த வைத்திய நாதர்களுக்கெல்லாம் மேலான வைத்திய நாதன்தான் மலை மீதே ஏறி நிற்கிறானே! அவனை வணங்கி அருள் பெறுவதை விட உடலுக்கும் உயிருக்கும் வைத்தியம் வேறே செய்து கொள்ள வேண்டுமா என்ன?
2. விஜயாலய சோழீச்சரம்
தமிழ் நாட்டின் சரிதமே, அங்கிருந்து அரசு புரிந்த சேர சோழ பாண்டியர்கள் சரிதம்தானே? அதிலும் தமிழ் நாட்டில் பெரிய கோயில்களைக் கட்டி கலை வளர்த்த பெருமையெல்லாம் சோழ மன்னர்களையே பெரிதும் சேரும். சங்க இலக்கியங்களில் இச்சோழ மன்னர் புகழ் பரக்கப் பேசப்படுகிறது புலவர் பெரு மக்களால். இமயத்தைச் செண்டாலடித்த கரிகாலன், தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன், குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், போர்வைக் கோப பெருநற்கிள்ளி, வேல் பஃறடக்கை பெருவிறற்கிள்ளி, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி முதலிய அரசர் பெருமக்களுக்குப் பின் சோழப் பேரரசு அவ்வளவு புகழ் வாய்ந்ததாக இல்லை, திரும்பவும் சோழர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்களில் முதல்வனாக விளங்குபவன் விஜயாலயச் சோழளே.
இவன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் எழுந்தவன். குமராங்குசன் என்பவனது புதல்வன். கி.பி. 846-ம் ஆண்டில் இவன் முத்தரையர் மரபினனான ஒரு குறுநில மன்னனைத் தாக்கி, அவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த தஞ்சையைக் கைப்பற்றியிருக்கிறான். இவன் தன் பகைவர்களாகிய பேரரசர்களோடும் சிற்றரசர்களோடும் நிகழ்த்திய போர்கள் பல. இப்போர்களினால் இவன் மார்பில் 96 புண்கொண்ட தழும்புகள் இருந்தன என்று புலவர்கள் இவனைப் பாடியிருக்கிறார்கள்.
எண் கொண்ட தொண்ணூற்றின்
மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலன்
என்றே விக்கிரம சோழன். உலாவில் இவன் புகழ் பேசப்படுகிறது. இவனே தஞ்சையைச் சோழ சாம்ராஜ்யத் தலைநகராக ஆக்கியவன். புதுக்கோட்டை ராஜ்யத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கே உள்ள குன்றின் மேல் ஒரு கோயிலைக் கட்டித் தன் பின் வந்த ராஜராஜன் முதலிய சோழ மன்னர்களுக்கு எல்லாம் கோயில் கட்ட வழி காட்டியிருக்கிறான். அந்தக் கோயிலையே சரித்திர ஏடுகள் விஜயாலய சோழீச்சரம் என்று குறிக்கின்றன. அது சோழர்கோயில் கட்டிடக் கலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதன் சரித்திரப் பிரசித்திக்காகவே அதனையும் இத்தொடரில் சேர்த்திருக்கிறேன். இன்னும் இந்தப் புதுக்கோட்டை, வட்டாரத்தில் சரித்திரப் பிரசித்தி உடைய சில கோயில்களையும் காட்டலாம் அல்லவா? அதற்காகவே இந்த நார்த்தாமலை விஜயாலய சோழீச்சரத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.
தொண்டைமான் புதுக்கோட்டை லயனில் நார்த்தா மலை ஸ்டேஷனில் இறங்கி இரண்டு மைல் நடந்தால் நார்த்தாமலைக்கு வந்துசேரலாம். இங்கு எட்டுக் குன்றுகள் ஒன்றோடொன்று நெருங்கி நிற்கின்றன. மலையடிவாரத்தில் ஊர் இருக்கிறது. சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற போது, அந்த மலையினின்றும் பெயர்ந்து விழுந்த ஒரு சிறு துண்டே இம்மலைச் சிகரம் என்பர். இந்த மலையில் சிறந்த மூலிகைகள் கிடைப்பதே இதை வலியுறுத்துகிறது. நாரதர் மலையே நார்த்தா மலையாயிற்று என்றும் ஒரு கூற்று. இது எல்லாம் இல்லை. நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் காலிரிப்பூம்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி வந்தபோது முதல் முதல் தங்கிய இடம் ஆனதால் இது நகரத்தார் மலை என்ற பெயரோடு விளங்கி, பின்னர் நார்த்தாமலை என்று குறுகியிருக்கிறது என்றும் ஒரு வழக்கு.
இம்மலையின் மேல்பகுதி மேலமலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. ஒன்று சமணர் குடைவு என்றும் மற்றொன்று பழியிலி ஈச்சரம் என்றும் பெயர் பெற்றிருக்கின்றன. இரண்டும் பல்லவமன்னன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்த குடைவரைகள் போலவே இருக்கின்றன. சமணர் குடைவை பதினெண்பூமி விண்ணகரம் என்றும் கூறுகிறார்கள். பாறையில் குடைந்த மூலக்கிருஹமும் அதற்கு முன்னால் அர்த்த மண்டபமும் இருக்கின்றன. நான்கு தூண்களோடு அக்குடைவரை வெட்டப்பட்டிருக்கிறது. கருவறையில் மூர்த்தி இல்லை. அர்த்த மண்டபத்தில் பன்னிரண்டு கோலங்களில் மகாவிஷ்ணு உருவாகியிருக்கிறார். பிரயோக சக்கரமும் சங்கமும் ஏந்திய திருக்கோலங்கள் அவை. குடைவரையின் முன் பகுதியில் யானைகள், யாளிகள் முதலியவை சிறிய அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இது ஆதியில் ஜைன ஆலயமாக இருத்து பின்னர்தான் மாணிக்க ஆழ்வார் கோயிலாகியிருக்கிறது.
பழியிலி ஈச்சரமும் குடைவரைக் கோயிலே. எட்டு அடி நீளமும் ஏழு அடி அகலமும் ஆறரை அடி உயரமும் கொண்ட சிறிய குடைவரையே இது. பல்லவ நிருபதுங்கனது ஆட்சியில் விடேல் விடுகு முத்தரையன் மகன் சாத்தன் பழியிலி இக்குடைவரையைக் குடைவித்தான் என்று சாஸனம் கூறுகிறது. சாத்தன் பழியிலி பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவன். இக்குடைவரையில் துவாரபாலகர் உருவங்களும் பூதகணங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
பதினென் பூமி விண்ணகரம் என்னும் சமணர் குடைவுக் கெதிரேதான், விஜயாலய சோழீச்சரம் காட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் ஒரு பிரதான கோயிலையும் உடையதாய் இருந்திருக்கிறது. பிரதான கோயில் மேற்கே பார்த்தது. இக்கோயிலின் கர்ப்பகிருஹம் ஓங்கார வடிவத்தில் இருக்கிறது. குறுக்கில் ஒன்பதடியும் உயரத்தில் எட்டு அடியும் உடையதாக இருக்கிறது. சுவரின் கனமோ ஐந்து அடிக்குக் குறைவில்லை. நான்கு மூலைகளும் சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. இது முழுதும் 29 அடி சதுரம் உள்ள ஒரு மண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. கருவறைக்கு மேலே அதே மாதிரி இரண்டு தளங்கள் வேறே இருக்கின்றன. சிகரம் வரவரக் குறுகிக் கடைசியில் ஒரு ஸ்தூபியுடன் விளங்குகிறது. இதற்கு முன்னோடியாக இருந்தது மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதம்தான். இந்தக் கட்டிட முறையைப் பின்பற்றியே ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு விமானம் எழுப்பியிருக்கிறான்.
இக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் நான்கு சிம்மலாடங்கள் இருக்கின்றன, அவைகளுக்கு இடையில் கீழ்வரிசையில் நான்கு திக்கிலும் நான்கு ரிஷபங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலைச் சுற்றிய நான்கு புரைகளில் {Nlches} கற்சிலைகள் உண்டு. மேற்கில் சிவனும் பார்வதியும் தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபம். அங்கு சுவரில் அடங்கிய அரைத் தூண்களில் இருக்கின்றன. இதன் வெளிப்புறத்தில் புரைகள் இல்லை. மண்டபத்தைத் தாங்க நல்ல கற்றூண்கள் இருக்கின்றன, தூண்களின் மேலுள்ள போதிகைகள் எல்லாம் பல்லவர் காலத்தியவைபோல் வெகு சாதாரணமாகவே இருக்கின்றன.
அந்த மண்டபத்தின் வாயிலில் துவார பாலர்கள் ஐந்து அடி, உயரத்தில் கம்பீரமாய் எழுந்து நிற்கிறார்கள். ஒரு கையில் கதை இருக்கிறது. மற்றொரு கையில் விஸ்மயக்குறி-அதாவது லியப்புக்குறி இருக்கிறது. சடாமகுடம் தரித்தவர்களாக இருக்கும் அவர்கள் தலையில் கொம்புகள் போல் இரண்டு வளைவுகள் இருக்கின்றன. காதில் மகர குண்டலம், உடம்பில் கடிபந்தம், உதரபந்தம், சலங்கை போன்ற குஞ்சலத்துடன் முறுக்கிய யக்ஞோபவீதமும், கையில் கடகங்களும் அணிந்தவர்களாக அவர்கள் கானப்படுகிறார்கள். பின்னர் சோழர்கள் கட்டிய கோயில்களின் துவாரபாலகர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக அமைந்தவர்கள் இவர்களே என்று தெரிகிறது.
இந்த மூலக்கோயில்களைச் சுற்றித்தான் ஏழு சுற்றுக் கோயில்கள் இருந்திருக்கின்றன, இன்று இருப்பவை ஆறு கோயில்களே, சூரியன், சப்த மாதர், சுப்பிரமணியர், கணபதி, ஜேஷ்டாதேவி, சண்டீசர், சந்திரன் இவர்களுக்கு எனத் தனித்தனிக் கோயில்கள். எல்லா கோயில்களும் கல்லால் கட்டிய கோயில்கள். அஸ்திவாரம் முதல் ஸ்தூபி வரையில் முழுக்க முழுக்க கருங்கல்லே. சுண்ணாம்பு கூட உபயோகிக்காமல் செவ்வையாக இணைக்கப்பட்டிருக்கின்ற இக்கற்களைப் பார்க்கும்போது அக்காலத்திய கட்டிடக் கலைஞர்களது மேதாவிலாசம் நன்கு விளங்கும். கோயில் கட்டிடக் கலையை ஆராய விரும்புபவர்களுக்கு, இந்தக் கோயில் ஒரு கலங்கரை விளக்கம் ஆகும். விஜயாலய சோழீச்சரம் என்னும் இக்கோயிலை உள்ளடக்கிய நார்த்தா மலையில் வேறு பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்லைதான். என்றாலும் ஊரை விட்டுக் கிளம்புமுன் கிராமத்தின் நடுவில் உள்ள ஜம்புகேசுவரர் கோயிலுக்கு, மாரியம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தே திரும்பலாம். மாரியம்மன் சிறந்த வரப்பிரசாதி. அங்கு நடக்கும் திருவிழாவும் மிகப் பிரபலமானது அந்த வட்டாரத்திலே.
புதுக்கோட்டை வட்டாரத்தில் இன்னும் சில கோயில்கள் உண்டு.
புதுக்கோட்டைக்கு மேற்கே பத்து மைல் தூரத்தில் அன்னவாசல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு சென்று ஓர் ஆளைத் துணை கூட்டிக்கொண்டு கொஞ்சம் காட்டுவழி எல்லாம் கடந்தால் தமிழ்நாட்டின் அஜந்தாவான சித்தன்னவாசல் மலையடிவாரம் வந்து சேரலாம். இங்கே வடகிழக்காகப் பரவியுள்ள ஒரு பெரிய குன்றில் ஏழடிப்பட்டம் என்னும் சமணக்குகைகள் இருக்கின்றன. அந்தச் சமணர்கள் சித்தர்களாக இருந்திருக்கிறார்கள் இங்கு மேற்கே பார்க்க அமைக்கப்பட்ட குடைவரையில்தான் அஜந்தா சித்திரங்களைப் போல அழியாத சித்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் மலைமேல் ஏறித்தான் இக்குடைவரையை அடைய வேணும்.
பின்புறம் ஒரு கருவறையும் முன்புறம் ஒரு மண்டபத்துடலும் கூடியது அது. முன் மண்டபத்திலே இரண்டு பார்சவ நாதரது உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்துத் தூண்களிலே மகேந்திரவர்மனும் நாட்டியப் பெண் ஒருத்தியும் சித்திரத்தில் தீட்டப்பட்டிருக்கிறார்கள், முன் மண்டப விதானத்திலே ஜைனர்கள் சொல்லும் பரமபதம் என்னும் சாமவ சரவணப் பொய்கை எழுதப்பட்டிருக்கிறது. அங்கு தாமரை இலைகளும்
விஜயாலய சோழிச்சரம்
மலர்களும் காயாமமலர்ந்து கிடப்பது கண் கொள்ளாக் காட்சி, வித்தகர் இயற்றிய கைவினைச் சித்திரம் அது. உள் மண்டபத்திலே உள்ளலிதானத்திலே அழகான ரத்தினக்கம்பளம் விரித்திருக்கும். ஆம் சித்திரத்தில்தான். அழியா வண்ணங்களால் ஆக்கப்பட்டவைதாம் என்றாலும் இன்று மங்கி மறைந்தே வருகின்றன. இச்சித்திரங்கள் தமிழன் சித்திரக்கலையில் அடைந்திருந்த தேர்ச்சியை விளக்கப் போதுமானதொன்று. இக்குடைவரையும் இங்குள்ள சித்திரங்களும் மகேந்திரவர்மன் சமணனாக இருந்த காலத்தில் உருவாகியிருக்க ளவேணும். ஆதலால் இவை மாமல்லபுரத்தின் பொற்காலத்துக்கு முந்தியவை. ஆகவே சென்று கண்டு மகிழ வேண்டியவை.
புதுக்கோட்டையிலிருந்து செல்லும் வழியாக மேற்கே பன்னிரண்டு மைல் சென்றால புல்வயல் அடவியின் மத்தியிலுள்ள குடுமியான்மலை வந்து சேருவோம். இங்குள்ள சிகாநாதர் கோயில் மிகப் பழைய கோயில், இங்குள்ள மூர்த்திக்குச் சிகாநாதர் என்ற பெயர் எப்படி வந்தது என்று முதலில் தெரிந்து கொள்ளலாமே.
மதுரையிலிருந்து ஆண்ட மன்னன் சுந்தரபாண்டியன் அர்த்தசாம காலத்துக்குப் பின்னேயே இக்கோயிலுக்கு வந்திருக்கிறார். கோயிலில் நீண்ட நேரம் இருந்த அர்ச்சகர் அர்த்த சாமம் முடிந்ததும், இறைவனுக்கு அணிந்திருந்த மாலைகளை எடுத்துச் சென்று தம் காதல் கிழத்தியான கணிகை ஒருத்திக்குக் கொடுத்து விடுகிறார். அரசன் வந்திருக்கிறான் என்பது அறிந்த - அர்ச்சகர் அந்த மாலைகளைப் போய் எடுத்து வந்து அதில் ஒரு மாலையை மன்னனிடம் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு மயிர் இருப்பதைக் கண்டு கோபங்கொண்ட அரசனிடம் அர்ச்சகர் தைரியமாகவே,
கொடும்பாளூர் கோயில்
'இறைவனுக்குச் சிகை உண்டு. அந்தச் சிகை மயிரே அது' என்று சொல்லியிருக்கிறார். அர்ச்சகர் சொல்லைக் காக்கவே இறைவன் அன்று முதல் சிகையையும் ஏற்றுச் சிகாநாதர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.
சிகாநாதர் இருக்கும் கோயிலே குடுமியான் மலைக்கோயில். இங்கு பெரிய பெரிய மண்டபங்கள், மச்சாவதாரம் முதலிய சிற்ப வடிவங்கள், ஆஞ்சநேயர், வாலி, சுக்ரீவன் எல்லோரும் வேறே வந்து இடம் பிடித்து உட்கார்ந்து கொள்கிறார்கள் சிலைவடிவங்களில், சிகா நாதரும் அவரது துணைவி அகிலாண்டேசுவரியும் குடைவரைக்குள் இருக்கிறார்கள். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் எல்லாம் பின்னால் எழுந்திருக்கின்றன. இக்கோயில் மேல் பிராகாரத்திலுள்ள மலையைச் செதுக்கிச் சுவர்போலாக்கி அதிலே மன்னன் மகேந்திரவர்மன் ஒரு சிறந்த சங்கீத சம்பந்தமான தகவலை வெட்டி வைத்திருக்கிறார். இது கிரந்த எழுத்தில் இருக்கிறது. வெட்டிய மன்னன் தன்னை ருத்ராச்சாரியார் சிஷ்யன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதினால் அவனை மகேந்திரவர்மன் என்று கூற முடிகிறது. பரத நாட்டிய நூலுக்கும் சாரங்கதேவர் சங்கீதரத்னாகரத்துக்கும் இடைப்பட்ட கல்வெட்டு இதுதான், மகேந்திரவர்மன் சித்திரக்காரப் புலி மாத்திரம் அல்லவே? சங்கீர்ண ஜாதியின் ஆதிகர்த்தா ஆயிற்றே.
குடுமியான் மலையைவிட்டு மேற்கு நோக்கிப் பத்து மைல் நடந்தால் கொடும்பாளூர் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊருக்கு வந்து சேருவோம். வேளிர் தலைவர்களது பிரசித்திபெற்ற ஊர் ஆயிற்றே. சோழ மன்னர்களுக்கு வலக்கை போல் இருந்து போர்களில் உதவியவர்கள் அவர்கள். கொடும்பாளூரில் நாம் காண வேண்டிய இடம் இரண்டு. ஒன்று மூவர் கோயில், மற்றொன்று ஐவர் கோயில், மூவர் கோயிலில், இன்று இருப்பது இரண்டு கோயில்களே. அதுவும் இடிந்து கிடந்ததைத் திரும்பவும் எடுத்துக்கட்டி வைத்திருக்கிறார்கள். கோயில் முழுதும் கல்லாலே கட்டியிருக்கிறார்கள். அழகான சிற்ப வடிவங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள், இந்த மூவர் கோயிலிலாவது இரண்டு கோயில்கள் உருப்படியாக இருக்கின்றன. 'ஐவர் கோயிலில் அதுவும் இல்லை. ஐந்து தளிகளையுமே காணோம். இடிந்த அடித்தளம், அங்கு சிதறிக் கிடக்கும் சில கற்சிலைகள் அவ்வளவுதான். கொடும்பாளூர் வேளிர்களில் ஒருவரான பூதி விக்கிரமகேசரி காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இவன் இரண்டாம் பராந்தகச்சோழன் காலத்தில் அவனுக்கு அடங்கிய சிற்றரசன் என்று தெரிகிறது.
3. திருமெய்யம் சத்தியமூர்த்தி
சந்தியசந்தனான அரிச்சந்திரன் கதை பிரசித்தமானது. அயோத்தி மன்னனாக இருந்த அரிச்சந்திரன் விசுவாமித்திரரால் கடுஞ்சோதனைக்கு உள்ளாகிறான். சொன்ன சொல்லைக் காப்பாற்ற நாட்டைத் துறந்து புறப்படுகிறான். மனைவியைப் பிறன் ஒருவனுக்கு அடிமையாக்குகிறான்; மகனை விற்கிறான். மேலும் மேலும் துன்பங்கள் வளருகின்றன. தன் மகன் பாம்பு கடித்து இறந்த போதும் காசி மன்னன் மகனைக் கொன்றதாகத் தன் மனைவி குற்றம் சாட்டப்பட்ட போதும் மனம் கலங்காமலேயே இருந்தான். பின்னர் தன்னை அடிமை கொண்ட வீரபாகுவின் ஆணைப்படி தன் மனைவியையே வெட்ட வாளை ஓங்கியபோதும்
பதி இழந்தனம் பாலனை
இழந்தனம், படைத்த
நிதி இழந்தனம் நமக்கு
உளதென நினைக்கும்
கதி இழக்கினும்
கட்டுரை இழக்கிலம்
என்ற உறுதிப் பாட்டில் நிலைத்து நின்றிருக்கிறான். அதனால் அவன் வெட்டிய வெட்டே மாலையாக விழுந்திருக்கிறது அவன் மனைவியின் கழுத்தில். சத்தியம் தலைகாக்கும், 'சத்யமேவ ஜயதே' என்ற உண்மையும் நிலைத்திருக்கிறது. இந்த சத்யகீர்த்தியின் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஓர் அதிசயம். இப்படி வட நாட்டு அயோத்தி மன்னன்தான் புகழ் பெற்றான் என்றில்லை. தென் தமிழ் நாட்டிலும் ஓர் ஊர் சத்தியத்துக்கு உறைவிடமாக விளங்கியிருக்கிறது. அந்த ஊரில்தாள்: சத்தியமூர்த்தியாம் விஷ்ணுவும் சத்திய கிரீசுவரராம் சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மலை சத்யகிரி.; ஊரின் பெயரே - திருமெய்யம், அந்தத் திருமெய்யத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருமெய்யம், தொண்டைமான் புதுக்கோட்டைக்குத் தெற்கே பதின்மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகர். இதனை இன்று திருமயம் என்றே அழைக்கின்றனர், சத்யகிரீசுவரரும், சத்யமூர்த்தியும் வந்து தங்கியிருக்கிற தலம் திருமெய்யமாக இருப்பதில் விசேஷ மில்லைதான். என்றாலும் திருமெய்யமே நாளடைவில் திருமய்யம் எனத் திரிந்து, பின்னர் திருமயம் என்று குறுகியிருக்கிறது. வடக்கேயிருந்து காரிலோ, பஸ்ஸிலோ வருகிறவர் ஊர்ப்பக்கத்துக்கு வந்ததும் கோட்டைச் சுவரில் இருக்கும் பைரவரை வணங்கித்தான் ஊர் புகவேண்டும், அவ்வழியே செல்லும் பஸ்காரர்கள் கூட அந்த இடத்துக்கு வந்ததும் பஸ்ஸை நிறுத்தி, சிதறுகாய் ஒன்றைப் போட்டுவிட்டுத்தானே நகருகிறார்கள். நாமும் அப்படியே செய்யலாம். இந்தப் பைரவரை 'அவாய்டு' பண்ணிக்கொண்டுவர விரும்பினால் புதுக்கோட்டை மானாமதுரை லயனில் திருமயம் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு இறங்கி மேற்கு நோக்கி நாலுபர்லாங்கு குளக்கரை வழியாக நடந்தால் ஊர் வந்து சேருவோம்.
ஊரைச் சுற்றி ஒரு பெரிய கோட்டை இருந்திருக்க வேணும், அதன் சிதைந்த சின்னங்கள் இன்னும் தெரிகின்றன. ஊருக்குள் நுழைந்ததும் நம் கண் முன் தெரிவது ஒரு சிறிய குன்றும் அதன் மேல் உள்ள கோட்டையும்தான். மலைமேலே ஏறுவது எளிது. ஆனால் அங்குள்ள காவல்காரனைத்தேடிப் பிடித்து அவனையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனென்றால் மலை மீதுள்ள கோட்டைச் சுவரிலுள்ள வாயிலைக் கதவிட்டுப் பூட்டி வைத்திருப்பார்கள். அதைத் திறக்கும் திறவு கோல் அக்காவல்காரனிடம் தானே இருக்கிறது. மலை ஏறி உச்சிக்குச் சென்றால் அங்குள்ள மேட்டில் பழைய பீரங்கி ஒன்றிருக்கும். அதன் பக்கத்தில் ஏறி நின்று வடபுறம் உள்ள ஏரி குளம் நெல் வயல் எல்லாவற்றையும் பார்த்தால் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். கோட்டையில் பார்க்கவேண்டியவை வேறு ஒன்றும் இல்லைதான். பின்னர் கீழே இறங்கி ஊரைச் சுற்றிக் கொண்டு வந்தால் முதலில் சத்தியமூர்த்தியாம் பெருமாள் கோயிலைப் பார்ப்போம். அதற்குக் கீழ்ப் பக்கத்தில் தான் சத்ய தீர்த்தம் என்னும் சிறு குளம் இருக்கும், இந்தச் சத்திய மூர்த்தியின் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தலம் ஸ்ரீ வைஷ்ணவர்களால் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுகிறது. ஆதிரங்கம் என்றே அழைக்கிறார்கள். கோயில் வாயிலை ஓர் அழகிய கோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து சென்றால் ஒரு பெரிய மண்டபத்திடையே வந்து சேருவோம். தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள். இந்த மண்டபத்திலேயே ஆண்டாள் கண்ணன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. வலப்புறத்தில் நரசிம்மருக்கு ஒரு சந்நிதி.
இந்த மண்டபத்தையும் அதை அடுத்த மண்டபத்தையும் கடந்துதான் தாயார் சந்நிதிக்கு வரவேணும். தாயார் திருநாமம் உஜ்ஜீவனத்தாயார். அங்குள்ள ஆழ்வார் ஆச்சார்யர் சந்நிதிக்குப் பின்னால் தான் மகாமண்டபம் இருக்கிறது. அம்மண்டபத்தில் சந்நிதியை நோக்கியவண்ணம் கருடாழ்வார் நிற்கிறார். இதை அடுத்தே சுந்தரபாண்டியன் குறடு. அதன் வழியாகச் சத்தியமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேணும். சத்தியமூர்த்தியின் கருவறை மலைச் சரிவை ஒட்டியிருக்கிறது. தூண்களில் எல்லாம் புஷ்பப் போதிகைகள், தாமரை மொட்டுகள் எல்லாம் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சத்தியமூர்த்தியினை மங்கை மன்னன் மங்களா சாசனம் செய்திருக்கிறான்.
மையார் தடங்கடலும்
மணிவரையும் மாமுவிலும்
கொய்யார் குவளையும்
காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய
மலையானை, சாக்கேந்தும்
கையானைக் கைதொழாக்
கையல்ல கண்டோமே
என்ற பாடல் மிக நல்ல பாட்டாயிற்றே. இந்த மெய்யனையே சத்தியமூர்த்தி, சத்திய நாராயணர் என்றெல்லாம் அழைக்கிறார்கள், 'மொய் வண்ணம் மனத்தகற்றிப் புலனைந்தும் செலவைத்தும் மெய் வண்ணம் நினைந்தார்க்கு மெய் நின்ற வித்தகன்' என்றே பாராட்டப்பட்டவன் இவன். இமயமலையிலிருந்து தவம் செய்த முனிவர் சத்தியரே இங்கு எழுந்தருளி இப்பெருமானைப் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கி இருந்தாலும் இவர் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கின்றார்.
இந்தச் சந்நிதிக்கு மேற்கேதான் பாறையில் குடைந் தெடுக்கப்பட்ட குடைவரையுள்ளது. அக்குடைவரையின் உள்ளேயே போகசயனமூர்த்தியும் இருக்கிறார். இங்கு இவருடைய அனந்தசயனக் கோலம் எல்லாம் மலையைக் குடைந்து அமைத்தது. பாம்பணையனாக இருக்கும் ஆதிசேஷன் பெருமானுக்குக் குடை பிடிக்கிறான், பெருமானுக்கு ஸ்ரீ ரங்கத்தில் இருப்பது போலவே இரண்டு திருக்கரங்கள்தாம். ஒன்று ஆதிசேஷனுக்கு அருளுவது போல் உயர்ந்திருக்கிறது, மற்றொரு கை, வக்ஷ ஸ்தலத்தில் இருக்கும் லக்ஷ்மியைப் பாதுகாக்கும் நிலையில் இருக்கிறது. சயனமூர்த்தியைச் சுற்றிக் கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயர்; பிரமன் எல்லாரும் இருக்கிறார்கள். வான வீதியிலே தேவர்களும் கின்னரர்களும் விரைந்து செல்லும் காட்சி மற்றத் தலங்களிலும் காணக்கிடையாததொன்று. பெருமானின் காலடியில் மதுகைடபர் என்ற அசுரரும், பூமி தேவியும் இருக்கிறார்கள், அன்று பூமிதேவியை மதுகைடபர் தூக்கிச் சென்றபோது ஆதிசேஷன் தன் விஷத்தை அவர்கள் மீது கக்கியிருக்கிறான். அவர்கள் பஸ்மீகரமாகி யிருக்கிறார்கள். பரந்தாமனது கட்டளை இல்லாமலேயே ஆதிசேஷன் தானாகவே விஷம் கக்கியதற்கு வருந்தியிருக்கிறான். அதனாலேயே! அவனைச் சாந்தி செய்யும் கோலத்தில் இந்த அனந்தசயனர் கிடக்கிறார் என்பது புராணக்கதை, இங்குள்ள பெருமாளும் மாமல்லபுரத்து தலசயனப் பெருமாளும் ஒரே கோலத்தவர். ஆம்! பெய்யத்துக் குடைவரையும் மாமல்லபுரத்தைப் போல் பல்லவர் பணிதானே.
இந்த மெய்யத்துப் பெருமானை வணங்கிய பின் மேலே நடந்து அடுத்த கோயிலான சத்தியகிரீசுவரர் கோயிலுக்கு வரலாம். நிரம்ப நடக்க வேண்டியதில்லை. ஒரு சிறு தெருவைத்தான் கடக்க வேணும். இந்தக் கோயிலையும் ஒரு சிறு கோபுரம் அழகு செய்யும். வாயிலைக் கடந்தால் முன் மண்டபத்தில் பானு உமாபதீசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கியபடி இருக்கும். இவற்றைக் கீழைக் கோயில் என்பார்கள். இங்கேயே ராஜ ராஜேஸ்வரி தெற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள். இதற்குக் கொஞ்சம் மேலேதான் வேணுவன ஈசுவரி கோயில், இதையும் கடந்துதான் சத்தியகிரி ஈசுவரர் சந்நிதி இருவருமே குடைவரையுள் இருப்பவர்தான். பெருமாளைக் குடைந்தெடுத்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனே சத்தியகிரியாரையும் குடைந்து அமைத்திருக்கிறான். குடைவரையில் மேல் கோடியில் லிங்கம் இருக்கிறது. மலையைக் குடைந்து நிர்மாணிக்கப்பட்டவரே இவர். இவரது கருவறை, அதற்கு முன்னுள்ள அர்த்தமண்டபம், அங்குள்ள நந்தி எல்லாம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டவை. இங்குள்ள தூண்கள் அடியில் உருளையாகவும் நடுவில் எட்டுப் பட்டை போட்டவையாகவும் இருக்கும். பல்லவர்காலக் குடைவரைதான் என்பதற்கு இது ஒரு சான்று. இங்குள்ள துவாரபாலகர்களுக்கு எல்லாம் இரண்டே கைகள் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. வலம்புரி விநாயகர் வேறே இங்கு உருவாகியிருக்கிறார். முன்னர் குடுமியான் மலையில் கண்டது போல் இங்கே சங்கீத வின்னியாசக் கல்வெட்டு ஒன்று உண்டு, ஆனால் அவையெல்லாம் சிதைந்துபோய்விட்டன. இங்கு சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள் பல இருக்கின்றன.
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயான நாயகர் ஆவார் தோழி!
தாமரைக் கண்கள் இருந்தவாறு
என்று மங்கை மன்னர் சத்தியமூர்த்தியையே பாடியிருந்தாலும், தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெறாத சத்திய கிரீசுவரருக்குமே இப்பாடலை ஏற்றலாம். ஏற்றித் துதித்து வணங்கித் திரும்பலாம்.
இக்கோயிலில் கல்வெட்டுகள் நிரம்ப இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது குடுமியான் மலையில் உள்ளதுபோல் சங்கீத வின்னியாசத்தைப் பற்றியது. ஆனால் இந்தக் கல்வெட்டின் மேலேயே வெட்டிய கல்வெட்டு குடைவரை அமைப்பு முதலிய சான்றுகளைக் கொண்டு இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவனே கட்டியிருக்க வேண்டும் என்று கருத இடம் இருக்கிறது. சத்திய மூர்த்தியின் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் சாத்தன் மாறன் இக்கோயிலைப் புதுப்பித்தான் என்றும் தெரிகிறது. அவன் தாயான பெருந்தேவி நிலமான்யம் நிரம்ப அளித்திருக்கிறாள் என்றும் தெரிகிறது. சாத்தன் மாறன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன். அதன் பிறகு விஜயாலய சோழன் சந்ததியினரே இந்த நாட்டை ஆண்டிருக்கின்றனர். அவர்களின் பிரதிநிதியான அப்பண்ண தண்ட நாயகன் ராமேசுவரத்திலிருந்து திரும்பி வரும்போது இத்தலத்தில் தங்கி இங்குள்ள இரண்டு கோயில் தர்மகர்த்தாக்களுக்குள், ஏற்பட்டிருந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்திருக்கிறான். இத்தண்ட நாயகன் ஹொய்சள தளகர்த்தன். இவன் சிவவிஷ்ணு ஆலயங்களுக்கு இடையே ஒரு சுவர் நிரந்தரமாக எழுப்பியிருக்கிறான். இதை ஒரு கல்வெட்டில் குறித்திருக்கிறான்.
இந்தக் கல்வெட்டு கி.பி. 1245-இல் பொறிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்த வட்டாரம் சேதுபதியின் ஆளுகையில் இருந்திருக்கிறது. அவர்களில் விஜய ரகுநாத ராயர் என்பவர் இந்தப் பிரதேசத்தைப் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் தஞ்சாவூரிலிருந்து ஆனந்தராவ் புதுக்கோட்டை மீது படையெடுத்து வந்தபோது விஜய ரகுநாதத் தொண்டைமான் இத்திருமெய்யம் கோட்டையிலேயே வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறான். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனான கட்டபொம்மனும் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையில் வந்து ஒளிந்திருந்தார்கள் என்பதும் கர்ண பரம்பரை. இவற்றையெல்லாம் ஆராய்ந்தால் கோட்டை பிந்திக் கட்டப்பட்ட தொன்று என்றும், கோயில் மகேந்திரவர்மன் காலத்தே வெட்டப்பட்டது என்பதும் விளக்கமுறும். திருமெய்யத்து இன்னமுதன் என்று பெரிய திருமடலிலேயே திருமங்கை மன்னனால் பாராட்டப்பட்டவன் அல்லவா இந்தச் சத்தியமூர்த்தி?
4. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மனிடம் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி, மகேந்திரவர்மனுக்குப் பின் நரசிம்மவர்ம பல்லவனிடமும் சேனாதிபதியாக இருந்திருக்கிறார். சாளுக்கிய மன்னன் புலிகேசிமேல் நரசிம்மவர்மன் எடுத்த படையெடுப்பில் முன்னின்று சேனையை நடத்தியிருக்கிறார். சாளுக்கிய மன்னன் தலை நகரான வாதாபி மீது படையெடுத்து அந்தப்போரில் வெற்றி கண்டு அந்த நகரைத் தீக்கிரையாக்கியிருக்கிறார். வாதாபி நகரில் அகப்பட்டதையெல்லாம் சுருட்டிக் கொள்ளத் தன் படைவீரர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறான் நரசிம்மவர்மன். எல்லாப் படை வீரர்களும் பொன்னையும் பொருளையும் கொள்ளை கொண்டு போகிறபோது, பல்லவ சேனாதிபதி பரஞ்சோதி மட்டும் பொன்னிலும் பொருளிலும் மோகம் கொள்ளாமல், அந்த நகரத்தின் கோட்டை வாயிலில் இருந்த கணபதி விக்ரஹத்தை மட்டும் தம்முடன் எடுத்துச் செல்ல மன்னனிடம் அனுமதி கேட்டிருக்கிறார். மன்னனோ! அனுமதி கொடுக்கத் தயங்கவில்லை. அவ்வளவுதான்: வாதாபிக் கோட்டையிலுள்ள கணபதி பெயர்த்தெடுக்கப்பட்டார். நாடு திரும்பிய வெற்றி வீரர்களோடு வீரராக, ஏன் அந்த வீரர்கள் தலைவராகவே தமிழ்நாடு நோக்கிப் புறப்பட்டு விட்டார் பரஞ்சோதி, நேரே இந்த விநாயகரைத் தம் சொந்த ஊரான திருச்செங்காட்டாங்குடிக்கே கொண்டு வந்து விட்டார். அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்தும் வைத்து விட்டார். வாதாபி கணபதி தமிழ் நாட்டுக்குள் வந்து நிலைபெற்றது இப்படித்தான்.
திருச்செங்காட்டாங்குடியில் வாதாபி கணபதியைப் பரஞ்சோதியார் (ஆம்! பின்னர் தம்மைச் சிறுத்தொண்டன் என்று அழைத்துக்கொண்டவர்) பிரதிஷ்டை செய்த திருநாளன்று பல்லவ மன்னன் நரசிம்மவர்மனும் வந்திருக்கிறான். பரஞ்சோதியாருடைய கைங்கரியத்தைப் பாராட்டியிருக்கிறான். ஆனால் பரஞ்சோதியாருக்கு மட்டும் ஒரு சிறு கவலை. தம்மைப் போல் கணபதியின் பேரில் காதல் கொள்பவர்கள் யாராவது, தாம் வாதாபியிலிருந்து பெயர்த்தெடுத்து வந்தது போலவே, செங்காட்டாங்குடியிலிருந்தும் பெயர்த்து எடுத்தச் செல்லலாம் அல்லவா என்பதுதான், பரஞ்சோதியாருடைய கவலையை உணர்ந்திருக்கிறான் நரசிம்மவர்மன். 'அப்படி நடக்காது, கவலையே வேண்டியதில்லை' என்று அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறான்.
என்றாலும், இந்த எண்னம் அவன் உள்ளத்தில் ஊன்றி நின்றிருக்கிறது. தென்னாடு வந்த பல்லவ மன்னன். தன் தந்தை மகேந்திரவர்மன், திருச்சி, சித்தன்னவாயில் முதலிய இடங்களில் கட்டிய குடைவரைக்கோயிலையும் தீட்டிய சித்திரங்களையும் காண விரைந்து ஒரு சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கியிருக்கிறான். அந்தப் பிரயாணத்தில்தான், இன்றைய காரைக்குடியை அடுத்த குன்றக்குடியிலிருந்து மேற்கு நோக்கி நடந்திருக்கிறனான். அப்படி நடந்தவன் வழியில் ஒரு சிறிய குன்றைக் கண்டிருக்கிறான். ஆம்! இந்தச் சிறிய குன்றில் ஒரு கணபதியைச் செதுக்கி வைத்துவிட்டால், அசைக்க முடியாதவராக அமர்ந்து விடமாட்டாரா அவர் என்று எண்ணியிருக்கிறான். அவ்வளவுதான்; அவன் எண்ணத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்கள் உடன் வந்த சிற்பிகள். மலையைக் குடைவது என்பதுதான் அவர்களுக்கு எளிதான காரியம் ஆயிற்றே. குடைவரைக் கோயில் ஒன்று உருவாகி விட்டது. அங்கு தேசிக விநாயகப் பிள்ளையார்-கற்பக விநாயகர், அசையாத பிள்ளையாக, அசைக்க முடியாத கணபதியாக அமர்ந்து விட்டார். இருவருக்கும் இடையில் சிற்பிகள் நரசிம்மவர்ம பல்லவனது திருவுருவையுமே செதுக்கிநிறுத்தி விட்டார்கள். அன்று முதல் இங்கு பிள்ளையார் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுவிட்டார். ஈக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தச் சிற்றூரின் பெயர் அன்று முதல் பிள்ளையார்பட்டி என்றே நிலைத்து விட்டது. பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் உருவான கதை இப்படித்தான் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் குடைவரைக் கோயிலில், பிள்ளையார் திரு உருவம் அசைக்க முடியாத திரு உருவமாக அமைக்கின்ற வாய்ப்பு ஏற்படாதல்லவா? அந்தப் பிள்ளையார் பட்டிக்கே செல்கிறோம் நாம் இன்று.
பிள்ளையார்பட்டி ஒரு சிறிய ஊர், ராமநாதபுரம் ஜில்லாவில், காரைக்குடியிலிருந்து திருப்புத்தூர் செல்லும் வழியில் காரைக்குடிக்கு மேற்கே எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. வழியில்தான் குன்றக்குடி முருகன் கோயிலும் இருக்கிறது. பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், குன்றக்குடி முருகன், மலைமேல் நிற்பவன் என்று. மயில்போல் சரிந்து நீண்டிருக்கும் மலை மேல் கோயில் இருக்கிறது. ஏறுவது சிரமமாக இராது. ஆதலால் அண்ணைத் தரிசிக்கப் போகும் இடத்தில் தம்பியையும் தரிசித்துவிட்டே மேல் நடக்கலாம். பிள்ளையார் பட்டிக்குத் திரும்பும் வழியில் பலகை நட்டு வழி காட்டியிருப்பார்கள் நெடுஞ்சாலைப் பொறியாளர். ஊருக்கு மத்தியில் கோயிலும் குளமும்: குளத்தைச் சுற்றி அகன்ற வீதி.
நரசிம்மவர்மன் காலத்தில் உருவான குடைவரைக் கோயிலை மூலக் கோயிலாகக் கொண்டு பின்னர் இந்தக் கோயில் விரிந்து வளர்ந்திருக்கிறது. இப்படி விரிந்த கோயில் தான் இன்று மகாமண்டபம், ராஜகோபுரம் முதலியவைகளுடன் பெருங் கோயிலாக இருக்கிறது. இக்கோயிலில் கோயில் கொண்டிருப்பவர்தான் மருதங்குடி நாயனார். இந்த மருதங்குடி நாயனார் கோயிலை விரிவாகவும் அழகாகவும் கட்டி முடித்தவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார். கோயிலைக் கட்டி கோயிலுக்குமுன் ஒரு நல்ல குளத்தையும் வெட்டி, இவற்றைச் சுற்றி நல்ல நல்ல விடுதிகளையம் அமைத்து, தக்க முறையில் பாதுகாத்து வருகிறார்கள் பதினாறு காரியக்காரர்கள். இக் காரியக்காரர்கள்தான் பிள்ளையார்பட்டியான திருவேட்பூருடையார் என்ற கோத்திரத்தவர். இவர்களே கோவில் பூசை படித்தரம் முதலியவை சிறப்பாக நடைபெற (கோயில் வருமானம் போதாமல் இருப்பதால்) தங்கள் சமுதாய நிதியிலிருந்து கொடுத்து உதவுகிறார்கள்.
இந்தக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் இரண்டு பிரசித்தம். ஒன்று மார்கழித் திருவாதிரைத் திருநாள், இரண்டு விநாயக சதுர்த்தி, திருவாதிரை நாளன்று சிவகாமசுந்தரி சமேதராக நடராஜர் வீதி உலா வருவார். அன்று சிவகாமசுந்தரியின் உடலைத் தீர்க்க, நடராஜர் எழுதிக் கொடுக்கும் பிடிபாடு மிக்க அழகானது. அதாவது தனக்கு எவ்வளவு சொத்திருக்கிறது என்பதை எல்லாம் அடுக்கடுக்காய் எடுத்துக் கூறிச் சிவகாமியின் ஊடல் தீர்க்க விரைவார். சிவகாமியின் ஊடல் தீர்கிறதோ இல்லையோ, கோயிலின் நிலபுல விவரம் முழுதும், ஆண்டுதோறும் மார்கழி அறுவடையில் ஊரார் எல்லாம் அறியப் படிக்கப் பெறுவது என்பது வரவேற்கத்தக்க தொன்றுதானே! இந்தக் கோயிலின் பெருந் திருவிழா விநாயக சதுர்த்தியே. ஆம்! பிள்ளையார் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்தக் கோயிலில் சதுர்த்தி பெரிய விழாவாகக் கொண்டாடப்படுவது ஆச்சரியமில்லைதான். விழா மற்ற ஊர்க் கோயில்களில் எல்லாம் நடைபெறுவது போல, பத்து நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடக்கும் விழாதான் இந்தக் கோயிலுக்கே உரிய தனிச் சிறப்போடு நடத்தப்பெறுகிறது.
விழாவைப் பற்றிச் சொல்லுமுன் சதுர்த்தி விரதத்தைப் பற்றியும் அவ்விரதம் ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை.
ஒரு நாள் விநாயகர், தேவர்கள் எல்லாம் கண்டு களிக்கக் கைலாயத்திலே நர்த்தனம் செய்திருக்கிறார். சரிந்த தொந்தி, மோதகம் ஏந்திய கை, குறுகிய கால்கள் இவைகளுடன் ஆடிய விநாயகரது அல்லது விநாயகரைப் போன்ற உருவும் படைத்தவர்கள் நடனம் ஆடுவதைக் கண்டால், சிரிக்காமலிருக்க முடியுமா? ஒன்று சந்திரன், சிரிப்பை அடக்கியிருக்க வேண்டும். இல்லை. அப்படி சிரித்ததற்கு ஒரு பொய்யையாவது கற்பனை பண்ணிச் சொல்லத் தெரிந்திருக்க வேனும், இரண்டும் செய்யவில்லை. வாய்விட்டே சிரித்துவிட்டான் அவன். அவ்வளவுதான்; கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது விநாயகருக்கு. அதனால் பிடி சாபம் என்று கோபமாகச் சந்திரனைச் சபித்தே விட்டார். சாபமோ, அன்று முதல் சந்திரன் உருவை ஒருவருமே பார்க்கமாட்டார்கள். கண்ட்வரும் நிந்தை செய்து ஒதுக்கி லிடுவார்கள். அத்தகைய நீசனாக அவன் ஆகட்டும் என்பதுதான் சாபம். நல்ல கலை பொருந்திய உருவம் கொண்ட சந்திரளோ, அன்று முதல் கலை இழந்து தேய்ந்து தேய்ந்து மெலிந்தான் கண்டவரும் வெறுத்து ஒதுக்கினர், வெட்கத்தால் உருவம் குன்றிய சந்திரன் பிரமனிடம் சென்று முறையிட்டான். சாபமிட்டவர்தால் சாப விமோசனத்தையும் அருளவேண்டும் என்று சொல்லிச் சந்திரனை விநாயகரிடத்தில் அழைத்துச் சென்றான் பிரமன், சந்திரனும் விநாயகர் திருவடியில் விழுந்து வணங்கி, தெரியாது செய்து பிழையை மன்னித்தருள வேண்டினான். பிரம்மாவும் அவனுக்காகட் பரிந்து பேசினார். 'தவறு செய்ததற்குத் தண்டனை வேண்டியதுதான் ஆனால் அது நிரந்தரத் தண்டனையாக இருக்கவேண்டாமே வருஷத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே அந்தத் தண்டனையை அவன் அனுபவிக்குமாறு அருள் புரியலாமே' என்றார் பிரமன் விநாயகரும் மனம் இரங்கிச் 'சுக்ல சதுர்த்தியில் உன்னைச் காண்பவர்களெல்லாம் வீண் அபவாதம் அடையட்டும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் என்னைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கட்டும்' என்றும் சாபத்தை மாற்றி அருளினார் இது காரணமாகத்தான் வளர்பிறையில் சதுர்த்தியன்று! இன்றும் மக்கள் சந்திரனைப் பார்க்காது ஒதுக்குகிறார்கள். அப்படித்தப்பித் தவறிப் பார்ப்பவர்களும், ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரதம் அனுஷ்டித்து விநாயகரை வணங்கிச் சாப விமோசனம் பெறுகின்றனர்.
இப்படித்தான் சதுர்த்தி விரதம் அன்று முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது என்று பெறுகின்றன புராணங்கள், அதிலும் இந்த விரதம் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதம் என்றும் சொல்கிறது. காரணம் இந்த உலகத்தில் ஆண்களை விடப் பெண்களே காரணம் இல்லாமல் வீண் அபவாதத்துக்கு உள்ளாகிறார்கள். ஆதலால் அவர்கள் மேல் ஏற்படும் வீண் அபவாதங்கள் நீங்கவும் அவர்கள் மிகவும் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எண்னங்கள் சித்திபெறவும் சித்தி விநாயகரை அவர்கள் விரும்பிய சதுர்த்தி அன்று விரதம் அனுஷ்டித்து வணங்குதல் வேண்டும். வருஷம் முழுதும், இருபத்து நான்கு சதுர்த்தியிலும் விரதம் அனுஷ்டிப்பதோடு, ஆவணி மாதம்
பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்
சுக்ல சதுர்த்தியில் விரதபூர்த்தி செய்து விநாயகரைத் தொழுதால் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெறலாம் என்பதுதான் மக்கள் நம்பிக்கை. பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி விரதம் எல்லோராலும், சிறப்பாகப் பெண்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருஷம் முழுதும் -ஆம், இருபத்து நான்கு சதுர்த்திதிதியிலும் விரதம் அனுஷ்டித்தவர்கள் எல்லாம், வருஷக் கடைசியல், ஆவணி மாதம் சுக்லபக்ஷ, சதுர்த்தியன்று விரத பூர்த்தி செய்கிறார்கள். அன்று பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் சந்நிதியில் வருஷம் முழுதும் விரதம் அனுபேடித்த பெண்கள் ஒன்று கூடுகிறார்கள். விரதபூர்த்தியை செய்ய பேந்திருக்கும் பெண்கள் எத்தனை பேரோ அத்தனை குடங்கள், ஆம் நானூறு ஐந்நூறு பேர்கள் வந்தாலும், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒன்று என்று குடங்கள் வைத்து ஒவ்வொரு குடத்தினுள்ளும் ஒவ்வொரு வெள்ளிப் பிள்ளையாரையும் போட்டுக் குடத்தில் தண்ணீர் நிரப்பிப் பூசனை புரிகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்யொரு குடம் எடுத்து அந்தக் குடத்தில் உள்ள தண்ணீராவ் அபிஷேகம் செய்து கொள்கிறார்கள். நனைந்த உடலோடும், உடையோடும் பிள்ளையார் சந்நிதியிலே விழுந்து வணங்கி, எழுந்து நின்று தீப ஆராதனையைக் கண்டு களிக்கிறார்கள். அன்று கோயிலில் கொடுக்கும் பிரசாதமாகிய மோதக நைவேத்தியத்தை மட்டுமே அருந்துகிறார்கள். இப்படி விரதம் அனுஷ்டித்து விரத பூர்த்தி செய்கின்ற பெண்கள் எல்லாருக்கும் அவரவர்கள் பிராத்தனை செய்து கொண்ட நலங்களையும் பெறுகிறார்கள். பெண்கள் மட்டும் என்ன- ஆண்களுமே இந்தச் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் என்ரிய எண்ணியாங்கு எய்துவர்.
சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்பும் எல்லோரும் பிள்ளையார் பட்டிக்குப் போகலாம். அதோடு பல்லவர் காலத்தில் சிற்பக்கலை எப்படியெல்லாம் வளர்ந்தோங்கியது என்று கண்டறிய இயலும், அதற்கு மேல் இந்தக் குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார் எப்படி மற்ற தமிழ் நாட்டுப் பிள்ளையார் திரு உருவங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறார் என்பதும் தெரியும். இங்குள்ள விநாயகரது துதிக்கை வலம் சுழித்து அவருக்கு வலம்புரி விநாயகர் என்ற பெயரைத் தேடித் தருகிறது. எல்லா இடத்தும் நான்கு திருக்கரத்தால் நான்கு திக்கிலும் ஆட்சி செய்பவர் இங்கு இரண்டே திருக்கரத்தால் விண்ணையும் மண்ணையும் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடுகிறார். அங்குசமும், பாசமும் இல்லாமலே அடியவரை ஆட்சி கொள்ளும் சக்தி உடையவராக இருக்கிறார். வயிற்றை ஆசனத்தில் படியவிடாமல் அர்த்த பத்ம ஆசனத்திலேயே கால்களை மடித்திருக்கச் செய்து கொள்கிறார். வலக்கரத்தில் மோதகம் தாங்கி இடக்கரத்தை இடையில் பொருத்திப் பெருமிதத் தோற்றத்தோடு காட்சி கொடுத்திருக்கிறார். ஆம், ஆதி நாளிலே உருவானவர்-இப்படி இரண்டு திருக்கரங்களோடு இருந்துதான், பின்னர் நாள்கு திருக்கரங்களோடு எழுந்த, நடந்து, நின்று நடமாடி, மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச் சவாரி செய்து கலைஞன் சிந்தனையிலே வளர்ந்திருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் முடிவு செய்யலாம்.
இதோடு, இந்தக் கோயிலில் இருக்கும் இரண்டு செப்புச் சிலைகள் மிக்க அழகு வாய்ந்தவை. அவை தாம் சந்திரசேகர மூர்த்தியும் அவரது துணைவியும். நல்ல சோழர் காலத்துச் சிலை. ஆயிரம் வருஷ காலத்துக்கு முன்பே உருவாகியிருக்க வேண்டும். நிற்கும் நிலையையும் மணிமகுடத்தையும் பார்த்ததுமே எளிதாகச் சொல்லிவிடலாம். மானும் மழுவும் தாங்கிப் பிறையும் மகுடமும் அணிந்து அபய கரத்தோடு அருள்பாலிக்கும் திரு உருவாக அமைந்திருக்கறார். ஆணுக்குப் பெண் அழகு என்பதுபோல், அன்னை பார்வதி அவரைவிட அழகாக இருக்கிறாள்.
கோயில் பிரும்மாண்டமான அளவில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜ கோபுரம் வேறு நீண்டு உயர்ந்திருக்கிறது. இன்றையச் சிற்பிகளின் வேலைப்பாடுகளைத் தூண்களில், விதானங்களில் எல்லாம் காணலாம். இங்குள்ள பிள்ளையார் பேரருளைச் சொக்கலிங்க ஐயா அவர்கள் பாடியிருக்கிறார்கள்.
நாமும் பிள்ளையார்பட்டிப் பிள்ளையாரை வணங்கிப் பெறற்கரிய பேறுகளையெல்லாம் பெற்றுத் திரும்பலாம்.
5. திருப்புத்தூர் திருத்தளிநாதர்
இறைவனின் தாண்டவத் திருவுருங்கள் ஏழு என்பர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து செயல்களை இறைவன் செய்கிறான், ஒவ்வொரு செயலைச் செய்யும் போது ஒவ்வொரு தாண்டவம் புரிகிறான் என்றும் அறிவோம். 'ஐந்து கிருத்யங்களுக்கும் ஐந்து தாண்டவக் கோலம்தானே இருத்தல் வேண்டும். ஏழு என்ன கணக்கு?' என்று நீங்கள் கேட்பீர்கள். ஐந்து செயல்களுக்கும், ஐந்து தாண்டவம், அதில் காத்தலை இரண்டு கூறாய்ப் பிரித்த இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என்று பாகுபாடு பண்ணி, ஐந்தை ஆறாக்கியிருக்கிறார்கள். பின்னர் எல்லாச் செயல்களையும் ஒருமிக்கச் செய்யும் ஆனந்தத் தாண்டவமே, இத்தாண்டவ வடிவங்களுக்கெல்லாம் சிகரமாகிறது. இந்தாண்டவ வடிவங்களை இறைவன் தன் துணைவியாம் பார்வதிக்குக் கூறியதாக வரலாறு.
மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமாகானி தாண்டவம், முனிதாண்டவம்
ஓடும் உலக சங்கார
மேதகு நடனம் இவை இவைநாம்
விதந்த தன்னுமம் என்று உணர்த்தி
என்பது பாட்டு, இவற்றில் கௌரி தாண்டவத்தை அன்னை பார்வதியின் வேண்டுகோளுக்காகவே ஆடிக்காட்டியதாக ஐதீகம். அது காத்தல் இல்லாதிருக்குமா? தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும் மதுரை வெள்ளியம்பதியிலே சந்தியா தாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச் சிளைத்திர சபையிலே திரிபுர தாண்டவத்தையும், திருவாலங்காட்டு ரத்தின சபையிலே காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி தாமிர சபையிலே முனிதாண்டவத்தையும் புரிகிறார் என்று அந்தந்தத் தல வரலாறுகள் கூறும், அப்படியானால் கௌரி தாண்டவம் ஆடிய இடம்தான் திருப்புத்தூர் சித்சபை என்று கண்டோம், இங்குள்ள சித் சபையில் இன்று நின்று நடனம் ஆடுபவர் ஆனந்த நடராஜர்தான்.
சிவசக்தியான கௌரி. பெருமானோடு ஊட, அவள்தன் ஊடல் தீர்க்க இந்தத் தாண்டவத்தை ஆடினார் இறைவன் என்பது புராணக் கதை, கௌரியம்மையார் தவங்கிடந்து இத்தாண்டவத்தைக் காணப்பெற்றார் என்பதும் ஒரு வரலாறு. இந்தத் தாண்டவக்கோலம் சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் என்ற இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. நான்கு கைகளுடனும் வலது கையில் பாம்பையும் ஏந்திய கோலம். இன்னும் ஒரு, கரம் அபயகரம், மற்றொன்று கஜஹஸ்தம். முயலகன் பேரில் ஊன்றிய திருவடி எடுத்த பொற் பாதம். சுழன்று ஆடாத நிலை. இத்தகைய அற்புதக் கோலத்தில் ஆடிய தலமே திருட்புத்தூர். அத்தலத்துக்கு செல்கிறோம் நாம் இன்று.
தமிழ்நாட்டில் திருப்புத்தூர்கள் இரண்டு. ஒன்று ராமநாதபுரம் மாவட்டத்தில், மற்றொன்று வட ஆற்காடு மாவட்டத்தில், இரண்டில் பாடல் பெற்ற தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதே. இந்த ஊர் காரைக்குடி ஸ்டேஷனிலிருந்து நேர் மேற்கே பதினைந்து மைல் தொலைவில் இருக்கிறது. மதுரைக்கு வடகிழக்கே 40 மைல் தூரம். மதுரையிலிருந்து செல்ல விரும்பினால் ஒன்று சொந்தக் கார் இருக்கவேண்டும். இல்லை, பஸ் பிரயாணத்தோடு திருப்தி அடைய வேண்டும், காரைக்குடியிலிருந்து காரில் சென்றால் வழியில் குன்றக்குடி முருகனையும், பிள்ளையார்பட்டி பிள்ளையாரையும் தரிசித்து விட்டே செல்லலாம். பிள்ளையார் பட்டிக்கும் திருப்புத்தூருக்கும் இடையே நான்கு மைல் தூரம்தான். மெயின் ரோட்டை ஒட்டியே கோயில் இருக்கிறது. இந்த ஊரில் அன்று கோட்டை இருந்திருக்க வேண்டும். இன்று இருப்பதெல்லாம் இந்த மதில்சுவர்கள்தாம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. சுவாமி கோலிலுக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், அம்பாள் சந்நிதிக்கு நேராக ஒரு கோபுர வாயிலும், இருக்கின்றன. கோயில் பெரிய கோயில் அல்ல. கோயில் திருவண்ணாமலை ஆதீனத்தார் மேற்பார்வையில்தான் இருக்கிறது.
கோயில் வாயிலில் ஒரு தகரக் கொட்டகை இருக்கும். அதைக் கடந்தே கோயிலுள் செல்லவேணும். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் வயிரவர் சந்நிதி மேற்குப் பார்க்க இருக்கிறது. இங்கு
ஆனந்த நடராஜர்
வயிரவர் வரப்பிரசித்தி உடையவர். இந்தக் கோயிலில் திருமால் திருமகள் சந்நிதி, அகத்தீசுவரர் சந்நிதிகள் எல்லாம் உண்டு. தாண்டவ வடிவில் அங்கிருப்பவர் ஆனந்த நடராஜரே. கௌரி தாண்டவர் அல்ல. இத்தலத்தில் கருவறையில் இருப்பவர் திருத்தளி நாதர் அம்மை சிவகாமி, இக்கோயிலில் இருக்கும் செப்புச் சிலைகளில் உயர்ந்தவை, சிறப்பானவை. ராமர், சீதை, இலக்குமணர் சிலைகள் தான். இவை எப்படி இந்தச் சிவன் கோயிலுக்கு வந்தன என்று தெரியவில்லை. எங்கேயோ புதையுண்டு கிடந்தவர்களை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், இங்கே தான் வான்மீகர், அகத்தியர், திருமகள், இந்திரன் மகன் சயந்தன் எல்லாம் வழிபட்டதாக வரலாறு. ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை சயந்தன் பூசை நடக்கிறது. வெளிப் பிராகாரத்தில் மேல் பக்கத்தில் சப்த மாதர், தலவிருட்சமான கொன்றைமரம் ஆகியவை இருக்கின்றன.
இத்தலத்துக்கு அப்பர் வந்திருக்கிறார், சம்பந்தர் வந்திருக்கிறார்.
மீன் காட்டும் கொடி மருங்குல் :உமையாட்கு என்றும்
விருப்பவன் காண்; பொருப்பவலிச்
சிலைக்கை போன்கான்;
நன் பாட்டுப் புலவனாய்ச்
சங்கம் ஏறி நற் கனகக்
கிழி தருமிக்கு அருளி
னோன் காண்;
பொன் காட்டக் கடிக் கொன்றை
மருங்கே நின்ற
புனக் காந்தள் கைகாட்டக்
கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவில்
திருப்புத்தூரில்
திருத்தளியான் காண்
அவன் என் சிந்தையானே
என்பது; அப்பர் தேவாரம். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் தருமிக்குப் பாட்டெழுதிக் கொடுத்துப் பாண்டியனிடம் பொற்கிழிபெற வைத்த வரலாறெல்லாம் கூறப்பட்டிருக்கிறது தேவாரத்தில், சம்பந்தரும் ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.
வெங்கள் விம்மு வெறியார்
பொழில் சோலை
திங்களோடு திளைக்கும்
திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியார்
அவர் போலும்
எங்கள் உச்சி உறையும்
இறையானே
என்பது சம்பந்தர் தேவாரம்.
இந்தக் கோயிலில் கல்வெட்டுக்கள் நிறைய இருக்கின்றன. கேரள சிங்க வள நாட்டுப் பிரமதேயமான திருப்பத்தூர் என்றும், கொழுவூர் கூற்றத்து பிரமதேயமான திருப்புத்தூர் என்றும் இவ்வூர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருக்கற்றளிப் பட்டர், ஸ்ரீ தளிப்பரமேசுரர், திருத்தளிப் பெருமானடிகள் என்று இறைவன் குறிக்கப் பட்டிருக்கிறான். நடராஜரைக் கூத்தாடுதேவர் என்று குறித்திருக்கிறார்கள். காமக் கோட்டமுடைய நாச்சியார், திருப்பள்ளியறை நாச்சியார் என்று அம்பிகை குறிப்பிடப்பட்டிருக்கிறாள். இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும் தகவல்களே அனந்தம்.
கோயில் விளக்குக்கு நாற்பது சுழஞ்சு பொன் கொடுத்தது. விளக்கெரிக்க. ஐம்பது ஆடுகள் வழங்கியது. கோயில் திருவிழாவுக்கு நெல் அளந்தது, கோயிலுக்கு நெல்லும் பொன்னும் ஒரு வணிகன் அளித்தது எல்லாம் தெரிகின்றன. திருப்புத்தூர் சடை யார் ஜயங்கொண்ட, வினகராழ்வார் கோயிலில் கூட, நாலோக வீரன் சந்தி என்று கோயிலில் ஏற்படுத்தியது, தேவாரம் பாடத் தானம் வழங்கியது முதலிய தகவல்களுமே கிடைக்கும். ஆளுடைய பிள்ளையால் சம்பந்தர் சந்நிதியில் பூசைக்குப் பொருள் கொடுத்தது. பாண்டியன் ஸ்ரீவல்லபதேவன் அரசி உலக முழுதுடையான் கோயில் மடைப்பள்ளி கட்டியது. கணிகை ஒருத்தி கோயில் திருவிழாக் காசுக்கு ஒரு திருவுருவம் எடுப்பித்தது- இன்னும் எண்ணற்ற தகவல்கள் தமக்கு இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும். அவகாசம் இருப்பவர்கள் இத்தலத்துக்கு வடமேற்கு பதினைந்து மைல் தொலைவில் உள்ள பிரான்மலைக்கும் சென்று திரும்பலாம். பிரான்மலை வேள்பாரி இருந்து அரசாண்ட இடம் என்பர். அதனைக் கொடுங்குன்றீ என்றே அன்று அழைத்திருக்கின்றனர்; கொடுங்குன்றோரும், குயிலமிர்த நாயகியும் அங்கே கோயில் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தர் பாடியிருக்கிறார்.
வானில் பொலிவு எய்தும்
மேகம் கிழித்து ஓடி
கூனற் பிறை சேரும் குளிர்
சாரல் கொடுங்குன்றம்
ஆளிற் பொலிவயர்ந்து
அமர்ந்தாடி உலகேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான் திரு நகரே.
என்பது சம்பந்தர் தேவாரம். கோயில் மலை அடிவாரத்தில் இருக்கிறது. மலைமேல் ஏறிச் சென்றால் அங்கு பைரவர் சந்நிதியும், இருக்கின்றன. அங்குள்ளவர் கல்யாணக் கோலத்தில் இருக்கிறார். தேவ சபை என்று ஒரு மண்டபமும் இருக்கிறது.
பிரான்மலையில் உள்ள முருகன் அருணகிரியாரது திருப்புகழ் பாடும் பெருமை பெற்றவன். இவர்களையும் கண்டு வணங்கி விட்டுத் திரும்பலாம்.
6. திருக்கோட்டியூர் திருமால்
பல்லவ மன்னர்களில் நந்திவர்மன் என்பவன் ஒருவன் தெள்ளாற்றில் நடந்த போரில் வெற்றி பெற்றதன் காரணமாக தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று சரித்திரப் பிரசித்தி பெற்றவன் அதைவிட நந்திக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் மூலமாக இலக்கியப் பிரசித்தியும் உடையவன். நந்திக் கலம்பகம் எழுந்த வரலாறு மிகமிக ரஸமானது. இந்தப் பல்லவ மன்னன் நந்திக்கு ஒரு சகோதரன்; காடவர்கோன் என்று. இருவருக்கும் தீரா பகை, பகை முற்றிய பொழுது நந்தி தன் தம்பியை நாடு கடத்தி விடுகிறான். தம்பியோ கவிஞன். போரில் வெல்ல முடியாத அண்ணனை, அறம் வைத்துக் கலம்பகம் ஒன்று பாடி முடித்துவிடக் கருதுகிறான். அப்படியே பாடுகிறான். தான் பாடிய கலம்பகத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து ஒரு கணிகையோடு தங்கிமறைந்து வாழ்கிறான். ஒரு நாள் வெளியே சென்ற நம்பி வர நேரம் ஆகிறது. கதவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருந்த கணிகை தூங்கி விடுகிறாள். அகாலத்தில் வீட்டுக்கு வந்த கவிஞன், தூங்குகிற தன் காதலியை எழுப்ப, கொஞ்சம் சந்தனக் குழம்பை எடுத்து அவள் மீது தெளிக்கிறான். தெளிக்கும் போது கலம்பகப் பாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. பாடிக்கொண்டே தெளிக்கிறான்.
செந்தழலின் சாற்றைப்
பிழிந்து செழுஞ்சீதச்
சந்தன மென்றாரோ
தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி
ஆகம் தழுவாமல்
வேகின்ற பாலியேன்
மீது
என்பது பாடல். இந்தப் பாடல் அச்சமயம் அங்கு மாறு வேடத்தில் நகரைச் சுற்றி வந்த காவலனான நந்தியின் காதில் விழுகிறது. பாட்டின் சுவையை அறிகிறான்; தம்பியின் குரலைத் தெரிகிறான். தம்பியைக் கண்டு தழுவித் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அவள் கலம்பகம் பாடியிருக்கும் விவரம் அறிந்து அப்பாடல்களைக் கேட்க விரைகின்றான். தம்பியோ அண்ணனது அளப்பரிய அன்பினை நினைந்து, 'பாட்டில் அறம் இருக்கிறது. நீ கேட்டால் இறந்து போவாய்' என்று பாட மறுக்கிறான். அரசனோ விடவில்லை. 'இப்படி அருமையான பாடல் ஒன்றைக் கேட்பதற்கே உயிரை விடலாமே. நூறு பாடலா? இதற்கு உயிரை மட்டுமா கொடுக்கலாம்,' உடல் பொருள் எல்லாவற்றையுமே கொடுக்கலாமே என்று சொல்கிறான். ராஜ்யத்தைத் தம்பிக்கே கொடுத்து விட்டு அரண்மனையிலிருந்து சுடுகாடுவரை நூறு பந்தல்கள் அமைத்து ஒவ்வொரு பந்தலிலும் நின்று ஒவ்வொரு பாட்டாகக் கேட்டு கடைசியில் நூறாவது பாட்டையும் காஷ்டத்தில் ஏறிக்கொண்டே கேட்டு உயிர் துறக்கிறான். இது உண்மையான கதையோ என்னவோ? 'நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்' என்று சிவஞான முனிவர் பாடி விட்டார் ஆனால் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. தமிழ்ப் பாடல்களைக் கேட்பதனால் உயிரைத் துறக்க நேரிடும். என்றாலும் அப்பாடல்களைக் கேட்க நந்தி தவறமாட்டான் என்பதே இந்தக் கவிதையின் உள்ளுறை பொருள். இவனைப் போலவே இன்னொருவர் குருலினிடம் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, 'இதை நீ பிறருக்குச் சொல்லக் கூடாது சொன்னால் உன் தலை வெடித்து விடும்' என்று எச்சரித்திருந்தபோதிலும், அந்த எச்சரிக்கைபையெல்லாம் மதியாமல் தான் கேட்ட மகா மந்திர உபதேசத்தை, ஊரில் உள்ளவர்களை அழைத்து வைத்து மதில் மேல் ஏறி நின்று உபதேசித்தார் என்றால் அது எவ்வளவு பாராட்டுக்கு உரியது.
தாம் இன்புறுவது
உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்
என்றார் வள்ளுவர். ஆனால் இவரோ உலகு இன்புறக் காணுவதில் தாம் துன்பமுற்றாலும் பரவாயில்லை என்று துணிந்திருக்கிறார். அப்படித் துணிந்து தான் பெற்ற உபதேசத்தை மக்களுக்கு எல்லாம் சொன்னவர்தான் வைஷ்ணவ பரமாசாரியாரான ராமாநுஜர். அப்படி அவர் மதில்மேல் ஏறி நின்று எல்லோரையும் வாருங்கள் என்று கூவி உபதேசித்த தலம்தான் திருக்கோட்டியூர். அந்தத் திருக்கோட்டியூருக்கே செல்கிறோம் நாம் இன்று. திருக்கோட்டியூர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர், மானாமதுரை திருச்சி லயனில் கல்லல் ஸ்டேஷனில் இறங்கி வண்டி பிடித்துக்கொண்டு எட்டு மைல் மேற்கு நோக்கிப் போக வேணும் இந்த வழியில் வேறு வசதி கிடையாது. மதுரையிலிருந்து திருப்புத்தூர் வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பத்துப் பன்னிரண்டு மைல் பஸ்ஸிலோ காரிலோ வந்தால் திருக்கோட்டியூர் சென்று சேரலாம். இல்லையென்றால் ரயிலிலோ பஸ்ஸிலோ சிவகங்கை சென்று அங்கிருந்து பதினாறு மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் போய்ச் சேரலாம். சிவகங்கை வழியாகச் செல்வதுதான் எளிதான வழி.
சிவகங்கை - திருப்புத்தூர் ரோட்டின் பேரிலேயே கோயில் இருக்கிறது. கோயிலுக்கும் ரோட்டுக்கும் கிழக்கே தெப்பக்குளம் இருக்கிறது. வாயிலைக் கடந்ததும் பெரிய விஸ்தாரமான வெளிப் பிராகாரம். அங்கேயே பொன் வேய்ந்த கருடக் கம்பம் இருக்கிறது. இனி கோயிலுள் நுழையுமுன் ஏன் இத்தலம் கோட்டியூர் என்று அழைக்கப்படுகிறது என்று தெரிய வேண்டாமா? இரணியன் மூவுலகையும் ஆட்சி செய்கிறான். அவன் ஆட்சியில் தேவர்களெல்லாம் நைகின்றனர். அவனை எப்படி ஒழிப்பது என்று தெரியவில்லை. கதம்ப முனிவரது சாபத்தால், துஷ்டர்கள் ஒருவரும் நெருங்கக் கூடாது என்று ஏற்பட்டிருந்த இத்தலத்தினையே தேவர்கள் எல்லாம் தேர்ந்தெடுத்தனர், தேவர்களோடு தேவர்க்கும் தேவராம் தேவர் மூவரும் கோஷ்டியாகச் சேர்ந்து ஆலோச்னா நடத்திய இடம் ஆனதால் இதனைக் கோஷ்டியூர் என்றனர். அது காரணமாகவே, இத்தலத்தில் பிரும்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்தே காட்சியளிக்கிறார்கள்.
இக்கோஷ்டியூரிலிருந்துதான் கதம்ப முனிவர் பிரும்மாவை நோக்கித் தவம் புரிகிறார். அவர் தவத்தை மெச்சிப் பிரும்மா அவர் முன் தோன்றுகிறார். கதம்ப முனிவரோ, பெருமாளைப் பாற்கடல் பள்ளி கொண்ட கோலத்திலும் தேவர்களைக் காக்க நின்ற
திருக்கோட்டியூர் கோயில்-குளம்
கோலத்திலும் இரணியனை வதம் செய்ய ஆலோசனை சபை கூடிய போது இருந்த கோலத் திலும், இன்னும் இரணிய னோடு போர்புரிந்த கோலத் திலும், அவன் உடல் கிழித்து உதிரம் குடித்த கோலத்திலுமே காண வேண்டும் என்கிறார் (ஒன்றே ஒன்று. இதற்குப் பிரும்மாவைநோக்கித் தவம் கிடப்பானேன்? பரந்தாமனையே நோக்கித் தவங்கிடந்திருக்கலாமே!). பிரும்மாவும் கதம்ப முனிவர் வேண்டியபடியே விச்வகர்மன் முதலிய தச்சர்களைக் கொண்டு இக்கோயிலை அமைக்கவும், சிறந்ததொரு விமானம் அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் மூன்று தள விமானம், மூன்று எழுத்துக்களுடன் கூடிய பிரனவம் போலவும் அமைத்துக் கட்ட முடிக்கிறார்கள்.
கோயிலின் அடித்தளத்தில்தான் பெருமாளின் சயனத் திருக்கோலம். உரகமெல்லணையான் என்ற பெயரோடு அறிதுயிலில்
ராமானுஜர் உபதேசம்
அமர்ந்திருக்கிறான். இவனையும் முந்திக் கொண்டு ஒரு சிறு கோயிலில் சிவபிரான் எழுந்தருளியிருக்கிறார். இவரை வலம் வந்தே நாம் கோயிலில் பிரதான மண்டபத்தில் நுழைகிறோம். அங்கு நம் கண்முன் நிற்பவர் நர்த்தன கிருஷ்ணன். காளிங்க நர்த்தனனாக நிற்கிறார். இனிகோயிலின் முதல் தளத்தில் ஏறி அங்கு துயில் கொள்ளும் உரகமெல் லணை யானைக் காணலாம். இப்பளளி கொன் டானின் தலை மாட்டிலே தான் கதம்ப மகரிஷி தவக்கோலத்தில் இருக்கிறார். மேலும் படியேறி இரண்டாவது தளம் சென்றால் அங்கே நின்ற கோலத்தில் சௌமிய நாராயணன் இருக்கிறார். அதற்கும் அடுத்த மூன்றாவது தளத்தில்தான் இருந்த கோலத்தில் ஸ்திதநாராயன வைகுண்ட நாதன் கோயில் கொண்டிருக்கிறான், எல்லோரும் சுதையாலான வடிவங்களே. கோயிலின் தென்புறத்திலே இரணியலோடு யுத்தஞ் செய்யும் மூர்த்தியும் வடபுறத்திலே இரணியனை வதம் புரியும் நரசிம்மரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இவர்களை தக்ஷிணேசுவரன், வடவேசுவரன் என்று அழைக்கிறார்கள்.
பிரதான கோயிலின் தென் பகுதியிலேதான் தாயார் சந்நிதி இருக்கிறது. தாயாரைத் திருமா மகள் என்கிறார்கள்.
நிலமகள் செவ்வி தோய வல்லான்
திமா மகளுக்கு இனியான்
என்றுதானே பெருமாளை அழைக்கிறான் மங்கை மன்னன். இன்னும் இங்குள்ள உத்சவமூர்த்தி கொள்ளியால் ஆனவன் என்பதையும் மங்கை மன்னனே,
வெள்ளியான் கரியான்
மணிநிற வண்னன்
வண்ணவர் தமக்கு இறை, எமக்கு
எள்ளியான் உயர்ந்தான்
உலகேழும் உண்டு உமிழ்ந்தான்.
என்றே பாடுகிறான்.
இக்கோயிலின் மூன்றாவது தளத்தில் ஏறியதும் இங்குள்ள விமானத்தையும் காணலாம். இதனை அஷ்டாங்க விமாணம் என்பர். அஷ்டாக்ஷர மந்திரத்தில் அறிகுறியாக விளங்குவதே இந்த விமானம் இந்த விமானத்தின் தென் பக்கத்து மதிலிலேதான் ராமானுஜரது சிலை வீதியை நோக்கிய வண்ணம் உபதேசக் கிரமத்தில் இருக்கிறது. இன்னும் தெற்காழ்வான சந்நிதிக்கு முன்னால் ராமானுஜரும், திருக்கோஷ்டி நம்பிகளும் குரு சிஷ்ய பாவத்தில் எதிர் எதிராக எழுந்தருளியிருக்கின்றனர். ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் உபதேசம் பெற பதினெட்டு தடவை இத்தலத்துக்கு வந்திருக்கிறார். நம்பியும் பதினேழு தடவைகள் தட்டிக் கழித்திருக்கிறார். கடைசியில் ராமானுஜர் பிடிவாதமாக இருக்கவே, நம்பி ஒரு நிபந்தனையுடன் திருமந்திர உபதேசம் செய்ய இசைசிறார். நிபந்தனை இதுதான்; அவர் கற்கும் மந்திரத்தை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதே. குருவின் நிபந்தனைக்கு உட்பட்டே உபதேசம் பெறுகிறார். ராமானுஜர். ஆனால் உபதேசம் பெற்ற உடனேயே அஷ்டாங்க விமானத்தில் ஏறி ஊராரையெல்லாம் 'வாருங்கள் வாருங்கள்' என்று கூவி அழைத்து, தாம் பெற்ற இன்பத்தை உலகிலுள்ளோரும் பெறட்டும் என்று மந்திர உபதேசம் செய்துவிடுகிறார். தான் ஒருவன் குருவின் கட்டளையை மீறியதால் நரகம் புகுவதானாலும், உலகம் உய்யட்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் இருந்ததையறிந்த நம்பிகளும் அவரை அன்று முதல் எம்பெருமானார் என்றே அழைக்கிறார்.
பெரியாழ்வாரது வாழ்வோடு இத்தலம் நெருங்கிய தொடர்பு உடையது. ஸ்ரீவில்லிப்புத்தூர் வாசியான பெரியாழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இங்கு ராஜ புரோகிதராகவும், பரம பாகவதராகவும் இருந்த செல்வநம்பியைக் கண்டு அளவளாலியிருக்கிறார். இருவரும் சேர்ந்து ஸ்ரீஜயந்தி நாளிலே திருக்கோட்டியூர்த் திருமாலை வணங்க, அவரது எண்ணமெல்லாம் துவாபர யுகத்திலே சென்றடைந்திருக்கிறது. கோட்டியூர் நந்தகோபன் மாளிகையாகவும், அங்குள்ள கோகுலம் ஆய்ப்பாடியாகவும், கோயிலில் உள்ள நர்த்தனமூர்த்தி கண்ணனாகவும் காட்சி கொடுத்திருக்கின்றனர். அப்படி அவர் பெற்ற அனுபவத்தில்தான்,
வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்து அன்று ஆயிற்றே
என்று தொடங்கும் பாடல்களைப் பாடி மகிழ்ந்திருக்கிறார். இத்தலத்திலுள்ள பரம பாகவதர்களையும், நினைந்து நினைந்து,
பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
புலன்கள் ஐந்து, பொறிகளால்
ஏதமொன்றும் இலா வண்கையினார்கள்
வாழ்திருக் கோட்டியூர்
நாதனை, நரசிங்கனை, நவின்று
ஏத்துவார்கள் உழக்கிய
பாததூளி படுதலால் இவ்
வுலகம் பாக்கியம் செய்ததே.
என்றும் பாடியிருக்கிறார். இத்தலத்துப் பெருமானை, பெரியாழ்வாரையும் மங்கை மன்னனையும் தவிர பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மூவரும் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.
இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உண்டு. ராஜராஜசோழனது கல்வெட்டில், இக் கோயிலிலுள்ள சிவனைத் திருமயான தேவன் என்று குறிப்பிட்டிருக்கிறது. முதல் குலோத்துங்கள் காலத்தியக் கல்வெட்டு ஒன்றும், கீழைத் திருதலையில் இருக்கும் உரகமெல்லணையான் கோயிலில் நந்தா விளக்கு எரிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நிபந்தமும் காணப்படுகின்றன. திருமயத்தில் உள்ள கல்வெட்டின் படி ஒன்றும் இங்கிருக்கிறது. அதன் படி நாராயண ஸ்ரீ குமாரபட்டர் என்பவர் இரண்டு கோவில்களுக்கும் உள்ள வழக்கை எப்படித் தீர்த்து வைத்தார் என்பதும் தெரிகிறது. இந்தப் பஞ்சாயத்துக்கு ஹொய்சல வீரசோமேசவரனின் பிரதிநிதி தலைமை வகித்தான் என்றும் அறிகிறோம். இந்தக் கல்வெட்டு சுந்தர பாண்டியனின் காலத்தியது. இதனாலெல்லாம் இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே பிரசித்தமாயிருந்திருக்கிறது என்பதையுமே உணர்கிறோம்.
7. காளையார் கோயில் காளீசர்
ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள், நல்ல பரம்பரைச் செல்வந்தர்கள். மூவரிலும் மூத்தவர் நல்ல உழைப்பாளி, விவசாய விருத்தியிலும், வியாபாரப் பெருக்கத்திலுமே கண். அதனால் குடும்பத்துக்குச் சொத்து சேர்ப்பதெல்லாம் அவர்தான். நடு உள்ளவரோ கொஞ்சம் குஷிப் பேர்வழி. நல்ல செலவாளி, மைனர் போலத் திரிவார், செலவு செய்யத் தயங்க மாட்டார். கோலாகலமாகச் செலவு செய்து கொண்டு உல்லாசமாகக் காலங்கழிப்பார், கடைக்குட்டி மிக்க அடக்கம், பொருள் சேர்க்கவோ, செவழிக்கவோ அவர் முற்படுவதில்லை. எப்போதும் படிப்பதும் பஜனைக்குச் செல்வதுமாகவே காலங்கழிக்கிறார். இப்படி ஒரு குடும்பம், இத்தகைய சகோதரர்களை நாம் வாழ்நாளில் பல இடங்களில் கண்டிருக்கிறோம் அல்லவா?
இதே விதமாக நாம் வணங்கும் கடவுளரும் வாழ்கிறார்கள் என்று அறிகிற போதுதான் நமது ஆர்வம் அதிகமாகிறது. அதில் முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமானது வாழ்க்கையிலேயே இப்படி நடக்கிறது. முத்தொழில் புரியும் முதல்வனே நாம் கண்ட மூன்று சகோதரர்கள் போல் மூன்று நிலையிலும் நின்று அருள் புரிகிறான் என்றால் கேட்கவா வேணும்! ஒரு சிறு ஊர். அங்கு ஒரு பெரிய கோயில், கோயிலிலே மூன்று சந்நிதி. கோயிலில் முதல்வராக இருப்பவர் காளீசர், அவருக்கு வலப்புறம் சோமேசர். இடப்புறம் சுந்தரேசர். இந்த மூவரையும் பற்றி ஊர் மக்கள் சொல்வது என்னவென்றால், 'காளீசர் தேட, சோமேசர் அழிக்க, சுந்தரேசர் சுகிக்க என்றல்லவா அமைந்திருக்கிறது என்பதுதான். இதற்கு விளக்கம் இதுதான். இந்தக் கோயில் சொத்து முழுதும் ஆம், நாற்பது கிராமங்களில் உள்ள நிலமும் இரண்டு லக்ஷம் பெறுமான நகைகள் மஞ்சங்கள் எல்லாமும் தேடிச் சேர்த்து வைத்திருப்பவர் காளீசர்தான். நிலங்களின் பட்டா எல்லாம் அவர் பேரிலேதான்; சொத்துச் சுதந்திரம் எல்லாமே அவருக்குத்தான். ஆனால் அவருக்கு என்று பெரிய பிரம்மோத்சவமோ அல்லது மற்றச் செலவுகளோ அதிகம் கிடையாது. அவருக்கு நடக்கும் உத்சவம் எல்லாம் தைப்பூசத்தில் புஷ்ப ஸ்நானம் தான்.
ஆனால் சோமேசருக்குத்தான் ஆடம்பரமான உத்சவம், வைகாசி விசாகத்திலே. அந்த பிரமோத்சவத்தில்தான் தேரோட்டம் தெப்பம் புஷ்ப பல்லக்கு எல்லாம். மொத்தச் செலவு பதினாயிரம் வரை ஆகும். ஆடம்பரமான செலவுகளுக்குக் குறைவேயில்லை. இருவரையும் அடுத்து ஒரு சின்னஞ்சிறு கோயிலிலே குடியேறியிருக்கும் சுந்தரேசரோ மிக்க அமைதியாக வாழ்கிறார். நித்தியப் படியிலும் இவர் தேவை மிகமிகக் குறைவுதான், உத்சவாதிகளிலும் இவர் கலந்து கொள்கிறதில்லை. ஆம்! இப்போது விளங்குகிறது-காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரர் சுகிக்க என்று மக்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று.
இப்படி, காளீசுவரரும் சோமேசரும், சுந்தரேசரும் கோயில் கொண்டிருக்கும் ஊர்தான் இன்று காளையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இக்காளையார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
இந்தச் சின்னஞ்சிறிய ஊர் மதுரைக்கு நேர்கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் தொண்டிக்குச் செல்லும் ரஸ்தாவில் இருக்கிறது. ரயில் வழியாகச் செல்ல விரும்புபவர்கள் சிவகங்கை ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கே பத்து மைல் தூரம் செல்ல வேணும். காரைக்குடி, தேவகோட்டை, சருகனி வழியாகவும் வரலாம். ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் கோயிலும் குளமும், கோபுரமும் வீதிகளும் பெரியவைகளாகவே இருக்கின்றன. இந்தத் தலத்தை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடியிருக்கிறார்கள், தேவார காலத்தில் இந்தத் தலத்தின் பெயர் கானப்பேர் என்று இருந்திருக்கிறது.
கங்காளர், கயிலாய மலையாளர்.
கானப் பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப் படையாளர்
விடைப்பாளர் பயிலுங் கோயில்
என்று ஞானசம்பந்தர் கோயிலைப் பாடினால், கோயிலில் உள்ள மூர்த்தியை,
ஆனைக்காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர் சட்டியைக்
கானூர் முளைத்த கரும்பினை
என்று நாவுக்கரசர் பாடி மகிழ்கிறார். இந்தக் கானப் பேரூர் கட்டியாம் கடவுளே சுந்தரர் தேவாரத்தில் கானப்பேரூர் உறை காளையாகிறார். அதனால் அந்த ஊர் காளையார் கோயில் என்று வழங்கப்படுவதற்கும் காரணம் ஆகிறார். நாவலூர் நம்பியாரூரர் தலம் தலமாகச் சென்று இறைவனைப் பாடித் துதித்து வரும் நாளில், தன் அருமை நண்பர் சேரமான் பெருமாள் நாயனாரோடு திருச்சுழியல் என்னும் தலத்துக்கு வந்து சேருகிறார். அங்கு அன்றிரவு துயிலும் போது கானப்பேர் உறை அண்ணல் அவர் கனவிலே தோன்றுகிறார். காளை உருவிலே, செங்கையினிற் பொற் செண்டும், திருமுடியில் சுழியமுடன், எங்குமில்லாத் திருவேடம் என்புருகா முன்காட்டி, யாம் இருப்பது கானப்பேர் என்றும் ஞாபகப்படுத்திவிட்டு மறைகிறார். அதனால் சுந்தரர் இந்தக் கானப்பேர் ஊருக்கே வருகிறார். வரும் வழி எல்லாம்.
காதலுறத் தொழுவது என்று கொலோ?
அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை
காளையையே !
என்று ஏங்கி ஏங்கித் துதிக்கிறார். அன்று முதல் கானப்பேர் என்று வழங்கப்பட்ட தலம் காளையார் கோயில் என்று பெயர் பெறுகிறது.
கைலாயத்தில் ஒரு நாள் பார்வதியும் பரமசிவனும் தனித்திருந்தார்கள். அப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. பார்வதியின்
காளையார் கோயில்-கோபுரம்
உள்ளத்தில்; 'எல்லாமே வல்லவராகிய உமக்குச் சகள ரூபம் எதற்கு?' என்று கேட்டு வைக்கிறாள் அன்னை பார்வதி. அத்தனும் சிருஷ்டி திதி, சங்காரம். திரோபவம், அனுக்கிரகம் என்னும் ஐந்தொழிற்காகவே இவ்வுருக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அத்துடன் நிறுத்தாது. எனது கண் திறக்கும்போது உலகம் தோன்றும். விழித்திருக்கும் போது வாழும், மூடுங்காலத்து அழியும் என்று அருள் திறத்தை மேலும் விளக்குகிறார். இதைக் கேட்ட அம்மை-பெண்மைக்கே உரிய சந்தேகத்தோடு, இதைப் பரீட்சித்துப் பார்த்துவிடத் துணிகிறாள். இறைவன் பின்புறமாக வந்து அவரது கண்கள் இரண்டையும் ஏதோ விளையாட்டாகத் தன் கைகளால் பொத்துகிறாள். அவ்வளவுதான்; மூவுலகமுமே இருளில் புதைந்து விடுகின்றது. உயிர்கள் எல்லாம் வாடி வதங்கி விடுகின்றன. அண்ணலும் அம்மையைக் கடிந்து, அவள் தன் கைகளை விவக்குகிறார். இப்படி ஒரு உத்பாதத்தை ஏற்படுத்தியதற்காகப் பார்வதியைக் கரிய உருவமுடைய காளியாகக் கடவாய் என்று சபித்து விடுகிறார். அம்மை, அறியாது செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என இறைவன் காலடியில் விழுந்து கதற, 'சரி சண்டாகரனை வென்ற பின், காளியுருவம் நீங்கித் திரும்பவும் என்னை வந்து சேர்வாய்' என அனுக்கிரகிக்கிறார்.
அம்மையும் அரனது ஆணைப்படியே காளியாகிறாள், கானப்பேரூரை அடுத்த மருதவனத்தில் துர்க்கை வடிவிலே கோயில் கொள்கிறாள். இந்தச் சமயத்தில் பெரு வரங்கள் பல பெற்ற சண்டாசுரன் தேவர்களை வருத்த, தேவர்கள் அம்மையிடம் முறையிட, அம்மையும் சண்டாசுரனோடு போர் புரிந்து அவனை முடிக்கிறாள். தேவர்களும் பூமழை பொழிந்து தேவியை வாழ்த்துகிறார்கள். தேவியின் சாபமும் நீங்குகிறது. சாபவிமோசனம் பெற்ற இந்தக் காளியம்மையே அழகெலாம் திரண்ட சுவர்ணவல்லியாகி, கானப் பேரூரில் கோயில் கொண்டிருந்த காளீசரை மணந்து அவரது இடப்பாகத்தில் வீற்றிருக்கிறாள். காளையார் கோயிலைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய ஊர்கள் எல்லாம் இந்தப் புராண வரலாற்றை இன்றைக்கும் பாறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
தேவர்கள் தேவியைக் கண்டு குறையிரந்து நின்ற இடமே கண்டதேவி; தேவி தங்கியிருக்க தேவர்கள் நிருமாணித்துக் கொடுத்த கோட்டையே தேவிகோட்டை, அம்மை சண்டாசுரனை வெற்றிக்கண்ட இடமே வெற்றியூர்; சண்டாசுரனது தேரில் உள்ள கொடி இற்று வீழ்ந்த இடமே மாளக் கண்டான்; வெற்றி பெற்ற தேவியைப் பூமழை பொழிந்து தேவர்கள் வாழ்த்திய இடமே பூங்கொடி என்று இன்றும் வழங்கப்பெறுகின்றன. இப்படிக் காளியுருவில் இருந்த பார்வதியாம் பரமேட்டியை மணந்த ஈசுவரனே காளீசுவரனாகிறார். அந்தச் சுவர்ண வல்லியையும் தன் இடப்பாகத்தில் ஏற்றருளிய பின் சுவர்ண காளீசுவரனாகவே மாறுகிறார். இன்றும் காளையார் கோயில் மூலமூர்த்தி சுவர்ண காளீசுவரன் என்று தானே அழைக்கப்படுகிறான்,
காளீசுவரன் கானப்பேர் ஊரில் கோயில் கொண்டிருக்கும்போது இந்தப் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீரசேனன். இவனுக்குப் பழவினை வசத்தால் குழந்தை இல்லை. அதனால் இவனும் இவன் மனைவி சோபனாங்கியும் சுவர்ணத்தால் ஒரு பிள்ளையைச் செய்து வைத்து, அதைப் பார்த்துப் பார்த்துத் திருப்தி அடைகிறார்கள். சுவர்ண காளீசுவரனை வணங்க வந்த இந்தத் தம்பதிகள், கோயிலை அடுத்த உருத்திர தீர்த்தத்தில் முங்கி முழுகி எழுகிறார்கள் சுவர்ணப் பதுமையோடு, இறை அருளால் அந்தச் சுவர்ண புத்திரன் உயிர் பெறுகிறான். உடனே இறை அருளை நினைந்து, அங்குக் கோயில் கொண்டிருந்த காளீசர் சுவர்ணவல்லி, சோமேசர் சௌந்திரவல்லி யாவருக்கும் கோயில்கள் எடுப்பித்து, நித்திய நைமித்திக காரியங்களுக்கும் உற்சவாதிகளுக்கும் ஏராளமான நிபந்தங்களை ஏற்படுத்துகிறான்.
இந்த இரண்டு பெருமான்களை வணங்கி வாழ்த்துவதோடு அவன் திருப்தி அடையவில்லை. தன்னுடைய வழிபடு தெய்வமாகிய சோமசுந்தரரையும் மீனாக்ஷியையும் தரிசித்து வணங்காமல் தினமும் அவன் உணவு உண்பதில்லை. காளீசர் கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் போதும் தினமும் மதுரை வந்து சோமசுந்தரரைத் தரிசித்து விட்டுக் கானப்பேரூருக்குத் திரும்பி வருகிறான். ஒருநாள் அடை மழை பெய்தது. கானப்பேரூரிலிருந்து மதுரை வந்து திரும்ப முடியவில்லை. அதனால் உணவே அருந்தாமல் அமர்ந்திருக்கிறான். அந்தச் சமயத்தில் சோமசுந்தரனே அந்தப் பாண்டிய மன்னன் வீரசேனன் கனவில் தோன்றி, 'இனி நீ இங்கு வரவேண்டியதில்லை. நாமே அங்கு வந்து, காளிசுவரனுக்கும் சுவர்ணவல்லிக்கும் இடையிலே வீற்றிருப்போம்' என்று சொல்லி மறைகிறான். விடிந்து எழுந்து பார்த்தால் குறிப்பிட்ட இடத்தில் ரிஷபத்தின் அடிச்சுவடுகள் தோன்றுகின்றன. அந்த இடத்திலே அவசரம் அவசரமாக மீனாக்ஷி சுந்தரேசருக்குக் கோயில் எழுகிறது. அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் அரன் இங்கு சுந்தரனாக எழுந்தருளுகிறார்.
காளீசர், சோமேசர், சுந்தரேசர் மூவரும் கோயில் கொண்டிருக்கும் இந்தக் கோயிலுக்கு மேல்புறத்திலே ஒரு பெரிய தெப்பக்குளம். இக்குளம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் போல் அவ்வளவு பெரியது. அன்று என்றாலும் அமைப்பு எல்லாம் அதே போலத்தான். களத்தின் நடுவில் இருக்கும் நீராழி மண்டபமே ஒரு பெரிய கோபுரமுடைய சிறிய கோயிலாகவும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் கோபுரங்களோடு அமைந்த மண்டபங்களாகவும் இருக்கின்றது. இந்தக் குளத்தைத்தான் ஆனைமடு என்கிறார்கள். ஆம்! ஆனை இறங்கினாலும் அதை முழுகடிக்கும் ஆழமுடையது என்று தெரிகிறது. என்றாலும் இந்தக் குளம் எப்படி ஏற்பட்டது. அதற்கு ஆனைமடு என்று ஏன் பேர் வந்தது? என்பதற்கு ஒரு ரஸமான கதை.
தேவேந்திரனது ஐராவதம் என்னும் வெள்ளை யானை கைலாசம் போய்த்திரும்ப வருகிறது. விளையாட்டாக, அங்கிருந்த ரிஷபத்தின் வாலைப் பிடித்து இழுத்திருக்கிறது. ரிஷபமான நந்திக்கோ ஒரே கோபம், உடனே, 'நீ காட்டானைடாகப் பூமியில் பிறந்து ஆயிரம் வருடங்கள் வருந்தக் கடவாய்' என்று சாபமிட்டுவிடுகிறது. நந்தியிட்ட சாபத்துக்கு விமோசனத்தை நாயகனே நல்குகிறார். அதனால் காட்டானையாகப் பிறந்து வளர்ந்த ஐராவதம், இத்தலத்துக்கு வந்து தன் கொம்புகளாலேயே குத்திக் குத்தி இந்தத் தடாகத்தை உண்டாக்கி. இந்தத் தடாகத்திலுள்ள தண்ணீரையே தன் துதிக்கையால் முகந்து கொண்டு வந்து காளீசர், சோமேசருக்கு எல்லாம் அபிஷேகம் செய்யச் சாபவிமோசனம் ஆயிற்றாம். அன்று முதல் இந்தத் தடாகம் ஆனைமடு என்றே வழங்கப்பபடுகிறது.
இந்தக் காளையார் கோயில் என்னும் கானப்பேர் மிகவும் பழைமையான ஊர் என்று தெரிகிறது. இந்த ஊரைச் சுற்றி ஒரு கோட்டை இருந்திருக்கிறது. அந்தப் பழைய சங்க காலத்திலேயே, அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் தான் உக்கிரப் பெருவழுதி. இவனே திருக்குறள் அரங்கேறும் போது அரியாசனத்திலிருந்த பெருமகன். இவன் அப்போது இந்தக் கானப்பேரூரில் இருந்த வேங்கை மார்பன் என்னும் சிற்றரசனை வென்று அவன் கோட்டையைக் கைப்பற்றியதால், 'கானப் பேரெயில் எறிந்த உக்கிரப்பெருவழுதி' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் இக்கோயிலைக் கட்டவும் பராமரிக்கவும் வேண்டியவைகளைச் செய்திருக்கிறார்கள். கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் முகம்மதியர் தென்நாட்டின் மீது படையெடுத்தபோது, ஸ்ரீரங்கத்து ரங்கநாதரையும் சேதப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, அங்குள்ள கர்ப்பக்கிருகத்தைச் சுவர் எழுப்பி மறைத்து விட்டு, பிள்ளை லோகாச்சாரியார் என்பவர், ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் இந்தக் கானப்பேரூருக்கே கொண்டு வந்து ஒரு சிறு கோயிலை அமைத்து அங்கு வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். இது பழைய கதை.
இந்தக் கோயில் திருப்பணியிலே சமீபகாலத்திலே முழுதும் ஈடுபட்டவர்கள் சிவகங்கையிலிருந்து அரசாண்ட பெரிய மருது, சின்ன மருது என்ற பாளையப்பட்டுக்காரர்களே. மூன்று சந்நிதிகளிலும் மண்டபங்களெல்லாம் கட்டி, சோமநாதரது கோபுரத்தையும் பெரிதாகக் கட்டிய பெருமை பெரிய மருதுவையே சாரும். இந்தக் கோபுரத் திருப்பணிக்குச் செங்கல் இந்தக் கோயிலிலிருந்து தென்மேற்கு பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள மானாமதுரையிலிருந்தே வந்ததாம். ஆங்கிலேயர் இங்கு வந்து காலூன்றி நிற்க நினைத்தபோது அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் முதன்மையானவர் இந்த மருது சகோதரர்கள். போரில் பிறரது வஞ்சனையால் மருது சகோதரர்கள் தோற்கிறார்கள். தோற்றவர்களில் பெரிய மருது ஆங்கிலேயர் கையில் அகப்படாது தலை மறைவாய் இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தையே ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆங்கில தளகர்த்தனான கர்னல் ஆக்னியூவுக்கு, செய்வது என்னதென்று தெரியவில்லை. அப்போது அறிகிறான், இவர் இந்தக் கோபுரம் கட்டிய அருமையை, உடனே தோன்றுகிறது ஒரு யுக்தி. 'சரி இன்றைக்குப் பத்தாவது நாள் இந்தப் பெரிய மருது வந்து அடிபணியாவிட்டால் இவர் கட்டிய இந்தக் கோபுரம் தரைமட்டமாக்கப்படும்' என்று ஊர் ஊராகத் தெருத் தெருவாகத் தண்டோராப் போடச் சொல்கிறான்.
பெரிய மருதுவின் காதில் விழுகிறது தண்டோராச் சத்தம். தாம் கட்டிய கோபுரம் தரைமட்டம் ஆக்கப் படுவதைவிடத் தம் தலையையே கொடுப்பது சரி என்று எண்ணுகிறார். குறித்த நாளிலே வந்து தளகர்த்தனிடம் சரண் அடைகிறார். தளகர்த்தனும் இவரது கலை உணர்வை, பக்தியை எல்லாம் மதிக்கிறான். என்றாலும் மேலதிகரிகளின் உத்தரவுப்படியே இவரைத் தூக்கிலிட ஏற்பாடு செய்கிறான். அந்தச் சமயத்தில் அவர் வேண்டிக் கொண்டபடியே காளீசர் சந்நிதிக்கு நேரேயுள்ள பொட்டலில் அவருக்குச் சமாதி எழுப்பவும் ஒத்துக் கொள்கிறான். இப்படி என்றும் சமாதியிலிருந்து சோமேசரையும் காளீசுவரரையும் வணங்கிக் கொண்டிருப்பவரது சிலா உருவமே பெரிய மருதுவின் திருவுரு. காளீசர் சந்நிதி வாயிலில் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. சமீபகாலத்தில் கோயிலின் திருப்பணிகள் முடிந்து, கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுக் குடமுழுக்கு விழாவும் சிறப்பாக நடந்திருக்கிறது.
8. ராமேச்சுரத்து ராமலிங்கர்
சிவன் கோயில்களில் கருவறையில், கோயிலுக்கே நடுநாயகமாய் இருப்பது சிவலிங்கம். சிவலிங்க வழிபாடு மிகமிகப் பழமையானது. திருமூலர் தமது திருமந்திரத்தில் அண்டலிங்கம், பிண்டலிங்கம், சதாசிவ லிங்கம், சிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம் முதலியவைகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.
இலிங்கமதாவது யாரும் அறியார்
இலிங்கமதாலது எண்திசை எல்லாம்
இலிங்கமதாவது எண்ணெண் கலையும்
இலிங்கமதாவது எடுத்தது உலகே
என்பது திருமந்திர வாக்கு. பாதாளம் முதல் ஆகாச பர்யந்தம் எல்லையில்லாத அனந்த சொரூபமாகப் பிரகாசிப்பது லிங்கம். இதனையே 'ஆபாதால' என்ற தியான சுலோகம் கூறியே ருத்ராபிஷேகத்தைத் தொடங்க வேன்டும் என்பது விதி. அண்டமெல்லாம் நிறைந்து நிற்கும் இறைவனை அணுவிலே காட்ட முயன்றவன் கலைஞன், அருவுருவமான கடவுளை உருவத்திலும் அரு உருவத்தில் காட்டுவதில் வெற்றி பெற்றவன் அவன். அந்த அருஉருவத் திருமேனிபயே சிவலிங்க வடிவம், அதாவது வடிவம் போலவும் இருக்கும்; அதே சமயத்தில் வடிவம் ஒன்று இல்லாமலும் இருக்கும் நிலை. இந்த லிங்க வடிவினை அரசர்கள், முனிவர்கள், பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். முசுகுந்தன் பிரதிஷ்டை காளத்தியில், தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரதிஷ்டை வட திருமுல்லைவாயிலில், இடும்பன் பிரதிஷ்டை இடும்பா வனத்தில். திரிசிரன் பிரதிஷ்டை திருச்சிராப்பள்ளியில். அகஸ்தியர் பிரதிஷ்டை அகஸ்தியன் பள்ளியில், மூன்று கோடி முனிவர்கள் சேர்ந்த பிரதிஷ்டை செய்தது கோடிகாலில், ஆனால் எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் வகையில் மூவர்க்கும் மேலான ராமனே பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம்தான் ராமலிங்கம்.
மூலமும் நடுவும் ஈறும்
இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில்லேந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்
ராமன் என்பான் கம்பன். அந்த ராமனே பிரதிஷ்டை பண்ணிய லிங்கம்தான் ராமலிங்கம். அந்த ராமலிங்கம் இருப்பது ராமேச்சுரம். அந்த ராமலிங்கத்தைத் தரிசிக்கவே செல்கிறோம் நாம் இன்று.
ராமேச்சுரம் என்னும் ராமேசுவரம், வங்காளக் குடாக் கடலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவு, சென்னை-ராமேசுவரம் ரயில்பாதையில் மண்டபம் கடந்து பாம்பன் வழியாக ராமேசுவரம் செல்லவேனும். இந்தத் தீவு மாகாவிஷ்ணு தாங்கியிருக்கும் வலம்புரிச் சங்கின் வடிவில் இருக்கிறதென்பர். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் பிரும்மாண்டமான பிராகாரங்களுடன் கூடியது. கோயில் கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 675 அடி அகலமும் உள்ளது. கிழக்கு வாயிலை 126 அடி உயரமுள்ள கோபுரம் அழகு செய்கிறது. மேல் வாயிலில் 78 அடி உயரமுள்ள கோபுரம் இருக்கிறது. இதுவே பழைய கோபுரம். தெற்கேயும் வடக்கேயும் கோபுரங்கள் கட்டப்படவில்லை. கிழக்கு வாயில்வர வேண்டுமானால் கொஞ்சம் சுற்றிக் கொண்டு வரவேணும். ஆதலால் எல்லாரும் மேலக்கோபுர வாயில் வழியாகவே கோயிலுள் நுழைவர். நாமும் அப்படியே செல்லலாம்.
மேல் பிராகாரத்தில் வட மேற்கு மூலையில் ஓர் இடம் திரைச்சீலைகளால் மறைக்கப் பட்டிருக்கும். அங்குள்ள காவலனிடம் பத்து காசு நீட்டினால் திறந்து காட்டுவான். அங்கிருக்கும் காட்சிதான் ராமலிங்கர் பிரதிஷ்டை . இந்த ராமலிங்கர் பிரதிஷ்டை ஒரு சுவையான கதையாயிற்றே. இலங்கையில் இராவண வதம் நிகழ்த்திய ராமனைப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொள்கிறது. அதன் நிவர்த்திக்கு இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பதுதான் வழி என்பதை அறிகிறான் ராமன். ராமனது ஏவல் கூவல் பணி செய்யத்தான் அனுமன் உடன் இருக்கிறானே. அவனை அனுப்பி நர்மதை நதிக்கரையிலிருந்தே லிங்கம் அமைக்கக் கல் கொண்டு வரச்சொல்கிறான்; சென்ற அனுமன் திரும்பக் காணோம். அதற்குள் பிரதிஷ்டைக்குக் குறித்த நேரம் வந்துவிடுகிறது. ராமனுடன் வந்த சீதாப்பிராட்டி அங்கு கடற்கரையிலிருந்த மணலையே சிவலிங்கமாக்கிக் கொடுக்கிறாள். ராமனும் பூஜையை முடித்துக் கொள்கிறான். பூஜை முடிந்தபின் அனுமன் லிங்கத்துடள் வந்து சேருகிறான். அவனுக்கு ஒரே கோபம், தன் முயற்சி எல்லாம்
ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
வீணாய்ப் போய் விட்டதே என்று. சீதை அமைத்த மணல் லிங்கத்தைத் தன் வாலால் கட்டி இழுத்துப் பிடுங்கி எறிந்துவிட முனைகிறான். நடக்கிற காரியமா அது? ஆதிலிங்கம் ஆயிற்றே. அனுமானைச் சமாதானம் செய்ய விரும்பிய ராமன் அவன் கொண்டுவந்த லிங்கத்தையும் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து வைத்து அதனை அனுமத்லிங்கம் என்று அழைக்கிறார். இத்தனை நாடகமும் சுதை வடிவில் அங்கு வண்ண உருவில், காட்டப்பட்டிருக்கும். கருவறையில் இருப்பவர் ராமலிங்கர். அவர் பக்கத்தில் இடப் பக்கத்தில் இருப்பவர் அனுமன் கொண்டு வந்த பிரதிஷ்டை செய்யப்பட்ட விசுவநாதர், இருவரையும் கருவறையில் சென்று கண்டு வணங்கலாம். இந்த ராமலிங்கரே உலகில் உள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களில் ஒன்றாக விளங்குகிறார். இவர் மேனியிலே அனுமனது வால் தழும்பு இன்னும் இருக்கிறது.
ராமலிங்கர் நல்ல அபிஷேகப் பிரியர், அதிலும் கங்கா ஸ்நானத்தை விரும்புகிறவர். ஆதலால் வடநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் எல்லாம் கங்கா ஜலம் கொண்டுவந்து அபிஷேகம் செய்கிறார்கள். இந்த கங்காபிஷேகத்துக்கு நிபந்தனைகள் அதிகம். அதற்கெல்லாம் உட்பட்டே அபிஷேகத்துக்குச் சேவார்த்திகள் ஏற்பாடு செய்ய வேணும். இந்த ராமலிங்கர் சந்நிதி காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை எப்போதும் திறந்தே இருக்கும். இந்த நல்ல வசதி எல்லாக் கோயில்களிலும் கிடைப்பதில்லை யாத்திரிகர்களுக்கு. கருவறை செல்லுமுன் பிராகாரங்களை ஒரு சுற்றுச் சுற்றலாம். ராமேசுவர பிராகாரங்கள் {Corridors) பிரபலமானவை ஆயிற்றே. இந்தப் பிராகாரங்கள் ஒவ்வொன்றும் சுமார் நானூறு அடி நீளமும், இருபதிலிருந்து முப்பதடி அகலமும், அறுபது அடி உயரமும் உடையன. பிரும்மாண்டமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவ்வளவு பெரிய பிராகாரங்களை வேறு இடங்களில் காண முடியாது: கல் கிடையாது. ஒரு சிறு தீவுக்கு, இவ்வளவு பெரிய கற்களை எப்படிக் கொண்டு வந்தனர். எப்படி இந்தப் பிராகாரங்களை அமைத்தனர் என்பது பலருக்கும் லியப்பானதொன்றே.
இக்கோயிலில் மூன்று பிராகாரங்கள். மூன்றாம் பிராகாரமான வெளிப் பிராகாரத்திலேதான் பெரிய நடராஜரது வடிவம் ஒன்றும் இருக்கிறது. உள் பிராகாரத்தில் தான் ராமலிங்கர் கோயில் கொண்டிருக்கிறார். அங்குள்ள நவசக்தி மண்டபம் நல்ல வேலைப்படுடையது. அந்த பிராகாரத்திலேதான் பர்வதவர்த்தினி அம்பிகையின் சந்நிதி. இவளையே தாயுமானவர் மலைவளர் காதலிப் பெண் உமை என்று அழகொழுக அழைக்கிறார்.
ஆரணி சடைக் கடவுளர்
அணியெனப் புகழ் அகிலாண்ட
கோடியீன்ற
அன்ளையே! பின்னையும் கன்னியென
மறைபேசும் ஆனந்த
ரூப மயிலே!
வார் அணியும் கொங்கை மாதர்
மகிழ் கங்கைபுகழ் வளமருவு
தேவ அரசே
வரை ராஜனுக்கு இரு கண்மணி
யாய் உதித்த மலை வளர்
காதலிப் பெண் உமையே!
என்று பாடிப் பாடிப் பரவசம் அடையலாமல்லவா?
இங்குள்ள நந்தி சுதையால் உருவானவர்தான். நல்ல பெரிய நந்தி, நீளம் பன்னிரண்டு அடி, உயரம் ஒன்பது அடி. கீழ்க் கோபுர வாயிலில் பெரிய அனுமார் இருக்கிறார். பிரதம லிங்கரைப் பிரதிஷ்டை செய்யும் பாக்கியத்தை இழந்தவர் என்று அவர் பார்வையிலுள்ள ஏக்கத்திலிருந்தே தெரியும். ராமேசுவரத்தில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தம்தான் விசேஷமானது. இக்கோயில், கோயில் பிராகாரங்களைச் சுற்றியே இருபத்திரண்டு புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்தத் தீர்த்தங்களில் எல்லாம் ரசாயன சத்துக்கள் இருப்பதால் புண்ணியத்தோடு தேக ஆரோக்கியமும் உண்டாக்கும். எல்லாத் தீர்த்தங்களும் புராண மகத்துவமும் பெற்றவை. கோயிலுக்கு நேர் கிழக்கேயுள்ள கடல்துறைதான் முக்கியமானது. அதுவே அக்கினித் தீர்த்தம். இங்கேதான் தீர்த்தாடனம் தொடங்கவேண்டும். கடைசியில் கோயிலுள் உள்ள கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் ஆடிய பிறகு ஊரிலே தங்கக்கூடாது என்பது ஐதீகம். கட்டிய புண்ணியம் எல்லாம் நம் வீடு வரையாவது நம்முடன் கொண்டுசெல்ல வேண்டும்.
ராமேசுவரத்தை விட்டு கிளம்புமுன் பார்க்க வேண்டியவை கந்தமாதன பர்வதம்; ஏகாந்த ராமர் கோயில், நம்பி நாயகி அம்மன் கோயில் முதலியன. கந்தமாதன பர்வதம் வடமேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்துதான் இலங்கைக்கு அனுமார் தாவினார் என்று கூறப்படுகிறது. ஏகாந்த ராமர் கோயில் ராமேசுவரத்துக்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் தங்கச்சி மடம் ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கிறது. இங்கு ராமர் சீதையுடன் பேசிக் கொண்டிருக்கும் பாவனையில் சிலைகள் அமைத்திருக்கிறார்கள். ராமர் இங்குதான் தமது மந்திராலோசனையை நடத்தினார் என்பர், ராமேசுவரத்துக்குத் தெற்கே இரண்டுமைல் தூரத்திலுள்ள நம்பி நாயகி அம்மன் நம்பிக்கையுடன் ஆராதிப்பவர்களுக்கெல்லாம் அருளுபவள் என்பது நம்பிக்கை, இன்னும் சீதா குண்டம், வில்லூரணி தீர்த்தம், கோதண்டராமசுவாமி கோயில் எல்லாம் சென்று வாங்கித் திரும்பலாம்.
இந்தத் தலத்துக்கு ஞானசம்பந்தரும், அப்பரும் வந்திருக்கிறார்கள்; பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.
தேவியை வவ்விய தென்னிலங்கை
யரையன்
ஏவியல் வெஞ்சிலையண்ணல் செய்த
இராமேச்சுரத்தாரை
நாவியல் ஞானசம்பந்தன்
நல்லமொழியால் நவின்றேத்தும்
பாவியல் மாலை வல்லார்
அவர் தம் வினையாயின பற்றறுமே
என்று சம்பந்தர் பாடினால்,
கடலிடை மலைகள் தம்மால்
அடைத்து மால் கருமம் முற்றி
திடலிடைச் செய்த கோயில்
திரு இராமேச்சுரம்
என்று அப்பர் பாடுகிறார். இத் திருப்பதிகங்களையெல்லாம் பாடி ராமேச்சுரம் மேவிய இறைவனை வாங்கிவிட்டு, தனுஷ்கோடிக்குச் சேது ஸ்நானத்துக்குச் செல்லலாம். ராமேச்சுரத்திலிருந்து 24 மைல் தூரத்தில் தனுஷ்கோடி இருக்கிறது. இங்குதான் வங்காளக் குடாக் கடல், இந்துமா சமுத்திரம் இரண்டும் கூடுகின்றன. மகோததி, ரத்னாகரம் என்னும் கடல்கள் கலப்பதாகப் புராணங்கள் கூறும். ராமேசுவரத்திலிருந்து கடற்கரை வழியாகத் தோனியில் ஏறிக் கொண்டும் சேதுக்கரை செல்லலாம். இது எல்லாம்
கோயில்
காற்று வசதியாக அடிக்கும்போதுதான் சௌகரியமாக இருக்கும். இல்லா விட்டால் பேசாமல். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் தனுஷ்கோடி செல்லுதலே சரியானது. மணற்பரப்பில் நாலு பர்லாங்கு நடந்துதான் சேது ஸ்நான கட்டத்துக்கு வரவேணும், தனுஷ் கோடி என்றால், ஒரு கோடி வில் என்று அர்த்தம். இங்கு தீர்த்தம் ஆடினால் ஒரு கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். இங்கிருந்துதான் இலங்கை செல்ல ராமன் அணை கட்டியிருக்கிறான், அதனாலேயே சேது என்று அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 36 ஸ்நானம் செய்ய வேண்டுமென்பது விதி அதற்கு ஒரு மாதம் தங்க வேண்டும், அது எல்லாம் நம்மால் முடிகிற காரியமா என்ன? ஆதலால் ஒரே நாளிலேயே முப்பத்தாக முழுக்குகள் போட்டு மேலே சொல்லிய ஸ்தான பலன்களையெல்லாம் ஒரேயடியாகப் பெற்றுவிட வேண்டியதுதான், தனுஷ்கோடியிலே தீர்த்தமாடிய பின்னரே ராமலிங்கரைத் தரிசிக்க வேண்டும் என்றும் கூறுவர். எது வசதியோ அப்படிச் செய்து கொள்ளலாம். நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைபவராயிற்றே இறைவன் ராமலிங்கர் அகில இந்தியப் பிரசித்தியுடையவர். இமசேது பரியந்தம் அவர் புகழ் பரவிக் கிடக்கிறது. இங்கு வரும் வடநாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை சொல்லில் அடங்காது. வடக்கையும் தெற்கையும் இணைப்பதில் வெற்றி கண்டவர் இந்த ராமலிங்கர். அதுவே அவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்திருக்கிறது.
தனுஷ்கோடியிலும் ராமேசுவரத்திலும் ஸ்நானம் பிராத்தனை எல்லாம் முடித்துக் கொண்டே இராமநாதபுரம் போய் அங்கிருந்த தர்ப்ப சயனம் (திருப்புல்லாணி) சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பர். புண்ணிய சேதுவை நினைக்கும் போதெல்லாம் சேது காவலர்களான சேதுபதிகளும் நம் நினைவுக்கு வருவார்கள், அவர்கள் குகனுடைய பரம்பரை என்று வழக்கு. முதல் சேதுபதியாகிய குகனுக்கு ராமர் பட்டம் கட்டியதைக் குறிப்பிடும் கல் ஒன்று இராமநாதபுரம் அரண்மனையில் இராமலிங்க விலாஸ் என்ற இடத்தில் இருக்கிறது. சேது காவலர்கள் ராமேச்சுரம் கோயிலில் செய்த திருப்பணிகள் அனந்தம். சடைக்கத் தேவர் உடையார் சேதுபதி முதல் பரம்பரையாக வந்த சேதுபதிகள் எல்லாம் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் கடைசியில் இருந்த பாஸ்கர சேதுபதியின் தான தருமம் உலகப் பிரசித்தம்.
9. புல்லாணி எம்பெருமான்
கொல்லணை வேல் வரிநெடுங்கண்
கௌசலைதன் குலமதலாய்!
குனிவில் ஏந்தும்
மல்லணைந்த வரைத் தோளா!
வல்வினையேன் மனமுருக்கும்
வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்துயின்றாய்!
இன்று இனிப்போய்
வியன் கானமரத்தின்நீழல்
கல்லணைமேல் கண்துயிலக்
கற்றனையோ காகுத்தா!
கரிய கோலே!
என்று குலசேகரர் பாடுகிறார். தனயனான ராமன் காட்டுக்குப் புறப்பட்டான் என்றவுடனே, தந்தை தசரதன் புலம்புவதாகப் பாட்டு. அரண்மனையில் பிறந்து, அரண்மனையில் வளர்ந்து ஹம்ஸதூளிகா மஞசத்தில் உறங்கிய பிள்ளை இனி காட்டிலே கல்லையே அணையாகக் கொண்டல்லவா உறங்கப்போகிறான் என்ற உடனே உள்ளத்தில் எழும் தாபம் வெளிப்படுகிறது. ஆனால் இந்தப் பிள்ளை, கல்லை மாத்திரம்தானா அனையாகக் கொள்கிறான்? புல்லையுமேதான் அனையாகக் கொள்கிறான். கதை நமக்குத் தெரியும். சீதையை எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்து விடுகிறான் இராவணன். அவள் இருக்கும் இடத்தை அறிந்து வந்து சொல்கிறான் அனுமன். உடனே ராமன் சுக்ரீவனது வானரப் படையின் துணையுடன் இலங்கை மீது படை எடுக்கிறான். இடையிலே இருக்கிறது கடல். கடல் கடந்துதான் இலங்கை செல்ல வேணும். லிபீஷணன் ஆலோசனைப்படி வருணனை வழிபட முனைகிறான். அதற்காகத் தருப்பையையே சயனமாக்கி அதிலிருந்து வருணனை வேண்டுகிறான். இதைக் கம்பன் சொல்கிறான்.
தருண மங்கையை மீட்பது
ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல்
நூல்நெறி அடுக்கிய புல்லிவ்
கருணை அம் கடல் கிடந்தது.
கருங்கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன்
விதிமுறை வணங்கி
என்று. இப்படிப் புல்லணைமேல் கிடந்து வருணனை வேண்டிய தலம்தான் திருப்புல்லணை. அதனையே திருப்புல்லாணி என்கிறார்கள், அந்தத் திருப்புல்லாணிக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருப்புல்லாணி ராமநாதபுரத்துக்குத் தெற்கே கீழக்கரை செல்லும் பாதையில், ராமநாதபுரத்திலிருந்து ஆறு ஏழு மைல் தொலைவில் இருக்கிறது. ராமநாதபுரம் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி வைத்துக்கொண்டு போகலாம். சொந்தக் கார் இருந்தால் 'ஜாமி ஜாம்' என்று காரிலேயே போய் இறங்கலாம். ஊர் மிகச் சிறிய ஊர். கோயில் பெரியதும் அல்ல, சிறியதும் அல்ல. 'கள்ளவிழும் மலர்க்காவியும், தூமடல் கைதையும் புள்ளும் அள்ளற் பழனங்களும், சூழந்த புல்லாணி' என்று அன்று மங்கை மன்னன் பாடியிருக்கிறான், இன்று அள்ளற் பழனங்களையோ மலர்க் காவிகளையோ பார்த்தல் அரிது. கடற்கரையை ஒட்டிய கிராமம் ஆனதால் மணல் குன்றுகளுக்குக் குறைவில்லை என்றாலும் கோயில் வாயில் சென்று சேரும்வரை நல்ல ரோடு இருக்கிறது. இங்குதான் புல்லர், கண்ணுவர், காலவர் முதலிய முனிபுங்கவர்கள் தவம் புரிந்து முத்தி பெற்றிருக்கிறார்கள். முனிவராம் புல்லர் விரும்பியபடியே ஜனார்த்தனன். தேவியர் மூவரோடும் சதுர்புஜத்தோடும், பஞ்சாயுதங்களோடும், ஸ்ரீவத்சம், கௌஸ்துபம் முதலிய மாலைகள் விளங்க, பீதாம்பரமும் அனிந்து திவ்வியாபரணங்களும் தரித்து எழுந்தருளியிருக்கின்றார். இன்னும் இத்தலத்திலே தேவலர் என்னும் முனிவர் தவம் செய்யும்போது சப்த கன்னியரும் அங்குள்ள திருக்குளத்தில் ஜலக்கிரீடை செய்திருக்கிறார்கள். அவர்கள், தம் தவத்தைக் கலைத்ததற்காக அவர்களை யக்ஷர்களாகப் போகும்படி சபித்திருக்கிறார். அவர்கள் சாப விமோசனம்வேண்டிய பொழுது அவர்களைப் புல்லாரண்யத்தில் புல்லர் வழிபட்ட பெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெற அருளியிருக்கிறார்.
இலங்கை செல்லும் இராமர் இங்கு தர்ப்ப சயனத்தில் கிடந்து வருணனை வேண்டியிருக்கிறார். பின்னர் இங்குள்ள எம்பெருமானையும் வணங்கியிருக்கிறார் அவரும் ராமனுக்கு வில் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அது காரணமாக, புல்லணி எம்பெருமானுக்குத் திவ்ய சரபன், தெய்வச் சிலைமன் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. பின்னர்தான் வருணன், ராமர் முன்வந்து கடலைச்சுவற அடிப்பதை விட, சேது கட்டுதலே சிறந்தது என்று கூற அதன்படியே நளன் தலைமையில் சேது கட்டி முடிக்கப்படுகிறது. இங்கு தான் சேது கட்டத் தீர்மானம் ஆனதால் இதனை ஆதிசேது என்றும் அழைக்கின்றனர். புல்லர் முதலான ரிஷிகள் ஜகந்நாதனைச் சரண் அடைந்து பரமபதம் பெற்றது. இங்கேதான். கடற்கடவுளும் தசரத புத்திரனைச் சரணடைய அவனுடைய கிருபைக்குப் பாத்திரனானதும் இங்கேதான். ஆதலால் இத்தலத்தில் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கிறவர்கள் இகபர சுகங்கள் எல்லாம் பெறுவர் என்பது நம்பிக்கை
இத்தலத்தில் கல்யாண ஜகந்நாதன் என்ற பெயரோடு பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். தாயார் திருநாமம் கல்யாணவல்லி. கோயில் விமானம் கல்யான விமானம். கோயில் பிராகாரத்தில் ராமன் தர்ப்பசயனனாகச் சேவை சாதிக்கிறான் பட்டாபிராமன் சந்நிதி வேறு இருக்கிறது. இங்குள்ள ஹேமதீர்த்தம் சக்கர தீர்த்தம் பிரசிசத்தமானவை. சகல பாவங்களையும் போக்கவல்லவை. இக்கோயிலில் சிலா வடிவங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. என்றாலும், கோயிலில் செப்புப் படிமங்கள் பல பூசையில் இல்லாமல் இருக்கின்றன. ராமர், லஷ்மணர், பரதர் சத்துருக்னர் படிமங்கள் எல்லாம் இருக்கின்றன. எல்லாம் கவனிப்பார் அற்றுக் கிடக்கின்றன.
இங்குள்ள தல விருட்சம் அசுவத்த விருட்சம் என்னும் அரசமரம். அதன் நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்வோருக்கு மக்கட்பேறு உண்டாகும் என்று நம்பிக்கை. இத்தலத்தில் இவ்விருட்சம் அமைந்ததற்கு ஒரு புராணக் கதை வழங்கி வருகிறது.
ஆதியில் படைப்புத் தொழில் பராந்தாமனிடத்திலேயே இருந்திருக்கிறது. முதலில் பிரம்மாவையும் பின்னர் நவப்பிரஜாபதிகள், இந்திரன் முதலியோரையும் படைத்துப் பின்னரே பிரம்மாவைத் தொடர்ந்து சிருஷ்டி செய்யுமாறு பணித்திருக்கிறார். படைத்தல் தொழிலைச் செய்வதற்குத் தெற்கு நோக்கிப் பிரம்மா வந்தபோது கோடி சூரியப் பிரகாசத்தோடு ஒரு ஜோதி தோன்றி மறைந்திருக்கிறது. அந்த ஜோதியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது, பரந்தாமன், 'அதுவே போத ஸ்வரூபமான போதி மரம், அந்த மரத்தடியிலேதான் ஜகந்நாதன் தங்குகிறான்' என்று அருளியிருக்கிறான் அது காரணமாகவே போதி என்னும் அரச மரம் ஜகந்நாதனுக்கு நிழல் தரும் தருவாய் அங்கு அமைந்திருக்கிறது (போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரையும் விஷ்ணுவினது அவதாரம் என்று கொள்வது இதனால் தான் போலும்).
இத்தலத்துக்கு திருமங்கை மன்னன் வந்திருக்கிறார்; இருபது பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். அவர் பாடிய பாடல்கள் பல நாயக நாயகிபாவத்தில் அழகொழுகும் வண்ணம் இருக்கின்றன.
வில்லால் இலங்கை
மலங்கச் சரந்துரந்த
வல்லாளன் பின்போன்
நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை
ஏசிடினும் பேசிடினும்
புல்லாணி எம்பெருமான்
பொய் கேட்டிருந்தேனே
என்ற பாசுரம் பிரபலமான ஒன்றாயிற்றே. அனைவரும் கேட்டுக் கேட்டு ரசித்ததாயிற்றே.
இந்த ஆதி சேதுவின் காவலரே ராமநாதபுரம் ராஜாக்கள். சேதுக் கரையையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் மன்னர்களாக இருக்கிற காரனத்தால் அவர்களைச் சேதுபதி என்று அழைத்தார்கள். திருப்புல்லாணிக் கோயில் எப்பொழுது கட்டப்பட்டது என்று தெரியவில்லை. பரராஜசேகர் ராஜா காலத்தில்தான் கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இருபத்தேழு கிராமங்கள் இக்கோயில் பராமரிப்புக்காகச் சேது சமஸ்தானத்தாரால் விட்டுக் கொடுக்கபட்டிருக்கின்றன. அதற்குத் தாமிர சாஸனங்களும் ஓலைச் சாஸனங்களும் உண்டு, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேதுபதியாக இருந்த கிழவன் சேதுபதி என்னும் ரகுநாத சேதுபதி அவர்கள் பதினோரு கிராமங்களை இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கியிருக்கிறார். இவருக்குப் பின் வந்த விஜய ரெகுநாத சேதுபதி, முத்து ராமலிங்க சேதுபதி முதலியவர்களும் பல நிபந்தங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமாக நிறைய உப்பளங்கள் உண்டு. மன்னார் குடாக் கடலில் நடைபெறும் முத்துக் குளிப்பிலும் இந்தக் கோயிலுக்கு ஒரு பங்கு உண்டு என்று தெரிகிறது. எல்லாம் சொல்லி ஒன்று சொல்ல மறந்து விட்டேனே, இந்தத் தலத்தில் இரவில் நைவேத்தியமாகும் திருக்கண்ணமுது {பால்பாயாஸம்) மிக்க சுவையுடையது. பகலில் போகிறவர்களும் ஞாபகயாகக் கேட்டால் அர்ச்சகர் எடுத்து வைத்திருக்கும் திருக்கண்ணமுது கிடைக்கலாம். இரவில் போனால் தான் கட்டாயம் கிடைக்குமே.
இத்தலத்துக்கு வந்த நாம் ராமநாதபுரத்துக்கு வட்டகிழக் ஏழு மைல் தூரத்தில் உள்ள தேவி பட்டம் வரையில் சென்று அங்குள்ள பட்டாபி ராமனையும் வாங்கலாம். இங்குதான் ராமன் வருணனுக்கு அபயம் அளித்தார் என்று வரலாறு. இங்கு பிரதான தேவதை மற்ரிஷாசுரமர்த்தினி. அதனால்தான் தேவிபட்டணம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தத் தேவி பட்டணத்தை அடுத்து நவபாஷாணம் என்னும் சமுத்திர தீர்த்தம் வேறே இருக்கிறது இங்குதான் ராமர் நவக்கிரஹ பூஜை செய்திருக்கிறார். ஒன்பது குத்துக் கல்கள் கடலில் இருக் கின்றன. அந்த இடத்தில் அலை அடிப்ப தில்லை. இந்தத் தீர்த்தத்தில் நீராடிப் பக்கத்தில் உள்ள கோயிலில் மங்கள நாதர் மங்க ளேகவரி யையும் வணங் கினால் எல்லா நல்ல பலன் களும் சித்திக்கும் என்று நம்பிக்கை. அவகாசம் உள்ள வர்களெல்லாம் தேவிபட்டணம், நவபாஷாணம் எல்லாம் சென்றே திரும்பலாம் நல்ல பலன்கள் கிடைக்குமென்றால் தயக்கமில்லாமல் செல்வதற்கு மக்கள் முன்வருவதில் வியப்பென்ன.
10. உத்தர கோச மங்கைக்கு அரசு
ஒரு பொருளாதாரப் பேராசிரியர், அவர் ஏற்றிருக்கிற பொருளாதாரப் பகுதியில் பி.ஏ. வகுப்பில் நாற்பது பிள்ளைகள். அதில் பத்துப்பேர் பெண்கள். அவர்களில் ஒருத்தி கமலா. பேராசிரியர் சொல்லும் பொருளாதாரத் தத்துவங்கள் ஒன்றும் அவளுக்குப் புரிகிறதேயில்வை, எப்படியோ உருப்போட்டுப் பூரீக்ஷை எழுதிப் பாசாகிவிட்டாள். பேராசிரியரது பெற்றோர் அந்தச் கமலாவையே தங்கள் மருமகளாக நிச்சயித்து மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். பேராசிரியர் போதித்த பொருளாதாரத் தத்துவங்கள் விளங்காவிட்டாலும் பேராசாரியரது குடும்பப் பொருளாதாரத்தைத் திறம்பட நிர்வகிக்கத் தெரிந்து கொள்கிறாள் கமலா. பேராசிரியரும் அடங்கி ஒடுங்கி விடுகிறார். இது நானறிந்த குடும்பம் ஒன்றில் நிகழ்ந்த செயல். இதனைத் தூக்கியடிக்கிற வகையிலே இறைவனும் குடும்பம் நடத்தியிருக்கிறார். கதை இதுதான்;
கைலாயத்தில் ஒருநாள் இறைவன் பார்வதிக்கு வேத மந்திரங்களை உபதேசிக்கிறார். அம்மையும் அத்தனை மந்திரங்களையும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்கிறாள். என்றாலும், அவளுக்கு எத்தனையோ வேலை. புருஷனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் இரண்டு பிள்ளைகளைக் கட்டி மேய்க்கும் தொல்லை, இவைதவிர எண்ணற்ற பக்தர்கள் செய்யும் பிராத்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா? அதனால் வேத மந்திரங்களை ஒழுங்காய் நெட்டுருப் போட்டு, ஞாபகத்திலே வைத்துக்கொள்ள முடியவில்லை. இதுவெல்லாம் தெரிகிறதா இறைவனுக்கு? சொல்லிக் கொடுத்த பாடத்தை ஒட்புவிக்கும்படி கேட்கிறார் ஒரு நாள். அம்மைக்குப் பாடம் எல்லாம் மறந்து விட்டது; ஆதலால் விழிக்கிறாள். உடனே கோபம் வருகிறது வாத்தியாருக்கு. கோபத்தில் சாபமே கொடுத்து விடுகிறார். சாபம் இதுதான்; அன்னை பார்வதி பூலோகத்தில் ஒரு வேதியர் மகளாய்ப் பிறக்க வேண்டியது. தந்தையிடம் வேத வேதாகமங்களை 'இம்போஸிஷன்' எழுதுவதுபோல, ஆயிரம் தடவை கேட்டுக் கேட்டு மனனம் பண்ண வேண்டியது. அதன் பின் இறைவன் வந்து வேதப்பொருள் உரைத்துத் திருதணம் செய்துகொண்டு கைலைக்கு அழைத்துச் செல்லவேண்டியது. இந்தச் சாபம், இல்லை, இந்த நல்ல 'எக்ரிமெண்ட்' நிறைவேறுகிறது. நாளாவட்டத்தில்,
ராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்று ஓர் ஊர் தமிழ் நாட்டில், அங்கு ஒரு வேதியர், வேதங்களை ஓதி உணர்ந்தவர். ஒழுக்கத்தால் உயர்ந்தவர்; அவருக்கு ஒரு குறை. பிள்ளைப்பேறு இல்லையே என்று. அதற்காகத் தம் ஊரின் பக்கத்திலுள்ள இலந்தை வனம் கிராமத்திலே கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பிராத்திக்கிறார். அங்குள்ள கௌதம தீர்த்ததில் மூழ்கி, விரதம் இருக்கிறார். ஏன், தவமே புரிகிறார். இவருடைய தவத்துக்கு இரங்கி இறைவனும் பிரத்யக்ஷமாகி வரம் அளிக்கிறார். இப்படிப்பட்ட வர பலத்தால் அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். பெண்ணுக்கு ‘பூண்முலையாள்' என்று பெயரிடுகிறார். மக்கள் நால்வரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறார்கள். பெண்ணும் வளர்ந்து மணப்பருவம் அடைகிறாள்.
இந்த நிலையில் ஒரு கிழ வேதியர் உருவில் இறைவனே வருகிறான். யாருக்கு அவன் வரம் கொடுத்துப் புத்திர சந்தானத்தை அருளினானோ அந்த வேதியரிடமே தானும் ஒரு வரம் கேட்கிறான்; இரப்போர்க்கு இல்லை என்னாத பெருமையுடைய வேதியரும் கேட்ட வரம் தருவதாக வாக்களிக்கிறார். வந்த கிழவேதியர் கேட்ட வரம். பூண்முலையாளைத் தமக்கு மணம் செய்து தரவேண்டும் என்பதுதான். வரம் கொடுத்த வேதியரும், கிழ வேதியருக்குத் தம் அருமை மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்துத் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார். மிக்க சிறப்பாகத் திருமணம் . நடக்கிறது. மணமக்களை ஊஞ்சலில் வைத்து லாலி பாடுகிறார்கள்
உத்தரகோச மங்கை-நடராஜர்
பெண்கள். அவ்வளவுதான், மணமகனும், மணமகளும் அப்படியே மறைந்துவிடுகிறார்கள். எல்லோரும் திகைத்து நின்றபோது ரிஷப வாகனரூடராய் இறைவனும், இறைவியும் காட்சி கொடுக்கிறார்கள் இறைவன் வேதியரைப் பார்த்து, 'மாசற்ற மறையவனே, உன் தவத்துக்கு மெச்சியே பார்வதியை நின் மகளாக அவதரிக்கச் செய்து உன்னிடம் வளரச் செய்தோம். அவளைத் திரும்பவும் திருமணம் முடித்து என்னிடம் அழைத்துக் கொண்டோம்” என்று கூறுகிறான். “இனி இந்த ஊரிலேயே இந்தக் கல்யானசுந்தரியுடன் கல்யாண ஈசுவரனாகக் கோயில் கொள்வோம். இந்த ஊருக்கும் கல்யாணபுரம் என்றே பெயர் வழங்கட்டும்.” என்று சொல்கிறான். இத்தனையும் கேட்ட பின்பும் வேதியருக்கு ஓர் ஆசை. “இறைவனே! திருமணம் நடந்தது சரிதான். சப்தபதி, சேஷ ஹோமம் எல்லாம் நடக்கவில்லையே? அந்தச் சடங்கெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் மறையவர் மணமுறைப்படி திருமணம் பூர்த்தியான தாகாதே“ என்று அங்கலாய்க்கிறார். “சரி, நடக்கட்டும் உங்கள் சடங்குகள்” என்கிறார் இறைவன். சடங்குகள்” நடந்து இறைவன் இறைவி திருமணமும் பூர்த்தியாகிறது.
இப்படிப் பார்வதியை இரண்டாம் தடவை திருமணம் முடித்த பின்னும் இறைவன் தம்முடைய வாத்தியார் தொழிலை விடவில்லை. 'என்ன வேதம் ஓதுதல் கூடுமா?' என்கிறார். அம்மையும் சளைக்கவில்லை. ராஜமானரிக்க சதுர்வேதபுரத்தில்தான் தந்தையான வேதியரிடம் ஆயிரம் தடவைக்கு மேலாக வேதங்களை ஓதி ஓதி உணர்ந்தவள் ஆயிற்றே. ஆதலால் 'கட கட' என்று பாடம் ஒப்புவிக்கிறாள். 'சரி ஒப்புவித்த பாடத்துக்கெல்லாம் பொருள் சொல்லு' என்கிறார் உபாத்தியாயர். அம்மை ‘திரு திரு' என்று விழிக்கிறாள் பள்ளிப் பிள்ளையைப் போல. உடனே இறைவன் வேதம். வேதப் பொருளையெல்லாம் திரும்பவும் அவளுக்குப் போதிக்கிறார். இப்படி வேதத்தில் திரும்பவும் உபதேசம் பெற்ற மங்கை, பூண்முலையாளாக, கல்யாண சுந்தரியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் உத்தரகோச மங்கை (உத்தரம் என்றால் திரும்பப் பெறும் விடை; கோசம் என்றால் வேதம் என்று கொருள்). அந்த உத்தரகோச மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.
இந்த உத்தரகோச மங்கை ராமநாதபுரம் மாவட்டத்திலே, ராமநாதபுரத்துக்கு நேர் மேற்கே ஐந்தாறு மைல் தூரத்தில் இருக்கிறது. வாகன வசதி உள்ளவர்கள் எல்லாம் ராமநாதபுரத்திலிருந்த மதுரை செல்லும் ரோட்டில் ஐந்து மைல் சென்று பின்னர் தெற்கே திரும்பி மண் ரஸ்தாவில் மூன்று மைல் போக வேண்டும். உத்தரகோச மங்கை (Uthrakosa mangai Train halt) என்னும் ஸ்டேஷனில் இறங்கி மூன்று மைல் நடந்து சென்றாலும் இந்த ஊர் போய்ச் சேரலாம். ஊர் சின்னஞ்சிறிய ஊர். ஊருக்கு மூன்று மைல் தொலைவிலேயே கோயில் கோபுரம் வானளாவ உயர்ந்து நிற்பது தெரியும். வடக்கு வீதி வழியாகச் சென்று கோயில் முன்பு வந்த நின்றோமானால் அங்கு பெரிய கோபுரத்துக்குத் தென் பக்கத்தில் ஒரு கோபுரம் இடிந்து கிடப்பது தெரியும். ஜெய்ப்பூர் ஹவாய் மஹல் போல் இந்த இடிந்த கோபுரம் காட்சி தரும். இடிந்து கிடப்பதே இத்தனை பெரிது என்றால்-இடியாத நிலையில் அது எத்தனை பெரிதாயிருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.
இந்த ஊரின் பெருமை எல்லாம் இங்கே மாங்கள் நாயகரும் பூண்முலை அம்மையும் கோயில் கொண்டிருக்கிறார்கள் என்பதனால் மட்டும் அல்ல. இந்தத் தலத்திலே மாணிக்கவாசகர் வந்து தங்கியிருந்து, உத்திரகோச மங்கைக்கு அரசே என்று கூலி அழைத்து நீத்தல் விண்ணப்பத்தைப் பாடிய காரணத்தால் சமய உலகிலும், இலக்கிய உலகிலும், இவ்வூர் பிரபலம் அடைந்திருக்கிறது. அரிமர்த்தன பாண்டிய மன்னன் குதிரை வாங்க அளித்த பொருளையெல்லாம் எடுத்துச் சென்று திருப்பெருந் துறையில் ஆலயப் பணிக்குச் செலவு செய்கிறார் வாதவூரர், பின்னர் இந்த வாதவூரரைக் காப்பதற்காகவே, திருப்பெருந்துறை சிவபெருமான் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொண்டு வருகிறார் மதுரைக்கு. வந்த பரிகளோ திரும்பவும் நரிகளாகிக் குதிரைக் கொட்டாரத்தில் இருந்த மற்றக் குதிரைகளையும் அழித்துவிட்டு மறைகின்றன. இதற்காக மன்னன் வாதவூரரைத் தண்டிக்க முனைகிறான், வாதவூரன் தமது அன்பன் என்பதை, இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுக் காட்டுகிறான் பாண்டியனுக்கு. அதன்பின் வாதவூரர் அரன் அடிக்கே தொண்டு செய்யும் அடியவராகத் திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர் முதலிய தலங்களில் இறைவனை வணங்கிப் பதிகங்களைப்பாடி, தில்லை சென்று இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு. இந்த வாதவூர் என்னும் மாணிக்கவாசகர் மனத்துக்கு உகந்த இடம். திருப்பெருந்துறைக்கு அடுத்தபடி உத்தர கோசமங்கைதான்.
மாணிக்கவாசகருக்கும் இத்தலத்துக்கும் ஏற்பட்ட தொடர்பு பற்றியும் ஒரு கதை இருக்கிறது. இந்த உத்தரகோசமங்கைத் தல புராணத்தில் கைலை மலையிலிருந்த கண்ணுதல், தம் சீடர் ஆயிரம் பேரோடு உத்தரகோச மங்கை வந்து அங்குள்ள பொய்கை ஒன்றின் பக்கத்தில் தங்குகிறார். அந்தச் சீடர்களையெல்லாம் அங்கே இருத்தி விட்டுத் தம்முடைய பக்தை அழகமர் மண்டோதரிக்குத் தரிசனம் கொடுக்க இலங்கைக்கே செல்கிறார். அப்படிச் செல்லும் போது தம்முடன் கொண்டு வந்த திருமுறைகளையெல்லாம் தம் சீடரிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். தான் இலங்கை சென்று சேர்ந்ததைக் குறிக்க அந்தப் பொய்கை நடுவிலே ஒரு சுடர் தோன்றும் என்றும், அந்த சமயத்தில் பொய்கையில் மூழ்குவார் முத்தி பெறுவர் என்றும் கூறுகிறார். சீடர்கள் எல்லாம் பொய்கைக் கரையிலே காத்துக் கிடக்கின்றனர். சில நாட்கள் கழித்து, இறைவன் கூறியபடியே பொய்கையின் நடுவில் கொழுந்து விட்டுச் சுடர் எழுகின்றது. உடனே சீடர் எல்லோரும் பொய்கையில் மூழ்கி முத்தி பெற விரைகின்றனர், சீடரில் ஒரேயொருவர் மட்டும் இறைவன் கொடுத்துச் சென்ற திருமுறைகளைக் காப்பதே முத்தி பெறுவதைவிட. முக்கியம் என நினைத்து, பொய்கையில் மூழ்காமல் தனித்து நின்று திருமுறைகளைக் காப்பாற்றுகிறார். அந்தச் சீடரையே, இறைவன் வாதவூரராக அவதரிக்கச் செய்கிறார். பின்னர் அவருக்கு மட்டுமல்ல, அவரைச் சேர்ந்த பாண்டியன், பிட்டு வாணிச்சி முதலிய எல்லோருக்குமே முத்தியளிக்கிறார். இந்த மணிவாசகர் பாடிய பாடல்களே திருவாசகம். திருவாசகம் பன்னிரு திருமுறைகளிலே ஒன்றாக இடம் பெறுகிறது.
காருறு கண்ணியர் ஐம்புலன்
ஆற்றங்கரை மரமாய்
வேருறு வேனை விடுதிகண்டாய்
விளங்கும் திருவார்
ஊருறைவாய், மன்னும் உத்தர
கோச மங்கைக் கரசே!
வாருறு பூண் முலையாள் பங்க!
என்னை வளர்ப்பவனே,
என்றுதானே இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்.
மணிவாசகர், திருவாசகம் என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆரம்பித்தால், அவர் பாடிய தில்லைக் கூத்தனின் அற்புத நடனம் எல்லாம் நம் கண்முன் வருமே. தில்லை மூதூர் ஆடிய திருவடியை நினைந்து நினைந்து அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம் உள்ளத்தை உருக்குமே. ஆம், இந்த உத்தரகோச மங்கையிலும் பெரிய திருவிழா மார்கழி மாதத்துத் திருவாதிரை உத்சவம்தானே, இந்த எண்ணத்தில் திளைத்துக் கொண்டேதான் உத்தரகோச மங்கைக்குச் சென்றேன் சில வருஷங்களுக்கு முன்பு. உத்தரகோச மங்கையில் மாணிக்கவாசகருக்குக் காட்டிய வித்தக வேடடத்தைக் கண்டு தொழ ஆசைப்பட்டேன். கோயில் நிர்வாகிகள் அழைத்துச் சென்றார்கள், கோயிலின் வடக்குப்பிராகாரத்துக்கு. அங்கு ஒரு சிறிய கோயில். அதுதான் நடராஜர் சந்நிதி என்றார்கள். . அங்குள்ள நடராஜர் நிரந்தரமாகச் சந்தனக் காப்புக்குள் மறைந்து நிற்கிறார். 'காரணம் வினவினேன். சொன்னார்கள் உடன் வந்தவர்கள். அந்த நடராஜத் திருவுருவம் மரகதத்தினால் ஆயது. அதனுடைய பிரகாசம் கோடி சூரிய ஒளி பொருந்தியது. அதை யாரும் ஊனக் கண்ணால் பார்த்தல் இயலாது. ஆண்டுக்கொரு முறை மார்கழித் திருவாதிரை அன்றுதான் பழைய சந்தனக் காப்பு கழற்றட்பட்டுப் புதிய காப்பிடப்படும். அப்படிக் காப்பிடும் அர்ச்சகரும் தம் கண்களை நன்றாக மூடி, துணியால் கட்டிக் கொண்டே காப்பிடுவார். அப்படிக் காப்பிட்ட பின் தான் அந்த மூர்த்தி மற்றவர்களுக்குத் தரிசனம் கொடுப்பார். ஆம்! இறைவனை நோக்கி எவ்வளவோ காலம் தவம் கிடக்கலாம். ஆனால் அவன் நேரே நம் முன் திடீரென்று பிரத்தியட்சமாகத் தோன்றிவிட்டால் அவனுடைய திவ்ய தேஜோமயத்தை நம் கண் கொண்டு காணுவது எளிதானதா?
தமிழ் நாட்டுச் சிற்பக்கலை அழகில் ஈடுபட்ட எனக்கு, இந்த நடராஜன் ஏமாற்றத்தையே அளித்தார், சந்தனக் காப்பை ஊடுருவி அவர் உண்மை உருவை, மூர்த்தியை அவர் இருக்கும் எண்ணத்திலேயே காண முடியாத காரணத்தால். ஆனால் இந்த மாற்றத்தோடு நான் வீடு திரும்பவில்லை. இந்தச் சந்நிதியை விட்டு, பிரதான கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கு நின்று ஆடிக்கொண்டிருந்த நடராஜரைக் காணும் பேறு பெற்றேன். அற்புதமான செப்பு விக்கிரகம். 'அழகமர் திரு உரு' என்று மணிவாசகர் பாடுகிறாரே, அது இந்தத் திருவுருவைக் கண்டுதானோ என்னவோ,- அத்தனை அழகு.
இந்த நடராஜரது திருவுருவத்தைக் கண்டதோடு திருப்தி அடைகிறவனில்லையே நான். உத்தரகோச மங்கை என்ற பெயருக்கே காரணமாயிமந்த அந்த மங்கை, பூண்முலையாள், மங்களேசுவரி; கல்யாண சுந்தரியையும் காண வேண்டுமே என்று துடித்தேன். அவளும் காட்சி கொடுத்தாள்.
காரேறு கருங்குழலும், திருநுதலும்
சுடரிலை வேல் கண்ணும், கஞ்சத்
தாரேறு திருமார்பும், கரும்புருவத்
தடந்தோளும், கருணை காட்டி
நீரேறு சுடர்மலிவுப் பெருமான்றன்
ஒரு பாகம் நீங்கா தோங்கும்
வாரேறு பூண்முலையாள் மலர்ப்பதமும்
எந்நாளும் வழுத்தல் செய்வோம்
என்று பாடி வணங்கிவிட்டுத் திரும்பினேன்.
இங்கு ஒரு சௌகரியம். கோயிலில் உள்ள மூர்த்திகளையெல்லாம் தேடிப்பல இடங்கள் சுற்ற வேண்டாம். எல்லா மூர்த்திகளையும் (சிலா உருவங்களைச் சொல்கிறேன்) அவரவர் இருப்பிடத்திலிருந்து பெயர்த்து எடுத்து வந்து இறைவன் சந்நிதியிலேயே ஒழுங்காய் அடுக்கி வைத்திருக்கிறார்கள். காரணம் வினவினேன். கோயில் பழுது பட்டிருக்கிறது. திருப்பணி செய்யவேண்டும். அதற்கென்று ஒதுக்கிய பணமும் இருக்கிறது என்றாலும் வேலைதான் நடக்கக் காணோம் என்றார்கள். சரி, திருப்பணி சிறப்புற நடக்காவிட்டாலும் எல்லா மூர்த்திகளையும் ஒரே இடத்திலேயே பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்ததே என்று எண்ணிக் கொண்டே திரும்பினேன்.
11. பூவணத்துப் புனிதர்
அழகு அனுபவத்தைப் பற்றி எவ்வளவோ ஆய்ந்திருக்கிறார்கள் அறிஞர்கள்! பொதுவாக நாம் இயற்கைக் காட்சிகள், சித்திரங்கள், சிற்பங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது அவை அழகாயிருக்கின்றன என்று எண்ணுகிறோம். அதனால் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதான் அழகு அனுபவம். இந்த அனுபவம் வெறும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிப்பதோடு அமையாமல் உள்ளம் நிறைந்தததாகவும் இருக்குமானால் அதை வாயால் வர்ணிக்கவும் முடியாது, பாகுபடுத்திப் பார்க்கவும் முடியாது. ஸ்ரீமதி பால சரஸ்வதியின் பரத நாட்டியம் பல வருஷங்களுக்கு முன் அமரர் ஸிகமணி அவர்கள் வீட்டில் நடந்தது. நாங்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவோ அனுபவங்களைப் பெற்றோம். ஆனால் பெற்ற அனுபவத்தைச் சொல்லத் தெரியாமல், சொல்ல முடியாமல் தவித்தோம். ஆனால் டி. கே. சி. அவர்கள் வீட்டு வேலைக்காரி நடனம் முடிந்ததும், 'அ...! பாதகத்திமகள் எப்படி எல்லாம் ஆடுகிறாள்!' என்று சொல்லிக் கொண்டு மூக்கில் விரலை வைத்து நின்று விட்டாள். இதைப் பார்த்த டி.கே.சி 'இதுவே கலை அனுபவம், அழகு அனுபவம்' என்றார்கள்.
இதே போல் ஓர் அனுபவம் பொன்னனையாள் என்ற கணிகைக்கு, பொன்னனையாள் சிறந்த பண்புகள் நிறைந்தவள்: நல்ல சிலபக்தை. வருகிற சிவனடியாரையெல்லாம் உபசரித்து உணவருத்துவதிலேயே அவள் செல்வம் எல்லாம் கரைகிறது. அவளுக்கு ஓர் ஆசை, சிவபெருமானை நல்ல பஞ்சலோகத்தில் ஒரு மூர்த்தியாக வடித்துப் பார்க்க வேண்டும் என்று. அதற்கு அவளிடம் பணம் இல்லை . அதற்காக வருந்துகிறாள். அவளது விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், ஒரு சித்தர் வடிவிலே வருகிறார். அவள் விருப்பம் என்ன என்று கேட்கிறார். அதற்கு வேண்டிய பொருள் தன்னிடம் இல்லையே என்றதும், 'பரவாயில்லை வீட்டில் கிடக்கிற இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டுவா' என்கிறார். அத்தனையையும் அன்றிரவே புடம் போட்டுத் தமது ரஸவாதத் திறமையினால் எல்லாவற்றையும் நல்ல உலோகமாக்கிக் கொடுக்கிறார்; வந்த சித்தர் மறைந்து விடுகிறார் பின்பு கிடைத்த உலோகத்தால் பொன்னனையாள் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு இறைவனது திருவுருவை வடிக்கச் சொல்கிறாள். அப்படிச் சிற்பி வடித்த படிமமும் மிக்க அழகுடையதாக அமைந்து விடுகிறது. அந்த அழகைக் கண்டு ஆனந்திக்கிறாள். அந்த அழகிய பிரானது கன்னத்தைத் திருகி முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள். இப்படி அழகை அனுபவித்த பொன்னனையாளைப் பரஞ்சோதியார்,
மழவிடை உடையான் மேனி
வனப்பினை நோக்கி அச்சோ!
அழகிய பிரானோ என்னா
அள்ளிமுத்தங் கொண்டு அன்பில்
பழகிய பரனை யானும்
பரிவினால் பதிட்டை செய்து
விழவுதேர் நடத்திச் சின்னாள்
கழிந்தபின் வீடு பெற்றாள்,
என்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்படிக் கன்னம் கிள்ளிக் கொஞ்சியதால் ஏற்பட்ட வடுவுடனேயே இறைவன் இன்னும் அந்தக் கோலத்தில் இருந்து கொண்டிருக்கிறான். அப்படிப் பொன்னனையாளால் உருப்பெற்று, நகக் குறியும் பெற்ற இறைவன் இருக்கும் தலம்தான் திருப்பூவணம். அந்தத் திருப்பூவணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருப்பூவணம், மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் பாதையில் மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. சிறிய ஊர்தான், மதுரை மானாமதுரை லயனில் சென்றாலும் திருப்பூவணம் ஸ்டேஷனில் இறங்கிச் செல்லலாம். மெயின் ரோட்டுக்கு வடப்புறம் ஒரு பர்லாங்கு தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல, சிறிய கோயிலும் அல்ல. இறைவன் பெயர் பூவணநாதர், இறைவி பெயர் மின்னனையாள். கோயிலுக்கு வடபுறம் வைகை நதி ஓடுகிறது பாண்டிய மன்னரோடு சோழ மன்னரும் சேரரும் வந்து வணங்க பெருமை உடையவர் பூவணநாதர், இதை ஞானசம்பந்தர் பாடுகிறார்
அறையார் புனலும் மாமலரும்
ஆடு அரவார் சடைமேல்
குறையார் மதியம் சூடி
மாது ஓர் கூறுடையான் இடமாம்
முறையால் முடிசேர் தெள்னர்,
சேரர். சோழர்கள் தாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செம்யை
ஓங்கும் தென் திருப்பூவணமே.
என்பது அவரது தேவாரம், தமிழ் மன்னர் மூவர் மாத்திரம் அல்ல, தேவர் மூவரில் ஒருவனான பிரமனும் வந்து பூஜித்துப் பேறு பெற்றிருக்கிறான் என்று வரலாறு கூறும்.
இத்தலத்தில் மின்னனையாளையும் மிஞ்சிய புகழ் உடையவளை பொன்னனையாள் என்று கண்டோம். மின்னனையாள் திருமோல் விளங்க ஓர் தன்னமர் பாகமதாகிய சங்கரன்” என்று பாட ஆரம்பித்த சந்தரரும்,
முன்நிளையார் புரம்மூன்று எரியூட்டிய
பொன்னனையான் உறைபூவணம் ஈதோ
என்று தானே முடித்திருக்கிறார்? பொன்னனையள் உருவாக்கிய பூவணநாதர் பொன்னனையான் என்ற பெயரோ விளங்குகிறார். உத்சவமூர்த்தி நல்ல அழகான வடிவம், கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட தழும்பு, வடிவத்தில் இருக்கிறது. வடிவத்தைக் கண்டால் நமக்கும் கூடக் கன்னத்தைக் கிள்ளலாமா என்று தோன்றும் அர்ச்சகர்கள் அனுமதிக்கமாட்டர்களே என்பதனால்தான் கை நீட்டாது வருவோம். பொன்னனையாள் திருவுருவம் செப்புச்சிலையில் கோயிலில் இருக்கிறது. மின்னனையாள் வடிவமும் அழகானதே. சிவபெருமான் பொன்னனையாளுக்காக ரஸவாதியாக வந்த திருவிளையாடலை,
விரிநீர்ச் செம்போதத் திரு உருவாம்
பொன்னனையாட்கு இந்த வாதத்
திருஉருவாய் வந்துதித்தோன்
என்று திருப்பூவனநாதர் உலா போற்றுகிறது. கோயிலுக்கு வடபுறம் பொன்னனையாள் மண்டபம் என்று ஒரு, கட்டிடம் இருக்கிறது. அது இப்போது இடிந்து பாழடைந்து கிடக்கிறது. அங்குள்ள தூண் ஒன்றில் பொன்னனையாளின் சிலா உருவம் செதுக்கப் பட்டிருக்கிறது.
பூவணத்து மின்னனையாள்
அக்கோயில் வாயிலில் உள்ள நந்தி சிறிது சாய்ந்திருக்கிறது. ஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது இங்குள்ள மணலெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி அளித்திருக்கிறது. ஆதலால் அவர் அக்கரையிலே நின்று பாடியிருக்கிறார். அவரைப் பார்க்க இறைவன் விரும்பினாரோ, இல்லை அவர் தம்மைப் பார்க்க வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றுதான் விரும்பினாரோ? இறைவன் நந்தியைக் கொஞ்சம் சாய்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். இன்னும் சம்பந்தரிடம் வாதில் தோற்ற சமணர்களெல்லாம் கழு ஏறிய இடம் இப் பூவணம்தான் என்பர். அதைக் குறிக்கக் கழுவர் படைவீடு என்று ஓர் இடம் உண்டு என்றும் கூறுவார்.
இத்தலத்துக்குச் சம்பந்தர், சுந்தரர் மாத்திரம் வந்தார் என்றில்லை. அப்பருமே வந்திருக்கிறார். அற்புதமாக; திருத்தாண்டகம் பாடியிருக்கிறார்.
மயலாகும் தன்னடியார்களுக்கு
அருளும் தோன்றும், மாசிலாப்
புன்சடைமேல் மதியம் தோன்றும்,
இயல்பாக இடு பிச்சை ஏற்றல்
தோன்றும், இருங்கடல் நஞ்சுண்டு
இருண்ட கண்டம் தோன்றும்,
கயல்பாய கடுங்கல் உழிக்,
கங்கை நங்கை ஆயிரமாம்
முகத்தினோடு வானில் தோன்றும்,
புயல்பாய சடை விரித்த
பொற்புத் தோன்றும் பொழில்
திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
என்ற பாடல் மிக்க சுவையுடைய பாடல் மட்டும் அல்ல இறைவனது திருக்கோலங்களையெல்லாம் விளக்கும் பாடலும் ஆயிற்றே.
இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் கோநேரின்மை கொண்டான். பராக்கிரம பாண்டிய தேவர் முதலியவர்களின் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன். இக்கல்வெட்டுக்களில் இறைவன் திருப்பூவணமுடைய நாயனார் என்று குறிக்கப் பெற்றிருக்கிறார்.
இந்த வட்டாரத்தில் இக் கோயிலைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க கோயில்கள் இல்லை. அறுபத்து நாலு திருவிளையாடலில் ஒன்றான ரஸவாதம் நடத்திய இடத்தையும் பார்த்தோம். 63 நாயன்மாரில் ஒருவரான இளையான்குடி. மாறனையும் பார்க்க வேண்டாமா? அவர் சரித்திரம் பிரபலமானதாயிற்றே. தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டுக்குச் சிறந்த இலக்கியமாக விலங்குகிறவர் ஆயிற்றே, அவர் பிறந்து வளர்ந்த பதி திருப்பூவணத்துக்குத் தென் கிழக்கே முப்பது மைல் தூரத்தில் இருக்கிறது.
திருப்பூவணத்திலிருந்து மானாமதுரை வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பார்த்திபனூர் வழியாய், பரமக்குடி செல்லவேண்டும். பரமக்குடிக்கு நேர் வடக்கே ஐந்து ஆறு மைல் தொலைவில் இளையான் குடியிருக்கிறது. காரிலேயே செல்லலாம் ஊர்வரை. ஊர் சின்னஞ் சிறிய ஊர். இங்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.
பூவணத்துப் பொன்னனையான்
அத்தலத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் செட்டிமார்கள் என்னும் ஆயிர வைசியர் இளையான்குடி மாறரைத் தங்கள் இனத்தவர் என்று உறவு கொண்டாடுகிறார்கள். இளையான் குடிமாறர், அவர் மனைவி ஆகிய இருவரது செப்புப் படிமங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். இளையான்குடி மாறர் சரித்திரம் தெரிந்தது தானே. வருகின்ற சிவனடியாரையெல்லாம் அழைத்து விருந்தருந்த வைக்கும் இயல்புடையவர், அவர் வறுமையால் வாடுகிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் இரவில் அகாலத்தில் இறைவனே அடியவர் வேடத்தில் வருகிறார். வீட்டிலோ பிடி அரிசி இல்லை அதற்காக மாறர் சோர்ந்து விடவில்லை. அன்று விதைத்த நெல்லை வயலிலிருந்து சேகரித்து வந்து கொடுக்கிறார். அதனை வறுத்து, உலர்த்தி, அரிசியாக்கிக் சமைக்கிறாள் அவர் மனைவியார், விறகு இல்லையென்பதால் கூரையையே பிய்த்து எடுத்துத் தீ மூட்டுகிறார். தம்பதியர் இருவரது இந்த விருந்தோம்பல் பணியை! உலகுக்கு அறிவித்து அவர்களை ஆட்கொள்கிறார் இறைவன், தமிழ் மக்கள் எல்லாம் பின்பற்றி நடக்க வேண்டிய வாழ்க்கை வரலாறாயிற்றே இவரது வாழ்க்கை. அந்த மாறரையும் மனைவியையும் கண்டு தரிசிக்காமல் இருக்கலாமா என்றுதான் இத்தனை தூரம் உங்களைக் கொஞ்சம் இழுத்து அடித்துவிட்டேன்.
இப்படி வந்த இடத்திலே ஒரு பழய பெருமாள் கோயிலையும் பார்த்து விடலாம். அங்கே வேணுகோபாலர் கோயில் கொண்டிருக்கிறார். இந்தப் பெருமான் பெயர் மிகமிக நீளம். ருக்மனி சத்யபாமா சமேதராக நின்று குழலூதும் வின்னசாத்து எம்பெருமான் என்பர். திருக்கை அமர்த்தும் திருநாராயணன், நெடியகரிய மாணிக்க மரகத மதன வேணுகோபாலப் பெருமாள் என்று சொல்லிவிட்டாலே பெருமாளின் திருவடிவம் முழுதும் நம் கண்முன் வருமே. இளையான்குடி மாறரைக் காணவந்த இடத்தில் பெருமாள் தரிசனமும் கிடைக்கிறதென்றால் அதை விட்டு வைப்பானேன்.
12. திருவாதவூர் அண்ணல்
சிலர் பெரிய மனிதர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் முயற்சியால் பெரிய மனிதர்களாகிறார்கள். சிலர் பெரிய மனிதர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பது ஆங்கிலப் புலவர் ஒருவரது விமரிசனம். இது மனிதர்களுக்கு மட்டும் இருக்கும் சிறப்பு அல்ல. கிராமங்கள், நகரங்களுக்குமே இச்சிறப்பு உண்டு. அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்கள், சரித்திரப் பிரசித்தியோ அல்லது புராணப் பிரசித்தியோ உடையவை அல்ல. என்றாலும் இம்மூன்று ஊர்களையும் இன்று இசை உலகில் அறியாதவர் இல்லை. காரணம், அரியக்குடியில் ஒரு ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடியில் ஒரு ஸ்ரீனிவாச அய்யர், முசிரியில் ஒரு சுப்பிரமணிய அய்யர் தோன்றியிருக்கிறார்கள். நல்ல சங்கீத விற்பன்னர்களாக வாழ்கிறார்கள். அது காரணமாக அரியக்குடி, செம்மங்குடி, முசிரி முதலிய கிராமங்களும் பிரசித்தி அடைந்து விடுகின்றன.
அதுபோலவே மதுரை ஜில்லாவில் ஒரு சிறிய ஊர். அந்த ஊர் அவ்வளவு பிரபலமான ஊர் அல்ல, அங்கு அமாத்தியர் குலத்திலே ஒருவர் பிறக்கிறார். வளர்கிறார். அவருடைய அறிவுடைமையைக் கேட்டுப் பாண்டிய மன்னன் அரிமர்த்தனன் தன் மந்திரியாகவே ஆக்கிக்கொள்கிறான். இந்த அமைச்சரை இறைவன் ஆட்கொள்கிறான். அவர் திருவாசகம் என்னும் தெய்வப்பாக்களைப் பாடுகிறார். அதனால் இறைவனாலேயே மாணிக்க வாசகர் என்று அழைக்கப்படுகிறார். அந்த மாணிக்க வாசகரது பிறப்பால் வாதவூர் பெருமை அடைகிறது. மாணிக்கவாசகரது பிள்ளைத் திருநாமம் என்ன என்று தெரியவில்லை. அவரை வாதவூரர் என்றே அழைக்கிறார்கள். வாதவூர் அண்ணல், வாதவூர்த்தேவன் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இப்படி மாணிக்கவாசகராம் வாதவூரர் பிறந்ததினாலே பெருமையும் பிரசித்தியும் பெற்ற தலம்தான் திருவாதவூர். அந்தத் திருவாதவூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருவாதவூர் மதுரைக்கு வட கிழக்கே பதினான்கு மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். மதுரையிலிருந்து ஒத்தக்கடை வரை நல்ல சிமிண்ட் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணக் கப்பி ரோடு உண்டு கார் இருந்தால் காரிலேயே செல்லலாம், இல்லாவிட்டால் பஸ்ஸிலும் செல்லலாம். ஊருக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்பதும் ஒரு பெரிய குளம். அதனை ஏரி, கண்மாய் என்றெல்லாம் கூறுவர் மக்கள், அதுவே! புராணப் பிரசித்தி உடைய விஷ்ணு தீர்த்தம். வேதங்களை வைத்திருந்த திருமால் அவற்றை இழந்திருக்கிறார் ஒரு சமயம். அவற்றை மீண்டும் பெற இத்தலத்துக்கு வந்து இங்கு கோயில் கொண்டிருக்கும் வேதநாயகனை வழிபட்டிருக்கிறார். அவர் வழிபட்டது நீர் உருவில் நின்று. அதனாலேதான் இந்தத் தீர்த்தம் விஷ்னு தீர்த்தம் என்கிறார்கள்.
இந்தத் தீர்த்தக் கரையில் நின்று பார்த்தால் குளத்தினுள்ளே இரண்டு கற்கம்புகங்கள் தெரியும். அவகளின் மீது ஒரு கல் விட்டமும் அதன் மேல் ஒரு பிம்பமும் இருக்கும். இதனையே, புருஷா மிருகம் என்பர். உடல் எல்லாம் மிருகத்தின் உடலாகவும் முகம் மாத்திரம் முனிவரது முகம் போலவும் இருக்கும். புருஷா மிருகத்தைப் பற்றிப் பாரதத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. பாண்டவர் தலைவனான தருமர் ராஜசூய யாகம் செய்ய முனைந்தபோது, யாக பூமியை தேர்ந்தெடுத்து அதைச் சுத்தமாக்கப் புருஷா மிருகத்தையே வேண்டியிருக்கிறார். அப்படியே புருஷா மிருகம் வேள்வி நடக்க இருக்கும் இடத்துக்கு வந்து அதனைத் தூய தாக்கியிருக்கிறது. இதோடு மாத்திரம் இதன் வரலாறு முடிந்து விடவில்லை. இது விஷ்ணு தீர்த்தத்தின் மத்தியில் இருந்து தீர்த்தத்தையே புளிதமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டாரத்தில் மழை இல்லாமலிருந்தால் நூறு தேங்காய்களையம், வேறு பொருள்களையும் கருக்கி இந்தச் சிலையின் மேல் பூசுவார்களாம். அப்படிப் பூசிய இரண்டு மூன்று நாட்களுக்குள் நல்ல மழை பெய்கிறதாம். இப்படி ஓர் அனுபவம் இந்தப் புருஷா மிருக வழிபாட்டிலே. ஆகவே நாம் விஷ்னு தீர்த்தம், அங்குள்ள புருஷா மிருகம் இவைகளை வணங்கிய பின்னரே கோயிலில் நுழைய வேணும். கோயில் வாயிலில் ஒரு குளம், அதனை அக்கினி தீர்த்தம் என்பர்.
கோயில் வாயிலை ஐந்து மாடங்கள் கொண்ட ராஜகோபுரம் அணி செய்கிறது. கோயில் வாயிலைக் கடந்து உட்சென்றால் வெளிப் பிராகாரத்துக்கு வருவோம். அங்கு தல விருட்சமான மகிழ மரம் விரிந்து பரந்திருக்கிறது. அங்கேயே பைரவ தீர்த்தமும் இருக்கிறது. இந்தப் பிராகாரத்தின் வட பக்கத்திலே ஒரு நூற்றுக் கால் மண்டபம் இருந்திருக்க வேணும். அது இடிந்து சிதைந்து கிடக்கிறது என்றாலும் இன்னும் இருக்கும் கொடுங்கைள் அழகு வாய்ந்தவையாக இருக்கின்றன. இந்த மண்டடத்தை மாணிக்கவாசகரே கட்டினார் என்பது கர்ண பரம்பரை. இந்த மண்டபத்தில்தான் நடராஜர் மணிவாசகருக்குத் தம் பாதச் சிலம்பொலி கேட்க நடனம் ஆடியிருக்கிறார். அதை மாணிக்க வாசகரே,
வாதவூரில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
என்றும் பாடி மகிழ்ந்திருக்கிறாரே. இந்தப் பிராகாரத்தையும் சுடந்தே அடுத்த பிராகாரத்துக்கு வரவேணும். பிரதான கோயில் நேரேயே இருக்கும். அங்கு சென்று வாதபுரி ஈசுவரராம் வேதநாயகரைத் தொழுது வணங்கலாம். வாயு பூஜித்த தலம் ஆதலால் வாதபுரி ஈசுவரர் என்று பெயர் பெற்றிருக்கிறார். வேதங்களையெல்லாம் காத்தருளிய காரணத்தால் வேதநாயகர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். அம்மையின் பெயரும் வேதநாயகி., ஆரணவல்வி என்பதுதானே. வேதநாயகர் கோயில் உள்ளேயே ஒரு கிணறு, கபிலதீர்த்தம் என்ற பெயரோடு. சகரர்களைத் தம் பார்வையால் எரித்த கபில் முனிவர் இங்கே வந்து வேதநாயகனைப் பூஜித்து இத் தீர்த்தம் அமைத்தார் என்பது புராண வரலாறு. இந்தக்
திருவாதவூர்
கோயிலின் வடபக்கத்திலேயே ஒரு சிறு சந்நிதி, அங்கு சிலா விக்கிரகமாக நடராஜரும் சிவகாமியும் இருக்கின்றனர். நல்ல வடிவங்கள். நூற்றுக்கால் மண்டபம் நல்ல நிலையில் இருந்தபோது அங்கிருந்தவர்கள் போலும், பின்னர் மூலக்கோயிலிலேயே வந்து இடம் பிடித்திருக்கின்றனர். இந்தச் சந்நிதிக்கு நேரேயுள்ள தெற்கு லாயிலைத்தான் ஆறுகால் பீடம் என்கிறார்கள். நல்ல வேலைப்பாடமைந்த ஆறு தூண்கள் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன, அந்த வாயில் வழியாக வெளியே வந்து மேற்குப் பிராகாரத்துக்குப் போனால் அங்கு தான் மணிவாசகருக்கு ஒரு சந்நிதி அமைத்திருக்கிறார்கள். அங்கு ஏடேந்திய! கையராய்ச் சிலை வடிவில் மாணிக்க வாசகர் இருக்கிறார். அவரது உத்சவ விக்காகங்கள் இரண்டு இருக்கின்றன. ஒன்று பழைய வடிவம். மற்றொன்று சமீபகாலத்தில் செய்யப்பட்டது. பழைய வடிவிலே முழங்காலுக்கு மேலே துண்டு அணிந்த நிலையில் இருப்பவரை, இப்போது கோவணத்துடன் நிற்பதாக அமைத்திருக்கிறார்கள். மாணிக்கவாசகாது துறவைப் பூரணமாகக் காட்டக் கோவணத்துடன்தான் நிற்க வேண்டுமென்று நினைத்தார்கள் போலும். பழைய வடிவிலே உள்ள அழகு புதியவடிவில் இல்லைதான்.
இந்தப் பிராகாரத்தின் தென்பக்கத்து வாயில் வழியாகத்தான் வேதநாயகியின் தனிக்கோயிலுக்குச் செல்லவேணும். எல்லாச் சிவன் கோயில்களும் அம்பிகை இறைவனின் இடப்புறம் இருக்க, இங்கு வலப்புறத்தில் இருக்கிறாள். மதுரையிலும் அப்படியே, அவிநாசி கருணாம்பிகையும் அப்படியே. இப்படி இடம் மாறிய காரணத்தால், இச்சந்நிதியில், சக்தியின் ஆதிக்கம் அதிகம் என்றும் தெரிகிறோம், நின்ற கோலத்தில் கம்பீரமாக நிற்கும் ஆரணவல்லியை வணங்கி வெளியில் வரலாம்.
இத்தலம் மாணிக்கவாசகர் பிறந்ததால் உயர்ந்தது என்று முன்னமேயே சொன்னேன். வாதவூரர் மன்னவன் விருப்பப்படியே அமைச்சர் பதவியேற்று, அவன் வேண்டிக் கொண்ட வண்ணமே கீழ்க்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றதும், அங்கு திருப்பெருந்துறையில் இறைவானால் ஆட்கொள்ளப்பட்டதும், பின்னர் மன்னன் வாதவுரை அழைத்துக்கேட்க, அவருக்காக இறைவனே நரிகளைப் பரிகளாக்கிக் கொள்வதும், பின்னர் அந்தப் பரிகளே நரிகளாகி ஓடிப்போய் விடுவதும் இதற்கெல்லாம் காரணம் வாதவூரரே என்று அவரைச் சிறையில் அடைப்பதும், அங்கு வைகையில் வெள்ளம் பெருகிவர அதை அடைக்க ஊரையே திரட்டுவதும், அங்கு வந்தியின் பங்குக்காக இறைவனே கூலியாளாக வந்து பாண்டிய மன்னனிடம் அடிபடுவதும், பின்னர் வாதவூரர் பெருமையை அறிவதும் இறைவனே நடத்திய திருவிளையாடல். இந்தத் திருவிளையாடல் விழா சிறப்பாக மதுரையில் நடைபெறுகிறது. வருஷந்தோறும் அவ்விழாவுக்கு, வாதவூரிலுள்ள மாணிக்கவாசகர் எழுந்தருளி நான்கு நாட்கள் அங்கு தங்கி அதன் பின்பே ஊர் திரும்புகிறார். வாதவூரராம் மாணிக்க வாசகருக்கு மற்ற மாணிக்கவாசகருக்கு இல்லாத சிறப்பு இருந்தாக வேண்டுமே. மார்கழி மாதம் முதல் பத்து நாட்கள், வாதவூரில் திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. பத்து நாட்களும் மாணிக்கவாசகர் உலாவருவார்.
இத்தலத்தில் சங்கப்புலவர் கபிலரும் வாழ்ந்திருக்கிறார். முன்னரே நாம் திருக்கோவிலூர் போயிருந்த போது. அவர் பாரியின் சிறந்த நண்பர் என்றும், பாரி மக்களுக்கு மணம் முடித்து வைத்தபின் எரிமூழ்கி இறந்தனர் என்று அங்குள்ள கபிலக் கல் கூறும் கதை மூலம் தெரிந்திருக்கிறோம். மணிவாசகரைப் போலவே, கபிலரும் இவ்வாதவூரில் பிறந்தவர்தாம். இவர் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். பாட்டு இதுதான்.
நெட்டிலை இருப்பை வட்ட வான்பூ வட்டாதாயின்
பீடுடைப் பிடியின் கோடு ஏய்க்கும்மே! வாடினோ பைத்தலைப் பரதர் மனைதொறும் உணங்கும்
செத்தனை இரவின் சீர் ஏய்க்கும்மே!
நெடிய இலைகளையுடைய இலுப்பைப்பூ வாடாமல் இருந்தால் பெண் யானை பின் கொம்பை ஒத்திருக்கும், வாடிவிட்டாலோ வலையர் வீடுகளில் காய்ந்து கிடக்கும். இறா மீன்போல் சுருண்டு கிடக்கும் என்பது பாட்டின் பொருள். இந்தப் பாட்டினையும் நினைவுபடுத்தி இந்தப் பாடல் பாடி!! கபிலனார் பிறந்த ஊர் திருவாதவூர் என்று திருவிளையாடல் புராதனம் கூறும்.
நீதிமா மதுரக நீழல்
'நெட்டிலை இருப்பை' என்றோர்
காதல்கூர் பனுவல் யாக்கும்
கபிலனார் பிறந்த மூதூர்
வேதநாயகனூர் வாழ் திருவாதவூர்
என்பது பாடல். ஆகவே இந்த ஊர் சிறந்த இலக்கியப் பிரசித்தி உடைய ஊராகவும் இருந்திருக்கிறது.
எல்லாம் சரிதான். மணிவாசகர் பிறந்த இடம், வீடு ஒன்றும் இந்தத் தலத்தில் இல்லையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது வேதநாயகர் கோயிலில் இருந்து தெற்கே இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரு சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள், அங்குதான் மனிவாசகர் வீடு இருந்ததாம். அதனால் ஊர் மக்கள் கொஞ்சம் பணம் திரட்டி அங்கு மணி வாசகருக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.
வாதவூரராம் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பற்றி எவ்வளவோ விவாதம், அவர் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவரா? இல்லை. பிற்பட்டவரா? இந்த வாதங்களுக்கெல்லாம் முடிவு காண்பது எளிதான காரியம் இல்லை. ஆனால் அவர் பிறந்த ஊர் வாதவூர் என்பதில் வாதம் ஒன்றுமே இல்லை. மானமங்கலத்திலிருந்து இங்கு வந்து குடியேறி அமாத்தியப் பிராமணர் குலத்தில் தோன்றியவர் என்பதிலும் விவாதம் இல்லை. இவற்றையெல்லாம் விட, இந்த வாதவூர்த்தேவு என்று உலக புகழ் மாமணியின் மணிவாசகம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் என்பதிலும் வாதமே இல்லை . திருவாசகத்தைக் கசிந்து பாடிய ராமலிங்க அடிகள்.
வான் கலந்த மாணிக்கவாசக!
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
நற் கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டமாய் இனிப்பதுவே.
என்று கூறினார். திருவாசகத்தேனை, அமுதைப் படித்து அனுபவித்தவர்களுக்குள்ளே இதைப் பற்றியும் யாதொரு விவாதமுமில்லை. ஏதோ வாதவூர் என்ற தலத்தில் பிறந்தாலும், வாதங்கள் இல்லாத பல உண்மைகளை அல்லவா எவ்லோரும் உணரும்படி செய்திருக்கிறார். அது போதும் நமக்கு.
13. திருமோகூர்க் காளமேகர்
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்பர். பத்துக்கு மேலும் எடுத்த அவதாரங்கள் உண்டு. அதில் சிறப்பானது மோகின் அவதாரம். இந்த அவதாரத்தை இரண்டு தரம் எடுத்திருக்கிறார் அவர். ஒரு தடவை தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க மற்றொரு தடவை அமிர்தம் கடைய வந்த அசுரர்களை வஞ்சிக்க, இரண்டுமே சுவையான கதைகள் தாம். தாருகா வனத்து ரிஷிகள் கல்வி கேள்விகளில் வல்லவர்கள். வேதங்களை ஓதி ஓதி நிரம்ப அறிவைப் பெறுகிறார்கள். அவர்களது அறிவோடு வளர்கிறது ஆணவமும். தம்மைப் படைத்த தலைவனாம் இறைவனையே மறக்கிறார்கள். இறை உணர்வே இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் இவர்களது ஆணவத்தை அடக்கப் புறப்படுகிறார் இறைவன் பிக்ஷாடனக் கோலத்தில். இந்த அழகிய பிக்ஷாடனது கோலத்தைக் கண்ட ரிஷிபத்தினிகள் மயங்குகிறார்கள். நிறை அழிகிறார்கள். முனிவர்களது கர்வத்தை அடக்க இறைவன் தம் மைத்துனரான விஷ்ணுவையே அழைத்திருக்கிறார். அவரும் வருகிறார், நல்ல மோகினி வடிவிலே, இந்த மாய மோகின்யை முனிவர்கள் பின் தொடருகிறார்கள். ஆணவம் அழிகிறது. அகந்தை ஒழிகிறது. இப்படி ஒரு வெற்றி இறைவனான சிவபெருமானுக்கு மோகினி வடிவில் வந்த தம் மைத்துனர் மூலமாக.
அடுத்த தடவை மோகினி வடிவம் எடுத்தது இதைவிடச் சுவையானது. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்தினால் அமரர்கள் ஆகலாமெனத் தேவர்கள் நினைக்கிறார்கள், பாற்கடல் கடையத் தங்களால் மாத்திரம் இயலாதென்று, அசுரர்களையும் உடன் சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அமுதத்தில் பங்கு கொடுக்க இசைந்திருக்கிறார்கள். சும்மாவே துன்புறுத்தும் அசுரர் அமிர்தத்தை வேறு சாப்பிட்டுவிட்டார்கள் என்றால் கேட்பானேன்? ஆதலால் பாற்கடல் கடைந்து அமுதம் எடுத்த உடன் தேவர்கள் அசுரர்களுக்கு பங்கைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அசுரர்களோ விடுவதாக இல்லை. இந்த நிலையில் தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டிருக்கிறார்கள். விஷ்ணு மோகனமான மோகினி வடிவத்தில் வந்திருக்கிறார். இருவருக்கும் அமுதத்தைத் தாமே பங்கிட்டுத் தருவதாகச் சடறியிருக்கிறார். அப்படியே அமுதத்தைப் பரிமாறவும் முனைந்திருக்கிறார். தேவர்கள் பக்கம் வரும்போதெல்லாம் தாராளமாய் வாரி வழங்கிவிட்டு, அசுரர்கள் பக்கம் போகும்போது ஆடிப் பாடி அவர்களை மயக்கியிருக்கிறாார் அமிர்தத்தைக் கொடாமலேயே. கடைசியில் அமிர்தம் காலியாகிவிடுகிறது ஒரு துளிகூட அசுரர்கள் பெறாமலேயே. இப்படி அசுரர்களை ஏமாந்த சோனாகிரிகளாக்க எடுத்திருக்கிறார் ஒரு தடவை மோகனாவதாரம். இந்த மோகனாவதாரம் எடுத்த தலம்தான் மோகனூர். அதுவே மோகூர் என்று குறுகியிருக்கிறது. அந்தத் திருமோகூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருமோகூர், மதுரைக்கு வடக்கே ஏழு எட்டு மைல் தொலைவில் இருக்கிறது. மதுரை-மேலூர் ரோட்டில் ஒத்தக் கடைவரை நல்ல சிமெண்ட் ரோட்டில் போய் அதன்பின் கிழக்கே திரும்பி ஒரு மைல் சென்றால் திருமோகூர் போய்ச்சேரலாம். கோயிலைச் சுற்றி நாலு புறமும் வயல்களும் தடாகங்களும். 'தான் தாமரை தடம் அணிவயல் திருமோகூர்' என்றுதானே நம்மாழ்வார் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்; கோயிலைச் சற்றி நீண்டுயர்ந்த மதில் அழகு செய்கிறது. கோயிலுக்கு வடக்கு மதிலுக்குப் பக்கத்திலே புஷ்கரணி அதில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும். இதையெல்லாம் பார்த்துக் களித்த பின்னரே கோயிலுள் செல்லலாம்; கோயில் பெரிய கோயில், கிழக்கு வாயிலைத் தாண்டியதும் கம்பத்தடி மண்டபம், அங்குதான் இக்கோயிலைத் திருப்பணி செய்த சிவகெங்கைச் சீமை பாளையக்காரர்களான சின்ன மருது, பெரிய மருது இவர்களின் சிலைகள் இருக்கின்றன. பெரிய மருது கட்டிய கோபுரத்தைத்தான் காளையார் கோயிலில் பார்த்திருக்கிறோமே. அங்கேயே வடபுறம் க்ஷீராப்தி நாதர் சந்நிதி வேறே. அடுத்த வாயிலையும் கடந்து சென்றால் கருட மண்டபம் வந்து சேருவோம். அங்கு மூன்று நான்கு நல்ல சிலைவடிவங்கள் தூண்களில் இருக்கின்றன. சீதாப்பிராட்டியை அணைத்த வண்ணம் நிற்கும் ராமன் ஒரு தூணில், அதனை அடுத்து லக்ஷ்மணான் ஒரு தூணில், இவர்கள் தவிர மன்மதன் ரதி முதலியவர்கள் வடிவங்கள், இவர்களுக்கிடையில் ஒரு சிறு கோயிலில் பெரிய திருவடியான கருடாழ்வார் நிற்கிறார். இனி மகாமண்டபத்தைக் கடந்து அர்த்தமண்டபத்துக்குச் செல்லலாம். அங்கிருந்து பார்த்தால் காளமேகப் பெருமாள் என்னும் மூலவர், தேவியர் இருவரோடும் நின்றகோலத்தில் சேவை சாதிப்பார். கம்பீரமான வடிவம். இந்தக் காளமேசுப் பெருமானையே கவி காளமேகம்,
பொன்னனைய அரக்கன் ஐந்நூற்றுவரைக்
காவை, பொரு சிலையைக்
கனைகடலைப் பொன்னன் ஈன்ற
நன்மகற்காப் கரர்களில்
ஐவருக்காய், காதல் நப்பின்னைக்காய்
நடவைக்காக
மன்னுகிரால் வடிக்கலையால்
வளையால், புள்ளால் வயங்குதோன்
வலியால் வானரங்களாலும்
முன்னுடல் கீறிச் சிரங்கொண்டு
அம்பில் வீழ்த்தி முதலொடும் கொண்டு
இருத்தசைத்த மோகூரானே
என்று அவன் பிரதாபங்களையெல்லாம் விரிவாகச் சாங்கோபாங்கமாகவே பாடியிருக்கிறார். இக்கோயிலிலேயே 'இடங்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்' என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்தபடி புஜங்க சயனராய்ப் பள்ளி கொண்டிருக்கும் கோலமும் இருக்கிறது. இத்தனையைக் கண்டாலும்
திருமோகூர் மன்மதன்
நமக்கு, அந்த மோகினியான மோகன வடிவத்தையே கானும் ஆவல் மிஞ்சி நிற்கும். இந்த ஆவலைத் தீர்க்க அங்கு மூர்த்தியோ அல்லது சிற்ப வடிவமோ இல்லை. ஆனால் இந்த மோகன வடிவத்தைக் கண்டு தான் ஆகவேண்டும் என்றால் மாயூரம் பக்கத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுரர் கோயிலுக்கு ஒரு நடைகட்ட வேண்டியதுதான். அங்கு காம ரூபிணியாக இருக்கும் மோகினியைக் காணலாம். இங்கு தாயாருக்கு ஒரு சந்நிதி உண்டு. தாயாரின் திருநாமம் மோகனவல்லி. இந்த மோகனவல்லி அந்த மோகன வண்ணனுடன் போட்டிபோடக்கூடிய அழகு வாய்ந்தவளாக இல்லை. இக்கோயில் கருவறையின்மீது உள்ள விமானமும் கேதகி விமானம் என்னும் சிறப்பான விமானம். கோயிலுக்கு வெளியே பெரிய பாறையில் பன்னிரண்டு திருக்கரங்களுடன் சக்கரத்தாழ்வார் செதுக்கப்பட்டிருக்கிறார். பெரிய சக்கரமும் அதன் நடுவில் சுதர்சன ஆழ்வாரும் உருவாகியிருக்கிறார்கள், சக்கரத்தாழ்வார் விரைவாகச் செல்லும் பாணியில் இருக்கிறார். இத்தலம் புராணப் பிரசித்தி மாத்திரம் உடைய தலம் அல்ல, மதுரைக் காஞ்சி என்ற பழைய சங்க இலக்கியம், மோகூர் அவையசும் விளங்கக் கோசர் வந்து பழையனுக்கு உதவி செய்ததைக் குறிக்கிறது. மௌரியர், வடுகரை முன்னேறவிட்டுத் தென்திசை மேல் படையெடுத்து வந்தபோது மோகூர் அவர்களுக்குப் பணியாமல் நின்றிருக்கிறது. மோகூருக்குத் துணையாகக் கோசர் ஆலம்பலத்தில் தோன்றிப் பகைவரைச் சிதைத்தனர் என்றும் கூறும். மோகூர்ப் பழையனைச் செயகுட்டுவன் வென்று அவன் காவல் மரமாகிய வேம்பைத் தடிந்தான் என்று பதிற்றுப் பத்து கூறும். இதனால் மௌரியர் காலத்துக்கு முன்னமேயே போகர் பழம் பெருமையுடன் சிறப்புற்றிருந்தது என்பது தெளிவாகும். கிரேக்க வானசாஸ்திரியான டாலமி, மோகூரைப் பற்றித்தம் பூகோளப் படத்தில் குறித்திருக்கிறார் என்றால் அதிகம் சொல்வானேனே்? இக் கோயிலிலே இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன. தென் பறம்பு நாட்டின் ஒரு பகுதியான மோகூர் விளங்கியிருக்கிறது. பறம்பு நாடு பாரியின் நாடு, மோகூரின் பழையன் என்பவனது பலத்த கோட்டை இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் இக்கோயில் கோட்டையாக உதவியிருக்கிறது. கோயில் குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருக்கிறது. கர்நாடக யுத்தத்தின்போது முகமது அலிஹீரன் மோகூர் ஆலயத்தை முற்றுகையிட்டு ஆலயத்துள் புகுந்த பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்திருக்கிறான். கோயில் ஸ்தானீகர்களாக கள்ளர் குலமக்கள் ஹீரானின் படைகளை விரட்டி அவர்கள் கைப்பற்றிய பொருள், விக்கிரகங்களையெல்லாம் மீட்டிருக்கின்றனர். இவ்வளவு சரித்திரப் பிரசித்தியுடனும் விளங்குவது இக்கோயில்.
14. அழகர் கோயில் அழகன்
கோவையில் ஒரு பட்டி மண்டபம். "அழகை ஆராதணை பண்ணியவள் ஆண்டாள்; அறிவை ஆராதனை பண்ணியவர் மாணிக்கவாசகர். இருவரது ஆராதனையில் எவரது ஆராதனை சிறந்தது?” என்பது விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட பொருள், ஆண்டாள் பாசுரங்களையும், மாணிக்கவசாகரது திருவாசகப் பாடல்களையும் அலசி ஆராய்ந்து விவாதித்தனர், விவாதத்தில் கலந்து கொண்டவர்கள். பட்டி மண்டபத்தின் தலைமையை ஏற்றிருந்த நான் விவாதத்தில் தீர்ப்புக்கூறி முற்றுப்புள்ளி வைக்க வேண்டியிருந்தது. அந்த வேலை எவ்வளவு சிரமமானது என்பதை அப்போது உணர்ந்தேன். நான் சொன்னேன், “அழகு சிறந்ததா? அறிவு சிறந்ததா? என்பது விவாதம் அல்ல. ஆராதனைக்கு உரியவைகளில் அறிவு சிறந்ததா, அழகு சிறந்ததா? என்பதுதான். அறிவுடைமை அழகுடைமையை விடச் சிறந்ததுதான். என்றாலும் அறிவு இறைவன் தன்மைகள் என்ன என்று விவகரித்து அதில் தெளிவு காண உதவுமே அன்றி ஆராதனைக்கு உரிய ஒன்றாக அமைதல் இயலாது. ஆனால் ஆராதனைக்கு உரியதாக இறைவனது அழகுதான் உதவுதல் கூடும்” என்று பீடிகை போட்டு, ஆண்டாள் தன் காதலனது அழகை எப்படி எப்படி அனுபவித்து ஆராதனை பண்ணுகிறாள் என்று பல பாசுரங்களை மேற்கோளாகக் காட்டினேன். திருவரங்கத்து அழகனைக் கண்ட காதலித்து நிற்கும் அவள் நிலையை விளக்கும் பாடல் இதுதான், தன் தோழியைப் பார்த்துப் பேசுகிறாள் ஆண்டாள்.
எழில் உடைய அம்மனையீர்!
என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர், வாய் அழகர்
கண் அழகர், கொப்பூழில்
எழுகமலப் பூ அழகர்
எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும்
கழல் வளையே ஆக்கினரே
என்று ஏங்குகிற பாடலில் ஆண்டாள் எப்படி அரங்கத்து அழகனின் குழல் அழகிலும், கண் அழகிலும், கொப்பூழ் அழகிலும் உள்ளம் பறிகொடத்து நின்றிருக்கிறாள் என்பதைப் பார்க்கிறோம். அன்று மிதிலை நகரில் உலா வந்த ராமனைக் கண்ட பெண்கள் எப்படி அவனது தோள், தடக்கை முதலிய அவயங்களைக் கண்டு மோகித்து, அங்க அவயவங்களில் வைத்த கண்ணை எடுக்க மூடியாமாமல் திணறி நின்றார்கள் என்று கம்பன் வர்ணிக்கிறானோ, அதையும் மிஞ்சிய நிலையில் அழகனது அவயவங்கள் எல்லாவற்றையுமே ஆராதித்துக் காணும் பேறு பெற்றவள் ஆண்டாள். ஆதலால் அவளது அழகு ஆராதனையே சிறந்தது என்று கூறினேன் நான். இப்படித்தான் ஸ்ரீமந் நாராயணன் எல்லா ஆழ்வார்களாலும் ஆராதிக்கப்பட்டிருக்கிறான். ஆழ்வார்கள் கண்ட அழகர்களில் எல்லாம் சிறந்த அழகனாக இருப்பவனே திரு மாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயிலில் அழகன் என்ற பெயரோடு கோயில் கொன்டிருக்கிறான். அந்த அழகன் இருக்கும் அழகர் கோயிலுக்கே செல்கிறோம் இன்று.
அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைல் தொலையில் இருக்கிறது. இதனையே சோலைமலை என்றும் கூறுகின்றனர். சோலைமலை, திருமாலிருஞ்சோலை என்றெல்லாம் கூறினால் வண்டிக்காரர்களுக்கோ, பஸ்காரர்களுக்கோ தெரியாது. அழகர் கோயில் என்று சொன்னால் மாத்திரமே தெரியும்.
மதுரையிலிருந்து காரில் செல்லலாம். பஸ்ஸில் செல்லலாம். அப்படிச் சென்று சேர்ந்தால் முதலில் நம்மை ஒரு பெரிய சோலையிலே இறக்கி விடுவார்கள். சோலைக்கு மேற்கும் வடக்கும் நீண்டுயர்ந்த மலைச்சிகரம். ஆதலால் சோலைமலை என்று அந்தத்தலம் பெயர் பெற்றது பொருத்தம் என்றே தோன்றும். அத்துடன் அங்குள்ள சோலையும் மரங்கள் நிறைந்து நன்றாக இருண்டே இருக்கும். அதனால் அதனைத் திருமாலிருஞ்சோலை என்று பாராட்டுவதும் பொருத்தம்தான். இந்தச் சோலையின் நடுவிலேதான் கோயில், கோயிலின் பிரதான வாயில் எப்போதும் அடைத்தே வைக்கப்பட்டிருக்கும். அங்குதான் கோயிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்பன் இருக்கிறார். இந்தக் கருப்பண்னசாமிக்கு இங்கு உருவம் இல்லை. பதினெட்டாம் படிக்கருப்பன் முன்பு சத்தியம் செய்வது என்பது இன்னும் நடக்கிறது. அவனுடைய சந்நிதி முன்பு யாரும் பொய் சொல்லத் துணியமாட்டார்கள். இவனுடைய காவலின் கீழ்தான் அழகர் கோயில் அழகன் வாழ்கிறான்.
தினந்தோறும் கோயிலில் உள்ள பண்டாரத்தைப் பூட்டி, சாவியை இந்தப் பதினெட்டாம்படிக் கருப்பனிடம் கொண்டு வைத்து விடுவார்கள். மறுநாள் காலை வரும் பட்டர், சாவி எடுத்துக்கொண்டு செல்வார். இன்னும் அழகர், மதுரைக்கு, மீனாக்ஷி கல்யாணத்துக்காகப் புறப்படும்போது அவர் அணிந்துள்ள நகைளின் ஜாபிதாவை இக்காவல் தெய்வத்தின் முன்பு படித்துக் காட்டுவார்கள். அழகர் திரும்பும்போது, ஜாபிதா கருப்பன்ணர் முன் படித்துக் காட்டப்படும். இத்தனை அக்கறையுடன் கோயிலையும் கோயில் சொத்துக்களையும் பராமரிக்கும் தெய்வமாக இவர் விளங்குகிறார்.
கோயிலுள் செல்ல பதினெட்டாம்படி வாசலுக்கு வடபுறம் உள்ள மதிலின் ஒரு சுவர் திறந்திருக்கும். அதுதான் வண்டி வாசல். அந்த வாசல் வழியே நுழைந்து - கோயிலின் வெளிப்பிராகாரத்தை அடையலாம். அங்கு கோயில் முன்பு இருக்கும் பிரதான மண்டபமே கல்யாண மண்டபம். இங்குதான் நல்ல சிற்ப வடிவங்களை உடைய தூண்கள் இருக்கின்றன. இரணியன் உடல் கிழிக்கும் நரசிம்மர். வேணுகோபாலன், ரதி மன்மதன், கருடவாகன விஷ்ணு, திரிலிக்ரமர், லக்ஷ்மிவராகர் எல்லாம் நல்ல அழகான கற்சிலைகள். இவைகளைக் காண்பதற்கென்றே ஒரு நடை இக்கோயிலுக்குப் போகலாம்.
இனித்தான் கோயிலின் பிரதான வாயிலான தொண்டைமான் கோபுர வாசலைக் கடந்து உள் பிராகாரங்களுக்குச் செல்லவேணும். கோயில் மிகப் பெரிய கோயில். இரண்டு மூன்று பிராகாரங்களைக் கடந்து தான் கருவறை சேரவேண்டும். வழியில் இருப்பவை, சுந்தரபாண்டியன் மண்டபம், ஆரியன் மண்டபம், முனையதரையன் மண்டபம் முதலியன, கோயிலின் கருவறையில் மூலவராக நிற்பவர் ஸ்ரீ பரமசாமி. இவர் ஐம்படை தாங்கியவராய்க் கம்பீரமாக நிற்கிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும், இருபுறம் நிற்கிறார்கள். இவர் கையிலுள்ள சக்கரம் பிரயோக சக்கரம். இவர் முன்பு எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியே அழகர் என்னும் சுந்தரராஜர். ஏற்றிருக்கும் பெயருக்கு ஏற்ப மிகவும் சுந்தரமான வடிவம். அபரஞ்சித தங்கத்தால் ஆனவர்.
இவருக்கு அபிஷேகம் எல்லாம் நூபுர கங்கைத் தீர்த்தத்தால் தான். மற்ற நீரால் அபிஷேகம் செய்தால் அறுத்து விடுகிறாராம். இவரே சோலைமலைக்கரசர். இந்த உற்சவரைத் தவிர வேறு சில உற்சவ மூர்த்திகளும் உண்டு. அவர்கள் எல்லாம் ஸ்ரீ சுந்தரபாஹு, ஸ்ரீநிவாசர், நித்யோத்ஸவர் முதலியோர். இவர்கள் எல்லாம் வெள்ளியில் செய்யப்பட்டவர்கள். இந்தக் கருவறையை அடுத்த பிராகாரத்திலேயே வலம்புரி விநாயகர் இருக்கிறார். இந்தப் பிராகாரத்திலேயே சேனை முதலியார், விஷ்வக் சேனர் இருக்கிறார்கள், இங்குள்ள பைரவர் க்ஷேத்திர பாலகர் என்று அழைக்கப்படுகிறார், இவர் நிரம்பவும் வரப்பிரசித்தி உடையவர். கோயிலின் அர்த்த சாய பூசை முடிந்ததும் கோயில் கதவை பூட்டிச் சாலியை இந்த க்ஷேத்திர பாலகர் முன் வைத்து விடுவார்கள். மறுநாள் காலையில் எடுத்துக் கோயிலைத் திறப்பார்கள்.
இக்கோயிலின் தாயார் சந்நிதி தென்பக்கம் இருக்கிறது. இவளே கல்யாண சுந்தரவல்லி. தனிக்கோயில் தாயார் என்றும் அழைப்பார்கள் மக்கள். கல்யாண சுந்தரவல்லி என்ற பெயர்க்கேற்ப அதிக சௌந்தர்யத்துடனேயே விளங்குகிறார். கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி. உற்சவமூர்த்தியான ஆண்டாள், மற்ற தலங்களைப் போல் அல்லாது உட்கார்ந்திருக்கும் பாவனையில் இருக்கிறது. சுந்தரராஜர் தமது திருக்கல்யாண தினத்தன்று ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள் என்னும் நான்கு தேவிமார்களுடன் எழுந்தருளுகிறார். ஸ்ரீ ஆண்டாள் ரங்கநாதரையும், அவருடைய அம்சமான சுந்தரராஜரையும் தம் கணவனாக வரித்துக் கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. இந்த சந்நிதிகள் தவிர இக்கோயிலில் ஸ்ரீ சுதர்சன சக்கரர், யோக நரசிம்மர் முதலிய சந்நிதிகளும் விசேஷமானவை. இன்னும் இங்குள்ள ராக்காயி அம்மனும் ஸ்தல தீர்த்தங்களுடன் அதிதேவதையாக விளங்குகிறாள்.
இந்த ஸ்தலத்தில் கோயிலுக்கு அடுத்தபடியாக இரண்டு தீர்த்தங்கள். ஒன்று நூபுர கங்கை. மற்றொன்று சிலம்பாறு. கோயில் வடக்கு வாயில் வழியாக மலை ஏறி இரண்டு மைல் தூரம் சென்றால் நூபுரகங்கை என்னும் தீர்த்தத்தை அடையலாம். அதன் உற்பத்தி ஸ்தானம் தெரியவில்லை. யானைத் துதிக்கை போல் அமைந்திருக்கும் கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்துக்கு வருவதைத்தான் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தத்தில் இரும்புச் சத்தும் தாமிரச் சத்தும் இருக்கின்றனவாம். அதனால் இதில் நீராடுபவர்களுக்குத் தீராத நோயெல்லாம் தீர்கிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கிப் பாயும்போது சிலம்பாறு என்று பெயர் பெறுகிறது. இந்தச் சிலம்பாறு ஆதியில் பிரமன் திரிவிக்கிரமரின் தூக்கிய திருவடியில் அபிஷேகம் செய்த நீர் என்று நம்பிக்கை.
இன்று இந்த ஆறு சுந்தரராஜனின் அடிகளை வருடிக்கொண்டு பாய்ந்து பெருகி வயல்களை வளப்படுத்துகிறது. இதன் சுவை இனிமையாக இருக்கிறது. ஆதலால் இதனைத் தேன் அருவி என்று அழைக்கிறார்கள் மக்கள். இந்த நூபுர கங்கை சிலம்பாறு இருந்த இடத்தில்தான் அந்தப் பழமுதிர்ச்சோலைமலை கிழவோனாக முருகன் அன்று கோயில் கொண்டிருந்தான். அதுவே ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைமலை என்றும் அறிகிறோம். இல்லை, இது விவாதத்துக்கு உரிய விஷயம் என்று வாதிடுவோர் உண்டு. இத்தனை விவாதங் களுக்கிடையிலும் சமீப காலத்தில் அங்கு முருகனுக்கு ஒரு கோயில் எடுப்பித் திருக்கிறார்கள் பக்தர்கள். எப்படியோ இந்த மலை ஆதி முதல் முருகனுக்கும், திருமாலுக்கும்
அழகர்கோயில்-வைகுண்டநாதர்
உரிய மலையாக இருந்து வந்திருக்கிறது. அதனாலேயே கந்த புராணம் இதனை முத்திதரு பேரழகர் என்று சிறப்பிக்கிறது.
அழகர் மலை அழகான சுந்தரராஜன் நிரம்பச் செல்வம் படைத்தவன் அரவணையான் சொத்து எவ்வளவு என்று ஒருவாறு நாம் அறிவோம். அரங்கன் சொத்து அழகன் அங்க வடிக்கும் காணாது என்பது பழமொழி என்றால் அழகன் எவ்வளவு செல்வன் என்று ஊகிக்கலாம். சித்திரா பௌர்ணமியில் அவன் சர்வாலங்கார பூஷிதனாக மதுரைக்கு கோலாகலம் ஒன்றைப் பார்த்தாலே தெரியும்.
சுந்தரராஜன் நித்தியோத்சவப் பெருமாள். பிரதி தினமும் ஏதாவது உத்சவம் நடந்தகொண்டேயிருக்கும். இவற்றில் சிறப்பானது சித்திரா பௌர்ணமித் திருநாள் தான், மதுரையில் மீனாக்ஷி சுந்தரேசுவரருக்கு அன்று திருமணம் நடக்கிறது. அதைக் காணச் சீர்வரிசைகளுடன் புறப்படுகிறார் சுந்தரராஜர். அவர் லவகைக்கரை வந்து சேருமுன் அவரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கின்றனர், வழியில் உள்ள மண்டபங்களில் எல்லாம் தங்கிப் பக்தர்களது வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். சித்திரா பௌர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கி வண்டியூர் வைரை சென்று தேனூர் மண்டபத்தில் தங்கித் திரும்புகிறார். திரும்பும்போது நடக்கும் புஷ்பப் பல்லக்கு சேவை எல்லாம் பிரசித்தமானது. இந்த உலாவைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வதெல்லாம் விசித்திரமானது.
அதாவது சுந்தரராஜன் தன் தங்கை திருமணத்துக்குச் சீர்வரிசைகளுடன் வருவதாகவும் அப்படி வருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் குறித்த காலத்தில் வந்து சேரமுடியவில்லை என்றும், ஆதலால் இவர் வருமன்பே முகூர்த்தம் நடந்து விடுவதாகவும், அதனால் கோபங்கொண்டு மதுரை நகருக்கு வராமல் வைகை வழியாகவே வண்டியூர் செல்வதாகவும் சொல்வர். இக்கூற்றில் உண்மை இல்லை. மீனாக்ஷி திருமனத்துக்குச் சுந்தரராஜன் வந்திருந்து தங்கையைத் தாரைவார்த்துக் கொடுத்ததாகவே வரலாறு. இதற்குரிய சிற்ப வடிவமும் சோமசுந்தரர் கோயிலில் இருக்கிறது. அப்படியிருக்க மக்கள் இப்படிக் கயிறு திரிப்பது சரியல்லதான். என்றாலும் இப்படியெல்லாம் கடவுளர் வாழ்விலும் பிணக்குகள் எற்படுத்தி அனுபவிப்பதிலே ஓர் இன்பமே காண்கிறார்கள் பொதுமக்கள்.
பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் முதலிய அறுவரால் இந்த அழகர் சுந்தரராஜன் மங்களாசாஸனம் செய்யப்பட்டிருக்கிறார். பெரியாழ்வாருடன் ஆண்டாள். இந்தச் சோலைமலைக்கு வந்திருக்கிறாள். அவள் சூடிக்கொடுத்த மாலையை அழகர் உவந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
குலமலை கோலமலை
குளிர் மாமலை கொற்றமலை
நீலமலை, நீண்டமலை
திருமாலிருஞ் சோலைமலை
என்று பெரியாழ்வார் பாடியிருக்கிறார்
திருமாலிருஞ் சோலை
என்றேன், என்னத்
திருமால் வந்து என் நெஞ்சு
நிறையப் புகுந்தான்
என்று நம்மாழ்வார் பாடுகின்றார்.
ஆழ்வார்கள் காலத்துக்கும் முந்திய பழம் பெருமை உடையது! இத்திருக்கோயில், சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் இங்குள்ள கண்ணன் பலராமன் கோயில் பேசப்படுகிறது. சங்க காலத்துக்குப் பிந்திய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் இம்மலை. இம்மலை மேல் உள்ள திருமால், தீர்த்தங்கள் எல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இக்கோயிலை, மதுரையை ஆண்ட மலயத்துவஜன் கட்டினான் என்பது வரலாறு. பாண்டிய மன்னர் பலர் இக்கோயிலுக்குப் பலவகையான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயில் விமானத்துக்குப் பொன் வேய்ந்திருக்கிறான். பின்னர் விஜயநகர நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான விசுவநாத நாயக்கர் எவ்வளவோ திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இப்படியாக விரிவடைந்து புகழ் பெற்று நிற்கும் அழகனைத்தான் மக்கள் கள்ளழகன் என்கின்றனர். அந்த வட்டாரத்துக் கள்ளர் குல மக்களுக்கு தலைவன் என்பதால் அப்பெயர் பெற்றான் என்பர். எனக்குத் தோன்றுகிறது. இப்படிச் சொல்வது தவறு என்று. கோயிலுக்கு வருவோர் உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளும் கள்வனாக இருப்பதினால்தான் அவனைக் கள்ளழகன் என்று சொல்கிறார்கள் போலும்! நீங்களும் சென்று அவனால் களவாடப்பட்டு, உள்ளம் பறிகொடுத்துத் திரும்பினால் நான் ஒன்றும் அதிசயப்பட மாட்டேன்.
15. மதுரை மீனாக்ஷி
சென்னை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கு ஆறு பேரை அனுப்புவதென்று தீர்மானம் ஆயிற்று. எதற்கென்று தெரியுமா? இப்போது எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அவர்கள் அங்குள்ள விஷயங்களைக் கற்று நிபுணத்துவம் அடைய நினைக்கிறார்களே, அதுபோல் ஆறுபேர் நகர நிர்மாணம் எப்படி என்று ஆராய, அப்படி அவர்கள் படித்து வந்ததைக் கொண்டு நம் நாட்டில் நகரங்களை அமைக்க அந்த அறிவு உதவும் என்று கருதினார்கள். இதற்காக ஆறு பேர்களைத் தேர்ந்தெடுக்க ஆறு வருஷங்கள் ஆயின. எவ்வளவோ போட்டி யார் யாரெல்லாமோ சிபாரிசு, இவ்வளவும் நடந்து ஆறு பேரைத் தேர்ந்தெடுத்துத் தீர்ந்தது. பேப்பரில் முடிவான உத்தரவு போடவேண்டியவர் முதல் மந்திரி, ஆகவே கடைசியில் "பைல்" அவரிடமும் போயிற்று. அவர் "பைலைப் படித்துப் பார்த்தார். நடந்திருக்கும் விஷயங்களைக் கவனித்தார் கடைசியில் குறிப்பு எழுதினார்.
அவர் எழுதிய குறிப்பு இதுதான்; `தமிழ் நாட்டில் நகர நிர்மானம் எப்படி இருக்க வேணும் என்று படிக்க அமெரிக்க போய்த்தான் தெரிய வேணுமா? இந்த ஆறு பேரும் நேரே மதுரைக்குச் செல்லட்டும். அங்கு நகரம் அமைந்திருக்கும் முறையைக் காணட்டும். நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்.' ஆறு பேரும் ஏமாந்தார்கள். அவர்களை அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றவர்களும் ஏமாந்தார்கள் உண்மைதானே? நகர நிர்மாணம், அதிலும் தமிழ் நாட்டின் நகர நிர்மாணம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? மதுரைக்குச் சென்றால் தெரிந்து கொள்ள முடியாதா? நல்ல நகர நிர்மாணத்துக்கு எடுத்துக்காட்டாக அல்லவா மதுரை நகரம் அமைந்திருக்கிறது.
ஊருக்கு நடுவே கோயில், கோயிலைச் சுற்றிச் சுற்றி வீதிகள். அந்த வீதிகளிலெல்லாம் அங்காடிகள் என்றெல்லாம் அமைந்திருப்பது அழகாய் இல்லையா? அப்படி நகர நிர்மாணத்துக்கே சிறப்பான எடுத்துக்காட்டாய் இருப்பது பழம் பெருமையுடைய மதுரை. அதனையே ஆலவாய், நான்மாடக்கூடல் என்றெல்லாம் அழைத்திருக்கிறார்கள். அந்த ஆலவாயிலே இறைவன் தனது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறான். பாண்டிய மன்னர்கள் அரசு செய்த இடம். இன்னும் எவ்வளவோ பெருமைகளை உடையது மதுரை, அந்த மதுரைக்கே செல்கிறோம்.
மதுரை செல்வதற்கு வழி நான் சொல்லி அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மதுரை நகருக்கு நடுநாயகமாய்க் கோயில், அதைச் சுற்றி ஐந்து வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒவ்வொரு உற்சவத்துக்கு ஏற்பட்டது. ஆடி மாதம் முளைக்கொட்டு விழா. அது நடக்கிற வீதி ஆடி வீதி. இது கோயில் மதிலுக்குள்ளேயே இருக்கிறது. அடுத்த சுற்று சித்திரை வீதி, மாசியில் நடக்கும் மக விழா இப்போது இவ்வீதியில் நடக்கிறது. அடுத்த சுற்று ஆவணி மூல வீதி. பெயரே தெரிவிக்கிறது. ஆவணி மூலப் பெருவிழா இதனில் நடக்கும் என்று. இதனையும் அடுத்தது மாசி வீதி.
சித்திரையில் நடக்கும் பெருந் திரு விழாவான, பிரம்மோத்சவம் இந்த வீதியில்தான் நடக்கிறது. இவற்றுக்கெல்லாம் வெளியேதான் வெளி வீதி. பஸ் போக்குவரத்துக்கெல்லாம் ஏற்றதாக அகன்ற பெரிய வீதி இது. பஸ்ஸில் சென்றாலும், ரயிலில் சென்றாலும் ஒவ்வொன்றாக இவ்வீதிகளைக் கடந்தே கோயிலுக்கு வரவேணும். ஊருக்கு வெளியிலேயே கோயிலின் நீண்டுயர்ந்த கோபுரங்கள் எல்லாம் தெரியும். சித்திரை வீதி வந்ததும் கோயில் வாயில்களும் தெரியும் நான்கு பக்கத்திலும் வாயில்கள் திறந்தே இருக்கும். இருந்தாலும் நாம் கோயிலுக்குள் செல்ல வேண்டியது கீழ வீதியில் உள்ள அம்மன் கோயில் வாயில் வழியாகத்தான். மற்றக் கோயில்களைப் போல் அல்லாமல் இங்கு முதலில் மீனாக்ஷியைத்தான் வழிபட வேணும். அதன் பின்னர்தான் சுந்தரேசுவரர். மீனாக்ஷிதானே பாண்டிய ராஜகுமாரி, சுந்தரேசர் அவள்தன் நிழலிலேதானே ஒதுங்கி வாழ்கிறார்? அம்மன் கோயில் முகப்பில் அஷ்ட சித்தி மண்டபம். கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி என்று ஆளுக்கொரு தூனை ஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்கு இடையிலேதான் பழக்கடைகள் முதலியன.
இதனைக் கடந்து மீனாக்ஷி நாயக்கர் மண்டபம். அதற்கடுத்தது முதலி மண்டபம், குடந்தை முதலியாரால் கட்டப்பட்டது. அங்கு பிக்ஷாடனர், தாருகா வனத்து ரிஷிகள், ரிஷி பத்தினிகள், மோகினி முதலியோரது சிலைகள் இருக்கின்றன. இந்த முதலி மண்டபத்தையும் கடந்து வந்தால் பொற்றாமரைக் குளத்துக்கும், அதைச் சுற்றியமைந்துள்ள மண்டபத்துக்கும் வந்து சேருவோம். பொற்றாமரையை வலம் வந்து கோயிலுள் செல்ல வேணும். பொற்றாமரை என்ற பெயருக்கு ஏற்பத் தங்கத்தால் தாமரை மலர் ஒன்று குளத்தின் நடுவில் இருக்கும். இங்குதான் வள்ளுவரது குறளைச் சங்கப் புலவர்கள் ஏற்றிருக்கின்றனர். ஆதலால் சலவைக் கல்லில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளும் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சலவைக் கல் பணியும் அந்தப் பொற்றாமரையும், திருப்பனந்தாள் மடத்து அதிபர் அவர்களது கைங்கர்யம்.
பொற்றாமரையை வலம் வந்து கிளிக்கட்டு மண்டபம் வழியாக மீனாக்ஷியம்மன் சந்நிதிக்குச் செல்லவேணும். அங்கு வருவார் எல்லோரும் வசதியாக நின்று காணக் கிராதிகளெல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். கருவறையில் மீனாக்ஷி நிற்கிற கோலம் கண்கொள்ளாக் காட்சி. வலக்கையில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று ஏந்தி அவள் நிற்கின்ற ஒயில், மிக்க அழகானது. கருணை பொழியும் கண்கள் படைத்தவள் அல்லவா?? கண்ணை இமையாது மக்களைக் காக்கும் அருள் உடையவள் ஆயிற்றே, இவளையே, தடாதகை, அங்கயற் கண்ணி என்றெல்லாம் அழைக்கிறார்கள். அன்னையை வணங்கி அவள் திருக்கோயிலை வலம் வரும்போதே கோயில் திருப்பணி செய்த திருமலை நாயக்கரைச் சிலை வடிவில் அவரது இரண்டு மனைவியருடனும் காணலாம். மீனாக்ஷியின் சந்நிதியை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்தால் நம்மை எதிர்நோக்கியிருப்பார் முக்குறுணிப் பிள்ளையார், விநாயக சதூர்த்தியன்று முக்குறுணி அரிசியை அரைத்து மோதகம் பண்ணி அந்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறவர் ஆனதால் முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். பெயருக்கு ஏற்ற காத்திரமான வடிவம். அவருக்கு வணக்கம் செலுத்தி, சுவாமி கோயில் பிராகாரத்தில் நடக்கலாம். மேற்குப் பிராகாரத்தில் ஏகாதச லிங்கங்கள் இருக்கின்றன. வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் கடைச்சங்கப் புலவர்கள் நாற்பத்தி ஒன்பது பேரும் சிலை உருவில் இருக்கிறார்கள். கோயில் முன்பக்கம் வந்தால் கம்பத்தடி மண்டபம். இதிலுள்ள சிற்ப வடிவங்களைக் கானக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஆதலால் கோயிலுள் நுழைந்து முதலில் சொக்கலிங்கப் பெருமானை வழிபாடு செய்து விட்டு, அவகாசத்துடனேயே இம்மண்டபத்துக்கு வருவோம். மூலத்தானத்தில் லிங்க உருவில் இருப்பவர் சொக்கர். அவரைப் பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள்,
புழுகுநெய்ச் சொக்கர் அபிடேகச்
சொக்கர்; கர்ப்பூரச் சொக்கர்.
அழகிய சொக்கர், கடம்பவனச்
சொக்கர், அங்கயற்கண்
தழுவிய சங்கத் தமிழ்ச்
சொக்கர் என்று சந்ததம் நீ
பழகிய சொற்குப் பயன் தேர்ந்து
வா இங்கு என் பைங்கிளியே.
என்று அத்தனை பெயரையும் அழகாகச் சொல்கிறது ஒரு பாட்டு, சொக்கர் என்றாலே அழகியவர் என்று தானே பொருள், அதனாலேயே அவரைச் சுந்தரேசுவரர் என்றும் அழைக்கிறார்கள். இவர் இத்தலத்து அதிபதியாய் எழுந்தருளியது நல்ல ரஸமான கதை அல்லவா?
மலயத்துவஜ பாண்டியன் மகளாகத் தடாதகை பிறக்கிறாள். வளர்கிறாள். தடாதகை தந்தைக்குப் பின், தானே மகுடம் சூடிக்கொண்டு பாண்டிய நாட்டை அரசு செய்கிறாள். அப்படி அரசு செய்யும்போது திக்விஜயம் செய்யப் புறப்படுகிறாள். திக்விஜயத்தில் அரசர்கள் மாத்திரம் அல்ல, திக்கு பாலகர்களுமே தலை வணங்குகிறார்கள். வெற்றிமேல் வெற்றி பெற்று இமயத்தையே அடைகிறாள். பகீரதியில் முழுகுகிறாள். மேருவை வலம் வருகிறாள். கடைசியில் கைலாசத்துக்கே வந்துவிடுகிறாள், அங்கு கைலாசபதி சாந்த ரூபத்தோடு பினாகபாணியாக அவள் முன் வந்து சேருகிறார். எல்லோரையும் வெற்றிகண்ட பெண்ணரசி, இந்தச் சுந்தரன் முன்பு நாணித் தலை கவிழ்கிறாள், தடாதகையின் பின்னாலேயே மதுராபுரிக்கு வந்துவிடுகிறார் சுந்தரர். சோமசுந்தரனாக மதுரைத் தடாதகையை மணம் புரிந்து கொள்கிறார். மலயத்துவஜன் ஸ்தானத்தில் தடாதகையின் சகோதரனான சுந்தரராஜனே கன்யாதானம் செய்து தாரை வார்த்துக்கொடுக்கிறார். அன்று முதல் சோமசுந்தரர் தம் மனைவியின் நிழலிலேயே ஒதுங்கி வாழ்கிறார். இந்தத் திருமண வைபவத்தைத்தான் இன்றும் சித்திரைத் திருவிழாவாக மதுரையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி நடக்கும் தங்கையின் திருமணத்துக்கே தந்தப் பல்லக்கு, முத்துக்குடை., தங்கக் குடம் முதலிய சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலில் இருந்து சுந்தரராஜன் வந்து சேருகிறார். இத்திருமணக் கோலத்தைப் பரஞ்சோதி முனிவர் சொல்லில் வடிக்கிறார்.
அத்தலம் நின்ற மாயோன்
ஆதி செங்கரத்து நங்கை
கைத்தலம் கமலப்போது
பூத்ததோர் காந்தள் ஒப்ப
வைத்தகு மனுவாய் ஓதக்
கரக நீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர்
தொழுது பூமாரி பெய்தார்.
இதனையே கல்லில் வடித்து நிறுத்துகிறான் ஒரு சிற்பி, அச்சிற்ப வடிவமே கம்பத்தடி மண்டபத்தில் தென்கிழக்குத் தூணில் நிற்கிறது.
கம்பத்தடி மண்டபத்துக்கு வருமுன் கோயில் உள்ளே வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிக்கொண்டு நிற்கும் கற்பகத்தையும் கண்ணாரக் கண்டு வணங்கலாம். வலது காலையே ஊன்றி நடனம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு வருந்திய ராஜசேகர பாண்டியனைத் திருப்தி செய்யக் கால் மாறி ஆடினான், அந்த நடராஜன் என்பது வரலாறு, கம்பத்தடி மண்டபத்தில் எண்ணரிய சிற்பங்கள், எல்லாம் சிலைவடிவில். அக்கினி, வீரபத்திரர், ஊர்த்துவத் தாண்டவர், காளி காலசம்ஹாரர், காமதகனர், ரிஷிபாந்திகர் முதலிய சிற்ப வடிவங்கள் எல்லாம் அழகானவை. கம்பத்தடி மண்டபத்துக்கு வடக்கே நூற்றுக்கால் மண்டபம் இருக்கிறது. அதனையே நாயக்கர் மண்டபம் என்பர். அடுத்த வெளிப்பிராகாரத்துக்கு வந்தால் அங்குதான் அரியநாத முதலியார். ரதி முதலிய சிற்பங்களைத் தாங்கிய ஆயிரங்கால் மண்டபம். வீர வசந்தராய மண்டபம். சுவாமி சந்நிதிக்கும், அம்மன் சந்நிதிக்கும் இடையேதான் கல்யாண மண்டபம். இதையெல்லாம் பார்த்தபின் ஆடி வீதியில் ஒரு சுற்றுச் சுற்றினால் வடக்கு வாயில் பக்கம் சங்கீதத் தூண்களையும் காணலாம். இனி வெளியே வந்தால் பிரபலமான புது மண்டபம் இருக்கிறது. அங்கே எல்லா இடத்தையும் கடைகளே அடைத்துக் கொண்டிருக்கும். இதற்கிடையிலே உள்ள ஊர் மண்டபத்தில் திருமலை நாயக்கரது குடும்பம், கல் யானைக்குக் கரும்பு அருத்திய சித்தர், கரிக் குருவிக்கு உபதேசித்த குருநாதன் சிலா வடிவங்களையும் காணலாம்.
கோயிலை நன்றாகப் பார்த்து விட்டோம். இத்தலத்துக்கு மதுரை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா?
மீனாக்ஷி திருக்கல்யாணம்
சிவடெருமான் தன் சடையில் சூடிய பிறையில் உள்ள அமுதத்தைத் தெளித்து இந்நகரை நிர்மாணித்தால் இந்நகரமானது மதுரமாக இருந்திருக்கிறது. இன்னும் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்னும் நால்வரும் பிரபலமாக இருக்கும் இடம் ஆனதால் நான்மாடக் கூடல் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. கன்னியான மீனாக்ஷி இருந்து அரசு புரிந்ததால் கன்னிபுரீசம் என்றும், சிவபெருமான் சுந்தரபாண்டியனாக இருந்து அரசாண்ட சாரணத்தால் சிவராஜதானி என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இத்தலத்தில் மாதமொரு திருவிழா. எப்படிக் காஞ்சி கோயில்கள் நிறைந்த நகரமோ அதுபோல் இந்த நகரம் விழாக்களால் சிறப்பான நகரம். மதுரையில் மீனாக்ஷி கோயிலைப் பார்ப்பதோடு அங்குள்ள திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர்த் தெப்பக்குளம், கூடல் அழகர் கோயில் முதலியவைகளையும் பார்க்கத் தவறக்கூடாது. கூடல் அழகர் ஊரின் மேற்கோடியில் இருக்கிறார். மூன்று தலங்களில் நின்றும், இருந்தும், கிடந்தும் சேவை சாதிக்கிறார். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் 44. இன்னும் திருமுகச் செப்புப் பட்டயங்களும் உண்டு. பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன், குலசேகர தேவர், மல்லிகார்ச்சுனராயர், கோனேரின்மை கொண்டான், விசுவநாத நாயக்கர், திருமலை நாயக்கர், முதலியோரது திருப்பணிகள் இக்கோயிலும் மண்டபங்களும். இவைகளின் லிவரங்களெல்லாம் திருப்பணி மாலை என்ற பாடலில் வரிசையாக அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தனை சொல்லியும் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டால் இத்தலத்தின் வரலாறு பூரணமாகாது. இத்தலத்தின் பெருமையே இங்கு இறைவன் நடத்திய அறுபத்திநான்கு திருவிளையாடல்களின் பெருமைதான். இதனை வடமொழியில் ஹாலாசிய மகாத்மியத்திலும், தமிழில் பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் காணலாம். இந்திரன் வழிபட்டது, மீனாக்ஷியைத் திருமணம் செய்தது. பிட்டுக்கு மண் சுமந்தது, வன்னியும் கிணறும் இலிங்கமும் அமைத்தது. கால் மாறி ஆடியது முதலியவை முக்கியமானவை. இவைகளுக்கெல்லாம் தனித்தனி திருவிழாக்களே நடக்கின்றன. கோயில்களின் பல பாகங்களில் இதற்குரிய சிற்ப வடிவங்களும் இருக்கின்றன அவைகளைத் துருவிக் காண ஆசையும், அதற்கு வேண்டிய அவகாசமும் வேண்டும்.
இத்தலத்துக்கு அப்பரும், சம்பந்தரும் வந்திருக்கிறார்கள். மாணிக்கவாசகர் வரலாறு முழுக்க முழுக்க இத்தலத்தில் நடந்தது தானே! சம்பந்தர் இங்கு வந்ததும், பாண்டியனை! சைவனாக்கியதும், சமணர்களைக் கழுவேற்றியதும் பிரசித்தமான காவியமாயிற்றே! கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் இந்தத் தலத்தில் பெருமை பெற்றவர்கள் மங்கையர்க்கரசியையும் அங்கயற்கண்ணியையும் சேர்த்தே வழிபடுகிறார் சம்பந்தர்.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை,
வரிவளைக்கை மடமாணி?
பங்கயச் செல்வி, பாண்டிமா தேலி
பணி செய்து நாடோறும் பரவ
பொங்கழல் உருவன் பூத நாயகன், நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே.
என்பதுதானே அவரது பாடல். நானும், 'ஆலவாய் எனபது இதுதான்' என்று சுட்டிக் காட்டிவிட்டு நின்று கொள்கிறேன். மதுரையைப் பற்றி இவ்வளவுதானா சொல்லலாம்? 'சொல்லிடில் எல்லை இல்லை' என்பதுதான் என் அனுபவம்.
16. பரங்குன்றம் மேய பரமன்
ஒரு பழைய கதை. ஓர் ஊரிலே ஒரு பூதம் வாழ்கிறது. கற்முகி என்ற பெயரோடு. அப்பூதம் சிவ பூசையில் தவறியவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்து வைக்கிறது. அப்படி ஆயிரம் பேரைச் சேர்த்தபின் அத்தனை பேரையும் அப்படியே கொன்று தின்பது என்ற விரதம் பூண்டிருக்கிறது. 999 பேரை, ஆம், சிவ பூசையில் தவறியவர்களைத்தான், பிடித்துச் சிறை வைத்து விடுகிறது. கடைசியாக ஆயிரம் ஆக்க ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் நக்கீரர் உருவத்தில் வருகிறார். மதுரை சங்கப் புலவர்களுள் சிறந்தவராக இருந்தவர் நக்கீரர். இறைவனோடேயே வாதிட்டவர்; 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று கூறி அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர், அவர் ஒரு குளக்கரையில் ஒருநாள் காலை உட்கார்ந்து சிவபூசை செய்கிறார். அக்குளக்கரையில் ஓர் அரசமரம். அந்த மரம் குளம் இவைகளில் ஒரு விநோதம், அந்த மரத்தின் இலை தரையில் விழுந்தால் பறவையாக உயிர் பெறும் தண்ணீரில் விழுந்தால் மீனாக மாறும், நக்கீரர் பூசை செய்து கொண்டிருந்தபோது ஓர் இலை பாதி தன்ணீரிலும் பாதி தரையிலுமாக விழுந்தது. தரையில் விழுந்தது. பறவையாகவும் தண்ணீரில் விழுந்தது மீனாகவும் மாறுகின்றன. இரண்டும் ஒன்றை ஒன்று விடாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் மனம் மலைப்புறுகிறது. செய்து வந்த சிவபூசை தவறுகிறது. பூதந்தான் எப்போது என்று காத்திருக்கிறதே உடனே, அங்கு தோன்றி நக்கீரரைப் பிடித்துக் கொண்டு போய் சிறையில் தள்ளிவிடுகிறது. ஆயிரம் பேர்கள் கிடைத்துவிட்ட உற்சாகத்தில், அவர்களையெல்லாம் உண்பதற்குமுன் நீராடிவரச் செல்கிறது. பூதத்தின் வரலாற்றைச் சிறையிலிருந்த மற்றவர்களிடம் கேட்டுத் தெரிகிறார் நக்கீரர். உடனே தம்மையும் மற்றவர்களையும் விடுவிக்க, முருகனைத் துதிக்கிறார். அப்படி அவர் பாடிய பாட்டுத்தான் பத்துப் பாட்டில் முதல் பாட்டான திருமுருகாற்றுப்படை என்பது வரலாறு. இந்த வரலாற்றை பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் பாடியிருக்கிறார்.
ஏர்கொண்ட பொய்கைதனில்
நிற்குமொரு பேர் அரசின்
இலைகீழ் விழில் பறவையாம்,
இதுநிற்க, நீர்விழில் கயலாம்,
இதுஅன்றி ஓரிலை அங்கு இங்குமாகப்
பார்கொண்ட பாதியும் பறவைதானாக
அப்பாதியும் சேலதாக,
பார் கொண்டிழுக்க அது
நீர்கொண்டிழுக்க இப்படிக் கண்டது
அதிசயம் என்ன
நீர்கொண்ட வாவிதனில்
நிற்குமொரு பேழ்வாய் நெடும் பூதம்
அது கொண்டுபோய்
நீள்வரை எடுத்து அதன்கீழ் வைக்கும்
அதுகண்டு நீதிநூல் மங்காமலே
சீர்கொண்ட நக்கீரனைச்
சிறைவிடுத்தவா செங்கீரை ஆடி அருளே
திரை எறியும் அலைவாய்
உகந்த வடிவேலனே செங்கீரை
ஆடி அருளே !
என்பது பாட்டு. இப்படி நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடுவதற்குக் காரணமாயிருந்த குளமும் மரமும் இருந்த தலம்தான் திருப்பரங்குன்றம், அதனாலே முருகாற்றுப்படையில் சொல்லப்படும் ஆறுபடை வீடுகளில் முதல் படைலீடாகத் திகழ்வதும் திருப்பரங்குன்றம்தான். அந்தத் திருப்பரங் குன்றத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
மதுரைக்குத் தென்மேற்கே ஆறு மைல் தூரத்தில் திருப்பரங்குன்றம் இருக்கிறது. மதுரையில் இறங்கி பஸ்ஸிலோ, காரிலோ செல்லலாம். இல்லை, திருப்பரங்குன்றம் ஸ்டேஷனிலே இறங்கி நடந்தாலோ கூப்பிடும் தூரம்தான். எந்த வழியாக வந்தாலும் தூரத்திலேயே தெரிவது குன்று. இக்குன்றின் உயரம் 1056 அடி என்று கணக்கிட்டிருக்கின்றனர், குன்று சிவலிங்க வடிவமாக இருப்பதால் இதனைச் சிவலிங்கமாகவே கருதி வழிபட்டிருக்கின்றனர். முருகன் எழுந்தருளியுள்ள தலமாதலால் கந்தமலை என்று வழங்கியிருக்கிறது. இதனையே பின்னர் திரித்துச் சிக்கந்தர் மலை என்று முஸ்லீம்கள் அழைத்திருக்கின்றனர். திருப்பழனம், . திருப்பயணம் என்றாகிக் கடைசியில் பிரஸ்தான புரியான கதைப்போலத்தான். எங்கிருந்து வந்தாலும் முதலில் நாம் சென்று சேருவது குன்றின் வட பகுதியில் உள்ள சந்நிதி வாயிலில்தான். அங்குள்ள கோபுர வாயிலுக்கு முன்னால் பெரிய மண்டபம், அதனைத் தாங்கி நிற்பவை சிறந்த வேலைப்பாடுகள் அமைந்த நாற்பத்தெட்டு தூண்கள் என்றால், மண்டபம் எவ்வளவு பெரிது என்று கணக்கிட்டச் கொள்ளலாம் அல்லவா?
திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இம்மண்டபத்தை ஏனோ சுந்தரபாண்டியன் மண்டபம் என்று அழைக்கிறார்கள். இந்த மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் துவஜ ஸ்தம்பக் கூடம் இருக்கிறது. அங்கிருந்து படிகள் ஏறி மேலே சென்றால் மலையைக் குடைந்து அமைத்த குடைவரைகள் இருக்கும், அதில் முருகன், திருமால் துர்க்கை, விநாயகர், சிவன் முதலியவர்கள் இருப்பார்கள், கோயிலில் உள்ள மண்டபங்களில் அரிய நாத முதலியார், திருமலை நாயக்கர் முதலியோர் இருக்கின்றனர், சிலா வடிவில். இக்கோயிலில் மூலவர் பரங்கிரிநாதர் என்று லிங்கத் திருவில் உள்ள இறைவனே. இவருடைய துணைவியே ஆவுடைநாயகி. என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் முருகனே. அன்று திருச்சீரலை வாயிலில் சூரபதுமனைச் சம்ஹரிக்க, அதற்கு வெற்றிப் பரிசாகத் தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை மணம் முடித்துக் கொடுத்தான் என்பது வரலாறு. அந்தத் தேவசேனை திருமணம் நடந்த இடம் இத்திருப்பரங்குன்றமே. முருகனுக்கு அருகில் தேவசேனையும் நாரதரும் இருக்கின்றனர். அங்குள்ள குடைவரைச் சுவரில் அர்த்த சித்திரமாக அமைந்த சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கைலைக் காட்சி. கைலை மலையிலே பார்வதி ஒயிலாக நிற்கின்ற நிலை சிற்ப வடிவத்திற்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. இங்குள்ள முருக வேளிடத்துத்தான் நக்கீரர் அடியவர்களை முதலில் ஆற்றுப்படுத்தியிருக்கிறார். மதுரை திருப்பரங்குன்றம் இரண்டையும் இனைத்தே பாடியிருக்கிறார்.
செருப்புகள்று எடுத்த சேண் உயர் நெடுங்கொடி, வரிப்புனை பந்தோடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்
திரு வீற்றிருந்த தீதுதீர் நியமத்து
மாடமலி மறுகின் கூடல் குடவயின்
இரும் சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக்
கண் கமழ் நெய்தல் ஊதி, எல் படக்
கண்போல் மலர்ந்த காமர் சுணைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கனம் ஒலிக்கும்-
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.
என்று பரங்குன்றத்து முருகனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கரிய சேற்றில் மலர்ந்த தாமரை மலரில் தூங்கி, அதிகாலையில் தேன் நிரம்பிய நெய்தல் மலரை ஊதி, சூரிய உதயமானதும் மலர்கிற பூக்களின் மீது அருஞ்சிறை வண்டுகள் ரீங்காரம் செய்யும் குன்றத்தில் அமர்ந்திருக்கிறான் அவன் என்பது நக்கீரர் தரும் விளக்கம்.
இன்னும் இத்தலத்தில் உள்ள முருகனைத் திருமூர்த்திகளும் வந்து பிரார்த்திருக்கிறார்கள். அதனாலேயே இக்குன்றம் இமயமலையை ஒத்திருக்கிறது. அம்மலையிலுள்ள அருவியும் சரவணப் பொய்கையை ஒத்திருக்கிறது என்பர் சங்கப் புலவருள் ஒருவரான நல்லழுசியார்.
பரங்குன்றம் இமயக்குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னின்ற நிறை இதழ்த் தாமரை
மின்னின்ற விளங்கினர்
ஒருநிலைப் பொய்கையோடொக்கும்
நின் குன்றம்
என்பது அவரது பாட்டு. இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். சுந்தரர் வந்திருக்கிறார். இருவரும் பதிகங்கள் பாடிப் பரங்குன்ற நாதரை வாழ்த்தி வழிபட்டிருக்கிறார்கள்.
பொன்னியல் கொன்றைப்
பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி
ஆகிய ஈசன் தொல் மறை
பன்னிய பாடல்
ஆடலால் மேய பரங்குன்றை
உள்னிய சிந்தை
உடையவர்க்கில்லை உறுநோயே
என்பது சம்பந்தர் தேவாரம், சுந்தரரோ, இத்தலத்துக்கு முடியுடை மூவேந்தரும் வந்து வணங்கி அருள் பெற்றதையும் விளக்கமாக உரைத்துப் பாடுகிறார்.
அடிகேள்! உமக்கு ஆட்செய அஞ்சுதும்என்
அமரர் பெருமானை, ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்து ஆறும்ஓர், நான்கும் ஓர் ஒன்றிய
படியால் இவை கற்றுலல்ல அடியார்
பரங்குன்ற மேய் பரமன் அடக்கே
குடியாகி, வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் வின் முழுதாள்பலரே.
என்பது அவரது பாடல்.
இக்குன்றத்தில் அன்று ஒரு சித்திரசாலை இருந்திருக்கிறது. அங்கே சூரியன் முதலிய கோள்கள், தாரகைகள், நாள்மீன்கள் எல்லாம். காட்டும் சித்திரம் இருந்திருக்கிறது, ரதி மன்மதன், இந்திரன், அகலிகை கௌதமன் முதலியோரது சித்திரங்களும் இருந்திருக்கின்றன. இன்று அந்தச் சித்திரசாலையை அங்கு காணோம். கோயிலும் குடைவரையும் பிரும்மாண்டமானதாயிருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் துருவித் துருவிப் பார்க்க நல்ல அவகாசம் வேண்டும்.
பரங்குன்றத்துக்கு வந்த நாம், கோயிலுள் செல்வதுடன் மாத்திரம் திருப்தி அடைய முடியாது. மலை ஏறிச் சுற்றியுள்ள காட்சிகளையும் காணவேண்டும். மலைமேல் ஏறிச் சிறிது தூரம் சென்றால் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே ஒரு சமாதி இருக்கிறது. அங்குதான் சிக்கந்தர் பாட்சா என்ற பக்கிரி அடக்கமாகியிருக்கிறார். இவர் பெயரையும் இணைத்தே ஸ்கந்தர் மலையைச் சிக்கந்தர் மலையாக்கியிருக்கிறார்கள் முஸ்லீம் நண்பர்கள்.
சமாதிக்கு முன்னால் உள்ள மண்டபம் நல்ல தமிழ் நாட்டுப் பாணியிலே இருக்கிறது. மண்டபத்தின் மேலேயுள்ள கூர் உருளை ஸ்தூபிகள் மட்டும் இஸ்லாமியர் கட்டிடக் கலையை ஒத்திருக்கின்றன. மலையின் தென்பகுதியில் ஒரு பாறை, அந்தப் பாறையில் இரண்டு திகம்பர சமண உருவங்கள் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. கூன் பாண்டியன் சமணனாக இருந்த காலத்தே இந்த வட்டாரத்திலெல்லாம் சமணர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் செதுக்கி வைத்த சிலைகளாகவே இவை இருக்க வேணும், தென்பாகத்தில், ஒரு கோயில் காசி விசுவநாதர் ஆலயம் என்று. அங்கு இருக்கிறது. விசவநாதர், விசாலாக்ஷி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர் முதலியோரது சிலைகள் இருக்கின்றன. பிரம்ம தேவர்கூட பஞ்சலிங்கத்துக்குப் பக்கத்தில் பூசை செய்து கொண்டி ருக்கிறார். மலையடிவாரத்தில் தென் புறத்திலே ஒரு குடை வரை இருக்கிறது. அதை உமையாண்டவர் கோயில் என்கிறார்கள். பாறையின் பின் சுவரில் நடராஜரது தாண்டவம் செதுக்கப்பட்டிருக்கிறது. மிருதங்கம் வாசித்துக்கொண்டு விஷ்ணு நிற்கிறார். வள்ளி தேவசேனை சகிதமாக முருகவேள் இருக்கிறார். சிற்ப வடிவங்களெல்லாம் சிதைந்திருக்கின்றன. இது பல்லவர் குடைவரைபோல் இருந்தாலும், பாண்டிய மன்னர்கள் தாம் இக்குடைவரையை வெட்டியிருக்கவேணும்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட மாறவர்மன், சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள் இங்கே இருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் செங்குத்தாக மலையிருக்கிறது. அங்குள்ள குகையில் ஆறு படுக்கைகள் இருக்கின்றன. இதில் ஏறுவது கடினமாக இருக்கும். பதினெட்டாம் நூற்றாண்டிலே ஆங்கிலேயர் இந்தப்பகுதியைக் கைப்பற்றியபோது குட்டி என்ற ஒரு பக்தன் மலையிலிருந்து குதித்து இக்கோயிலைக் காப்பாற்றினான் என்று வரலாறு. அதற்காக அவன் வாரிசுகளுக்கு நிலதானம் வேறே செய்திருக்கின்றனர். இந்த மலையில் மகமதியரும், இந்துக்களும் சேர்ந்தே தொழுகின்றனர். சமரஸ பாவத்தை ஸ்கந்தர்மலை, சிக்கந்தர்மலை என்ற பெயரோடு வளர்த்து வருவது அறிந்து இன்புறத்தக்கதுதானே.
17. ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்
பக்தி பண்ணுவதற்குப் பாவனை அவசியம், அந்தப் பாவனை எத்தனை எத்தனையோ வகையில் அமைதல் கூடும். அப்படிப் பாவனை செய்வதில் நான்கு பாவனைகள் முக்கியமானவை. இறைவனைத் தனயனாகப் பாவனை பண்ணிப் பக்தி செலுத்துவது ஒருமுறை. அதுவே வாத்சல்ய பக்தி எனப்படும் இறைவனை ஆண்டானாகப் பாவனை பண்ணி அவனது தாஸனாக மாறிச் சேவை செய்வது ஒரு முறை. அதுவே தாஸ்ய பக்தி. இறைவனை அருமைத் தோழனாகவே கொண்டு அவனோடு நெருங்கி உறவாடிப் பக்திப் பண்ணுவது ஒரு முறை. இதனையே ஸக்ய பக்தி என்பர். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனையே காதலனாகப் பாவனை பண்ணி அவனிடத்தில் காதலைச் செலுத்தி வழிபடுவது, இதனையே மதுர பக்தி என்பர். இந்த மதுர பக்தியிலே பல மாதர்கள் தமிழ்நாட்டில் திளைத்திருக்கிறார்கள். பாடல்கள் பாடித் தங்களது பக்தி அனுபவத்தை எல்லாம் வெளியிட்டிருக்கிறார்கள். என்றாலும் வெறும் பாவனையோடு நிற்காமல், இறைவனாம் பரந்தாமனையே காதலனாக வரித்து அவனையே மணாளனாகப் பெற்றுப் பெருமையுற்றவள் ஆண்டாள். அந்த ஆண்டாள் பிறந்து வளர்ந்த இடம்தான் ஸ்ரீ வில்லிப்புத்தூர். அந்த ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
ஸ்ரீ வில்லிப்புத்தூர் தென்காசி-விருதுநகர் ரயில் பாதையில் உள்ள ஊர். ஆதலால் ரயிலில் செல்வோர் எளிதாக அவ்வூர் சென்று சேரலாம், மோட்டாரில் மதுரையிலிருந்து திருமங்கலம் வந்து அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் சென்றாலும் சென்று சேரலாம். அந்தத் தலத்துக்கு நான்கு பக்கங்களிலிருந்தும் நல்ல ரோடும் பஸ் வசதியும் உண்டு. ஊர் சென்று சேர்ந்ததும், கோயிலுக்குச் செல்லுமுன் இந்த ஊருக்கு வில்லிப்புத்தூர் என்று பெயர் வருவானேன் என்பதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே.
ஒரு காலத்தில் இந்த வட்டாரம் முழுதும் செண்பக வனமாக இருந்திருக்கிறது. அங்கு இரண்டு முனிவர்கள், இறைவனது சாபத்தால் வேடர்களாகப் பிறந்து வாழ்கிறார்கள். இவர்களில் ஒருவன் பெயர் லில்லி, இன்னொருவன் பெயர் கண்டன். இளையவனான கண்டன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு புலியால் கொல்லப்படுகிறான். இதனால் வில்லி மனம் உடைந்து வாழும் போது, பரந்தாமன் வில்லியினது கனவில் தோன்றி, 'நீ இந்தக் காட்டை அழித்து இதனை ஒரு நகரம் ஆக்கு. பாண்டீ, சோழ நாடுகளிலுள்ள அந்தணர்களைக் கொண்டு வந்து குடியேற்று' என்று சொல்கிறார். அதன்படியே வில்லி காடு திருத்தி நாடாக்கிய நகரம்தான் வில்லிப்புத்தூர்.
அந்த வில்லிப்புத்தூரில் கோயில் கொண்டிருப்பவர்தான் வடபத்திரசாயி, ஆண்டாள் முதலியோர். கோயில் அமைப்பிலே முன் நிற்பது வடபத்திரசயனர் கோயில்தான். பெரிய கோபுரம் இருப்பதும் அந்தக் கோயிலுக்குத்தான் என்றாலும் இத்தலத்தில் முக்கியத்துவம் எல்லாம் ஆண்டாள் திருக்கோயிலுக்குத்தான். ஆதலால் நாமும் முதலில் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று ஆண்டாளை வணங்கிவிட்டு அதன்பின் வடபத்திர சயனரை வணங்கலாம். ஆண்டாள் கோயில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் உ.ள்ளடங்கியே இருக்கும். அந்தக் கோயில் வாயிலில் முதன் முதல் இருப்பது பந்தல் மண்டபம். இதனைக் கடந்து உள்ளே சென்றால் இடது கைப்பக்கம் கல்யாண மண்டபம். இதற்கு அடுத்தாற்போல் இடைநிலைக் கோபுரம், இதனைக் கடந்துதான் ஒரு வெளிப் பிராகாரம் இருக்கும். இங்குதான். ராமனுக்கும் ஸ்ரீனிவாசனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன, வேறு முக்கியமாகப் பார்க்க வேண்டியவை ஒன்றும் இல்னல, ஆதலால் இடைநிலைக் கோபுரத்தை அடுத்த துவஜ ஸ்தம்பத்தின் வழியாகவே கோயில் உட்பிராகாரத்தக்குச் செல்லலாம். இந்தத் துவஜ ஸ்தம்ப மண்டபத்திலேதான் பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். உள் பிரகாரம் சென்றதும் நம்முன் இருப்பது மாதவிப் பந்தல், அந்தப் பிராகாரத்தைச் சுற்றிலும் அங்கு நூற்றெட்டுத் திருப்பதிகளில் உள்ள பெருமாள் நமக்குக் காட்சி கொடுப்பார். ஆம்! சுவரில் உள்ள சித்திர வடிவில்தான், 'இரண்டு வருஷங்களுக்கு முன் அந்தச் சித்திரங்களைப் புதுப்பித்து எழுதத் திட்டமிட்டு வேலை நடந்து கொண்டிருந்தது. பூர்த்தியாகி விட்டதோ என்னவோ?
மாதவிப் பந்தல், மணி மண்டபம், ஆண்டாள் சுக்கிரவாரக் குறடு எல்லாம் கடந்துதான் அர்த்த மண்டடம் வரவேண்டும். அதற்கு அடுத்ததே கருவறை. அந்தக் கருவறையினுள்ளேதான் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய திருவடி மூவரும் சேவை சாதிக்கிறார்கள். நடுவில் ரங்கமன்னார். அவரது வலப்பக்கத்தில் ஆண்டாள். இடப்பக்கத்தில் பெரிய திருவடியாம் கருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார்கள். ரங்கநாதர் திருமணக் கோலத்தோடு கூடிய ராஜ கோலத்தில் ராஜகோபாலனாகக் கையில் செங்கோல் ஏந்தி நிற்கிறார். ஆண்டாளோ சர்வாலங்கார பூஷிதையாய் அவர் பக்கலில் நிற்கிறாள். மற்றக் கோயில்களில் எல்லாம் பெருமாளுக்கு எதிரே நின்று சேவை சாதிக்கிற கருடாழ்வார் இங்கு மட்டும் ரங்கநாதர் பக்கத்திலேயே ஏகாங்கியாய் எழுந்தருளியிருப்பானேன் என்று கேட்கத் தோன்றும் நமக்கு. ஆண்டாளை மணம் புரிய வந்த ரங்கநாதரை அவசரம் அவசரமாகக் காற்றினும் கடுகிக் கொண்டு வந்து சேர்த்தவர் அல்லவா அவர்! அதற்காகவே இந்த நிலை வாய்த்திருக்கிறது அவருக்கும். மூல விக்கிரகங்களுக்கு முன்னாலே தங்க ஸ்தாபன கோபால மஞ்சத்தில் உற்சவ மூர்த்திகளாகவும் மூவரும் எழுந்தருளியிருக்கிறார்கள், இந்த மூர்த்திகளைத் தரிசிக்கும்போதே, ஆண்டாள் பிரபாவத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் நாம்.
ஸ்ரீ வில்லிப்புத்தூரில் விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார் திருத்துழாய் கைங்கரியம் செய்து வந்திருக்கிறார். ஒரு நாள் அவர் நந்தவனத்தில் திருத்துழாய் மரத்தடியில் ஒரு பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு எடுத்து வந்து அவரது மனைவியான
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள்
விரலஜயிடம் கொடுக்கிறார். குழந்தைக்குக் கோதை என்ன பெயரிட்டு அன்போடு வளர்க்கின்றனர். கோதையும் தன் தோழியருடன் எல்லாம் களிப்புடன் லிளையாடி மகிழ்கிறாள். ஒருநாள் லிஷ்ணுசித்தர் பெருமாளுக்கு என்று தொடுத்திருந்த பூமாலையைத் தன் கூந்தலிலே சூட்டி அழகு பார்க்கிறாள். பின்னர் மாலையை களைந்து வைத்து விடுகிறாள். அவள் சூடிக் களைந்த மாலை பின்னர் பெருமாளுக்கு அணியப் பட்டிருக்கிறது. இப்படியே நடக்கிறது பல நாட்களும்.
ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதை மாலை சூடி அழகு பார்க்கும்போது கண்டு விடுகிறார். இதற்காக மகளைக் கோபித்துவிட்டு அன்று பெருமாளுக்கு மாலை சாத்தாமலேயே இருந்து விடுகிறார். ஆனால் பெருமாளோ இரவில் அவரது கனவில் தோன்றி, கோதை சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உகந்த மாலைகள், அவளே என் ஆண்டாள் என்று சொல்கிறார். விஷ்ணுசித்தராம் பெரியாழ் வாருக்கோ ஒரே மகிழ்ச்சி. அது முதல் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளையே பெருமாளுக்கு அணிவிக்கிறார். இப்படி பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாமாலைகள் சாத்தவும் முற்படுகிறாள். வளர்ந்து பருவமங்கையானதும் தன் காதலனாக பெருமாளையே வரிக்கிறாள். 'மாலிருஞ்சோலை எம்மாயற்கு அல்லால் மற்றொருவர்க்கு என்னைப் பேச ஒட்டேன்' என்று சாதிக்கிறாள், 'மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் முறை தாழ்ந்த பந்தற்கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து கைத்தலம் பற்றி' மணமாலை சூட்டக் கனாக் காண்கிறாள்.
இப்படி இவள் சொல்லிக் கொண்டிருக்கிறாளே என்று பெரியாழ்வார் கவலையடைய, ஆழ்வாரது கனவிலே திருவரங்கச் செல்வனே வந்து கோதையைத் திருவரங்கம் அழைத்து வரவேண்டும் என்றும், அங்கு தாமே அவளைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கொல்கிறார். ஆண்டாளை மணிப்பல்லக்கிலே ஏற்றி வாத்திய கோஷங்களுடன் திருவரங்கத்துக்கு அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள். சுரும்பார் குழல் கோதை வந்தாள், திருப்பாவை பாடிய செல்வி வந்தாள், தென்னரங்கம் தொழுதேசியள் வந்தாள் என்று அவளை எதிர்கொண்டு அழைக்கின்றனர். சூடிக்கொடுத்த நாச்சியாரும் எல்லோரும் காணும்படி அழகிய மணவாளன் திருமுன்பு சென்று அவன் திருவடி வருடி அவனுடன் ஒன்றறக் கலக்கிறாள். இதைப்பார்த்த பெரியாழ்வார், 'ஒருமகள் தன்னை உடையேன். உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்' அவளைச் செங்கண்மால் தான் கொண்டு போனான் என்று துக்கித்துப் பெருமாளிடம், கோதையைப் பலர் அறிய ஸ்ரீ வில்லிப்புத்தூரிலேயே திருமணம் செய்தருள வேண்டும் என்று வேண்ட, அழகிய மணவாளனும் அப்படியே செய்கிறேன் என்று பங்குனி உத்திரத்தன்று கருடாழ்வாரின் மீது கோதையுடன் வந்து திருமணம் செய்து கொள்கிறார்.
அன்று முதல் ரங்கமன்னார் கோதையுடனும் பெரிய திருவடியுடனும் ஸ்ரீ வில்லிபுத்தூரிலேயே கோயில் கொண்டு விடுகிறார். பெரியாழ்வாரும், ஆண்டாளும் பாடிய பாசுரங்களே நாலாயிரப் பிரபந்தத்தில் முதலிடம் பெறுவன. ஆண்டாள் கோயில் விமானம் தங்கத் தகடு போர்த்தப் பெற்றது. இதில் ஆண்டாள் திருப்பாவைப் பாடல்களை விளக்கவல்ல திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டாளைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது துவஜ ஸ்தம்ப மண்டபத்திலும், அதை அடுத்த மண்டபத்திலும் உள்ள தூண்களில் ரதி மன்மதன், ராமன் லக்ஷமணன், சரஸ்வதி முதலியோரது சிலா வடிவங்களைக் காணலாம், நல்ல நாயக்கர் காலத்து சிற்ப வடிவங்கள்.
ஆண்டாள் கோயிலை விட்டு வெளியே வந்து வடகிழக்கு நோக்கி நடந்தே வடபத்திர சயனர் கோயிலுக்கு வரவேணும். அங்கு போகும் வழியில் ஆண்டாள் பிறந்த நந்தவனம் இருக்கிறது. அங்குள்ள கோயிலில் ஆண்டாளது திருவுருவம் சிலைவடிவில் தளியே இருக்கிறது. இங்குள்ள ஆண்டானையும் தரிசித்து விட்டு வடக்கே நோக்கி நடந்தால் வடபத்திர சயனர் கோயில் வருவோம். கோயில் வாயிலைப் பெரியதொரு கோபுரம் அணி செய்கிறது. இந்தக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் தெற்கே பார்க்கப் பெரியாழ்வார் சந்நிதி இருக்கிறது. பெரியாழ்வார் அவதரித்த இடம் ஆதலால் சாத்துமுறை சிறப்பாக நடக்கிறது.
இந்தச் சந்நிதியை அடுத்து மேற்கேயுள்ளது பெரிய பெருமாள் சந்நிதி, இக்கோயிலில் இரண்டு தட்டுகள். கீழே நரசிங்கப் பெருமாள் சந்நிதி, இச்சந்நிதிக்குக் கிழக்கே வடபுறம் பன்னிரு ஆழ்வார்களும் தசாவதார மூர்த்திகளும் எழுந்தருளியிருக்கிறார்கள். தென்பக்கமாக மேல் மாடிக்குப் போகப் படிகள் இருக்கின்றன. அவைகளில் ஏறிச்சென்றால் முதலில் நாம் சேர்வது கோபால விலாசம். அதனை அடுத்து விமல ஆகிருதி விமானத்தின் கீழே உள்ள கருவறையில் வட ஆல விருட்சத்துக்கு அடியில், ஆதிசேஷன்மீது பூதேவியும் சீதேவியும் அடிவருட வடபத்திரசயனர் சயனித்திருக்கிறார். அருணன், பிருகு, மார்க்கண்டேயன் எல்லாம் அங்கே இருக்கிறார்கள், இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், கண்ணன் வீதியுளா வருவார், வில்லிப்புத்தூர் உறைவார், அல்லல் தவிர்த்த பிரான் முதலியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த வடபத்திரசயனர் கோயில்தான் ஆதிக்கோயில், ஆண்டாள் கோயில் பின்னால் எழுந்ததே.
பெரியாழ்வாரும் ஆண்டாளும் பலப்பல பாசுரங்கள் பாடியிருந்தாலும் வில்லிப்புத்துரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரன்டே இரண்டுதான்.
மந்றைய ஆழ்வார்கள் இந்த வடபத்திரசயனலன மங்களாசாஸனம் செய்ததாகத் தெரியவில்லை.
ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவமே பெரிய திருவிழா. அதில்தான் தேரோட்டம் எல்லாம், பங்குனியில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பானதே. இந்த நாச்சியார் கோயிலைச் சேர்ந்த சுற்றுக் கோயில்கள் ஒன்பது.
பெரியாழ்வாரும் ஆண்டாளும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆண்டாள் கோயில் கருப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் முதலியவைகளைச் சுந்தரத்தோளுடைய மாவலி வாணாதிராயர் கட்டினார் என்று கோயிலின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இவரே சுந்தரத்தோள நல்லூர் என்ற சொக்கனேந்தல் கிராமத்தை நாச்சியாருக்கு மானியமாக விட்டிருக்கிறார். இரண்டு கோயில்களும் பாண்டிய மன்னர்களால் பரிபலிக்கப்பட்டு வந்திருக்கின்றன. வடபத்திர சயனர் கோயில் ஜடாவர்மன் என்ற திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் குலசேகர தேவர் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
இராமானுஜருக்கும் இந்தக் கோயிலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இராமானுஜர் இத்தலத்துக்கு எழுந்தருளியபோது, நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலை மாலிருஞ்சோலை சுந்தரராஜனுக்குப் படைக்கச் சொன்னபடி படைத்த தன் அண்ணா வருகின்றார் என்று ஏழடி முன் நடந்து எதிர்கொண்டு அழைத்திருக்கிறாள் ஆண்டாள். அது முதல் இராமானுஜரைக் 'கோயில் அண்ணன்' என்றே அழைத்திருக்கிறார்கள். கம்பர் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆண்டாளுக்குச் சூடகம் என்ற தலைக்கணியை வழங்கியிருக்கிறார். திருமலை நாயக்கரும் இக்கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கிறார். அவரது சிலை ஆண்டாள் கோயிலில் சுக்கிரவாரக் குறட்டில் ஒரு கம்பத்தில் இருக்கிறது.
கோதையையும் பெரியாழ்வாரையும் பற்றிப் பின் வந்தவர்கள் பாடிய பாடல்கள் அனந்தம். அவைகளில் கோதையைப் பற்றி உய்யக் கொண்டார் பாடிய பாடல் பிரசித்தம்.
அன்னவயல் புதுவை
ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை
பல்பதியம்,-இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்
நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்பது பாடல். நாமும் பெருமாளுக்குப் பூமாலையும், நமக்குப் பாமாலையும் பாடிக் கொடுத்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை வாழ்த்தி வணங்கி ஊர் திரும்பலாம்.
18.சங்கரன் கோயில் சங்கர நாரணர்
கோயமுத்தூர் மாவட்டத்திலே பழைய கோட்டை என்று ஓர் ஊர். பழைய கோட்டையில் இருப்பவர் பட்டக்காரர். அவரைவிடப் பிரசித்தமானது அவருடைய மாட்டுப் பண்ணை. ஆயிரக்கணக்கான காளைகளும் பசுக்களும் கன்றுகளும் அங்கே இருக்கின்றன. நான் கோவையில் இருந்தபோது பட்டக்காரரது பண்ணையைப் பார்க்கச் சென்றேன், பல கண்காட்சிகளில் பரிசு பெற்ற காளைகளையெல்லாம் பார்த்தேன். அங்கே ஓரிடத்தில் பால் கறக்கும் பசுக்கள் நூற்றுக்கு மேலே வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பசுக்களின் கன்றுகளை வேறு ஒரு தனியிடத்தில் பட்டியிட்டு நிறுத்தியிருந்தது. மாலை நாலு அல்லது நாலரை மணி; பால் கறக்கும் நேரம். ஒவ்வொரு பசுவினிடம் ஒரு கறவைக்காரன், பின்னர் பட்டியிலுள்ள கன்றுகளை அவிழ்த்து விட்டு விட்டனர். கன்றுகளெல்லாம் துள்ளிக் கொண்டு வந்தன. ஒவ்வொரு கன்றும் அதனதன் தாய்ப் பசுவை நோக்கி ஓடின: மடியில் முட்டிப் பால் குடித்தன. ஒரு கன்றுகூடத் தவறி வேறு தாய்ப் பசுலினை நாடவில்லை. இதே போல் ஆயிரம் பசுக்கள் நிற்கும் இடத்திலும் கன்று ஒன்றை அவிழ்த்து விட்டால் போதும். அது அத்தனை பசுக்களிடையேயும் புகுந்து சென்று தன் தாய்ப் பகவைக் கண்டுபிடித்து விடும். இந்தப் பண்ணையில் இந்த அதிசயத்தைப் பார்த்ததும், கவிச் சக்கரவர்த்தி கம்பன் பாடிய பாடல் ஒன்று என் ஞாபகத்துக்கு வந்தது.
தாய் தன்னை அறியாத கன்றில்லை
தன் கன்றை
ஆயும் அறியம், உலகின் தாயாகி
ஐய! நீ அறிதி எப்பொருளும்
என்று இறைவன் தாய் ஆகி உலக மக்களைப் புரக்கும் அருமையைப் பாடுகிறான் கம்பன். தாய்த் தன்மையிலும் தலைசிறந்த தாய்த் தன்மையாக அவன் கருதுவது பசுவுக்கும் கன்றுக்கும் உள்ள தொடர்பைத்தான். நாம்தான் பார்த்தோமே, ஒரு பசுவின் கன்று தன் தாயை ஆயிரம் பசுக்களிடையே நின்றாலும் கண்டு கொள்வதை. அதே போல் தன் கன்றையும் ஆயிரம் கன்றுகளிடையே நின்றாலும் தெரிந்த கொள்ளும் பசு. இது ஓர் அதிசய அறிவுதானே. அந்த அறிவை உடையவள் உலகு புரக்கும் அன்னை. ஆம், அதனாலே ஒரு பெயர் ஆவுடையாள்-கோமதி என்று. பசுக்களாகிய உயிர்களைத் தன் உடைமையாகக் கொண்டு காப்பாற்றுகிறவள் ஆவுடையாள். இந்த ஆவுடையாள் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் சங்கரன் கோயில், அந்தச் சங்கரன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. சங்கரன் கோயில் திருநெல்வெலி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலூகாவின் தலை நகரம். நிரம்புப் பெரிய ஊரும் அல்ல, சிறிய ஊரும் அல்ல. தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்- தென்காசி லயனில் இருக்கிறது. ஆதலால் தென்பிராந்திய ரயில்வேயில் விருதுநகர்-தென்காசி லயனில் இருக்கிறது. அதனால் அந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு போய் இறங்கி ஒரு மைல் நடந்தால் கோயில் வந்து சேரலாம். இல்லை, காரிலேயே போவதானால் திருநெல்வேலியிலிருந்து 35 மைல் வடமேற்காய்ப் போக வேணும். வடக்கே இருந்து வருவதானால், மதுரை ஸ்ரீ வில்லிப்புத்தூர் ராஜபாளையம் ரோடு வழியாய் வரவேணும். இந்த வழி வந்தாலும் நல்ல பஸ் வசதியும் உண்டு.
கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அழகு செய்கிறது! ஒன்பது தட்டுகளை உடைய இந்தக் கோபுரம் 125 அடி உயரம் இருக்கிறது. இக் கோபுரத்தின் ஒன்பதாவது தட்டிலே ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மானி அங்குள்ள இயந்திரத்தின் துணைகொண்டு இரண்டு நாழிகைக்கு ஒரு முறை அடிக்கிறது. அதனால் அதனை நாழிகைக் கடிகாரம் என்று வழங்கியிருக்கின்றனர். சென்ற ஐம்பது ஆண்டுகளாகக் கடிகாரம் ஓடுகிறதில்லை மனியும் அடிக்கிறதில்லை.
கோபுரத்தின் முன்பு ஒரு பெரிய மண்டபம். இக்கோயில் மூன்று பெரும் பகுதி களாக இருக்கிறது. தெள் புறத்தில் சங்கர
சங்கர நாராயணன்
லிங்கர் சந்நிதி. வடபுறத்தில் கோமதி அம்மையின் திருக்கோயில். இருவருக்கும் இடையே சங்கர நாரணர் சந்நிதி. கோபுர வாயிலில் துழைந்து நடந்தால் நாம் முதலில் சென்று சேர்வது சந்நிதியில் தான், சங்கரலிங்கர் புற்றிடம் தோன்றியவர். ஆதலால் அவரை வன்மீகநாதர் என்றும் அழைப்பர். ஆதியில் இந்த இடம் முழுதும் புன்னைவனமாக இருந்திருக்கிறது. வனத்தைக் காத்து வந்த காவல் பறையன் அங்கிருந்த புற்றை வெட்ட, புற்றில் ஒரு பாம்பும் லிங்கமும் இருந்திருக்கின்றன. இந்தத் தகவலைத் திருநெல்வேலியை அடுத்த மணலூரில் இருந்து அரசாண்ட உக்கிர பாண்டியனிடம் சொல்ல, உக்கிர பாண்டியன் காட்டை வெட்டித் திருத்தி நாடாக்கிக் கோவிலையும் கட்டியிருக்கிறான், காவல் பறையன் சொல்வதற்கு முன்பே உக்கிர பாண்டியனின் பட்டத்து யானையும் கொம்பினால் தரையைக் குத்தியிருக்கிறது. அந்த இடத்திலிருந்து மன் எடுத்து வந்தே திருவிழா எல்லாம் நடத்தியிருக்கிறான் பாண்டியன்,
யானை கொம்டால் குத்திக் காட்டிய இடமே பெருங்கோட்டூர் என்று வழங்குகிறது. காவல் பறையனுக்கும் ஊரின் தென் கோடியில் ஒரு சிறு கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் இருக்கும் தெருவே காப்பறையன் தெரு என்றும் இன்று வழங்குகிறது. காவல் பறையன், உக்கிர பாண்டியன் சிலைகள் எல்லாம் கோயிலில் இருக்கின்றன, சங்கரலிங்கர் கோயிலின் வடமேற்கு மூலையில் புற்றும் இருக்கிறது. புற்றைச் சுற்றிக் கட்டிப் பாதுகாத்து வருகின்றனர். இந்தத் தலத்துக்கு வருவோரது உடற்பிணியெல்லாம் இந்தப் புற்று மண்ணால் நீங்குகிறது. ஆதலால் கோயிலில் பிரசாதமாகவே இப்புற்று மண்னை வில்லைகளாக ஆக்கிக் கொடுக்கின்றனர்.
இக்கோயிலில் உள்ள சங்கர லிங்கரைவிடப் பிரபலமானவள் கோமதி அம்மையே. முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கும் தாயாகிய தத்துவத்தை. கோமதியம்மை வடிலில் இங்குக் கோயில் கொண்டிருக்கிறது அந்தத்தத்துவமே கிட்டத்தட்ட இரு நூறு வருஷங்களுக்கு முன்பு திருவாவடுதுறையில் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் வேலப்ப தேசிகர். அவர் சங்கரன் கோயிலுக்கு வந்து, கோமதியம்மையின் அருளைத் துணைக்கொண்டு, குட்டம், குன்மம் முதலிய் தீராத நோய்களையும் தீர்த்தருளியிருக்கிறார். அவர் கோமதியம்மையின் சந்நிதியில் ஒரு மந்திர சக்கரத்தைப் பதித்திருக்கிறார். அந்தச் சக்கரத்துக்கு கோமதியம்மை தந்தருளிய சக்தியினாலே அங்கு ஆடாத பேயும் ஆடுகிறது தீராத நோயும் தீர்கிறது. ஆதலால் கோமதி அம்மையின் - பிரபாவம் நாளும் வளர்ந்தோங்கி வருகிறது. கோமதியின் சந்நிதிக்கெதிரேதான் நாகசுனைத் தீர்த்தம் இருக்கிறது.
சங்கர லிங்கரும் கோமதியும்தான் ஆதியிலேயே தோன்றிய சந்நிதிகள், இடையில் தோன்றியவர்தான் சங்கர நாராயணர். உலகில் உள்ள மக்களுள் சிவனை வழிபடும் சைவர்கள் உண்டு. விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள் உண்டு. இவர் ஏதோ அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை மட்டும் வழிபட்டார்கள் என்று இல்லை. ஒருவர் மற்றவரைக் குறை கூறுவது, அவர்களோடு வாதிடுவது என்று நெடுகிலும் வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரன் அதிகன் என்று சைவர் சொன்னால், இல்லை உலகளந்த அரி அதிகன் என்றே வாது செய்திருக்கிறார் வைஷ்ணவர். 'ஆலம் உண்டான் எங்கள் நீலகண்டன்' என்று சைவர் வீறாப்புக் கூறினால் வைஷ்ணவரும் விட்டுக் கொடுக்காமலேயே 'அண்டம் உண்டபோது அந்த ஆலம் உண்ட கண்டனையும் கூட உண்டிருக்கிறான் எங்கள் மால்' என்று பேசியிருக்கிறார்.
மக்களில் மாத்திரம் அல்ல நாகர்களிலும் இச்சைவ வைஷ்னவச் சண்டை நடந்து வந்திருக்கிறது. சங்கரன், பதுமன் என்று இரண்டு நாகர்கள். சங்கரன் சிவபக்தன், பதுமன் விஷ்ணு பக்தன். இவர்களுக்குள்ளும் இந்த வாதம். இப்படிப் பலர் வாதிட அன்னை கோமதிக்கே, ஆம், பார்வதிக்கே சந்தேகம் வந்துவிடுகிறது. இருவரும் ஒருவரேதாமா, இல்லை வேறு வேறு நபர்கள்தாமா என்று. இதைக் கேட்டிருக்கிறாள் அவள் இறைவனிடம், அவர் என்ன அவ்வளவு எளிதில் விடை சொல்லி விடுவாரா? மண்ணுலகத்தில் புன்னை வனத்தில் சென்று தவமிருக்கச் சொல்லியிருக்கிறார். அப்படியே அன்னையும் அங்கு வந்து தவம் கிடக்கிறாள். ஆடி மாதம் பௌர்ணமி அன்று சங்கரனார் சங்கர நாராயணர் உருவில் வந்து அம்மைக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். சங்கரன் கோயிலில் சிறப்பாக நடைபெறும் ஆடித் தவசு உற்சவம், இந்தச் சங்கர நாராயணர் காட்சியை விளக்க எழுந்ததே. இந்த சங்கர நாராயணர் கோலத்தைத்தான் பொய்கை ஆழ்வார்,
அரன் நாரணன் நாமம்
ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை: உறையும்
கோயில் - வரைநீர்
கருமம் அழிப்ப அளிப்பு
கையில் வேல் நேமி
உருவம் கார் மேனி ஒன்று
என்று பாடிப் பரவியிருக்கிறார். இதனால் அரி, அரன் எல்லோரும் ஒன்றே, அயனும் அரியும் அரனார் திருவுருவில் அடங்கினவரே என்ற உண்மை நிலைபெற்றிருக்கிறது. ஆம், அம்பிகை கோமதி மாத்திரம் அல்ல. சங்கரனும் பதுமனுமே இச் சங்கர நாராயணர் காட்சியைக் கண்டு உண்மையை உனர்ந்த கொண்டிருக்கின்றனர்.
ஐய! நின் கூறே மாலும்
அயன் முதல் தேவும் என்னும்
மெய்யுணர்வே எஞ்ஞான்றும்
விளைவுற வேண்டும்
என்று நாமேல்லாரும் சேர்ந்து பாடவும் தெரிந்து கொண்டிருக்கிறாேம், இந்தச் சங்கர நாராயணரே, அத்தன் சங்கர லிங்கருக்கும் அம்மை கோமதிக்கும் இடையில் எழுந்தருளியிருக்கிறார். மூலவர் கம்பீரமான வடிவர். அதிலும் பகுதி பகுதியாகக் காப்பிட்டுக் காட்டும்போது இரண்டுருவும் ஒன்றாய் இனைந்து நிற்கிற கோலம் பேரழகு.
இந்தச் சங்கர நாராயணரைப் பற்றி ஒரு சுவையான வரலாறு. கி.பி. 17Ti-ல் திருமலை நாயக்கரது தானாதிபதியாக இந்த வட்டாரத்தில் இருந்தவர் பொன்னம்பலம் பிள்ளை. அப்போது நாயக்கரது தளவாயாக இருந்தவர் ஆறை அழகப்ப முதலியார். சங்கரன் கோயில் சங்கர நாராயணரைச் செண்பசுக் கண்ணு பட்டர் என்பவர் திருடிக் கொண்டு போய் உத்தரகோச மங்கையில் அடகு வைத்துவிட்டார். ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாதத் தேவர் அத்திருவுருவைக் கோயில் மூர்த்திகளுடன் வைத்துப் பூசை செய்ய உத்தரவிட்டிருந்தார். இத்தகவல் அறிந்து ஆறை அழகப்ப முதலியார் பொன்னம்பலம் பிள்ளையை அனுப்பித் திருவுருவை மீட்டு வரச்சொல்லியிருந்தார். பொன்னம்பலம் பிள்ளை உத்தரகோச மங்கை சென்று திருவுருவைக் கண்டு ஒரு பாட்டுப் பாடினார்;
புற்றெங்கே! புன்னை
வனம் எங்கே? பொற்கோயில்
சுற்றெங்கே? நாக
சுனை எங்கே?-இத்தனையும்
சேரத்தான் அங்கிருக்கத்
தேவரீர் தான் தனித்தித்
தூரத்தே வந்தென்ன சொல்.
உடனே பெருமானும்.
விள்ளுவமோ சீராசை
வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளில் செண்பகக்கண்
நம்பியான்-மெள்ளவே
ஆடெடுக்கும் கள்ளரைப்போல்
அஞ்சாத எமைக் கரிசல்
காடுதொறுமே இழுத்தக்கால்
என்று பாடியிருக்கிறார். இவ்விஷயம் சேதுபதி காதில் விழ, பொன்னம்பலம் பிள்ளை மூலமே திரும்பவும் மூர்த்தியைச் சங்கரன் கோயிலுக்கு அனுப்பியிருக்கிறார்.
உக்கிர பாண்டியர் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். அக்காலத்தே கருவை நகரில் உள்ள பிரகத்துவஜ பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்திருக்கிறார். இத்தலத்துக்கு ஒரு புராணம். சீவலமாற பாண்டியன் பாடியிருக்கிறார். அவர் இவ்வூரில் ஒரு குளம் வெட்டியிருக்கிறார். அது சீவலப்பேரி என்ற பெயரில் உடைகுளமாக இருக்கிறது. அவர் பெயராலேயே சீவலராயன் ஏந்தல் என்ற ஊரும் எழுந்திருக்கிறது.
மூவர் முதலிகள் இக்கோயிலுக்கு வந்து பதிகங்கள் பாடியதாக வரலாறு இல்லை. அன்பர் ஒருவர் சங்கர சதாசிவமாலை என்று ஒரு நூல் இயற்றியிருக்கிறார். எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. அன்னையின் அருள் சக்தியை உணர்ந்த திருநெல்வேலி அழகிய சொக்கநாதபிள்ளை பாடல்கள் பிரசித்தமானவை. அதில் ஒரு பாட்டு, அன்னைக்கே சவால் விடும் பாட்டு.
கேடாய் வரும் நமனைக்
கிட்ட வராதே தூரப்
போடா எனவோட்டி உன்
பொற் கமலத்தாள் நிழற்கீழ்
வாடா என அழைத்து
வாழ்வித்தால் அம்ம! உனைக்
கூடாதென்று ஆர் தடுப்பார்?
கோமதித்தாய் ஈசுவரியே!
என்பது பாட்டு, எவ்வளவு உறுதியான உள்ளத்தில் இருந்து பிறந்திருக்கிறது. யமனையே தூரப் போடா என்று ஓட்டி, தன்தாள் நிழலுக்கு வாடா என அன்னையால் அழைக்க முடியாதா என்ன? ஆம்! அப்படி அழைப்பாள் என்று நம்புகிறான் கவிஞன், நாமும் அப்படி நம்பிக் கொண்டே வீடு திரும்பலாம்.
19. குற்றாலத்துறை கூத்தன்
சென்னை கிறிஸ்தவ கலாசாலையில் அன்று இருந்த பேராசிரியர்களில் பலர் ஸ்காட்லாந்து தேசத்தவர். அந்தக் கல்லூரியில் ஒரு விழா. விழாவுக்கு கல்லூரியின் பழைய மாணவரான ரஸிகமணி டி. கே. சி. யை அழைத்திருந்தார்கள் விழா நடக்கும் போது டி. கே. சி. யின் பக்கத்தில் ஒரு பேராசிரியர் உட்கர்ந்திருந்தார். இருவரும் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். பேராசியருக்கு இந்தியர்கள், அதிலும் தமிழர்கள் என்றால் என்னவோ ஏளனம். பேச்சோடு பேச்சாகக் கேட்டார் அவர் கே. சி. யிடம்: “நாங்கள் இயற்கையை மிகவும் மதிப்பவர்கள். மரங்கள் என்றால் எங்களுக்கு மிக மிகப்பிரியம். நீங்கள் அப்படி இல்லைதானே?” என்று. அதற்கு டி. கே. சி. சொன்ன பதில் இதுதான். “மரங்களிடம் எங்களுக்குப் பிரியம் கிடையாது. அதனிடம் நாங்கள் பக்தியே செலுத்துகிறோம். எங்கள் கோயில் எல்லாம் ஒவ்வொரு மரத்தைச் சுற்றியே எழுந்திருக்கிறது. ஏன், மரத்தையே கடவுளாகப் பாவிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள் நாங்கள். நான் இருக்கும் குற்றாலத்திலே கோயிலுள் இருப்பது ஒரு பலாமரம். மரத்தின் இலை பலாப்பழம், பழத்துக்கு உள்ளிருக்கும் சுளை, சுளைக்குள்ளிருக்கும் கொட்டை எல்லாவற்றையுமே சிவலிங்க வடிவில், இறைவனது வடிவில் கண்டு மகிழ்கிறவர்கள் நாங்கள்” என்றெல்லாம் சொன்னார். மேற்கோளாக,
கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம்
சதுர்வேதம், கிளைகள் ஈன்ற
களை எலாம் சிவலிங்கம், கனி எலாம்
சிவலிங்கம், கனிகள் ஈன்ற
சுளை எலாம் சிவலிங்கம், வித்து எலாம்
சிவலிங்க சொரூபமாக
விளையும் ஒரு குறும்பலாவின் முளைத்து எழுந்த
சிவக் கொழுந்தை வேண்டுவோமே!
என்ற பாடலையும் பாடிக் காட்டியிருக்கிறார். ஆம், மரங்களை விரும்புவதோடு நிற்காமல் அவைகளையே சிவலிங்க சொரூபமாக வழிபடவே தெரிந்தவர்கள் தமிழர். அப்படி வழிபாடு இயற்றுவதற்கு உரிய வகையில் இருப்பதுதான் குறும்பலா. அந்தக் குறும்பலா இருக்கும் தலம்தான் குற்றாலம். அந்தத் திருக்குற்றாலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று. திருக்குற்றலாம் எங்கிருக்கிறது. என்று சாரல்கால சமயத்தில் நான் சொல்லித் தெரிய வேண்டியவர்கள் அல்ல நீங்கள், தென்காசிக்கு ஒரு டிக்கெட் வாங்கி அங்கு போய் இறங்கி மேற்கு நோக்கி மூன்று மைல் சென்றால் குற்றாலம் போய்ச் சேரலாம். இப்போதுதான் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும், தூத்துக் குடியிலிருந்தும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் வேறு விடப்படுகின்றனவே. கோடை க்காலத்தில் உதகை, கோடைக் கானல் என்
குற்றாலம் அருவி
றெல்லாம் செல்லும் சுகவாசி களைவிட எண்ணி றந்தோர் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் குற்றாலம் நோக்கிச் செல்வார்கள். குற்றாலத்தின் பெருமை எல்லாம் அது ஒரு சுகவாசஸ்தலம் என்பதினால் மட்டும் அல்ல. அங்குள்ள அருவியில் நீராடி மகிழலாம் என்பதினால்தான், உலகில் குற்றாலத்தை விடப் பிரும்மாண்டமான, அழகிய நீர்வீழ்ச்சிகள் எத்தனை எத்தனையோதான். என்றாலும், இப்படி உல்லாசமாக அருவிக்குள்ளேயே நுழைந்து நீராடும் வசதியுடையது அதிகம் இல்லை. அப்படிக் குளிப்பதற்கு வசதியாய், உடலுக்கும் உள்ளத்துக்குமே ஒரு மகிழ்ச்சி தருவதாய் அருவி அமைந்திருப்பதினால்தான் இந்தத் தலத்துக்கே ஒரு சிறப்பு. ஆதலால் நாமும் குற்றாலம் சென்றதும் நேரே அருவிக்கரைக்கே சென்றுவிடுவோம். பஸ் ஸ்டாண்டிலிருந்து கொஞ்ச தூரம் சென்றதும் சிற்றாறு வரும். அதன்மேல் கட்டியிருக்கும் பாலத்தின் வழியாகக் கோயில் வாயில்வரை சென்று அதன்பின். அருவிக்கரை செல்லலாம். இப்போதெல்லாம் சிற்றாறைக் கடக்காமலேயே நேரேயே அருவிக் கரை செல்ல நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். நாம் அந்த வழியிலேயே செல்லலாம்.
குற்றாலமலை ஐயாயிரம் அடி உயரமே உள்ள மலை, இம்மலை மூன்று சிகரங்களையுடைய காரணத்தால் திரிகூட மலை என்று வழங்கப்படுகிறது. இச்சிகரங்களில் உயர்ந்தது 5135 அடி உயரமுள்ள பஞ்சந்தாங்கி. இம்மலையில் உள்ள காடுகளுக்குச் செண்பகக்காடு என்று பெயர் உண்டு. மலை முழுதும் நல்ல மரங்களும் செடி கொடிகளும், வளர்ந்துநிற்கும் மூலிகைகளும் நிறைந்திருக்கின்றன என்பர். இந்த மலையிலிருந்து குதித்துக் குதித்து வருகிறது. சிற்றாறு. மிக்க உயரத்தில் இருப்பது தேனருவி, அடுத்தபடியாக, செண்பகதேவி அருவி. அதன் பின்தான் நாம் வந்து சேர்ந்திருக்கும் வட அருவி. இங்கு தான் இருநூறு அடி உயரமுள்ள மலையிலிருந்து அருவி குதிக்கிறது. இந்த இருநூறு அடியும் ஒரே வீழச்சியாக இல்லாமல் இடையில் உள்ள பாறைகளில் விழுந்து வருவதால் வேகம் குறைந்து குளிப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது. முதலில் இவ்வருவி பொங்குமாங்கடலில் விழுகிறது. அங்கிருந்தே பின்னர் கீழே நீர் வழிகிறது. குளிப்பதற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. அருலியாடும் அனுபவம் ஓர் அற்புத அனுபவும். அது சொல்லும் தரத்தன்று. ஆகவே அருவியாடி திளைத்து அதன்பின் கோயில் வாயில் வந்து கோயிலுள் நுழையலாம். அருவிக் கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரம்தான் கோயில் வாயில், கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. கோயிலில் நுழைந்தால் விஸ்தாரமான மண்டபம் இருக்கிறது முதலில் இதனையே
கோயில்
திரிகூட மண்டபம் என்பர். இதனைக் கடந்தே நமஸ்கார மண்டபம், மணி மண்டபம் எல்லாம் செல்லவேணும். இதற்கு அடுத்த கருவறையில் தான் திருக்குற்றாலநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். இவர் ஆதியில் விஷ்ணுவாக இருந்தவர். பின்னர் அகத்தியரால் சிவலிங்கமாக மாற்றப்பட்டார் என்பது புராணக்கதை.
இறைவன் இட்ட கட்டளைப்படி வடநாடிருந்து அகத்தியர் தென்திசைக்கு வருகிறார். அப்போது இக்குற்றாலநாதர் கோயில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. அகத்தியர் சிவனடியார் கோலத்தில் வந்திருந்தார் என்பதற்காக அவரைக் கோயிலுள் செல்ல அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. ஆதலால் மனம் உடைந்து அகத்தியர் திரும்பி, சிறிது தொலைவில் உள்ள இலஞ்சி சென்று, அங்குள்ள முருகனை வணங்குகிறார். அந்த முருகன் இந்த அர்ச்சகர்களை வஞ்சனையால் வெல்ல வழி சொல்லிக் கொடுக்கிறான். அவன் சொல்லிக் கொடுத்த வண்ணமே துவாதச நாமம் தரித்து, பரமவைஷ்ணவராக மறுநாள் அகத்தியர் கோயிலுக்கு வருகிறார். அர்ச்சகர்களும் ஏமாந்து உள்ளே அனுமதித்து விடுகிறார்கள். உள்ளே சென்றவர் தாமே விஷ்னுவுக்குப் பூசை செய்வதாகச் சொல்லி, மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கதவைச் சாத்திக் கொண்டு, நின்ற கோலத்தில் இருந்த பெருமாளை தலையில் கைவைத்து ஓர் அமுக்கு அமுக்கி, 'குறுகிக் குறுகுக' எனக் கைலாய நாதனை நினைக்கிறார், அப்படியே அவரும் குறுகிக் குற்றாலநாதார் ஆகிவிடுகிறார். அகத்தியரால் இப்படி மாற்றப் பெற்ற இறைவனை அகஸ்தியரே பாடித் துதிக்கிறார். பாட்டு இதுதான்.
முத்தனே! முவரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்
பத்தியின் எல்லை காக்கும்
பகவனே! திகிரியாளா!
சுத்தனே! அருள் சூல் கொண்ட .
சுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோல
நாடுதற்கரிய நம்பி!
இந்தப் பாட்டைப் படித்தால் இதில் உள்ள துதி விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பொருத்தமாயிருப்பதைப் பார்க்கலாம். இட்படிப் பாடிக்கொண்டு வந்ததினாலே தான் வைஷ்ணவ அர்ச்சகர்கள் ஏமாந்திருக்கிறார்கள். இப்படி ஆதியில், விஷ்ணுவாகவும், பின்னர் சிவனாகவும் மாறிய இறைவனே திருக்குற்றால நாதன். நாமும் இரண்டு பெருமான்களையும் நினைத்தே வணங்கித் திரும்பலாம். குற்றால நாதருக்கு வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் குழல்வாய் மொழி அம்மை கோயில் கொண்டிருக்கிறாள், நின்ற கோலத்தில் அங்கிருந்து காட்சி தருகிறாள். அம்மையின் கோயிலுக்குத் தென்புறத்தில்தான் தலவிருட்சமான குறும்பலா. நான்கு வேதங்களுமே தவம் செய்து இப்படிப் பலாமரம் ஆயிற்று என்பர். இப்பலா மரத்தடியிலே ஒரு லிங்கம். இம்மரத்தில் பழுக்கிற பலாப்பழத்தை எவரும் பறிப்பதில்லை, குற்றாலத்திலே உள்ள குரங்குகளே கீறித் தின்னும் என்பர். இவ்விரு கோயில்களையும் சுற்றியள்ள மேலப் பிராகாரத்திலே தான் நன்னகரப்பெருமாள், நெல்லையப்பர், மனக்கோலநாதர், நாறும்பூநாதர் முதலியோர் கோயில் கொண்டிருக்கின்றனர்
குற்றாலத்தில் இறைவன், குற்றாலம், கோவிதாஸ், சமருகம் என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே எழுந்தருளியிருத்தலால் அம்மரத்தின் பெயரே தலத்தின் பெயர் ஆயிற்று என்பர். கு என்றால் பூமியாகிய பிறவிப் பிணி, தாலம் என்றால் தீர்ப்பது. ஆகவே பிறவிப்பிணி தீர்க்கும் தலம் ஆனதால் குத்தாலம் ஆகி குற்றாலம் என்று திரிந்தது என்றும் கூறுவர். ஆதி சக்தி மூவரைப் பயந்த தலமாதலால் இத்தலத்துக்குத் திரிகூடம் என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் கூறும். அதற்கேற்பவே, கோயிலுள் வடபக்கத்தில் பராசக்திக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. இங்கே பராசக்தி யோகத்தில் இருப்பதால் இதனை யோகபீடம் என்றும், உலகம் எல்லாம் தோன்றுவதற்கு மூலமாயிருத்தலால் தரணி பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பராசக்தியே அரி, அயன், அரன் என்னும் மூவரையும் ஒவ்வொரு கர்ப்பத்தில் பயந்தாள் என்பதைக் குறிக்கத்தானு மாலயன் பூந்தொட்டில் இச்சந்நிதியில் ஆடிக் கொண்டிருக்கிறது.
இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்திருக்கிறார். குற்றாலத்துக்கு ஒரு பதிகமும், குறும்பலாவுக்கு ஒரு பதிகமும் பாடியிருக்கிறார்.
வம்பார் குன்றும் நீடு உயர்
சாரல் வளர் வேங்கை
கொம்பார் சோலைக் கோல வண்டு
யாழ் செய் குற்றாலம்
என்றும் மலையார் சாரல் மகவுடன்
வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி
மாந்தும் குற்றாலம்
என்றும் குற்றாலத்தைப் பாடிப் பரவியவர்,
அரவின் அணையானும் நான்முகனும்
காண்பரிய அண்ணல் சென்னி
விரவிமதி அணிந்த விகிர்தருக்கு
இடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருக்கையும் மல்லிகையும்
சண்பகமும் மலர்ந்து மாந்தக்
குரவமுறுவல் செய்யும் குன்றிடம்
சூழ்தண் சாரல் குறும்பலாவே
என்று குறும்பலாவையும் பாடியிருக்கிறார். நாவுக்கரசர், 'குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் யாருளர்?' என்றே கேட்கிறார்.
மணிவாசகரோ,
உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
சுற்பனவும் இனிபமையும்
குற்றாலத்தமர்ந்து உறையும்
கூத்தா உன்குரை கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே
என்று கசிந்து கசிந்து பாடியிருக்கிறார். கபிலரும் பட்டினத்தடிகளும் குற்றாலத்தானை நினைந்து பாடிய பாடல்களும் உண்டு.
இத்தலத்தில் நிறைய கல்வெட்டுகள் உண்டு. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட பரகேசரிவர்மன் என்னும் முதல் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு சோழ நாட்டுடன் இணைந்திருக்கிறது. இன்னும் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஏற்படுத்திய நிபந்தங்களை யெல்லாம் குறிக்கும் கல்வெட்டுகள் உண்டு. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பல திருப்பணிகள் செய்திருக்கிறான். இப்படிச் சோழரும் பாண்டியருமாகக் கட்டிய கோயிலை, சொக்கம்பட்டி குறுநில மன்னர்களும் விரிவுபடுத்திப் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். குழல்வாய் மொழி அம்மை கோயிலைத் தேவகோட்டை காசி விசுவநாதன் செட்டியார் குடும்பத்தினர் திருப்பணி செய்திருக்கின்றனர். கோயிலில் திருப்பணி வேலைகளை இப்போதும் செவ்வனே செய்து வருகின்றனர்.
இக்கோபிலை விட்டு வெளியே வந்ததும் நேரே ஊர் திரும்ப முடியாது. கோயிலுக்கு வடபுறம்தான் இத்தலத்தில் பிரசித்தி பெற்ற சித்திர சபை இருக்கிறது. அம்பலக் கூத்தன் ஐந்து திருச்சபையில் அவள் கூத்தை ஆடியிருக்கிறான். திருவாலங்காட்டில் ரத்ன சபையிலும், சிதம்பரத்தில் பொன்னம்பலத்திலும், மதுரையில் வெள்ளியம்பலத்திலும், திருநெல்வேலியில் தாமிர சபையிலும் ஆடிய பெருமான் இத்தலத்தில் சித்திர சபையில் நின்று நிருத்தம் ஆடியிருக்கிறார். ஐந்தருவிக்குச் செல்லும் ரோட்டில், ரஸிகமணி டி. கே, சி நினைவு இல்லத்துக்குக் கீழ்ப்புறமாகச் செல்லும் பாதையில் சென்றால் சித்திர சபை சென்று சேரலாம். இச்சபையே தெப்பக் குளத்துடன் கூடிய ஒரு பெரிய கோயில். கோயில் முழுதும் சித்திரங்களால் நிறைந்திருக்கின்றன. பெருமானும் இங்கே சித்திர உருவிலேயே அமைந்து ஆடும் காட்சி தருகிறார். ஆதலால் சித்திர சபையைக் காணாது திரும்பினால் திருக்குற்றாலத்தைப் பூரணமாகக் கண்டதாகக் கூறமுடியாது.
குற்றாலநாதர், குழல்வாய் மொழி, குற்றாலத்துக் கூத்தர் எல்லோரையும் பார்த்தபின் அவகாசமிருந்தால் வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள இலஞ்சிக் குமரனையும் காணலாம். இன்னும் நாலு மைல்கள் வடக்கே சென்று திருமலை சென்று மலை ஏறி அங்கு கோயில் கொண்டிருக்கும் முருகனையும் வணங்கலாம்.
குற்றாலம் செல்லும் இலக்கிய ரசிகர்கள், கையோட கையாகக் குற்றாலக் குறவஞ்சியை எடுத்துப் போக மறக்க வேண்டாம். அத்தலத்தில் இருந்து கொண்டு,
வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு
வான்கவிகள் கெஞ்சும்
தேனருவித் திரை எழும்பி -
வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும்
தேர்க்காலும் வழுகும்
என்றெல்லாம் பாடல்களைப் படித்துப் பாருங்களேன். ஒரு புதிய உலகமே உங்கள் கண்முன் வராதா என்ன?
20. தென்காசி விசுவநாதர்
தென் பாண்டி மண்டலத்திலிருந்து அரசாண்ட பாண்டிய மன்னர்களில் பராக்கிரம பாண்டியன் என்று ஒரு மன்னன். இவன் தன் மனைவியுடன் காசி சென்று விசுவநாதரைத் தரிசிக்கிறான். தரிசித்து விட்டுத் திரும்பும் வழியில் மதுரை சொக்கலிங்கப் பெருமானையும் வணங்கி வழிபடுகிறாான். அன்றிரவு கனவில் சொக்கர் 'உன் ஊர்ப் பக்கத்திலும் ஒரு காசி கான்' என்று அருளுகிறார். அரசன் நினைக்கிறான், காசியில் இறக்க முத்தி என்கிறார்களே என்று. எத்தனை வயோதிகர்கள் தமிழ் நாட்டிலிருந்து அந்தத் தொலை தூரத்திலுள்ள காசிக்குச் செல்கிறார்கள். அப்படிப் போக இயலாதவர்களுக்கெல்லாம் முத்திப் பேறு வாய்ப்பதாக இல்லையே. காசி விசுவநாதான் எவ்வளவோ கருணை உடையவன் ஆயிற்றே, தன்னிடம் வர இயலாதவர்களைத் தேடி அவன் வருதல் கூடாதோ என்று எண்ணியிருக்கிறான். அந்த எண்ணம் காரணமாகவே தென் காசி ஒன்றை நிர்மானிக்கத் திருவுளங் கொள்கிறான். ஓர் எறும்பொழுக்கு வழிகாட்ட அந்த வழியிலே சென்றவன் சிற்றாற்றின் கரையிலே ஒரு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் காண்கிறான். தான் விரும்பியபடியே காசி லிசுவநாதர்தான் அங்கு எழுந்தருளியிருக்கிறார் என்று உளம் பூரித்து அந்த விகவநாதருக்கு ஒரு கோயில், அந்தக் கோயிலைச் சுற்றி ஒரு நகரம் என்றெல்லாம் அமைக்கிறான். அந்தக் கோயில் கட்டி முடிய ஆறு வருஷங்கள் ஆகியிருக்கின்றன. தன் கஜானாலில் உள்ள பொன்ளையும் பொருளையும் கொட்டிக் குலித்துக் கோயிலைக் கட்டுகிறான். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, கோபுரம், விமானம். மதில் எல்லாவற்றையும் அமைக்கிறான், காசி விசுவநாதரையும் அங்கு எழுந்தருளப் பண்ணுகிறான். கும்பாபிஷேகத்துக்கு என்று ஒரு நாளையும் குறிப்பிடுகிறான். அன்று கோயிலில் ஜே ஜே' என்று மக்கள் எல்லாம் சூழுமியிருந்தனர். பராக்கிரம பாண்டியன், மந்திரி பிரதானிகள் புடைசூழக் கோயிலுக்கு வருகிறான். வந்தவன் விசுவநாதர் சந்நிதிக்கு எதிரே தரையில் விழுந்து வணங்குகிறான். அவன் அப்போது யாரை வணங்குகிறான் என்பது கேள்வி. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் விசுவநாதரையா? இல்லை, கோயில் கட்டத் தனக்குத் துணை புரிந்த தன் குடி மக்களையா? இத்தனை கேள்விக்கும் பதில் சொல்வதுபோல, அரசனுடன் வந்த புலவர் ஒரு பாட்டுப் பாடுகின்றார்.. அவர் பாடிய பாட்டு இதுதான்.
ஆராயினும் இத்தென்காசி
மேவு பொன் ஆலயத்து
வராததோர் குற்றம் வந்தால்
அப்போது அங்கு வந்து அதனை
நேராகவே திருத்திப் புரப்பார்
தமை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே
அரசனது உள்ளத்தை நன்குணர்ந்த கவிஞன் பாடி விட்டான், பாட்டும், பாட்டில் உள்ள கருத்தும் பராக்கிரம பாண்டியன் உள்ளத்தில் உள்ளதையே சொல்லியிருக்கிறது என்ற காரணத்தால் அரசன் அதனை அங்கீகாரம் செய்து அந்தப் பாடலைக் கோபுர வாயிலில் கல்லில் பொறித்து வைக்கிறான். உண்மைதானே? கோயில் கட்டுவது எளிது. அதைச் சரியாகப் பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? அதிலும் அந்தக் கோயிலுக்குத் தீங்கு ஒன்று நேர்ந்து அந்தத் தீங்கை நிவர்த்தி செய்து திருத்தி அமைப்பது என்பது எவ்வளவு பெரிய சேவை. அப்படி எதிர்காலத்தில் சேவை செய்பவர்களையே நினைத்து விழுந்து வணங்கியிருக்கிறான் பராக்கிரமன். ஐயகோ! விசுவநாதர் ஆலயத்துக்கு, ஆலயத்தை அணி செய்யும் ராஜகோபுரத்துக்கு, வராத் -தீங்கொன்று வந்து, இடிந்திருக்கிறது. ஆனால் அத்தீங்கை நிவர்த்தி பண்ணித் திரும்பவும் கோயில் கட்டுவோர் ஒருவர்தான் இன்னும் தோன்றக் காணோம். (இப்போது அந்தக் குறை நிவிர்த்தி செய்யப்பட்டிருக்கிறது) பராக்கிரம பாண்டியனது நம்பிக்கையை நிலைநிறுத்த ஆள் இல்லாதே போய் விட்டது பெருங்குறைதான். அது காரணமாகவே சிதைந்த கோபுரத்துடன் நிற்கிறது காசி விசுவநாதர் கோயில், தென்காசியில்
பழுதற்ற கோபுரம்-தென்காசி
உள்ள அந்த காசி விசுவநாதர் ஆலயத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
தென்காசி தென் பிராந்திய ரயில்வேயில் ஒரு ஜங்ஷன். வடக்கேயிருந்து ரயிலில் வருபவர் விருதுநகர் தென்காசி லயனில் தென்காசி வந்து சேரலாம். இல்லை காரில் செல்பவர்கள் திருநெல்வேலியிவிருந்து மேற்கே முப்பது மைல் சென்றால் தென்காசி வரலாம். ஊருக்கு நடுவே கோயில், கோயிலை இனம் கண்டு பிடிப்பதுதான் எளிதாயிற்றே, சிதைந்த கோபுரம் எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து விடலாமே. கோயில் பெரிய கோயில், நல்ல சுற்று மதில்களுடன் கூடியது. கிழமேல் 554 அடி நீளமும் தென்வடல் 318 அடி அகலமும் உள்ளது. கோபுர் வாயிலைக் கடந்து உள் சென்றதும் முகப்பு மண்டபம் இருக்கிறது. இம்மண்டபம் ஓர் அரிய கலைக் கூடம் அங்குள்ள எட்டுத் தூண்களிலும் எட்டுச் சிற்ப வடிவங்கள், அகோர வீரபத்திரன், மான் மதன், வேணுகோபாலன், காளி நால்வரும் தென் பக்கத்துத் தூண்களில், வீரபத்திரர், ரதி, மாதாண்டவர், ஊர்த்துவ தாண்டவர் நால்வரும் வடக்கு வரிசையில், இவை தவிர கோவிலைப் பார்க்க மேற்கு முகமாக உள்ள துண்களில் இரண்டு பெண் வடிவங்கள். ஒருத்தி பொட்டிட்டு கொண்டிருக்கும் நிலை. சிற்பக்கலை வல்லுநர்கள் பல மணி நேரம் நின்று பார்க்க வேண்டிய சிலா வடிவங்கள். இம்முகப்பு மண்டபத்தைகக் கடந்து, மகா மண்டபம், மணி மண்டடம் அர்த்த மண்டபம் எல்லாம் செல்ல வேண்டும். அதற்கடுத்த சுருவறையில் தான் காசி விசுவநாதர் இருக்கிறார். இவருக்கு எத்தனை எத்தனையோ பெயர்கள்.
விசுவனே விசுவநாதன்
விசுவேசன், உலகநாதன்,
பசுபதி, சிவன், மயோன்,
பராபரன், முக்கட் பெம்மான்
சிசுவரம் தருவோன், நம்பன்
சிவைமனாளன், ஏற்றோன்
அசுதையார் நீலகண்டன்
அநாதி தென்காசி நாதன்
என்பது தல புராணப் பாடல். இந்த விசுவநாதனைத் தரிசித்து வெளியே வந்துதான், தென்பக்கத்தில் உள்ள விசாலாக்ஷி சந்நிதிக்குச் செல்லவேண்டும். இரண்டு கோவில்களுக்கும் இடையே ஒரு சிறு கோயில், அதன் முகப்பு மண்டபத்திலும் சிற்ப வடிவங்கள், இவை சிறப்பு வாய்ந்தவை அல்ல.
இங்குள்ள மூலக்கோயில் இன்று நெல்சேராக இருக்கிறது. இது ஆதியில் பெருமாள் கோயிலாக இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாளையே ஆற்றங்கரைப் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பெரிய கோயில் கட்டியபின் விஜயநகர மன்னன் அச்சுதன் இப்பக்கம் வந்திருக்கிறான். அவன் தான் இப்பெருமாள் கோயிலை இடையிலே கட்டி வைத்தான் என்று வரலாறு கூறுகிறது. இதற்கும் தென்பக்கத்தில் தான் அம்மையின் சந்நிதி. அம்மை செண்பக மலர்க்கீழ் இருந்து அருளாட்சி புரிந்திருக்கிறாள். இங்குள்ள தல மரம் செண்பகமே. 'செண்பக மலர்க்கீழ் மேவும் சிவக்குறி' என்று இறைவனும் 'நீழல் நல்கும் பவள மல்லிகை' என்று இறைவியும் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஆதியில் இந்தத் தென்காசி செண்பக வனமாக இருந்திருக்கிறது. மாறன் மங்கலத்திலிருந்து அரசாண்ட குலசேகர பாண்டியனே முதன் முதலில் விசுவநாதரை வழிபட்டு உலகநாதன் என்ற பிள்ளையைப் பெற்றிருக்கிறான். உலகநாதனுக்கு உலகம்மையே மகளாகப் பிறந்து குழல்வாய் மொழி என்ற பெயரோடு வளர்ந்து வந்திருக்கிறாள், அக் குழல்வாய் மொழியை விசுவநாதரே வந்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அப்படித் திருமணம் நடந்த இடமே குலசேகரநாத சாமி கோயில், இந்தக் கோயில் தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் பெரிய கோயிலிலிருந்து ஆறு பர்லாங்கு தூரத்தில் இருக்கிறது. உலகநாத பாண்டியருக்குப் பின் பல பாண்டியர்கள் மாறன் மங்கலத்திலிருந்து ஆண்டிருக்கிறார்கள். விந்த பாண்டியன் காலத்திலே மாறன் மங்கலம் விந்தன் நல்லூர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த விந்தனுடைய பேரனே அரிகேசரி, பராக்கிரம பாண்டியன், செண்பக மாறன் என்ற பெயர்களோடு வாழ்ந்திருக்கிறான். இவரது காலம் வரை விசுவநாதர் செண்பக மரத்தடியிலும், உலகம்மை பவள மல்லிகை நிழலிலும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குக் காசிகண்ட பராக்கிரமன் கோயில் கட்டி நகரமும் அமைத்திருக்கிறான். இந்தக் கோயில் கட்டப்பட்ட காலம் சாலிவாகன சகாப்தம் 1368. அதாவது கி.பி.1445ல் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இதனை,
ஊன்று சாலிவாகன
சகம் ஆயிரத்தொரு
மூன்று நூற்று அறுபானெட்டில்
முது மதிக்குலத்துத்
தோன்று மகள் அரி
கேசரி தேவனாத்துலங்கி
சான்று காண் பராக்கிரமன்
நன்று எடுத்தது இத்தலமே
என்று தல புராணம் கூறுகிறது. இந்தப் பராக்கிரம பாண்டியன் இறைவன் திருவடி நிழல் எய்திய போது இவனது சிவபக்தியை உணர்ந்த ஒரு கவிஞர்.
கோதற்ற பத்தி அறுபத்து
மூவர்தம் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ
செம்பொன் அம்பலத்தோ
வேதத்திலோ, சிவலோகத்திலோ
விசுவநாதன் இரு
பாதத்திலோ சென்று புக்கான்
பராக்கிரம பாண்டியனே
என்று பாடியிருக்கிறார். இதுவும் கோபுரத்துச் சுவரிலேயே பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இத்தனையும் தெரிந்து கொண்டு வெளியில் வரும் போது முப்பது வருஷங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பணிபுரிந்துவரும் திருவள்ளுவர் கழக மண்டபத்தையும் பார்க்கலாம். இதன்பின் அவகாசம் இருந்தால் இத்தலத்தில் மற்ற சுற்றுக் கோயில்களையும் மடங்களையும் போய்ப் பார்க்கலாம். ஊரின் பல பாகங்களிலே வரகுணநாதர் கோயில், குலசேகரநாதர் கோயில், விண்ணவரப் பெருமாள் கோயில், நவநீத கிருட்டிணன் கோயில், பொருந்தி நின்ற பெருமாள் கோயில்கள் எல்லாம் இருக்கின்றன. இத்தலத்தில் செண்பகப் பாண்டியனால் எட்டுத் திருமடங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. எல்லா இடத்தும் சிவாகமங்கள் ஓதி உணர்வதற்கு நிபந்தாங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கோயிலில் நிறையக் கல்வெட்டுக்கள் எல்லாம் நல்ல பாடல்களாகவே இருப்பது ஒரு பெருஞ்சிறப்பு, அவற்றில் இரண்டு பாடல்களை முன்னரே பார்த்தோம். அவையே போதும், இங்குள்ள கல்வெட்டுப் பாடல்கள் சிறப்பைக் கூற.
கோயிலை விட்டு வெளியே வரும்போது சிதைந்த கோபுரத்தைக் கண்டதும் இந்தக் கோபுரம் எப்படிச் சிதைந்தது என்று வினவத் தோன்றும். இக்கோபுரம் மிகவும் அவசரம் அவசரமாகக் கட்டப்பட்டது என்றும், அதனால் இதனில் வெடிப்புக் கண்டு நொறுங்கிவிட்டது என்றும், இல்லை, இடி விழுந்து நொறுங்கி விட்டது என்றும் கூறுவர். ஆனால் சௌக்கீ பாதிரியார் 1792ல் எழுதி வைத்த குறிப்பிலிருந்து இக்கோயில் கோபுரமும் அக்கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நாழிகைக் கடிகாரமும் பழுதடையாதிருந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆதலால் 1792- க்குட்ட பின்பே-அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தான் இக்கோபுரம் பழுதுற்றிருக்கவேனும், தென்னிந்தியாவில் நவாபுகள் ராஜ்யம் நடந்தபொழுது அவர்கள் தங்கள் ரிகார்டுகளையெல்லாம் இக்கோபுரத்தில் பதனப்படுத்தி வைத்திருந்திருக்கிறார்கள். அந்த ரிகார்டுகளில் எப்படியோ தீப்பிடித்து அது பரவிக் கோபுரத்தின் மேல் தட்டுகள் எல்லாம் அழிந்திருக்கிறது என்பது ஒரு வரலாறு. எது எப்படியிருந்தாலும், யார் வைத்த தீயோ வீடு வெந்து போயிற்று. ஓங்கு நிலை ஒன்பதோடு உற்ற திருக்கோபுரம் சிதைந்து விட்டது. இதனை நேராகவே திருத்திப் புரப்பார்தமை எதிர் நோக்கித்தான் பராக்கிரம பாண்டியன் அன்றே விழுந்து வணங்கியிருக்கிறான். அப்படி அவன் எதிர்நோக்கிய பெருமகன் எந்த வடிவில் என்று வரப்போகிறானோ என்பதைத் தானே தமிழ் உலகம் எதிர்நோக்கி நிற்கிறது!
22. மன்னார் கோயில் வேதநாராயணன்
வெங்கண் திண்களிறு அடர்த்தாய்
வித்துவக் கோட்டம்மானே!
எங்குப்போய் உய்கேன் உன்
இணைட்டியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரைகாணாது
எறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம் பேறும்
மாப்பறவை போன்றேனே.
என்று ஒரு பாசுரம். மிக அருமையான பாசுரம். ஒரு கப்பல் புறப்படுகிறது கடலில், அக்கப்பலின் கொடிமரத்திலே ஒரு பறவை இருக்கிறது. கப்பல் நடுக்கடலுக்குச் சென்றுவிடுகிறது. அப்போது பறவை பறக்க ஆரம்பிக்கிறது. நிலத்தை விட்டு நெடுந்தூரம் கப்பல் வந்துவிட்டதால் பறவையால் திரும்ப நிலத்துக்குச் செல்ல முடியவில்லை, கடலிலோ பறவை சென்று தங்க வேறு இடமும் இல்லை. ஆதலால் பறந்த பறவை திரும்பவும் கப்பலின் கொடி மரத்துக்கே வந்து சேருகிறது. நாமும் வாழ்வு ஆகிய கடலிலே இறைவனாகிய கப்பலின் கொடி மரத்தில் உள்ள பறவை போன்றவர்கள்தாமே? எப்படி எப்படிப் பறந்தாலும் கடைசியில் இறைவனிடத்துக்கே திரும்பி அவனது தாள்களையே பற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லையல்லவா? இந்த அற்புத உண்மையைத்தான் நல்லதோர் உவமையோடு பாடல் கூறுகிறது. இந்தப் பாடலைப் பாடியவர் குலசேகரர்.
ஆம்! பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார்தான். சேரமன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். கொல்லிகரைத் தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆண்டு வருகிறார். எம்பெருமானிடம் தீராத காதல் கொள்கிறார். அது காரணமாக ஸ்ரீ வைஷ்ணவர்களோடு நெருங்கி வாழ்கிறார். இது மந்திரி பிராதானிகளுக்குப் பிடிக்கவில்லை. ஸ்ரீவைஷ்ணவர்களிடம் இருந்து பிரிக்க ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள். பெருமான் திருஆபரணப் பெட்டியிலிருந்து ஒரு நவரத்தின ஹாரத்தை எடுத்து ஒளித்து வெத்து விட்டு அதனை வைஷ்ணவர்களே எடுத்திருக்க வேண்டுமென்று மன்னரிடம் புகார் செய்கிறார்கள். மன்னருக்கோ லைஷ்ணவர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை. அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்க, ஒரு மண் குடத்தில் விஷப் பாம்புகளைப் போட்டுக் கொண்டு வந்து வைத்து. 'அந்த ஹாரத்தை வைஷ்ணவர்கள்தாம் எடுத்திருக்கிறார்கள்' என்று சொல்கிறவுரை, குடத்தில் கைவிட்டுப் பிரமாணம் செய்யச் சொல்கிறார். மந்திரி பிரதானிகள் ஒருவரும் முன்வரவில்லை. உடனே மன்னராம் குலசேகரரே, 'பரன் அன்பர் அக்காரியம் செய்யார்' என்று சொல்லிக் கொண்டே பாண்டத்தில் கையை விட்டுச் சத்தியம் செய்கிறார். பாண்டத்தில் உள்ள பாம்பு ஒன்று அவர் கை வழியாக ஏறித் தலையில் வந்து அவருக்குக் குடை. பிடிக்கவும், மற்றொன்று வெளியே வந்து ஹாரத்தை மறைத்தவர்களைச் சீறி விரட்டவும் செய்கின்றது. மறைத்தவர் மன்னர் காலில் விழுந்து மன்னிப்புப் பெறுகிறார்கள். குலசேகரர் பரமபக்தராக, ஆழ்வாராக வாழ்கிறார். பரந்தாமன் மீது பல பாடல்களைப் பாடுகிறார். இந்தத் தகவலையெல்லாம்.
ஆரம் கெடப், 'பரன் அன்பர்
கொள்ளார்' என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில்
கையிட்டவன்-மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல்
கொல்லி காவலன், வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி
வேந்தர் சிகாமணியே
என்ற பாடல் தெரிவிக்கிறது. இந்தக் குலசேகரர் பலதலங்களுக்கும் சென்று. கடைசிக் காலத்தில் வந்து தங்கியிருந்த இடம்தான் வித்துவக்கோடு. இந்த வித்துவக்கோடு மலை நாட்டில்
குலசேகரர்
உள்ள தலம் என்று கருதுபவர்கள் பலர். இல்லை, கரூரை அடுத்த வித்துவக் கோட்டக் கிரகாரமே என்பார் சிலர், இன்னும் சிலர் இது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோயிலே என்பர். எந்தத் தலமாக வேணும் இருக்கட்டும். வங்கத்தின் கூம்பு ஏறிய மாப்பறவை போல் பல தலங்களுக்கும் சென்ற குலசேகரர் கடைசியில் வந்து தங்கிய இடம் மன்னார் கோயில் என்பதில் விவாதம் இல்லை. அந்த மன்னார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டத்திலே அம்பாசமுத்திரம் என்னும் ஊருக்கு வடமேற்கே மூன்று மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கு செல்ல அம்பாசமுத்திரம் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங்கிருந்து வண்டி வைத்துக்கொண்டு செல்லவேணும். காரில் வந்தால் நேரே ஊரில் போய் இறங்கலாம். அம்பாசமுத்திரம் - தென்காசி ரோட்டில் பஸ்ஸில் வந்தால் அம்பாசமுத்திரத்துக்கு மேற்கே இரண்டு மைல் தூரத்தில் இறங்கி நடந்து ஒரு மைல் வடக்கு நோக்கிச் செல்ல வேணும். ஊரை அடுத்துக் கருணை நதி ஓடுகிறது. கோயில் வாயிலில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதனைப் பந்தல் மண்டபம் என்பர். இம்மண்டபத்தில் முத்துகிருஷ்ன நாயக்கருடைய சிலையும் அவனுடைய தளவாய் ராமப்பய்யனுடைய சிலையும் இருக்கின்றன. பாண்டியர்கள் சின்னமாக மீன்கள் மண்டப முகட்டில் காணப்படுகின்றன. ஆதலால் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் யாரோ ஒரு பாண்டியன் கட்டியிருக்க வேணும்.
இதனை அடுத்தே கோயிலின் பிரதான வாயில், அந்த வாயிலை ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரம் அணி செய்கிறது. இதனை அடுத்தது ஒரு பெரிய மண்டபம், இம்மண்டபத்தில் குமார கிருஷ்னப்ப நாயக்கர் சிலை இருப்பதால் அவரே இம் மண்பம் கட்டியிருக்க வேணும், இங்கேயே செண்டலங்கார மாமுனிகள், பராங்குசர் முதவியோரது சிலைகள் . இருக்கின்றன. மற்ற மண்டபங்களையும் கடந்து அந்தாரளம் சென்றால் அதை அடுத்த கருவறையில் மூலவரான வேத நாராயணனைத் தரிசிக்கலாம். இவருக்கு இரு பக்கத்திலும் ஸ்ரீதேவியும் பூதேவியும் நிற்கிறார்கள். வேதநாராயணனும் நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கிறான். பக்கத்திலேயே பிருகு மகரிஷியும் மார்க்கண்டேயரும் இருக்கிறார்கள்
ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இத்தலம் ஏற்பட்டதே, பிருகு மகரிஷியால்தான். பிருகு மகரிஷியின் பத்தினி கியாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். இதனால் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தால் கியாதியைச் சேதிக்கிறான். மனைவியை இழந்த பிருகு கோபங்கொண்டு, 'நான் மனைவியை இழந்து தவிப்பது போல் இந்தப் பரந்தாமனும் மனைவியை இழந்து தவிக்கட்டும்' என்று சாபமிடுகிறார். கோபம் தெளிந்த பின், பரந்தாமனைச் சபித்துவிட்டோமே என்று வருந்தி, தவம் கிடக்கிறார். ஆனால் பரந்தாமனோ, 'மகரிஷியின் வாக்கும் பொய்க்கக்கூடாது' என்று பின்னர் ராமனாக அவதரித்து சீதையைப் பிரிந்து துயர் உறுகிறார் இராவண வதம் முடித்துத் திரும்புகின்ற போது, பிருகு வேண்டிக் கொண்டபடி, அவருக்குச் சேவை சாதிக்கிறார். பிருகுவும் அந்த வேத நாராயணனைப் பொதிய மலைச் சாரலிலே இந்த இடத்திலே பிரதிஷ்டை பண்ணுகிறார். தாமும் தம் கொள்ளுப் பேரனுமான மார்க்கண்டேயனுடன் அத்தலத்தில் தங்கி, வேதம் ஓதிக் கொண்டு வாழ்கிறார். அதனாலே வேத நாராயன் சந்நிதியில் பிருகுவம் மார்க்கண்டரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
மன்னார்கோயில் விஷ்வக்சேனர்
வேதநாராயணனும், வேதவல்லித் தாயாரும் புவனவல்லித் தாயாரும் உத்சவ மூர்த்திகளாக அமர்ந்திருக்கின்றனர். இத்தாயார்களுக்குத் தனிக் கோயில்கள் வேறே இருக்கின்றன. அந்த மண்டபத்திலே குலசேகரரது திரு ஆராதனை மூர்த்தியான ராமன் சீதா லக்ஷ்மண சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். இன்னும் இங்கேயே காட்டுமன்னார், கண்ணன், சக்கரத் தாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ராமானுஜர். மணவாள மாமுனிகள் எல்லோரும் இருக்கின்றனர். இந்த மண்டபத்திலிருந்து வேத நாராயணனைச் சுற்றி ஒரு பிரதக்ஷிணம் இருக்கிறது. அதனை அடைத்து வைத் திருக்கின்றனர். இதற்கு அடுத்த மண்டபமே மகாமண்டபம். இத்தலத்தில் இதனைக் குலசேகரன் மண்டபம் என்று அழைக்கின்றனர். இதில் ஓர் உள் மண்டபமும், வேதிகையும் இருக்கின்றன. இந்த வேதிகையை விசுவநாதன் பீடம் என்கின்றனர். இந்த வேதிகையில் ராஜகோபாலன். ஆண்டாள், கருடன் எல்லோரும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ராஜகோபாலன் பக்கத்திலே குலசேகராழ்வார் உத்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.
இதற்கு வெளியே உள்ள கிளிக்குறடும் மண்டபமும் மணிமண்டபம் என்று பெயர் பெறும். இக்குறட்டிலிருந்து தென்பக்கத்துப் படிகள் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றால் அங்கு பரமபதநாதன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இவரைச் சுற்றியுள்ள பிரதட்சிணமே யானை முடுக்கு என்று சொல்லப்படுகிறது. அதன்பின் அந்த மண்டபத்தின் கீழ்ப்புறமுள்ள படியாக மேலும் ஏறிச் சென்றால் அரங்கநாதன் போல் பள்ளிக்கொண்ட பெருமானைக் காணலாம். இப்படி, வேத நாராயணனாக நின்று, இருந்து கிடந்த கோலத்தில் எல்லாம் சேவை சாதிக்கிறான். இந்தப் பள்ளிக்கொண்ட பெருமானைச் சுற்றியுள்ள பிரதட்சிணத்தைப் பூனை முடுக்கு என்கின்றனர், இனி படிகளின் வழியாகக் கீழே இறங்கி வந்து வடபக்கத்துக்குச் சென்றால் அங்கு புவனவல்லித் தாயாரைக் கண்டு வணங்கலாம். அங்கேயே விஷ்வக்சேனரையும் தரிசிக்கலாம். அதன்பின் அங்குள்ள சின்னக் கோபுர வாயில் வழியாகக் கொடி மண்டபத்துக்கு வந்தால் வடக்கு வெளிட்ட பிராகாரத்தில் குலசேசுராழ்வார் சந்நிதிக்கு வரலாம். இவருக்குத் தனிக்கோயில், கொடிமரம், தேர் எல்லாம் ஏற்பட்டிருக்கும் சிறப்பைப் பார்த்தால் இவர் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப் படுவதின் அருமை தெரியும். இங்கு கருவறையில் ஆழ்வார் கூப்பிய கையோடு எழுந்தருளியிருக்கிறார்.
குலசேகரர் இத்தலத்துக்கு வந்து தங்கியிருந்ததைப் பற்றி எத்தனையோ கதைகள். இங்கு இவர் வந்து தங்கியிருந்த காலத்தில் தன் ஆராதனை மூர்த்திகளான சக்கரவர்த்தித் திருமகனையும், ராஜகோபாலனையும் இக்கோயிலில் எழுந்தருளச் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். அங்குள்ள அர்ச்சகர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. க்ஷத்திரியராம் குலசேகரரது ஆராதனை மூர்த்திகளைக் கோயிலுள் எழுந்தருளப்பண்ண இயலாது என்பது அவர்களது வாதம், அன்றிரவு திரு விசாகம் ஆனதும், கோயில் ஆழ்வாரைக் கொண்டு சந்நிதி முன் வைத்துப் பெருமாளைப் பிராத்தித்துக் கொண்டே இருந்திருக்கிறார் குலசேகரர். மறுநாள் விடியற்காலையில் கதவைத் திறந்தால் உள்ளே. சக்ரவர்த்தித் திருமகனும் ராஜகோபாலனும் எழுந்தருளியிருக்கிறார்கள். உடனே எல்லோரும் குலசேகரர் திருவடிகளிலே விழுந்து வணங்கி அவர் பக்திப் பெருமையை உணர்ந்திருக்கிறார்கள், குலசேகரர் பின்னர் அத்தலத்திலேயே தங்கித் தமது 87-வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார்.
ஆதியில் இத்தலம் வேத நாராயணபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கல்வெட்டுக்களிலிருந்து கன்ணனுக்கு ஒரு கோயில் இவ்வூரில் இருந்திருக்கவேணும் என்று தெரிகிறது. அக்கோயில் இப்போது இல்லை. உடைந்த வேணுகோபாலன் கற்சிலையும், ருக்மணியின் கற்சிலையமே கிடைத்திருக்கின்றன. கோயிலுள் ஒரு நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் மட்டும் இருக்கிறது. பிரம்ம வித்துவான்கள் நிறைந்த ஊராகையால், பிரம்ம வித்துவான்களுக்குப் பாண்டிய அரசர்களால் தானமாகக் கொடுக்கப்பட்ட ஊராகையால், இதனைப் பிரமதேயம் என்றும் அழைத்திருக்கின்றனர்.
இந்த ஊருக்கு மன்னார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்பதைச் சொல்லவில்லையே என்றுதானே குறைப்படுகிறீர்கள்? குலசேகரருக்கு ராஜகோபாலன் என்ற அழகிய மன்னனார் பேசும் தெய்வமாக இருந்திருக்கிறார். அத்துடன் குலசேகர மன்ளன் பெயரையும் தொடர்புப் படுத்தி மன்னனார் கோயில் என்று முதலில் வழங்கியிருக்கவேணும். பிறகு மன்னார் கோயில் என்று குறுகியிருக்க வேணும்.
23. திருநெல்வேலி உறை செல்வர் ஒரு கவிஞன்; கவிஞன் என்றால்தான் வறுமையும் உடன்பிறந்து வளருமே. அந்த வறுமை காரணமாக வாடுகிறான், வருந்துகிறான். கவிஞனோ அந்தத் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலிக்காரள். நல்ல தெய்வபக்தி உடையவன். ஒவ்வொருநாளும் அவன் கோயில் சென்று இறைவனை வழிபட மறவாதவன். கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் வேணுவனநாதர், நெல்லையப்பரிடம் தன் குறைகளைச் சொல்கிறான். தன் வறுமையை நீக்க வேண்டுகிறாள். ஆனால் நெல்லையப்பரோ இவனது குறைகளைத் தீர்க்கிறவராகக் காணோம். ஏன்? காது கொடுத்துத்தான் கேட்கிறாரா என்பதே சந்தேகம். இப்படிக் கழிகிறது பல நாட்கள். இந்தக் கவிஞன் ஒருநாள் அன்னை காந்திமதியின் சந்நிதிக்கு வருகிறான், அம்மன் கோயில் வாயில் வழி நுழைந்தவன் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம், நடு மண்டபம் எல்லாம் கடந்து கருவறைப் பக்கமே வந்து சேருகிறான். அங்கே நிற்கும் அன்னையைப் பார்க்கிறான். அவளோ, தலையில் வைர மணிமுடி, ராக்காடி எல்லாம் அணிந்திருக்கிறாள். மூக்குப் பொட்டு, மூக்குத்தி, புல்லாக்கு எல்லாம் அழகு செய்கின்றன; மார்பில் நவமணி வடம் புரள்கிறது. அடிகளில் மணிச் சிலம்பு ஒலிக்கிறது. வலக்கையை உயர்த்தி அதில் கிளியுடன் கூடிய செண்டு ஒன்று எந்தி, இடக்கையைத் தாழ்த்தி நிற்கும் அந்த வடிவழகியை ஒரு புதுமணப் பெண்ணாகவே காண்கிறான் கவிஞன். அப்போது தோன்றுகிறது கவிஞனுக்கு ஏன், இந்த அன்னையின் மூலமாகவே தனது விண்ணப்பத்தை அந்த வேணுவன நாதரிடம் சமர்ப்பிக்கலாகாது என்று. அப்படி அவள் தனக்காகத் தன் கணவரிடம் பரிந்து பேச நல்ல வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதையுமே அறிகிறான். இந்த எண்ணத்திலே உருவாசிறது பாட்டு
ஆய் முத்தப் பந்தரில் மெல்லனை
மீது உன் அருகிருந்து
'நீ முத்தம் தா' என்று அவர் கொஞ்சும்
வேளையில், நித்தநித்தம்
வேய்முத்த ரோடுஎன் குறைகள்
எல்லாம், மெல்லமெல்லச் சொன்னால்
வாய்முத்தம் சிந்தி விடுமோ?
நெல்வேலி வடிவு அன்னையே!
என்று அன்னையிடமே கேட்கிறான். இவ்வளவு ஆத்திரத்தோடு கவிஞன் கேட்டபின் அன்னை சும்மா இருப்பாளா? சிபாரிசு பலமாகத்தான் செய்திருப்பாள். நெல்லையப்பரும் மனைலி உத்தரவுக்குக் கீழ்ப்படியாமலா இருந்திருப்பார்? கவிஞனுக்கு விடிவு காலமும் காலதாமதம் இல்லாமலே வந்திருக்கும். உண்மையிலேயே இப்படியே நடந்தது என்பது அல்ல பொருள். இறைவனையும் இறைவியையும் மனம் ஒத்த காதலர்களாகக் கற்பனை பண்ணி இப்படிக் கவிஞன் பாடுவதிலே ஒரு சுவை கண்டிருக்கிறான். இந்த இறைவனாம் நெல்லையப்பரும் இறைவியாம் காந்திமதி அம்மையும் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருநெல்வேலி. அத்தலத்துக்கே செல்கின்றோம் நாம் இன்று.
திருநெல்வேலி தென் பாண்டி நாட்டின் தென் பகுதியிலே உள்ள ஒரு பழம் பதி. 'பொன் திணிந்த புனல் பெருகும் பொருதை,' நதிக்கரையிலே உள்ள ஒரு நகரம் திருநெல்வேலி. டவுன் ஸ்டேஷனில் இறங்கினால் வடக்கு நோக்கி நாலு பர்லாங்கு வரவேணும். அப்படி வந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம் இந்தக் கோயிலிலே ஒரு சம்பிரதாயம், கோயிலுக்கு வருபவர் எல்லாம் முதல் முதல் சென்று தரிசிப்பது காந்திமதி அம்மையையே. ஆம்! மதுரையில் மலயத்துவஜன் மகளான மீனாட்சிக்கு எத்தனை பிராதான்யம் அந்தக் கோயிலில் உண்டோ , அத்தனை இங்கு காந்திமதிக்கும் உண்டு. நெல்வேலி முழுதும் வீட்டுக்கு ஒரு காந்திமதி அல்லது காந்திமதி நாதன் இருப்பார்.
காந்திமதியம்மன் கோயில் வாயில் வழியாகவே நாமும் நுழையலாம். உள்ளே சென்றதும் சந்நிதிக்கு எதிரில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தைக் காணலாம். அதற்கு வடபுறமே பொற்றாமரைக் குளம். மதுரையைப் போல் பெரிதல்ல. ஆயினும் அழகாக இருக்கும். அங்கிருந்தே கோபுர தரிசனம் செய்யலாம். அதன்பின் மகாமண்டபம் எல்லாம் கடந்து அர்த்த மண்டபம் வந்து, அங்கிருந்து காந்திமதியம்மையைக் கண்டு வணங்கலாம். முன்னரே கூறியது போல் அம்மை நின்ற திருக்கோலத்தில் புது மணப் பெண்ணாகவே காட்சி தருவாள். இந்தக் காந்திமதியம்மையின் திருக்கல்யாண மகோத்சவம் கண்கொள்ளாக் காட்சி. கதை நமக்குத் தெரிந்த கதைதான்.
அன்று கைலையில் இறைவன் இமவான் மகளான உமையைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கிறான், அந்தத் திருமணக் கோலங்காண மக்கள் தேவர் நாகர் எல்லோருமே கைலைக்குச் செல்கிறார்கள். அதனால் பாரம் தாங்கமாட்டாமல் தென்கோடு உயர்ந்து வடகோடு தாழ்கிறது. நாட்டைச் சமன் செய்ய இறைவன் அந்தக் குள்ள அகத்தியரையே தேர்ந்தெடுக்கிறான். அவரைத் தென்திசை செல்ல வேண்டுகிறான். அவரோ, 'நான் மட்டும் திருமணக் கோலம் காண வேண்டாமோ?' என்று சிணுங்குகிறார். அவரிடம் இறைவன், தாமே தென் திசை வந்து திருமணக் கோலத்தில் காட்சி கொடுப்பதாக வாக்களிக்கிறார். அதன் பின்னேதான் அகத்தியர் தென்திசை வருகிறார். பொதிகை வந்து தங்குகிறார், தென்திசையும் தாழ்ந்து நாடு சமநிலை எய்து கிறது. மணம் முடித்த புதிய தம்பதிகளாம் அந்த அமர காதலர்களிடையே ஒரு விளையாட்டு. அன்னை, அத்தனின் கண்களைப் பொத்தி, 'யார் பொத்தியது?' என்று கேட்கிறாள். அண்ணலின் கண்கள் பொத்தப் பெற்ற காரணத்தால் அகில உலகமுமே இருளில் ஆழ்ந்து விடுகிறது. இந்தப் பழி அகல அன்னை கம்பை நதிக் கரையில் வந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி இறைவன் அங்கு எழுந்தருளிக் காட்சி தருகிறான். மணமும் செய்து கொண்டு அந்தத் திருமணக் கோலத்திலேயே அகத்தியர் முன்பு வந்து நின்று விடுகிறான். ஆனால் அந்தத் திருமண விழாவைத் திருநெல்வேலி அன்பர்கள் அதிலும் பெண் மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? அதைச் சொல்கிறார் ஒரு கவிஞர்.
வேணு வனத்து இறைவர் புது
மணம் விரும்பி, விளையாட்டாய்
காணும் உமைப்பெயர் பொருந்தும்
காந்திமதிதனைக் கடிந்து காட்டுக்கு ஓட்டி
தானும் அவள் பின் சென்று நயம் படித்து
பலர் சிரிக்க நலிவே! உற்றால்
வாள்நுதலும் அவர்பின்னே வருவதுவும்
வியப்பாமோ? வசை ஒன்று இன்றி!
கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற தலைவியின் பின் சென்று, கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தம் வீட்டுக்குத் திரும்பவும் அழைத்து வருகிறார் நெல்லையப்பர் என்பது பாமரர் காணும் கதை. ஆம், இந்தக் கதையில் கூடப் பெண்மையின் வெற்றியே மேலோங்கி நிற்கிறது. இப்படித்தான் காந்திமதியாம் வடிவன்ளை முக்கியத்துவம் பெற்று விடுகிறாள். அவள் கருவறையில் கையில் செண்டேந்திக் கொண்டு நின்றால், செப்புச் சிலை வடிவில் ஞான முத்திரையோடு நிற்பாள். உயிர்களுக்கெல்லாம் அருள் புரியும் கோலம் அல்லவா இந்த வடிவுன்னையின் வடிவம்!
இந்த வடிவன்னையை மணந்தவரே நெல்லையப்பர் என்னும் வேணுவனநாதர். இவரது சந்நிதி அம்மையின் இடப் பக்கத்திலே. இவ்விரண்டு கோயில்களும் தனித்தனியே கட்டப்பட்டிருக்க வேணும், பின்னர்தான் இரண்டு கோயில்களையும் இணைத்து ஒரு மண்டபம், பொற்றாமரைக்கு மேல் பக்கம் கட்டியிருக்கிறார்கள். இதனையே சங்கிலி மண்டபம் என்கிறார்கள், இம்மண்டபத்தைக் கட்டியவன் ஒரு தொண்டைமான் என்று அம்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
இந்த மண்டபம், பிராகாரம் எல்லாம் கடந்தே நெல்லையப்பர் சந்நிதிக்கு வரவேணும். இவர் நெல்லையப்பர் என்றும் ஏன் பெயர்
பெற்றார் என்பதற்கு இரண்டு நல்ல வரலாறுகள் உண்டு. இந்தக்
[தட்சிணா மூர்த்தி படம்] (தெளிவாக இல்லை)
கோயில் இன்றிருக்கும் இடம் அந்த நாளில் ஒரே மூங்கில் காடாக இருந்திருக்கிறது. ராமக்கோன் என்று ஒருவன். அவன் தினசரி தன்னுடைய மாட்டுப் பட்டிக்குச் சென்று பால் கறந்து அந்தப் பால் நிறைந்த குடத்துடன் தன் இல்லத்துக்குத் திரும்புவான். அப்படி வரும்போது ஒவ்வொரு நாளும் ஒரு மூங்கில் புதரண்டை கால் தடுக்கிப் பால் குடம் விழுந்து பால் முழுதும் சிந்தியிருக்கிறது. சில நாள் இப்படி . நடக்கவே மறு நாள் கோடாரியுடன் வந்து அந்த மூங்கில் புதரை வெட்டி அகற்ற முனைந்திருக்கிறான். அப்படி வெட்டும் போது வெளிப்பட்டவரே வேணு வனநாதர், அவரை முழுவதும் கண்ட ராமக்கோன் (ராம பாண்டிய ராஜா என்று அழைக்கப்படுகிறார் பின்பு) வேண்டியபடியே வளர்ந்திருக்கிறார் இவர். இந்த சுயம்புமூர்த்தியை இன்னும், வேண்ட வளர்ந்த நாயகர் என்றே அழைக்கிறார்கள், இவரே கருவறையுள் வெட்டுப்பட்ட தலையோடு இருக்கிறார். கோயிலின் முதல் பிராகாரத்திலே ஒரு பள்ளமான இடத்திலே மூலலிங்கர் வேறே இருக்கிறார்.
இந்த வேணுவன நாதர் எப்படி நெல்வேலி நாதர் ஆனார்? வேத சர்மா என்று ஓர் அர்ச்சகர். கோயில் பூசைக்கு வேண்டிய நெல்லை எடுத்துத் தம் வீட்டின் முற்றத்தில் வெயிலில் உலர்த்தி விட்டு ஆற்றுக்குக் குளிக்கச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் பெருமழை பெய்திருக்கிறது. உலர்த்திய நெல் எல்லாவற்றையும் வெள்ளம் வாரிக்கொண்டு போய்விடுமே என்னும் ஆதங்கததோடு அர்ச்சகர் வீடு நோக்கி ஓடி வருகிறார். அர்ச்சகரின் அன்பினையும் ஆதங்கத்தையும் அறிந்த இறைவன், அந்த நெல்காய்ந்த இடத்தில் ஒரு துளி மழையும் விழாமல் காத்திருக்கிறார். அப்படி அவர் வேலி போல் நின்று காத்த தன் காரணமாக நெல்வேலி நாதன் என்று பெயர் பெறுகிறார். நெல்வயல்கள் ஊரைச் சுற்றி நாலு பக்கங்களும் பரவி நிற்கிறதைப் பார்த்தவர்கள் இந்த ஊருக்கு நெல்வேலி என்ற பெயர் பொருத்தமே என்று ஒப்புக் கொள்வார்கள்.
இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் வந்து பாடிப் பரவியிருக்கிறார்.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட அந்த நின்ற சீர்நெடுமாறனே இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு. இவனையே 'நிறைகொண்ட சித்தையன் நெல்வேலி வென்ற சீர்நெடுமாறன்' என்று சமய குரவரில் ஒருவரான சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார். நெடுமாறனோ முதலில் சமணனாக இருந்து பின்னர். சம்பந்தரால் சைவனாக்கப்பட்டவன் என்பது பிரசித்தம். . இவனது காலம் சி.பி. ஏழாம் நுற்றாண்டு. இவனுக்குப் பின் வந்த பாண்டியர்கள். நாயக்க மன்னர்கள் எல்லாம் கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள்.
கி.பி. 950 இல் இருந்து அரசாண்ட வீரபாண்டியன் சோழர்களை வென்ற வரலாற்றைக் கூறுகிறது சில கல்வெட்டுக்கள், பதின்மூன்று பதிநான்காம் நூற்றாண்டுகளில் இருந்த மாறவர்மன் சந்தர பாண்டியன், மாறவர்ம குலசேகர தேவன் முதலியவர்களது சாஸங்கள் பல கிடைக்கின்றன. இக்கோயிலில். இக் கல்வெட்டுக்களில் இறைவனைத் திருநெல்வேலி உடையார் என்றும் இறைவியைத் காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாயக்க மன்னர்களோ திருநெல்வேலியையே தலைநகராகக் கொண்டு கோயிலைப் புதுப்பிப்பதில், மண்டபங்கள் கட்டுவதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பாண்டியர், நாயக்கர்களோடு, மகம்மதிய பக்தர் ஒருவருமே சேர்ந்து கொள்கிறார். முகம்மது அலியின் தானாதிபதி அன்வர்டிகான் என்பவரது மனைவியின் தீராத நோயைத் தீர்த்திருக்கிறார் இந்த நெல்லையப்பர். அந்த ஞாபகர்த்தமாக அன்வர்டிகான் ஒரு லிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அன்வர்டிகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இன்று நல்ல தமிழில் அனவரத நாதனாகவே விளங்குகிறார். கோயிலின் தென் கிழக்கு மூலையில்.
இந்த நெல்லையப்பர் கோயில், ஐந்து கோபுரங்கனோடு விளங்கும் ஒரு பெரிய கோயில்; ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட. ஒரு விரிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இறைவன் சந்நிதிக் கோபுரத்தை விட, இறைவி சந்நிதிக் கோபுரமே அழகு வாய்ந்தது. கோயிலுள் இருக்கும் பொற்றாமரைக் கரையில் நின்று பார்த்தால் அதன் காம்பீர்யம் தெரியும். இக்கோயிலின் சிற்புச் சிறப்புக்கள் எல்லாம் பிரசித்தம். நாயக்கர் காலச் சிலா வடிவங்கள் அனந்தம். மகா மண்டபத்திலே வீர பத்திரன், அர்ச்சுனன், கர்ணன் முதலியோர் சந்நிதி, வாயிலையே அணி செய்கின்றனர். ஆண்மைக்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாகக் குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள்.
இக்கோயிலில் உள்ள கற்சிலைகளைவிடச் செப்புச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்குள்ள நடராஜரும் சிவகாமியும் உருவிலே பெரியவர்கள். ஏன்? திருவிலேயும் பெரியவர்கள்தான். அவர்கள் இருக்குமிடமே பெரிய சபை. கிட்டத்தட்ட ஆறு அடி உயரத்திலே நடராஜர் என்றால் ஐந்து அடி உயரத்திலே சிவகாமி, இருவரும் இருக்க வேண்டியது, தலத்துக்கே சிறப்பான தாமிர சபையில். ஆனால் எடுக்க வைக்க இருக்கும் சிரமம் கருதித் தனிக் கோயிலிலே மூலமூர்த்திகளாகவே இவர்கள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறார்கள். விரித்த செஞ்சடையோடு ஆடவில்லை இந்த நடராஜர். பாண்டிய மன்னர்கள் வடித்த நடராஜர் சிலாவடிவங்கள் எல்லாவற்றிலுமே கட்டி முடித்த சடைதான். இன்னும் ஓர் அதிசயம் இக்கோயிலிலே, வேணுவனநாதனின் கருவறையை அடுத்த வட பக்கத்திலே நெல்லைக் கோவிந்தர் நன்றாகக் காலை நீட்டிப் படுத்திருக்கிறார். அவர் பக்கத்திலே கரகம் ஏந்திய கையராய் மகாவிஷ்ணு நின்று கொண்டிருக்கிறார். தங்கையை மணம் முடித்துக் கொடுக்கும்போது தாரை வார்த்துக் கொடுக்க வந்த அவசரம் போலும். நல்ல அழகான வடிவம், இந்த நெல்லை கோவிந்தரின் செப்புச்சிலை. இன்னும் ஆறுமுகனுக்கு ஒரு பெரிய சந்நிதி, அவனைச் சுற்றி வந்து ஆறு முகங்களையுமே கண்டு களிக்க வசதி செய்திருக்கிறார்கள் நிர்வாகிகள்.
புராணப் பிரசித்தியும், சரித்திரப் பிரசித்தியும் உடைய இக்கோயில் நல்ல இலக்கியப் பிரசித்தியும் உடையது. தலபுராணம் ஒன்று இருக்கிறது. அழகிய சொக்கநாதப்பிள்ளை பாடிய காந்தியம்மை பிள்ளைத் தமிழ் படிக்கப் படிக்க இன்பம் தருவது. நெல்லை மும்மணிக்கோவை, நெல்லை வருக்கக் கோவை, நெல்லை அந்தாதி என்ற இலக்கியங்கள் பெற்றது. நெல்லையப்பர் கோயிலில், காந்திமதியம்மை சந்நிதி வழியே நுழைந்தோம். திரும்பும்போது அவள் சந்நிதி சென்று வணங்கித் திரும்பலாம்.
ஏர்கொண்ட நெல்லை நகர் இடம் கொண்டு
வலங்கொண்டு அங்கு இறைஞ்சுவோர்கள்
சீர்கொண்ட தன் உருவும் பரன் உருவும்
அருள் செய்து நாளும்
வேர்கொண்டு வளர்ந்தோங்கும்
வேய்ஈன்ற முத்தைமிக விரும்பிப்பூணும்
வார்கொண்ட களபமுலை வடிவுடைய
நாயகிதாள் வணங்கி வாழ்வோம்.
என்ற பாடலைப் பாடிக்கொண்டே வாழலாம் தானே! அப்படியே வாழ்கிற நான், ஒரு திருநெல்வேலிக்காரன் என்பதில் எப்போதும் கர்வம் கொள்கிறவன் ஆயிற்றே! .
24. கிருஷ்ணாபுரத்து வேங்கடநாதன்
சோழநாட்டில் ஒரு ராஜகுமாரி, அடுத்துள்ள பாண்டி நாட்டிலே ஒரு வீரன். ஊழ்வினை வசத்தால் எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஒருவரையொருவர் பார்க்கின்றனர். காதல் கொள்கிறேனர், ஆனால் இரண்டு நாட்டுக்குமோ தீராப் பகை, அதனால் சோழ நாட்டு ராஜகுமாரியைப் பாண்டிய நாட்டு வீரன் மணம் முடிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது. இருந்தாலும், இவர்களது காதல் தாபம் தணியவில்லை . கடைசியில் ராஜகுமாரியை அவளது கட்டுக் காவலிலிருந்து வீரன் அழைத்துச் சென்று விடுவது என்று ஏற்பாடு செய்து கொள்கிறான். அதற்கிசைகிறாள் இராஜகுமாரியும். குறிப்பிட்ட நாளிலே வீரன் ராஜகுமாரியை உடன் அழைத்துச் சென்று விடுகிறான். செய்தி தெரிந்து விடுகிறது சோழநாட்டு வீரர்களுக்கு. பாண்டிய நாட்டு வீரனை மடக்கி மங்கையை மீட்டுச் செல்ல முனைந்து புறட்படுகிறார்கள் சோழ வீரர்கள். அதற்கெனக் குதிரைகளிலே ஏறிப் பாண்டிய நாட்டு வீரனைப் பிடிக்க வருகிறார்கள். வீரனோ ராஜகுமாரியையும் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. அவளாலோ விரைந்து நடக்க முடியவில்லை. ஆதலால் அவளை அப்படியே தன் தோளின் மீது ஏற்றிக்கொள்கிறான். அவனைச் சுமந்து கொண்டே ஓடுகிறான். சோழ நாட்டின் எல்லையைக் கடந்து பாண்டிய நாட்டிற்குள் நுழைந்து விட்டால் சோழநாட்டு வீரர்களால் ஒன்றும் செய்ய முடியாதல்லவா? எல்லை நெருங்குகிறது. அதற்குள் நெருங்கி விடுகிறார்கள் சோழநாட்டு வீரர்கள், குதிரையிலிருந்தே நீண்ட ஈட்டியை ஓடும் வீரளின் விலாவில் பாய்ச்சுகிறார்கள், ஈட்டி பாய்ந்த இடத்தில் ரத்தம் பெருகுகிறது. பாண்டிய நாட்டு வீரனோ பகை அரசரின் வீரர்களோடு போரிட்டு அவர்களையெல்லாம் வெல்லக் கூடியவன்தான். என்றாலும் தன்னுடன் வந்திருக்கும் ராஜகுமாரியைச் சோழநாட்டு மண்ணிலே இறக்சிலிட விரும்பவில்லை. ஆதலால் விரைந்தே ஓடிப்போய் பாண்டிய நாட்டின் எல்லையை அடைந்து விடுகிறான். வெற்றி அவனுக்கே. இந்த நிலையில் லீரனின் தோள்களில் ஆரோகணித்து இருந்த ராஜகுமாரிக்கோ ஒரே
நெல்வேலி வடிவன்னை
மகிழ்ச்சி. காதலனுடன் சென்று அவனுடன் இன்ப வாழ்வு நடத்தப் போகிறோம் என்ற உள்ளத்தில் எழும் பூரிப்பு அவள் முகத்திலே பிரதி பலிக்கிறது
இப்படி ஒரு கதை. ஆனால் இவ்வளவும் உண்மையாய் நடக்க வில்லை. தமிழ்நாட்டுச் சிற்பி ஒருவன் ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே உலாவப் புறப்படுகிறான். அங்கே ஒரு பாறையைப் பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாகச் செந்நிற ரேகைகள் ஓடுவதைக் காண்கிறான். அந்தப் பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஓடியிருக்கிறது. பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கையில் உடன் போக்கு` எல்லாம் உண்டு என்பதை அறிந்தவன் ஆயிற்றே. அதனால் அவனது எண்ணத்தில் ஒரு சுற்பனை. ஆம்! முன் கூறிய கற்பனைக் கனவு உருவாகியிருக்கிறது. அந்தப் பாறையை வெட்டிக் செதுக்கி அதில் தன் சிற்றுளி வேலையைக் காட்ட முனைகிறான். அவ்வளவுதான், கல்லில் உருவாகி விட்டார்கள் கன்னி, காதலன், சோழ நாட்டு வீரர்கள், அவர்களது குதிரைகள், அவர்கள் ஏந்திய ஈட்டிகள் எல்லாம். பாறையில் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் ரத்தப்பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. இந்தச் சிலை வடிவை ஒரு தூனாக நிறுத்திவிடுகிறான் சிற்பி, கிருஷ்ணாபுரத்துத் திருவேங்கடநாதன் சந்நிதியில். அந்தக் கிருஷ்ணாபுரத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
கிருஷ்ணாபுரம் திருநெல்வேலியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள சிற்றூர். திருநெல்வேலி திருச்செந்தூர் ரோட்டில் சென்றால் நெடுஞ்சாலைப் பொறியர்கள் 'கிருஷ்ணாபுரம் கலைச் சிற்பங்கள்' என்று எழுதி ஒரு போர்டு. நாட்டிக் கோயிலுக்குச் செல்லும் வழியைக் குறிப்பிட்டிருப்பார்கள். ரயிலிலே செல்பவர்கள் செய்துங்க நல்லூர் (ஆம், செய்து உண்க நல்லூர் அல்ல, ஜெயதுங்கள் நல்லூர்தான்) ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக் கொண்டு மேற்கு நோக்கி இரண்டு மைல் வரவேணும். அப்படி வந்த ரோட்டை விட்டு இறங்கி இரண்டு பர்லாங்கு பனந்தோப்பு வழியாக நடந்தால் திருவேங்கடநாதன் கோயில் வாயில் வந்து சேரலாம். இந்தத் திருவேங்கடநாதன் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்றவர் அல்ல. ஆனால் இக்கோயில் ஒரு பெரிய சிற்பக்கலைக் கூடமாகவே இருக்கிறது.
கோயில் வாயிலில் ஒரு நல்ல கோபுரம். அந்தக் கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம், மண்டபத்தைக் நடந்து கோயில் வாயிலுள் நுழைந்தால் முதல் முதல் நாம் காண்பது முக மண்டபம். அந்த மண்டபம் தெற்கே பார்த்திருக்கிறது. அதன் முகப்பில் ஆறு தூண்களில் ஆறு அழகிய சிற்ப வடிவங்கள், அதில் ஒன்றுதான் நாம் முன்னர் குறித்த சிற்ப வடிவம், வீரனின் தோள்களில் சோழ ராஜகுமாரி உட்கார்ந்திருக்கிற நேர்த்தியையும், அவள் வெயிலுக்காகத் தன் முந்தானையை விரித்துத் தலைக்குமேல் பிடித்திருக்கிற அழகும் சிறப்பாயிருப்பதைப் பார்ப்போம். வைத்த கண் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்கச் செய்யும் சிலா படிவம். மற்றையத் தூண்களிலோ பாசுபத அஸ்திரம் பெறத் தவக்கோலம் பூண்ட அர்ச்சுனன், அவனோடு தீராப் பகைமை பூண்ட அந்த அங்க தேசத்து மன்னன், புகழ் பெற்ற கொடையாளி கர்ணன். இன்னும் அரசிளங்குமரனைச் சுமந்து நிற்கும் குறப்பெண் ஒருத்தி, இன்னும் இரண்டு பெண்களின் சிலை வடிவங்கள், பெண்களின் வடிவெல்லாம் கண்டார் கண்ணையும் கருத்தையும் கவர்வன, பாசுபதம் பெறப் பல மாத காலம் ஊண் உறக்கம் இன்றிப் பசுபதியை நாக்கித் தவம் செய்தவன் அல்லவா அருச்சுனன். ஆதலால் தாடி, சடை எல்லாம் நீண்டு வளர்ந்திருக்கின்றன. அவனுக்கு முகத்திலே ஓர் அசாதாரணக்களை, பெருந் தவசிகளுக்கு இருக்க வேண்டிய சாந்தம், பொறுமை எல்லாம் கனிகின்றன. தவக்கோலமே என்றாலும் வில் தாங்கிய வீரன்தான் அவன். அவன் பாசுபதம் பெறுவதே தன் வில்லாற்றலையும் மல்லாற்றலையும் காட்டத்தானே! இத்தனை அழகோடு விளங்கும் அர்ச்சுனனுக்குப் பக்கத்திலேயே கர்ணன், அவன் நாகபாச மேந்திய கையனாய் நிற்கிறான். வீரனுக்கு உரிய காம்பீர்யம், வில் வித்தையில் சிறந்தவன் என்பதனால் ஏற்பட்ட மிடுக்கு, எல்லாவற்றையுமே பார்க்கிறோம் இந்தச் சிலையில்.
இச் சிலைகளைப் பார்த்தபின் மகா மண்டபத்தில் நுழையலாம். கோயிலுள் நுழையும்போதே கொஞ்சம் பயபக்தியுடன்தான் நுழைய வேண்டும். உள்ளே சென்றதும் நம்மை உறுத்து லிழித்து நோக்குபவன்தான் வீரபத்திரன், கனல் உமிழ் கண்களுடன் தென் வரிசைத் தாண்களில் முதலிலேயே நிற்பான் அவன். சிவபிரானை மதியாத மாமனார் தக்ஷனையும் அவன் செய்த வேள்வியையுமே அழிக்கப் புறப்பட்டவன் ஆயிற்றே.
பார்த்த திக்கினில்
கொடிமுடி ஆயிரம் பரப்பி
ஆர்த்த திண்டய
வரை இரண்டாயிரம் துலக்கி
பேர்த்த தாள்களில்
அண்டமும் அகண்டமும் பொர
வேர்த் தெழுந்தனன்
வீரரில் வீர வீரன்
என்று திரிகூட ராஜட்ப கவிராயர் பாடியிருக்கிறாரே இவனைப் பற்றி. அந்த வீரருள் வீரனைக் கேடயமும் வாளும் ஏந்திய கையனாய்க் காலை வீசி வளைத்துப் போருக்குச் செல்லும் கோலத்தில் நேருக்கு நேர் பார்த்தால் நம் உள்ளத்தில் அச்சம் எழுவதில் வியப்பில்லை . இவனது துணைவனான வீரன் ஒருவனும் எதிர்த்தூணில் இருக்கிறான். இந்த வீரபத்திரனை அடுத்து மன்மதன்,
தேர் இஎம் தென்றலாக
செழுங்குடை. மதியமாக
தூரியம் கடல்களாகச்
சொற்குயில் காளம் ஆக
நாரியர் சேனையாக
நறைவண்டு விடு தூதாகப்
பாரினில் விஜயம் செய்யும்
படைம்தன்
ஆயிற்றே அவன். ஆனால் இங்கே கரும்பு வில் ஒன்றை மட்டுமே ஏந்திய கையனாய், மற்றப் படைக்கலங்களையெல்லாம் துறந்து நிற்கின்ற கோலத்தில் காண்கிறோம். ஆஜானுபாகுவாக இவன் இல்லை. கொஞ்சம் கட்டுக்குட்டென்றே நிற்கிறான். இவனுக்கு எதிர்த்த தூணில் அன்னத்தின் மீது ஆரோகணித்து வரும் ரதிதேவியோ பெண்மைக்கே ஓர் எடுத்துக் காட்டு. காமனும் கண்டு காமுறும் இம்மங்கை தன் அழகை, கையில் ஏந்திய கண்ணாடியில் கண்டு மகிழ்கிறான். 'நிலவு செய்யும் முகமும், காண்பார் நினைவு அழிக்கும் விழியும், கலகலவென்ற மொழியும், தெய்வக்களி துலங்கு நகையும்' உடைய இந்தப் பெண்ணணங்கு, நமது உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொள்கிறாள்.
இப்படித் தேர்ந்த அழகுக்கு எல்லையாக ரதிதேவியை வடித்துக் காட்டிய சிற்பி, நல்ல அவலக்ஷணத்துக்கும் ஓர் எல்லை காட்டுகின்றான். ரதிதேவியின் சிலைக்குப் பக்கத்திலுள்ள தூணில் ஓர் அழகிய மங்கையும், ஓர் அவலக்ஷணமான மனிதனும் உருவாகியிருக்கிறார்கள். அழகே வடிவமாக இருந்த ஒரு முனிவர் அந்தப் பெண்ணின் காதலைச் சோதிக்க வேண்டி இப்படி உருமாறினார் என்றும், அந்த நிலையிலும் அவரையே மணக்க இசைந்து நின்றாள் அவள் என்பதும் கதை. இதற்கு எதிர்த் தூணிலேதான் புருஷா மிருகமும் வீமனும், இருவருக்கும். நியாயம் வழங்கும் தர்ம புத்திரரும். எல்லாம் ஏழு எட்டு அடி உயரத்தில் காத்திரமான சிறப் வடிவங்கள். இத்தாலிய பேராசிரியர் பாதர் ஹீராஸ் போன்ற அறிஞர்கள் எல்லாம் கண்டு தலைவணங்கி நின்ற சிற்ப வடிவங்கள் இவை. இக்கலைக் கூடத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருப்பவரே திருவேங்கடநாதன்.
நாமும் வேங்கடவனை அந்தத்திரு வேங்கடத்திலும் இன்னும் பல தலங்களிலும் கண்டு களித்திருக்கிறோம்.
வேங்கடமே விண்ணோர்
தொழுவதுவும், மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினை நோய் -
தீர்ப்பதுவும் - வேங்கடமே
தானவரை வீழத் தன் ..
ஆழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான்மலை
என்று வேங்கடமலையைப் பற்றியெல்லாம் தெரிந்தவர்கள்தாம் நாம் என்றாலும், இத்தனை கலைப் பிரசித்தி உடைய சந்நிதியிலே கொலு வீற்றிருக்கும் வேங்கடவனை இங்கு தான் காண்கிறோம். கோயில் கருவறையில் நிற்கும் வேங்கடவர் நல்ல சிலா வடிவினர். செப்புச் சிலையாகவும், பூதேவி சீதேவி சமேதராக நின்று கொண்டிருக்கிறார்.
இந்தக் கோயிலையும் இங்குள்ள சிலா வடிவங்களையும் நிர்மாணித்தவர், நாயக்க மன்னர்களில் புகழ் வாய்ந்தவராக இருந்த கிருஷ்ணப்ப நாயக்கரே. இத்தலம் முதலில் வேங்கடராயபுரம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர்தான் கோயிலை நிர்மாணித்த கிருஷ்ணப்ப நாயக்கர் பெயராலே கிருஷ்ணாபுரம் என்று நிலைத்திருக்கிறது. இல்லை, விஜய நகர மன்னனான கிருஷ்ண தேவராயருடைய பெயரையே இதற்கு இட்டிருக்கிறார்கள் என்றும் வரலாறு உண்டு. இங்குள்ள கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயமும், கோவில் கட்டிய மன்னனைக் கிருஷ்ண பூபதி என்றே குறிக்கின்றன. ஆதியில் கோயிலைச் சுற்றிப் பெரிய மதில்; உயரில் குடி மக்கள் பலரும் இருந்திருக்கின்றனர். கோயிலைச் சுற்றிய மதில் சிதைந்து கிடக்கிறது. ஊரில் இன்று குடியிருப்பவர்கள் வெகு சிலரே. ஊர் முழுதும் குட்டிச் சுவர்களே அதிசும். இங்கு தெய்வச் சிலையார் என்று ஒரு பெரியவர் இருந்தார் என்றும், அவர்மீது தெய்வச் சிலையார் விறலி விடு தூது என்று ஒரு நூல் பாடப்பட்டிருந்தது என்பதும் வரலாறு. எனக்கு அந்த நூல் கிடைக்கவில்லை.
எனக்கு இந்தக் கோயிலில் அதிகம் ஈடுபாடு உண்டு. கலை அழகைக் கண்டு அனுபவிக்க நான் பயிற்சி பெற்ற பள்ளியே இக் கோயில்தான். முதல் முதல் சுலைகளைப் பற்றி எழுத முனைந்ததும் இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பற்றித்தான். ஆதலால் தான் ஏதோ வரப்பிரசித்தியோ, புராணப் பிரசித்தியோ இல்லாத தலம் என்றாலும், உங்களையெல்லாம் இக்கலைப் பிரசித்தி உடைய கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன், சிரமத்தோடு சென்றாலும் சிலை அழகைக் கண்டு திரும்பும்போது நிறைந்த மனத் தோடேயே திரும்புவீர்கள் என்பது திண்ணம்.
பின் குறிப்பு கிருஷ்ணாபுரம் கோயில் அண்மையில் அரசால் புனருத்தாரணம் செய்யப்பட்டு நல்ல நிலயில் காட்சியளிக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
25. ஸ்ரீ வைகுந்தத்துக் கள்ளப்பிரான்
காதல் வயப்பட்ட பெண் தன் காதலனுக்குத் தூது அனுப்புவது இயற்கை. அப்படியே ஒரு பெண் திருவரங்கநாதனிடமே காதல் கொள்கிறாள். அவனோ உதாசீனமாக இருக்கிறான். ஆதலால் தூதனுப்ப விரைகிறாள். சாதாரணமாகத் தோழியரையோ, கிளிகளையோ, அன்னங்களையோ, வண்டுகளையோ, தூதனுப்பவது தானே வழக்கம். இவள் நினைக்கிறாள், இவர்களையெல்லாம் அனுப்பினால் அவர்கள் இவளை வஞ்சிக்கமாட்டார்கள் என்பது என்ன உறுதி? ஆதலால் தனக்கு உற்ற துணையாக இருக்கும் நெஞ்சையே தூது அனுப்புகிறாள். ஆனால் நடந்தது என்ன? சென்ற நெஞ்சு திருவரங்கனை வணங்கி, தூது சொல்லிவிட்டுத் திரும்பாமல் அவன் அகன்ற மார்பின் அழகிலே லயிக்கிறது. கடைசியாகத் தான் வந்த காரியத்தை மறக்கிறது. ஏன், தன்னையுமே மறந்து விடுகிறது. அப்புறம் எப்படித் தூது சொல்லி மீளுவது? இப்படித் தன் உள்ளங்கவர்ந்த கள்வனாம் அரங்கனது காதலை வெளியிடுகிறாள் பெண் ஒரு பாட்டிலே, பாடியவர் திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். பாடல் இதுதாள். தோழியிடம் கூறுவதாகப் பாவனை.
நீர் இருக்க, மடமங்கைமீர்! கிளிகள்
தாமிருக்க, மதுகரம் எல்லாம்
நிறைந்திருக்க, மட அன்னம் முன்னம் நிரை
யாயிருக்க, உரையாமல் யான்
ஆரிருக்கினும் என் நெஞ்சம் அல்லது ஒரு
வஞ்சமற்ற துனை இல்லை என்று
ஆதரத்தினோடு தூது விட்ட பிழை
யாரிடத்து உரை செய்து ஆறுகேன்
சீரிருக்கும் மறைமுடிவு தேடரிய :திருவரங்கரை வணங்கிடே
திருத்துழாய்தரின் விரும்பியே கொடு
திரும்பியே வருதல் இன்றியே
வாரிருக்கு முலை மலர் மடந்தை உறை
மார்பிலே பெரிய தோளிலே
மயங்கி, இன்புற முயங்கி என்ளையும்
மறந்து தன்னையும் மறந்ததே.
இப்படி உள்ளங் கவர்ந்த கள்வன் அரங்கநாதன் மட்டும் அல்ல, சைவ உலகிலும் சீர்காழித் தோணியப்பர். பிள்ளைப் பிராயமே உள்ள ஞானசம்பந்தனது 'உள்ளங் கவர் கள்கூ'னாக இருந்ததையும் தான் அவர் முதற் பாட்டிலேயே படித்திருக்கிறோமே. ஆனால் இப்படி உள்ளங்கவர் கள்வனான பெருமாள் உண்மையாகவே ஒரு கள்வனுக்கு அவன் தொழிற்பட உதவியதோடு அவனுடைய உருவையே தாங்கி அரசன் முன் வந்திருக்கிறார் என்றால் அதிசயம்தானே. ஒரு காட்டிலே காலதூடகன் என்று ஒரு கள்ளர் தலைவன் இருக்கிறான், அவனும் அவன் சகாக்களும் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவன் நல்லவர்களை நெருங்குவதில்லை. தீயவர்களையே தேடிச் சென்று திருடி வருகிறவன். திருட்டில் கிடைத்த பொருளில் பாதியைப் பரந்தாமனுக்கே கொடுத்துவிடுகிறான். மீதத்திலும் தன் வாழ்க்கைக்கு வேண்டியது போக மிச்சம் இருப்பதை ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்து விடுகிறான். இப்படிப்பட்ட கள்ளனைப் பரந்தாமன் கைவிட்டுவிட முடியுமா என்ன? எப்படியோ ஒரு நாள் அரசகாவலர் இவனது சகாக்களைப் பிடித்து வருகின்றனர். இவன் மட்டும் தப்பித்து வந்து பரந்தாமனின் திருவடிகளில் விழுகிறான். பக்தனைக் காக்கும் பரம தயாளன் ஆயிற்றே அவர், ஆதலால் அவரே காலதூடகன் வேடத்தில் அரசனிடம் சென்று தம்மை ஒப்புவித்துக் கொள்கிறார். தம் உண்மை வடிவினையும் காட்டுகிறார். 'தருமம் செய்யப் பெறாத பொருள்கள் அழியும், அதனையே அரசர் கைப்பற்றுவர், திருடர் கவர்வர் என்ற உண்மையை உனக்கு அறிவிக்கவே காலதூடகனைத் தோற்றுவித்தோம். அவனுக்குத் துணை நின்றோம்' என்று தம் செயல் விளக்குகிறார். பரந்தாமனது திவ்ய தரிசனம் பெற்ற அரசன், 'ஐயா கள்ளப்பிரானே! உம் திருவருள் வழியே நானும் நிற்பேன்' என்று அவர் திருப்படிகளில் விழுந்து வணங்குகிறான். இப்படித்தான் உள்ளங்கவர் கள்வனான பரந்தாமன் கள்ளப்பிரானாகலம் நின்றிருக்கிறார். இந்தக் கள்ளப்பிரான் கோயில் கொண்டிருக்கும் தலமே ஸ்ரீ வைகுந்தம் அந்த ஸ்ரீ வைகுந்தத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.
பரம பதத்திலுள்ள ஸ்ரீ வைகுந்தத்துக்கோ கைலாயத்துக்கோ நம்மால் போக முடிகிறதோ என்னவோ, ஆனால் பூமியிலுள்ள ஸ்ரீ வைகுந்தத்துக்கு ரயிலிலே போகலாம், காரில் போகலாம், பஸ்ஸிலேயும் போய் சேரலாம், சென்று திரும்பவும் செய்யலாம். ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலிக்கு நேர் கிழக்கே பதினேழு மைவில் உள்ள சிறிய ஊர். ஒரு தாலுகாவின் தலைநகரம். தண்பொருநை நதியின் வடகரையில் கள்ளப்பிரான் கோயில் இருக்கிறது. திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் மார்க்கத்தில் சென்று ஸ்ரீ வைகுண்டம் ஸ்டேஷனில் இறங்கி, தாமிரபருணி ஆற்றில் கட்டியிருக்கும் அணையோடு கூடிய பாலத்தையும் கடந்து நாலு பர்லாங்கு சென்றால், கள்ளப்பிரான் கோயில் வாயில் வந்து சேரலாம். பாலத்தின் மீது நடக்கும் போதே தூற்றுப் பத்தடி உயரம் வளர்ந்துள்ள கோயில் கோபுரம் தெரியும்.
கோயிலும் பெரிய கோயில்தான். 580 அடி நீளமும் 396 அடி அகலமும் உள்ள மதிலால் சூழப்பட்டிருக்கும் கோயில் என்றால் கேட்கவா வேணும்? கோயில் வாயிலில் ஒரு தகரக் கொட்டகை போட்டுக் கோயிலின் பார்வை அழகைக் கெடுத்திருக்கிறார்கள். அதனை அடுத்து இருப்பதே ராமாயணக் குறடு உடைய மண்டபம். அதன் பின்னரே கோபுர வாசல். அந்த வாயில் வழியாகவே உள்ளே செல்ல வேணும். நாமோ கள்ளப்பிரானைக் காணும் ஆவலோடு வந்தவர்கள். ஆதலால் கொடிமர மண்டபம். இடைநிலைக் கோபுர வாயில், கருட மண்டபம், மணி மண்டபம் எல்லாம் கடந்து அர்த்த மண்டபத்துக்கே போய்விடலாம். அங்கே தான் தங்க மஞ்சத்திலே திருமகளும் நிலமகளும் இருபுறமும் இருக்கக் கள்ளப்பிரான் கையில் கதையுடன் நிற்கின்றார். நல்ல தங்கக் கவசம் அணிந்திருக்கிறார். அதைவிட அழகான திருமேனி உடையவர் அவர். அவரைச் சமைக்க சிற்பி அவரது திருமேனி அழகினால் கொள்ளை கொள்ளப்பட்டு மெய்மறந்து அவருடைய கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினான் என்றும், அப்படி அவன் தொட்டுக் கொஞ்சிய இடம் கன்னத்தில் பதிந்திருக்கிறது என்றும் சொல்வார்.
இந்த அர்த்த மண்டபத்துக்கும் அப்பால் உள்ள கருவறையிலேதான் வைகுந்த நாதர் நல்ல சிலை வடிவிலே நின்று கொண்டிருக்கிறார். சோமுகாசுரன், பிரம்மாவிடத்திலிருந்து நான்கு வேதங்களையும் பிடுங்கிச் செல்ல, அதற்காக வருந்தி பிரமன்தவம் செய்ய, வைகுந்தநாதன் பிரம்மனது தவத்துக்கு இரங்கிக் கருடன்மீது ஏறிவந்து சோமுகாசுரனை வென்று மறைகளை மீட்டுப் பிரம்மாவிடம் கொடுத்திருக்கிறார். கருவறையில் அந்த அரங்கநாதனைப்போல, ஸ்ரீதேவி பூதேவி எல்லாம் இல்லாமல் தனித்தே இருக்கிறார் வைகுந்தநாதர். பிரம்மனுக்காக அவசரமாக எழுந்தருளிய காரணத்தால் தன்னந்தனியே வந்திருக்கிறார் போலும். இவரையே பால் பாண்டியன் என்றும் அழைக்கிறார்கள். அன்று நான்முகன் பூசித்த வைகுந்த நாதர், சிலகாலம் மன்துக்குள்ளேயே மறைந்திருக்கிறார், அப்படி மறைந்திருந்த இடத்தில் அங்குள்ள பசுக்களெல்லாம் பால் சோரிய, அதை அரசனிடம் கோவலர்கள் அறிலித்திருக்கிறார்கள். அந்த இடத்துக்கு மன்னன் வந்து வெட்டிப் பார்த்து வைகுந்தநாதனை வெளிக் கொணர்ந்திருக்கிறான். இது காரணமாகவே இவருக்கு நாள்தோறும் பால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பாற்கடலிலே பள்ளிகொள்ளும் பரந்தாமன் பால் திருமஞ்சனம் பெறுவதும் அதனால் பால் பாண்டியன் என்று பெயர் சூட்டப்படுவதும் அதிசயமில்லைதானே.
இந்த வைகுந்தநாதனை வருஷத்துக்கு இரண்டு முறை சூரியன் வழிபாடு செய்கிறான். சித்திரை மாதம் ஆறாம் தேதி, ஐப்பசி மாதம் ஆறாம் தேதி இரண்டு நாட்களும் இளஞ்சூரியனது கிரணங்கள் கோபுர வாயில், மண்டபம் எல்லாம் கடந்து வந்து வாலகுந்தன் மேனியைப் பொன்னிற மாக்குகின்றன. இந்தச் சூரிய பூசனை பரந்தாமனுக்கு நடப்பது இத்தலம் ஒன்றிலே தான் என்று அறிகிறோம்.
இனி வெளியே வந்து வலமாகச் சுற்றினால், கன்னி மூலையில் வைகுண்டநாயகி, அதற்கு எதிர்த்த திசையில் சோரநாத நாயகியுடன் தனித்தனிக் கோயிலில் கொலுவிருப்பதைக் காணலாம். சோரநாத நாயகி சந்நிதி மண்டபத்தைக் கடந்து வந்தால் பரமபத வாசலைக் காண்போம். அது ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மாத்திரமே திறக்கப்படும். அதன் பக்கத்திலேயே மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கிறது. அங்கும் வணக்கம் செலுத்திவிட்டு மேலும் நடந்தால், சிலை உருவில் தசாவதாரக் காட்சியைக் காண்போம். இந்த வடிவங்களெல்லாம் எண்ணெய்ப் பசை ஏறி உருமழுங்கி நிற்கின்றன. இதற்கு எதிர்த்திசையில் தென்கிழக்கு மூலையில் யோக நரசிம்மர், சிலை உருவில் தனிச் கோயிலில் இருக்கிறார். அவர் முன்பு லக்ஷ்மி நரசிம்மர் செப்புச் சிலை உருவில் அழகிய வடிலில் அமர்ந்திருக்கிறார். இச்சந்நிதியில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை இரவிலும் சிறப்பான பூசை நடக்கிறது.
இவர்களையெல்லாம் கண்டு வணங்கிவிட்டு வெளிவந்தால் பலிபீடம், கண்ணன் குறடு, இவற்றுக்கு வடபுறம் ஒரு பெரிய மண்டபம் தோன்றும். அங்குதான் திருவேங்கட முடையான் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலின் சிற்பச் சிறப்பெல்லாம் இம்மண்டபத்தில்தான். வரிசைக்கு ஒன்பது சிங்கப் போதிகையோடு கூடிய யாளிகள் இருக்கின்றன. யானைமேல் யாளியும், யானையின்மேல் சிங்கமும் அதன்மேல் யாளியும் உள்ள தூண்கள் அவை. தெற்கேயிருந்து மூன்றாவது தரணில் யாளிகள் வாயில் அனுமார் நிற்கிறார். இங்குள்ள ஒவ்வொரு தூணின் மேலும் அனுமார் பலப்பல உருவங்களில் இருக்கிறார். ஆழ்வாராதியாகளும்
ஸ்ரீ வைகுண்டம் சுக்ரீவ சக்யம்
இருக்கிறார்கள். மண்டபத்தில் முகப்பில் உள்ள தூண் ஒன்றில் அகோர வீரபத்திரன் காட்சி கொடுப்பார். இவைகளையெல்லாம் விடச் சிறந்த வடிவங்கள் இரண்டு இம்மண்டப முகப்பில் உண்டு. ஒன்று ராமன் சீதாப்பிராட்டி சகிதனாகத் தனது இலங்கைப் படையெடுப்புக்கு உதலிய சுரீவனை அணைத்து அருள்பாலிப்பது. சுக்ரீவ ஸக்யம் இதிகாசப் பிரசித்த உடைய வரலாறு ஆயிற்றே. அதைக் கல்லில் காட்டும் காவியமாகச் சிற்பி வடித்தெடுத்து நிறுத்தியிருக்கிறான், ராமன் சக்ரீவனுக்கு அருள்பாலிக்கும்போதே லக்ஷமணனும் அங்கதனையும் அனுமனையும் அணைத்துக்கொண்டு நிற்கிறார். இப்படி, வானர வீரர்களை ராமனும் லக்ஷமன்னும் அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சி சிற்ப உலகிலே அவூர்வமானவைதாமே. இத்தலமும் இதனை அடுத்துள்ள எட்டுத் தலங்களும் நம்மாழ்வார் பாடிய நவ திருப்பதிகள். அவைகளில் பொருநைபாற்றின் தென் கரையில் இருப்பவை நம்மாழ்வார் கோயில் கொண்டிருக்கும் ஆழ்வார் திருநகரி என்னும் குருகூரும், நம்மாழ்வாரது சிஷ்யரான மதுரகவியாழ்வார் பிறந்த திருக்கோகரும், மகரநெடுங்குழைக்காதர் கோயில் கொண்டுள்ள தென் திருப்பேறையும் ஆகும். மற்றவை ஸ்ரீ வைகுந்தம், நந்தம் என்னும் வரகுணமங்கை, திருப்புளிங்குடி, பெருங்குளம். இரட்டைத் திருப்பதி என்னும் தொலைவில்லிமங்கலம் ஆகும். நவ திருப்பதிகளையும் நம்மாழ்வார் பாடியிருக்கிறார். அதில் பிரபலமான பாட்டு ஒன்றில் புளிங்குடி, வரகுணமங்கை வைகுந்தத்திலுள்ள மூவரையும் சேர்த்தே பாடியிருக்கிறார்.
புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை
இருந்து, வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே
என்னை ஆள்வாய், எனக்கருளி
நளிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்பு
நாங்கள் கூத்தாடீ நின்று ஆர்ப்ப
பரிங்கு நீர் முசிலின் பவம்போல் கனிவாய்
சிவப்ப நீ காலாவாராயே!
என்பது பாசுரம்.
இக்கண்ணபிரான் கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. ஒன்று தேவர் பிரான் நாதருக்குக் கோனேரி மேல் கொண்டான் வல்லநாட்டில் ஐந்து மாநிலம் மடப்புற இறையிலியாக் கொடுத்ததைக் குறிக்கிறது. திருவரங்கப் பெருமான் பல்லவராயர் பிரதிஷ்டை பண்ணியவர் வைகுந்தவல்லி என்ற தகவலும் கிடைக்கிறது. சடாவர்மன், குலசேகரர் கோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர் முதலியோர் செய்த திருப்பணி விவரங்கள் கிடைக்கின்றன. இத்தலத்தில்தான் குமரகுருபர அடிகள் பிறந்து வளர்ந்தார் என்பதும் யாவரும் அறிந்ததொன்றே.
வைகுந்தம் வரை வந்துவிட்டோமே, திருக்கயிலாயம் இங்கிருந்து மிகவும் தூரமோ என்று சைவ அன்பர்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது. இல்லை, வைகுந்தத்திலிருந்து கூப்பிடு தூரமே கைலாயம் என்பதையும் இத்தலத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இந்தக் கள்ளப்பிரான் கோயிலிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே கைலாசநாதர் கோயில் இருக்கிறது. அங்கும் சிறு சிறு சிற்ப வடிவங்கள் நிறைய உண்டு. கள்ளப் பிரானைத் தரிசித்த கண் கொண்டே கைலாயநாதரையும் தரிசித்துத் திரும்பலாம்.
26. ஆழ்வார் திருநகரி ஆழ்வார்
நேபாளத்தில் கபிலவஸ்து என்ற இடத்தில் சுத்தோதனர் என்று ஓர் அரசர் இருந்தார். அவருக்கு மாயாதேவி என்பவள் மளைவி. இவர்களுக்குப் பிள்ளைாகச் சித்தார்த்தர் பிறந்தார். இந்தச் சித்தார்த்தர் யசோதரையை மணந்தார். ராகுலன் என்ற மகனைப் பெற்றார். இல்லறமாம் நல்லநத்திலே வாழ்ந்த இந்த ராஜகுமாரராம் சித்தார்த்தர் உலகிலுள்ள மக்கள் பினி, மூப்பு, சாக்காடு முதலிய துன்பங்களால் துயருறுவதைக் கண்டு மனம் தளர்ந்தார். பிறவிக் கடலைக் கடந்து இத்துன்பங்களினின்றும் நீங்க வழி எது என்று சிந்திக்கலானார். கடைசியில் ஒரு நாள் இரவு மனைவி மக்கள் எல்லாரையும் உதறி விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறினார். ஆறு ஆண்டுகள் பல இடங்களில் திரிந்தவர் கடைசியாகக் கயாவுக்கு வந்து அங்குள்ள போதி மரத்தடியில் அமர்ந்தார். அங்குதான் அவர் மெய்யறிலைப் பெற்றார். போதி மரத்தடியிலிருந்து ஞானம் பெற்று உலகுய்ய வழிகாட்டிய இந்தப் பெருமகனே புத்தர். அவர் காட்டிய வழி நிற்பவர்களே பௌத்தர்.
இவரைப் போலவே தென் தமிழ் நாட்டில் ஒரு புளிய மரப் பொந்திலிருந்து ஞாலோபேதேசம் செய்த பெருமான்தான் நம்மாழ்வார். தண்பொருநை நதிக்கரையில், முன்பு குருகூர் என்று பெயர் பெற்ற இன்றைய ஆழ்வர் திருநகரி தலத்திலே காரியார் என்ற சிற்றரசருக்கும் உடைய நங்கைக்கும் திருமகனாய்ச் சடகோபர் தோன்றினார். பிறந்ததிலிருந்தே மற்றக் குழந்தைகளைப் போல் பாலுண்ணல், அழுதல் முதலிய செயல்களின்றிக் கண்மூடி மௌனியாக இருந்தார். இது கண்டு வியப்புற்ற பெற்றோர், சில நாட்கள் சென்றபின் பிள்ளையை எடுத்துக் கொண்டு அவ்வூரில் உள்ள ஆதிநாதர் கோயிலுக்குச் சென்றனர். கோயிலுள் சென்றதும் சடகோபர் மெள்ளத் தவழ்ந்து கோயில் பிராகாரத்திலுள்ள புளிய மரத்தடியில் அமர்ந்து கொண்டார். உணவும் நீரும் இன்றி வாழ்ந்தாலும் குழந்தையின் உடல் வளர்ச்சி குன்றவில்லை. பதினாறு பருவங்கள் இப்படியே கடந்தன. இந்த நிலையில் வட நட்டுக்கு யாத்திரை சென்றிருந்த மதுரகவி என்னும் அந்தணர், தென் திசையில் ஒரு பேரொளியைக் சண்டார். அவ்வொளியை நோக்கி நடந்து வந்து புளியமரத்தின் பொந்தில் இருந்த சடகோபரைக் கண்டார். மதுரகவியார் கேட்ட வினாக்களுக்கு இவர் அளித்த பதிலைக் கேட்டு அவரை மகாஞானி என்று உணர்ந்தார். இவரே காலக்கிரமத்தில் திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்ற திவ்யப் பிரபந்தங்களைப் பாடி அருளினார். நம்மாழ்வார் என்றும் புகழ் பெற்றவரான இவரே, ஆழ்வார்களுக்குள் தலையாய ஆழ்வாராக விளங்குபவர். இவரே வேதம் தமிழ் செய்த வித்தகர், வகுள பூஷ்ண பாஸ்கரர், நம்மாழ்வார், உலகுய்யத் தோன்றிய குரு மூர்த்திகளுள் முதன்மையானவர். இயல்பாய் மெய்புலர்வு பெற்று எல்லாவற்றுக்கும் அடிப்படையான வித்தினை உணர்ந்தவர். உணர்ந்தவாறே உலகுக்கு உணர்த்தியவரும் கூட. இந்த ஆழ்வார்திருநகரிக்கே ஒரு கவிஞர் வந்திருக்கிறார். அவருக்குத் திருநகரி வந்ததும் ஓர் எக்களிப்பே உண்டாகிறது. அந்த எக்களிப்பில் பாடுகிறார்.
இதுவோ திரு நகரி?
ஈதோ பொருதை?
இதுவோ பரமபதத்து
எல்லை?-இதுவோ தான்
வேதம் பகர்ந்திட்ட
மெய்ப்பொருளின் உட்பொருளை
ஓதும் சடகோபன் ஊர்?
என்று. இந்த நம்மாழ்வார் பிறந்து வளர்ந்த காரணமாகவே குருகூர், ஆழ்வார்திருநகரி என்ற பெயரோடு வழங்குகிறது.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்
ஆழ்வார் திருநகரி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலிக்குக் கிழக்கே இருபது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் வழியாகச் சென்று ஆழ்வார் திருநகரி ஸ்டேஷனில் இறங்கலாம் இல்லையென்றால் திருநெல்வேலி-திருச்செந்தூர் ரோடு வழியாக பஸ்ஸிலோ காரிலோ செல்லலாம். ரோட்டை அடுத்தே கோயில் இருக்கிறது. ஊருக்கு நடுவில் ஆதிநாதர் ஆழ்வார் கோயில் இருக்கிறது. இந்த ஊரிலே தெற்குமாடத் தெருவிலே திருவேங்கடமுடையான் கோயிலும் மேல் புறம் திருவரங்கநாதன் கோயிலும் வடக்குமாடத் தெருவிலே பிள்ளை லோகாச் சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் கோயில்களும் இருக்கின்றன. எல்லோருமே நம்மாழ்வாரைக் காணத்தேடி வந்தவர்கள் போலும். பஸ்ஸில் போனாலும் ரயிலில் போனாலும் நாம் முதலில் சென்று சேர்வது ஆதிநாதர் கோயிலின் சந்நிதி வாயிலில்தான். ஒருநாள் பிரம்மா திருமாலை வைகுந்தத்தில் வனங்க அவர், 'உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே நாம் தண்பொருநை நதிக்கரையில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை எமது வாசஸ்தலமாகக் கொண்டிருக்கிறோம்.அதனையே ஆதிக்ஷேத்திரமாகக் கொண்டு வழிபடு' என்று உபதேசிக்கிறார். அதன் பிரகாரம் பிரம்மா வந்திருக்கிறார். அப்படி வரும்போது ஆற்றிலே ஒரு வலம்புரிச் சங்கு மிதந்து வந்து திருச்சங்கனித் துறையில் ஏறி, அங்கிருந்த ஆதிநாதரைச் சுற்றி விட்டுச் சென்றிருக்கிறது. இதனைக் கண்டு பிரம்மா இப்படித் திருமால் உகந்து இடம் பிடித்துக் கொண்டு தலத்திலே இருந்த தலத்திலே ஆதிநாதரை ஆராதித்து சத்யலோகம் திரும்பியிருக்கிறார். திருமாலே குருவாக வந்து உபதேசித்த தலமானதால் இத்தலம் குருகர் என்று! பெயர் பெற்றிருக்கிறது. கோயில் வாயிலின் அழகை, ஸ்ரீ வைகுந்தத்தில் போலவே, ஒரு தகரக்கொட்டகை கெடுக்கிறது. அதைச் சேர்ந்தாற்போல் ஒரு பெரிய மண்டபம், அதில் தான் இராமாயணக் குறடு இருக்கிறது. அதைத் தாண்டி மேற்சென்றால் கோபுர வாயில், அதை அடுத்தே கொங்கணையான் குறடு, கிளிக்குறடு எல்லாம். இவற்றையெல்லாம் கட்டந்தே கருட மண்டபம் வந்து சேரவேனும், இன்னும் நடந்தால் அர்த்த மண்டபம், அங்கு வந்து தான் கருவறையில் உள்ள ஆதிநாதரைத் தரிசிக்க வேணும். இவரும் இவர் பக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி இருவரும் சுதையினாலான வடிவங்களே. இந்த ஆதிநாதருக்கு முன்புதான், உத்சவர் பொலிந்து நின்று பிரான் என்ற பெயரோடு பொலிகிறார். இவரை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
இலிங்கத் திட்ட புராணத்திரும்
சமணரும் சாக்கியரும்
வலிந்து வந்து சொல்வீர்காணும்
மற்றும் நம் தெய்மாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரிவீசும்
திருக் குருகூர் அதனுள்
பொலித்து நின்ற பிரான் கண்டீர்
ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.
என்பது பாசுரம். பொலிந்த நின்ற பிரானைப் பாடியவர் ஆதிப் பிரானை மறந்து விடுவாரா? அவரையுமே பாடி மகிழ்ந்திருக்கிறார்.
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் -
மற்றும் பாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு
தேவர் உலகோடு உயிர்படைத்தாய்,
குன்றம் போல மணிமாட
நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க
மற்று எத்தெய்வம் நாடுதிரே?
என்பது பாட்டு. பொலிந்து நின்ற பிரான் பக்கத்திலேயே உத்சவர்களாகப் பூதேவி. சீதேவி, நீலாதேவி, மூவரும் நிற்கிறார்கள். இவர்களைத் தவிர இக்கோயிலில் தனிக்கோயில் நாச்சியார்களாக ஆதிநாயகியும், குருகூர் நாயகியும் வேறு இருக்கிறார்கள்.
இத்தலத்தில் வராக நாராயணர் ஞானப் பிரானாக முனிவர்களுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார். அவரது சந்நிதி தெற்குப் பிராகாரத்தையொட்டிய மேடை மீது இருக்கிறது. இந்தக் குருகூரில், ஆதிநாதரைவிடட் பிரபலமானவர் நம்மாழ்வார்தான். ஆம்! ஊர்ப் பெயரே அவரால் மாறி விட்டதே. ஆழ்வாரது திருநகரியாகத்தானே இன்று விளங்குகிறது. இந்த ஆழ்வார் திருநகரிக் கோயிலிலே தம்மாழ்வார் இருந்த புளியமரமே தலவிருக்ஷம். நம்மாழ்வார் அமர்ந்திருந்த மரத்தின் பாகத்தில் தினமும் திருமஞ்சன வழிபாடு நடக்கிறது. ஒரே மரமாக இருந்த போதிலும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற படி பல பொந்துகளோடுதான் விளங்குகிறது. இது ஏழு பிரிவாய்ப் பிரிந்த கோயில் விமானத்தில் எல்லாம் பரவி நிற்கிறது. இம்மரம் காய்த்த போதிலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்துபோய் விடுகிறது. இத்தலத்தைச் சுற்றியுள்ள புளிய மரங்களிலும் பழம் பழுப்பதில்லை . இந்த மரத்தடியிலே தனிக்கோயிலிலேதான் நம்மாழ்வார் சிலை வடிவில் இருக்கிறார். நம்மாழ்வாரது பூத உடலைப் பள்ளிப்படுத்திய இடத்திலேதான் கோயில் அமைத்து ஆழ்வார் உருவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இத்திருப்புளி ஆழ்வாரைச் சுற்றிய பீடத்தில் மதில் சுவர்களில் நூற்றியெட்டு திருப்பதிப் பெருமான்களும், கீழ் வரிசையில் ஆழ்வாராதியர்களும் அதன் கீழ் வரிசையில் யானை உருவங்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. உத்சவ மூர்த்தமான ஆழ்வார் சோபன மண்டபத்துக்கு எதிரே உள்ள பொன் குறட்டில் எழுந்தருளியிருக்கிறார்.
மற்றைய ஆழ்வார்கள் எல்லாம் பெருமாளைப் பாட நம்மாழ்வாரது சிஷ்யராய் அமர்ந்த மதுரகவியாழ்வார் மட்டும் சடகோபனையே பாடியிருக்கிறார். 'கண்ணிநுண்சிறுத் தாம் பினால்' என்று தொடங்கும் பதினொரு பாடல்களும் நம்மாழ்வார் புகழையே பேசுகின்றன.
நன்மையால் மிக்க
நான்மறையாளர்கள்
புன்மையாகக்
கருதுவர் ஆதலின்,
அன்னையாய் அத்தனாய்
என்னை ஆண்டிடும்
தின்மையான்
சடகோபன் என் நம்பியே
என்பது மதுரகவியாழ்வார் பாடல். நம்மாழ்வாரிடத்து ராமானுஜர் ஈடுபாடு எல்லாரும் அறிந்ததே. ராமானுஜர் குருகூருக்கு வரும் வழியில் திருப்புளிங்குடிப் பெருமானைத் தரிசித்து விட்டுத் திரும்பும்போது அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணை, 'இன்னும் குருகூர் எவ்வளவு தூரம் இருக்கும்' என்று கேட்க அவள் 'கூவதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்' என்று ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் போது சொல்லிய வண்ணம் *கூப்பிடு துாரம்' என்று கூறியிருக்கிறாள். சடகோபன் பாசுரத்தை அப்பெண் கூறியதைக் கேட்டு ராமானுஜர் அவளையே ஆழ்வாராக எண்ணித் தரையில் வீழ்ந்து வணங்கியிருக்கிறார் என்பது வரலாறு. கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கும் சடகோபரிடத்து ஈடுபாடு இருந்திருக்கிறது. சடகோபர் அந்தாதியே பாடியிருக்கிறாரே, இராமாவதாரம் பாடுமுன், நம்மாழ்வார் திருவடிகளை நினைத்து வணங்கிருக்கிறார்.
தருகை நீண்ட தயரதன் தாள் தரும்
இருகை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட
குருகை நாதன் குரைகழல் காப்பதே என்பதுதானே
அவரது பாடலாயிருக்கிறது. விஷ்ணு கோயில்களில் உள்ள ஆழ்வார் சந்நிதிகளிலெல்லாம் நம்மாழ்வார் சிலை வடிவிலும், செப்பு வடித்திலும் காட்சி கொடுப்பதைக் கண்டிருக்கிறீர்கள்! அங்கெல்லாம் கூப்பிய கையராய் இருக்கும் இவர் இந்தக் குருகூர் தலத்தில் மட்டும் உபதேசிக்கும் ஞானமுத்திரையோடு விளங்குகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கவும்.
குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியை விட்டுக் கிளம்புமுன் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள காந்தீசுவரம் சென்று அங்குள்ள ஏகாந்தலிங்கரையும் வணங்கியே திரும்பலாம். ஆழ்வார் திருநகரியில் ஒன்பது சிவன் கோயில்கள் இருந்தன என்றும். அவற்றை ஒரு சாத்தாதுவர் அழித்து ஆற்றுக்கு அணைகள் கட்டினார் என்றும், அது காரணமாக அவருக்கு வயிற்றில் நோவு உண்டாக, அதற்கு ஒரு பரிகாரமாகவே ஆற்றின் வடகரையில் காந்தீசுவரம் கட்டி ஏகாந்தலிங்கரைப் பிரதிஷ்டை செய்தார் என்பதும் வரலாறு. இந்தக் காந்தீசவரத்தில் கரூர் சித்தர் வாழ்ந்திருக்கிறார் அவரிடம் ஒரு நாய் இருந்திருக்கிறது. அது நாள்தோறும் குருகூர் வீதிகளில் விழும் எச்சிலையே உணவாக அருந்தியிருக்கிறது. ஒரு நாள் குருகூரிலிருந்து நதியைக் கடந்து வரும் போது வெள்ளத்தின் நீர்ச் சுழலில் அகப்பட்டு உயிர் இழந்திருக்கிறது. பின்னர் அதன் உயிர், ஒளி பெற்று விண்ணுலகு எய்திருக்கிறது. இதைக் கண்ட சித்தர்.
வாய்க்கும் குருகைத்
திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய்
அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் பதம் அளித்தால்
பழுதோ? பெருமாள் மகுடம்
சாய்க்கும்படி கவி சொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!
என்று பாடி அருள் பெற்றிருக்கிறார். குருகூரை விட்டுக் கிளம்பிக் கிழக்கே இரண்டு மைல் நடந்து மதுரகவி பிறந்த திருக்கோளூர் சென்று அங்கு கிடந்த கோலத்தில் உள்ள வைத்தமாநிதியையும் வணங்கித் திரும்பலாம்.
27. செந்தில் ஆண்டவன்
ஒரு கவிஞன் தமிழ்க்கடவுள் முருகனிடத்து அளவு கடந்த பக்தி படையகனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்பதை அறிகிறான். ஆம், 'என்றும் இளையாய் அழகியாய்' என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையில் வந்தவனல்லவா? கலிஞன் என்றால்தான் அவனோடு வறுமையும் உடன் பிறந்து வளருமே; வறுமையால் தவிகின்றான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாடுகிறார்கள். இந்த வலுமையையெல்லாம் துடைக்க அந்தக் கலியுக வரதன் முருகனிடம் முறையிடச் சொல்லி அவன் மனைவி வேண்டுகிறாள். 'தேவர் துயரையெல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயர் துடைப்பதுதானா பிரமாதம்?' என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் கவிஞனோ மெத்தப் படித்தவன். இந்த முருகளோ சின்னஞ்சிறு பிள்ளைதானே! அன்னை மடிமீதிருந்து இந்த இளவயதில் அன்னை அமுதுட்டினால் தானே உணவருந்தத் தெரியும்? அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை, அதனால் அவளோ அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு. அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பாள், இப்படியெல்லாம் தாயோடு விளையாடும் இந்த வயதில், பக்தர்கள் துயரையெல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை, நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும் ஆற்றல்தான் இருக்குமா? பிள்ளை கொஞ்சம் வளர்ந்த பெரியவனாகட்டும், நல்ல கட்டிளங்காளையாக, வீர புருஷனாக வளர்ந்து பின்னால் அன்றோ அவனால் தன் துயர் துடைத்தல் கூடும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப் போட்டுக்கொண்டு வருகிறான் ஒன்றிரண்டு வருஷங்களாக. ஆனால் ஒருநாள் அவனது நண்பர் ஒருவர். திருச்செந்தூர் செல்பவர், அவனையும் உடன் கூட்டிச் செல்கிறார். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தவன்தான் அவன் ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த முருகன் கோயிலுக்கு செல்கிறான்.
அலை வந்து மோதும் அத்திருச் சீரலை வாயிலின் கோயிலைச் சுற்றி வந்து தென் பக்கத்திலுள்ள சண்முக விலாத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகிறான். அத்தனை நேரமும் கூனிக் குறுகி நடந்த கவிஞன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்கு நேர் எதிரே சண்முகன் காட்சி கொடுக்கிறான், அங்கே செப்புச் சிலை வடிவில் நிற்கும் சண்முகன் பாலனும் அல்ல பால சந்நியாசியம் அல்ல, ஓராறு முகங்களும், ஈராறு கரங்களும் கொண்ட சண்முகநாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான். ஒரே தங்க மயமான பொன்னாடை புனைந்து ரத்ன சகிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே ஒரு லட்சம் ரூபாய் பெறும். கையில் ஏந்தியிருக்கும் வைர வேலோ எளிதாக இரண்டு லட்சம் ரூபாய் பெறும். ஆளுக்கே கொடுக்கலாம் ஐந்து லட்சத்துக்கு ஜாமீன். அத்தனை சௌகரியத்துடன் செல்வந்தனாகக் கம்பீரமாக நிற்கிறான். இவ்வளவுதானா? இந்த அழகனுக்கோ ஒன்றுக்கு இரண்டு மனைவியர். அழகனுக்கு ஏற்ற அழகிகளாக, அன்னம் போலவும், மயில் போலவும் விளங்குகிறார்கள். வஞ்சனை இல்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும் அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து. அழகு செய்திருக்கிறான்.
இதையெல்லாம் பார்த்த கவிஞனுக்கோ ஒரே கோபம் 'இன்னுமா இவன் சின்னப் பிள்ளை? என் குறைகளையெல்லாம் நான் முறையிடாமலேயே அறிந்து கொள்ளும் வயது இல்லையா? இல்லை, ஆற்றல் தான் இல்லையா? ஏன் இவன் நம் துயர் துடைத்திருக்கக் கூடாது?' என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் ஒரு பாட்டாகவே வெளிவருகிறது.
முன்னம் நின் அன்னை அமுதூட்டி
மையிட்டு முத்தமிட்டுக்
கன்னமும் கிள்ளிய நானல்லவே,
என்னைக் காத்தளிக்க
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு
பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ
இன்னமும் சின்னவன் தானோ
செந்தூரில் இருப்பவனே
என்பதுதான் பாட்டு, “அன்னமும் மஞ்ஞையும் போல் இரு” "பெண் கொண்ட ஆண்பிள்ளை அல்லவோ நீ” என்று ஆங்காரத்துடனேயே கேட்கிறான்: ஆறுமுகனை, இன்னமும் சின்னவன் தானோ என்று முடிக்கும்போது கவிஞனின் ஆத்திரம் அளவுகடந்தே போய் விடுகிறது. இப்படிப் படிக்காசுப் புலவன் நேருக்கு நேரே சண்முகனைக் கேட்ட தலம்தான் திருச்செந்தூர் என்னும் திருச்சீரலைவாய். அந்தத் திருச்செந்தூருக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருச்செந்தூர் திருதெல்வேலி ஜில்லாவில், திருநெல்வேலிக்குக் கிழக்கே முப்பத்தைந்து மைல் தொலைவில் இருக்கிறது. கடற்கரை ஆண்டியான செந்தில் ஆண்டவனைத் தரிசிப்பதற்கு முன் கடலாடிவிட வேண்டும் என்பர். கோயிலின் தென்புறத்தில் நல்ல வசதியாகக் கடலில் இறங்கி ஒரு முழுக்குப் போடலாம். அந்த முழுக்கால் உடலில் ஏறியுள்ள உப்பை, இன்னும் கொஞ்சம் தெற்கே நடந்து அங்குள்ள நாழிக் கிணற்றில் ஆம், நல்ல தண்ணீர் கிணற்றில்தான் குளித்துக் கழுவிக்கொள்ளலாம். திரும்பித் தென்பக்கம் வாயிலுக்கு வந்து சண்முக விலாசத்துக்குள் நுழைந்து கோயிலுள் செல்லலாம். முக்காணியர் என்ற அர்ச்சர்கள் உங்களை முதலில் சுப்பிரமணியன் சந்நிதிக்கே அழைத்துச் செல்வர். அவன்தானே அங்குள்ள மூலமூர்த்தி இந்தத் திருச்செந்தூர்தான் நக்கீரரது திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. மிகவும் பழமையான தலம் அல்லவா? பழைய சங்க இலக்கியமான புறநானூற்றிலேயே.
வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலை இய காமர் வியன்துறை
என்று குறிப்பிடப்பட்ட பதி. 'சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்றே முருகன் சிலப்பதிகாரத்தில் பாடப்பட்டிருக்கிறானே! இங்குள்ள பாலசுப்பிரமணியன் பெருமையெல்லாம் அவன் சூரசம்ஹரம் செய்து தேவர் இடுக்கண் தீர்த்தது தான். ஆதலால் அந்த வரலாற்றை முதலில் தெரிந்துகொள்ளலாம்.
சூரபதுமன், சிங்கமுகன், பாணுகோபன் என்ற அசுரர்கள் தேவர்களுக்கெல்லாம் இடுக்கண் செய்கிறார்கள். அதனால் தேவர்கள் எல்லாம் சென்று சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள், அவரும், அவர்கள் துன்பத்தைத் தீர்க்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். அதன்படியே தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று, அக்னியிடம் கொடுக்க அக்னியும் அந்தப் பொறிகளது வெம்மையைத் தாங்காது கங்கையிலே விட்டு விடுகிறாான். கங்கை அந்தப் பொறிகளைச் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இப்படித்தான் வைகாசி மாதத்தில் விசாக நாளில் விசாகன் பிறக்கிறான்.
இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றார்கள். இந்தக் கார்த்திகேயனைப் பார்க்கச் சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து மார்போடு அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்த்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள். அவனே கந்தன் எனப்பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறான். இவன் வளர்கிறபோதே சூரபது மனது கொடுமைகள் அதிகம் ஆகின்றன. உடனே தந்தையின் வாக்கைப் பரிபாலிக்க நவ வீரர்களை உடன் அழைத்துக் கொண்டு போருக்குப் புறப்படுகிறான். அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து அனுப்புகிறாள்.
இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கு ஆனவர்கள் தாராகாசுரனும் கிரௌஞ்சமலையும்தான். மண்ணியாற்றங்கரையில் உள்ள சேய்ஞ்ஞலூரில் சிவபிரானை வணங்கி, சூரபதுமன் இருக்கும் வீரமகேந்திரத் தீவை நோக்கி வருகிறான். திருச்செந்தூரில் முகாம் செய்து கொண்டு வீரபாகுவைத் தூதனுப்புகிறான். சூரபதுமன் சமாதானத்துக்கு இணங்க வில்லை. அவனும் போருக்குப் புறப்படுகிறான். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும், சிங்கமுகாசுரனையும் கொன்று குலிக்கிறான். ஆறு நாட்கள் நடக்கிறது போர். கடைசியில் போர் சூரபதுமனுக்கும் முருகனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரில் அன்னை தந்த வேலைப் பிரயோகித்து சூரனைச் சம்ஹாரம் செய்கிறான். திருச்செந்தூர் உற்சவங்களில் சிறப்பான உற்சவம் கந்த சஷ்டி உற்சவம்தான். வேற்படையால் இரு கூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறைத் தன் கொடியாகவும் அமைத்துக் கொள்கிறான் முருகன், இப்படி சூரபதுமனைத் தன் வாகனமாகவும் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். அந்த விசுவரூப தரிசனம் கண்ட் சூரபதுமனோ
கோலமா மஞ்ஞை தன்னில் -
குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்றிருந்தேன் அந்நாள்
பரிசு இவை உணர்ந்திலேன் யான்
மால் அயன் தனக்கும், ஏனை
வானவர் தமக்கும், யார்க்கும்
மூல காரண்மாய் நின்ற
மூர்த்தி இம் மூர்த்தி அன்றோ .
.
செந்தில் ஆண்டவன்
என்று துதிக்கிறான். இந்த மூர்த்திதான் திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவனாக எழுந்தருளியிருக்கிறான். நல்ல அழகொழுகும் வடிவம். விபூதி அபிஷேகம் செய்யக்கோயில் நிர்வாகிகள் மூன்று ரூபாய்தான் கட்டணம் விதிக்கிறார்கள். 'விபூதிக் காட்பிட்டுக் கண் குளிரக் கண்டால் நம் வினைகளெல்லாம் எளிதாகவே தீரும். உள்ளத்திலும் ஒரு சாந்தி பிறக்கும், இந்த ஆண்டவனை, பாசுப்பிரமணியனைத் தரிசித்து விட்டு வெளியே வந்து வடக்கு நோக்கித் திரும்பினால் அங்கு சண்முகன் நின்று கொண்டிருப்பார், அன்று படிக் காசுப் புலவர் கண்ட கோலத்திலேயே, ஆம், அன்னமும் மஞ்ஞையும் போல் இருபெண்களுடன் நிற்கும் ஆண் அழகனையே காணலாம். அவனையும் வணங்கிவிட்டு அவன் பிராகாரத்தை ஒரு சுற்று சுற்றி, துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வந்து அந்தப் பிராகாரத்தையும் சுற்றலாம். அங்குதான் மேலப் பிராகாரத்தின் இரு கோடியிலும் வள்ளியும் தெய்வயானையும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். இதற்கடுத்த பெரிய பிராகாரத்திலே சூரசம்ஹாரக் காட்சி சிலை வடிவில் (உப்புச உருவில்) அர்த்த சித்திரமாக இருக்கும். இந்தக் கோயிலின் வடக்குப் பிராகாரத்திலே வேங்கடவன் கொலு வீற்றிருக்கிறான். அங்கு மணல் மேட்டைக் குடைந்து அமைத்த அனந்தசயனனையும் கஜலட்சுமியையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றிய ரசமான வரலாறு ஒன்று உண்டு, 1648-ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பொன் வண்ணத்தில் இருக்கும் ஆறுமுகனைக் கண்டு களித்திருக்கிறார்கள், அந்த மூர்த்தியை எடுத்துச் சென்றால் அத்தனை பொன்னும் தங்களுக்கு உதவுமே என்று கருதி, அந்த மூர்த்தியைக் களவாடிக் கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள்: ஆனால் ஆறுமுகனோ அவர்களுடன் நெடுந்தூரம் செல்ல விரும்பவில்லை. ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறான். கொந்தளிக்கும் கடலிலே டச்சுக்காரர் கப்பல் ஆடியிருக்கிறது. இனியும் ஆறுமுகனைத் தங்கள் கப்பலில் வைத்திருத்தல் தகாது என நினைத்து அவனை அலக்காய்த் தூக்கிக் கடலிலேயே எறிந்திருக்கிறார்கள்.
கோயிலில் இருந்த ஆறுமுகள் காணாமல்போன செய்தியை நாயக்க மன்னரின் பிரதிநிதியான வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார்; வருந்தியிருக்கிறார். பஞ்சலோகத்தில் இன்னொரு ஆறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் கடலுள் கிடந்த ஆறுமுகனே அவரது கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறான். அவன் தெரிவித்தபடியே அவர்கள் கடலில் ஆறு காத தூரம் சென்றதும் அங்கு ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்தில் கருடன் வேறே வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான். அங்கு மூழ்கிப் பார்த்ததில், கடலின் அடித்தளத்தில் டச்சுக்காரர்கள் களவாடிய ஆறுமுகமானவன் இருந்திருக்கிறான்: இதனை எடுத்து வந்து ஒரு நல்ல மண்டபம் கட்டி அதில் இருத்தியிருக்கிறார் வடமலையப்பர். அதனாலேயே இன்னும் ஆறுமுகவன் கோயில் கொண்டிருக்கும் மண்டபம் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.
இது ஏதோ கற்பனை கதை அல்ல. 1785 இல் பெர்லின் நகரிலிருந்து எம். ரென்னல் எழுதிய 'சரித்திர இந்தியா' என்ற புத்தகத்தில் இத்தகவலைத் தாம் ஒரு டச்சு மாலுமியிடமிருந்து தெரிந்து கொண்டதாக அவர் எழுதியிருக்கிறார். 1648 இல் இது நடந்தது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார், 1648 இல் கடலுள் சென்ற ஆண்டவன் 1553 இல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலம் வெளிவந்திருக்கிறான். அன்றிலிருந்து அவன் புகழ் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்தச் செந்தில் ஆண்டவனிடத்திலே பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மன் மிகுந்த பக்தி சிரத்தையோடு வாழ்ந்திருக்கிறான். திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த லஷிங்டன் என்ற துரை மகனும் இந்த ஆண்டவனிடம் ஈடுபட்டு 1803 இல் பல வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கின்றார்.
இக்கோயில் கட்டியிருக்கும் இடம் ஆதியில் கந்தமாதன் பர்வதம் என்ற மணல் குன்றாக இருந்திருக்கிறது. தேவர்கள் வேண்டியபடித் தேவதச்சனான மயனே முதலில் கோயில் கட்டினான் என்பது வரலாறு. மயன் கட்டிய கோயில் நாளும் விரிவடைந் திருக்கிறது. பாண்டிய மன்னர்களும் சேர மன்னர்களும் இக்கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறார்கள். வரகுணமாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன் முதலியோர் கோயிலுக்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கின்றன. கி.பி. 1729 முதல் 1758 வரை திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்டவர்ம மகாராஜா இக்கோயிலில் உதய மார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த இருபதாம் நூற்றாண்டிலும், மௌனசுவாமி என்பவர் கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்தியவர் வள்ளிநாயக சுவாமிகள், இன்று விரிவடைந்திருக்கும் கற்கோயில், ராஜகோபுரம், பிராகாரங்கள் எல்லாம் இவர்களது திருப்பணி வேலைகளே. முருகன் கோயில்களில் எல்லாம் சிறப்பான கோயிலாக இருப்பது இந்தச் செந்திலாண்டவன் கோயிலே.
28. வானவாமலைத் தோத்தாத்திரிநாதர்
ஆடுங் கடை மணி
ஐவேல் அசதி அணிவரைமேல்
நீடும் கயற் கண்ணியார்
தந்த ஆசை நிகழ்த்தரிதால்
கோடும், குளமும், குளத்தருகே
நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்
தோன்றுது என் கண்களுக்கே
என்று ஒரு பாட்டு. ஒளவையார் பாடிய அசதிக் கோவையில் உள்ள பாட்டு. ஒளவைப் பிராட்டி ஒரு நாள் மதிய வேளையில் ஒரு குக்கிராமத்துக்குப் போகிறார். அவருக்கு நல்ல பசி. அப்போது வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு குடியானவன் ஔவைக்குக் குடிக்கக் கூழ் கொடுக்கிறான். ஔவை அவன் பெயர் என்ன? என்று கேட்கிறாள், 'அசத்துப் போச்சே' என்கிறான். ஊர்ப் பெயர் கேட்கிறாள்; தன் பெயரையே மறந்து போனவன் ஊர்ப் பெயரை ஞாபகத்தில் வைத்திருப்பானா? அதுவும் மறந்து போச்சு என்கிறான். ஊரில் ஏதாவது முக்கியமான காட்சி இருக்கிறதா என்கிறாள். தன் ஊருக்கு அடையாளமாக ஐந்து வேலமரங்கள் இருக்கின்றன என்கிறான். அதனால் 'ஐவேல் அசதி' என்று அவன் பெயரை உருவாக்கிக்கொண்டு ஒரு கோவையே பாடி விடுகிறாள் ஔவை. பாடல் நல்ல காதல் துறையில் அமைந்த பாடல். இதே போல் நான்கு ஏரிகள் சூழ்ந்த ஒரு தலம். அங்கு ஒரு கோயில். அக்கோயிலில் இருப்பவர் தோத்தாத்திரி. வந்த வணங்குவார் பாவங்களையெல்லாம் கழுவித் துடைத்து முத்தி கொடுப்பவர். தோத் என்றாலே துடைப்பவர் என்று தானே பொருள்; கோயில், குளம், குளக்கரை, மரம் என்றெல்லாம் அமைந்து, காண்பார் நினைவில் எல்லாம் பக்தியை உண்டுபண்ணும் தலந்தான் அது. இத்தலத்தைப் பற்றிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் பாடுகிறார்.
வானோர் முதலா
மரம் அளவா எப்பிறப்பும்
ஆனேற்கு அவதியிடல்
ஆகாதோ?-தேனேயும்
பூவர மங்கை
புவிமங்கை நாயகனே!
சீவர மங்கை அரசே!
என்பது பாடல். வானோர் முதல் மரம் வரை எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த மனிதனுக்குப் பிறப்பே இன்றி முத்தியை அளித்தல் ஆகாதோ என்று கேட்டிருக்கிறார். அப்படி முத்தி அனிக்கவல்ல பதிதான் ஸ்ரீவரமங்கை என்னும் வானவாமலை என்றும் பாராட்டப் பெறும் நான்கு நேரி, அங்குள்ள தோத்தாத்திரி நாதர் கோயிலுக்குத்தான் செல்கிறோம் நாம் இன்று.
ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலம் திருநெல்வேலிக்கு நேர் தெற்கே பத்தொன்பது மைல் தொலைவில் இருக்கிறது. திருநெல்வேலி-நாகர்கோயில் பெருஞ்சாலை வழியாகத்தான் போக வேண்டும். கார் வசதியுடையவர்கள் காரிலேயே போகலாம். ஊருக்கு இரண்டு மைல் இருக்கும்போதே கோயில், கோபுரம், ஏரி எல்லாம் தெரியும். நான்கு ஏரிகள் அன்று இருந்து நான்கு நேரி என்ற பெயரை ஊருக்குத் தேடித் தந்திருக்கிறது. ஆனால் இன்று கோயிலை அடுத்திருப்பது ஒரு பெரிய ஏரிதான். ஏரிக் கரையில் பெரிய மரங்கள் எல்லாம் நிற்கின்றன. அந்த மரங்களின் ஊடே நீண்டுயர்ந்த கோபுரத்தைத் தாங்கிக் கொண்டு கோயில் இருக்கும். ஆதியில் கோயிலின் கருவறையே குளத்துக்குள்தான் இருந்திருக்கிறது. இன்றும் குளத்தில் நீர் நிறைந்திருந்தால் கோயில் கருவறையைச் சுற்றி ஒன்றிரண்டு அடித் தண்ணீர் நிற்கும். ஆம், கோயில், குளம், மரம் எல்லாம் பரமபத நாதனை நினைவுபடுத்திக் கொண்டே நிற்கும் அங்கு, கோயில் வாயிலுக்குச் சென்றால் முதலில் பந்தல் மண்டபம் என்ற இடத்துக்கு வந்து சேருவோம், அதை ஒட்டிய உயர்ந்த மண்டபங்களிலேதான் தங்க ரதம், தங்கச் சப்பரம் எல்லாம் இருக்கின்றன.
வானவாமலை கோயில்-குளம்
செல்வாக்கு உள்ளவர்கள் என்றால், நிர்வாகிகள் கதவுகளைத் திறந்து தங்க ரதத்தை எல்லாம் காட்டுவார்கள். ஆனால் பங்குனி உத்திரத்துக்கு முந்திய நாள் அங்கு சென்றால் ஒருவரது 'தயவும் இல்லாமலேயே தங்க ரதம் தெரு வீதியில் உலா வருவதைக் கானலாம். இந்தப் பந்தல் மண்டபத்தின் வடபகுதியிலேதான் வானபோமலை மடம் இருக்கிறது. அம்மடத்தில் உள்ள ஜீயர் பிரசித்தி உடையவர். அந்த மகானையும் தரிசித்து விட்டுப் பிறகு நடக்கலாம். கோபுர வாயிலைக் கடந்து கோயில் உள்ளேயே நுழையலாம். கோயில் வாயிலைக் கடந்ததும் நம் கண்முன் வருவது ஜெவந்தி மண்டபம். ஜெவந்தி நாயக்கர் என்றும், ஜெவந்தி ராஜா என்றும் அழைக்கப்பட்டவரால் கட்டிய மண்டபம் இது. நான்குநேரி தாலூகாவிலே ஜெவந்திபுரம் என்று ஓர் ஊரே இருக்கிறதே. சங்கரன் கோயிலிலும் ஜெவந்தி வாசல் இருக்கிறதே. ஜெவந்தி நாயக்கர் என்பவர் பக்தியோடு நல்ல திருப்பணிகள் எல்லாம் செய்திருக்கிறார் என்று அறிகிறோம்.
உற்சவ காலத்தில் இம்மண்டபத்திலே வைத்து உத்சவரை அலங்காரம் பன்ணி உலாச் செய்ய எழுந்தருளுவிப்பார்கள், இம் மண்டப முகப்பில் சாமரை ஏந்திய ஊர்வசி, திலோத்தமை இருவரும் நிற்கிறார்கள். இவர்களை நாம் கருவறையிலுமே பார்க்கப்போகிறோம். இந்த மண்டபத்தைச் சுற்றி ஒரு பிராகாரம். மண்டபத்தின் வடபுறம் உள்ள அறைகளில்தான் வாகனங்கள் எல்லாம் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இடப்புறம் இருப்பது வீரப்ப நாயக்கர் மண்டபம். இங்குள்ள தூண்களில் எல்லாம் நல்ல சிற்ப வடிவங்கள் உண்டு ஒவ்வொரு தூணிலும் நான்கு ஐந்து வடிவங்களைச் செதுக்கியிருக்கிறான் சிற்பி. அவைகளில் சிறப்பானவை அனுமனை அணைத்து . நிற்கும் ராமனது திருக்கோலமும், பீமனை எட்டிப் பிடிக்கும் புருஷா மிருகமும், இன்னும் வீரபத்திரன் முதலிய சிலைகளும் உண்டு.
இந்த மண்டபத்தை அடுத்தே லக்ஷிமி நாராயணன், லக்ஷிமி வராகர், வேணுகோபாலன், தசாவதார சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. ஜெவந்தி மண்டபத்துக்குப் பின்னால் உள்ள கொடிமரத்தைக் கடந்தே உள் கோயிலுக்குச் செல்ல வேணும், இந்த மண்டபம் தான் குலசேகர மண்டபம். இங்குதான் வடக்கு நாச்சியார், தெற்கு நாச்சியார் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இங்கேயே மணவாள மாமுனி, உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியர் சந்நிதிகள் எல்லாம் இருக்கின்றன. இன்னும் ஆழ்வார்களுக்கு என்று ஒரு தனி சந்நிதியும் உண்டு. நம்மாழ்வாரைத் தவிர எல்லா ஆழ்வார்களும் அங்கே இருக்கிறார்கள். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்து இங்குள்ள தெய்வ நாயகரை மங்களா சாஸனம் செய்திருக்கிறாரே, அப்படியிருக்க இவரை இங்கு காணோமே என்று கேட்கத் தோன்றும். நம்மாழ்வாரது வடிவம், உற்சவர் முன்பு வைத்திருக்கும் சடகோபத்திலே (சடாரியிலே) பொறிக்கப்பட்டு அவர் விசேஷ மரியாதையுடன் இருக்கிறார் என்பார்கள், அங்கே செல்லும்போது அவரைத் தரிசித்துக் கொள்ளலாம்.
இவ்வளவு இடமும் கடந்துதான் அர்த்த மண்டபத்தக்கு வர வேணும், அந்த மண்டபத்தக்கு வெளியே சந்நிதியை நோக்கிக் கூப்பிய கையராய் சந்நிதிக் கருடன் நிற்பார். கருவறையில் இருப்பவரே தோத்தாத்திரி - பட்டாபிஷேகக் கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி இருமருங்கும் இருப்ப, ஊர்வசியும் திலோத்தமையும் சாமரை வீசிக்கொண்டு நிற்பர். தங்க மயமான ஆதிசேடன் குடை பிடிக்க, வைகுந்தத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தில் காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திர சூரியர் எல்லாரும் இருப்பார்கள். வெளியே விஷ்வக் சேனர். ஆகப் பதினோரு பேர் ஏகாசனத்தில் இருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருக்கோலக் காட்சியை ஒரு கவிஞர் அழகாகப் பாடுகிறார்.
திருமலியும் வைகுந்தப் பெருநகரில்
இலங்கும் திருக்கோலம்
நிலத்தில் உள்ளார் திருஉறவேபணியச்
செல்வ நலம், அருளும் உயர்
செங்கமல மகளும் திருமருவு
பொறுமையுருச் சிறந்த நிலமகளும்
உருமலிய இருபாலும் உவந்தனர்
வீற்றிருப்ப உயர்வுறவே
உயர்ந்து பொருள் உணரமுயல் பிருகு
ஒப்புயர்வில் பெருந்தவத்து மார்க்கண்டன்
இருவர் உரிமையினால் இருபுறமும்
கரங்குவித்து நிலவக்
கருடனொடு சேனையர் கோன்
திரு ஆணை தெரியும் கருத்தினொடு
பணிந்து முணர்முறை உறவே இருப்பக்
கனிவுளத்தோடு இருமருங்கும்
கவரி இரட்டினராய்க் கவின் மலியும்
ஊர்வசி திலோத்தமையர் அமைய.
வருகதிர்கொன் பரிதியொடு
திங்கள் எனும் இருவர்மனை நினைத்து
தலைவணங்கி வாழ்த்தி அருகிருக்க
வாழ்வை எலாம் அடியவர்க்கு
அருளுவதே நினைந்தான் வானமலை
அரவணையின் வள்ளல் அடிபணிவாம்,
என்ற பாட்டுத்தான் எவ்வளவு விளக்கமாகக் கூறி விடுகிறது. இந்த மூலவருக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்திலேதான் உபய நாச்சியார், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் முதலியோர் பக்கம் இருக்கத் தெய்வநாயகன் என்னும் உற்சவமூர்த்தி பட்டாடை அணிந்து மகரகண்டி முதலிய அணிகளும் அணிந்து பெரியதொரு பீடத்தில் எழுந்தருளியிருக்கிறான், இந்தத் தெய்வ நாயகனையும், ஸ்ரீவரமங்கைத் தாயாரையும், நம்மாழ்வார் பத்துப் பாசுரங்களில் மங்களாசாஸணம் செய்திருக்கிறார்.
தெய்வ நாயகன் நாரணன்
திரிவிக்கிரமன் அடியிணைமிசை
மொய் கொள் பூம் பொழில்
சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை
ஸ்ரீவரமங்கை மேயபத்துடன்
வைகலில் பாடவல்லார்
வானோர்க்கு ஆரா அமுதே.
என்ற பாடலில் தெய்வநாயகன் ஸ்ரீவரமங்கையெல்லாரும் இடம் பெறுகின்றனர்.
இக்கோயிலில் உள்ள மூலவர் எல்லாரும் அன்று இருந்த ஏரியின் நடுவில் இருந்த பெரியதொரு பாறையிலேயே வடிக்கப்பெற்றவர். இன்றும் இம்மூலமூர்த்தியைச் சுற்றியே ஒரு பிராகாரம். அங்குதான் முப்பத்திரண்டு முனிவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர்தான் ரோமரிஷி. வைகாசன முனி, தும்பிக்கை ஆழ்வார் முதலியோர் எல்லாம் அங்கே இருக்கின்றனர். இத்தலத்தின் சிறப்பு, இங்கு நடக்கும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே. ஆறுபடி நல்லெண்ணெய்யைச் சந்தன எண்ணெய்யுடன் சேர்த்துத் தினசரி காப்பு நடக்கிறது. விசேஷ காலங்களில் நூற்றிப் பன்னிரண்டுபடி எண்ணெய்க் காப்பு நடக்கும். இப்படித் தோத்தாத்திரி நாதருக்குத் திருமஞ்சனம் செய்யப்பட்ட எண்ணெயை ஓரிடத்தில் சேகரித்துப் பின்னர் அதனை வீரப்ப நாயக்கன் மண்டபத்துக்குப் பின்னால் உள்ள எண்ணெய்க் கிணற்றில் விட்டு விடுகிறார்கள். இந்த எண்ணெய்க் கிணற்றில் நாம் கால்படி நல்லெண்ணெய்யை வாங்கி வந்து ஊற்றி விட்டு அக்கிணற்றிலிருந்து கால்படி எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம். கோயில் நிர்வாகிகள் எடுத்துத் தருவார்கள். இந்த எண்ணெய் தீராத சரும வியாதியான குஷ்டம் முதலியவைகளை யெல்லாம் தீர்க்கிறது என்பது நம்பிக்கை, பாட்டில் பாட்டிலாக இந்த எண்ணெய் வடநாட்டுப் பக்தர்களுக்குச் செல்கிறது. இந்த எண்ணெயின் மகிமையை அகஸ்தியரே அவருடைய வைத்திய முறையில் குறித்திருக்கிறார். பிரபல டாக்டர்களும் இந்த எண்ணெயின் மகிமையை உணர்ந்து இதை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பர். ஆதலால் இத்தலத்துக்குச் செல்லும்போது நீங்கள் ஒரு பாட்டில் எண்ணெய் எடுத்து வர மறக்காதீர்கள்,
இன்னும் இக்கோயிலில் உள்ள ராமர் சந்நிதி, கண்ணன் சந்நிதி, சக்கரத்தாழ்வார் இடங்களுக்கும் சென்று கண்டு தரிசித்துத் திரும்பலாம். இத்தலம் வானவாமலை என்று அழைக்கப்படுவதின் காரணம் பாண்டி மன்னன் ஒருவன் வானவன் மாதேவி என்ற சேரகுல மங்கையை மணந்து வானவன் என்ற பட்டத்தையே ஏற்றிருக்கிறான். இந்தப் பாண்டிய மன்னனே முதன் முதலில் இக்கோயிலைக் கட்டியிருக்க வேணும். வரமங்கை நாச்சியார் கோயில் கொண்டிருப்பதன் காரணமாக வரமங்கல நாயகர் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அந்தப் பெயரையே நம்மாழ்வாரும் தம் பாசுரங்களில் கையாண்டிருக்கிறார். பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் நாயக்க மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. இன்னும் சுற்றுத் தூண்கள் தாங்கும் நீண்ட பிராகாரங்கள் இக்கோயிலின் பெரும் பகுதி நாயக்கர் திருப்பணியே என்பதை நினைவுறுத்தும். புஷ்பாஞ்சலி சன்னியாசி என்பவர் இங்கிருந்த பல திருப்பணிகளைச் செய்தார் என்பதும் வரலாறு. அப்படித் திருப்பணி செய்த அன்பர்களுக்கு நாமும் அஞ்சலி செய்து விட்டு மேலே நடக்கலாம்.
29. திருக்குறுங்குடி அழகிய நம்பி
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமானாவதாரம் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினன் என்பது நமக்குத் தெரியும். இந்த வாமனனே பின்னர் திருவிக்கிரமனாக வளர்ந்தான் என்பதையும் அறிவோம், இந்த வாமனாவதாரத்தைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான். நமக்குத் தெரிந்த கதைதானே. மண் உலகில் மகாபலி என்ற பெயரோடு மகா சக்தி வாய்ந்த அரசன் ஒருவன் ஆள்கிறான். நல்ல குணசீலன், ஆட்சியையும் திறம்படி நடத்துகிறான். அவனது சீலம் காரணமாகவே வானுலகம் பூவுலம் எல்லாம் அவன் ஆளுகைக்குள் வந்து விடுகிறது. இதன் பின் அவன் ஓர் அரிய யாகத்தையும் செய்ய முற்படுகிறான். இந்த யாகம் நிறைவேறினால் மகாபலிக்கு இன்னும் எவ்வளவோ சக்தி வந்துவிடுமே என்று தேவர்கள் அஞ்சுகிறார்கள். திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள் மகாபலிக்கு முக்தியை அருளவேண்டும் என்று அவருக்குமே ஆசை. அதற்காக அவர் காசிப முனிவருக்கு அவர் மனைவி அதிதி வயிற்றில் பிள்ளையாக அவதரிக்கிறார். பிறக்கும் போதே குள்ளமான வடிவத்தோடு பிறக்கிறார். அந்தக் குள்ள வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றன. எதுபோல என்றால், கம்பன் கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்கு விடை சொல்கிறான். கோடிகோடி வருஷங்களாக ஆலமரத்தில் உள்ள அற்புதத் தத்துவங்கள் எல்லாம் பரம்பரையை ஒட்டி, விடாமல் வந்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ கோடி வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கவும் போகின்றன. அற்புதத்தில் அற்புதம் என்னவென்றால் எவ்வளவோ விரிந்தும், ஆதி அந்தம் என்றெல்லாம் இல்லாத இந்த ஆலின் தத்துவம் எல்லாம், தெண்ணீர்க் கயத்தச் சிறு மீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பதுதான் குறள் வடிவமும் அப்படித்தானே. பேரண்டத்திலுள்ள தத்துவங்களையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருந்தது அந்த வாமன வடிவம். இத்தனையையும் சொல்கிறான் கம்பன்.
காலம் தனித்து உணர்
காசிபனுக்கும்
வால் அதிதிக்கும் ஓர்
மாமகவாகி
நீல நிறத்து
நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர் வித்தின்
அருங்குறள் ஆனான்
என்பது பாட்டு, இந்த வாமனன்-குறளன் தோன்றிய தலம்தான் குறுங்குடி, குறுகிய வடிவினனான வாமனன் பிறந்த குடியே குறுங்குடி என்றாகிறது. வாமன க்ஷேத்திரம் என்று பெயர் பெறுகிறது. அக்குறுங்குடியிலே அழகிய நம்பி வந்து கோயில் கொள்கிறான், அந்தத் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.
திருக்குறுங்குடி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய ஊர். திருநெல்வேலி ஜங்ஷனுக்குத் தெற்கே பத்தொன்பது மைல் சென்றால் நாங்குநேரியைச் சேருவோம். நாங்குநேரி ஊருக்குள் போகாமல் ஊருக்கு வடபுறத்திலே மேற்கு நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பினால் கொஞ்ச தூரம் சென்றதும் இரண்டு பாதைகள் பிரியும். அவற்றில் தென்மேற்கு நோக்கிச் செல்லும் பாதையே குறுங்குடிக்குச் செல்லும். நாங்குநேரி வரை நல்ல ரோடுதான். அதன் பின் அவ்வளவு நல்ல ரோடு இருக்காது. திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து பணகுடி செல்லும் பஸ் ஒன்றைக் குறுங்குடி வழியே திருப்பியிருக்கிறார்கள். ஆனதால் பஸ்ஸிலேயே செல்லலாம். வழியில் உள்ள ஏர்வாடி, நம்பித்தலைவன், பட்டயம் என்ற ஊர்களையும், இடைவரும் நம்பியாற்றையும் கடந்தே குறுங்குடி சென்று சேர வேணும்.
தென்புறமாகக் கோயிலைச் சுற்றிகொண்டு வந்தால் நீண்டு உயர்ந்த மதில் தெரியும். மதிலை ஒட்டி தல்ல தென்னை வைத்து வளர்த்திருக்கிறார்கள். மலையை அடுத்த பிரதேசமானதால் நல்ல குளிர் சோலைகளும் இவ்வூரில் நிரம்பியிருக்கும். காரில் போகிறவர்கள் வடக்கு மதிலில் உள்ள ஒரு பாதை வழியாக நுழைந்து கோபுர வாயிலுக்கே சென்று விடலாம். மற்றவர்கள் கீழமாட வீதி வந்து கோயிலுள் நுழையலாம். பிரதான வாசலில் கோபுரம் இல்லை. அந்த வாசல் வழி நுழைந்து மட்டை அடி மண்டபத்தையும் கடந்து வந்தால் ரதி மண்டபம் வந்து சேர்வோம். அந்த மண்டபமே திருக்குறுங்குடி ஜீயர் மடத்தின் முகப்பு மண்டபமாக இருக்கிறது. அங்கு சிற்ப வடிவங்கள் உள்ளன. ரதி, அர்ச்சுனன், கர்ணன், தடாதகை முதலிய வடிவங்கள் எல்லாம் நல்ல காத்திரமானவை. இவைகள் எல்லாம் நமக்குக் கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்களை நினைவுபடுத்தும். இந்த மண்டபத்தை அடுத்து வீதியையும் கடந்தால் கோயிலின் பிரதான கோபுர வாயிலுக்கு வருவோம். கற்சுவர்களில் எல்லாம் எண்ணிறந்த சிற்ப வடிவங்கள். ஆதலால் இந்தக் கோபுரத்தையே சிற்ப கோபுரம் என்பார்கள். இந்தக் கோபுர வாயிலைக் கடந்தால் துவஜஸ்தம்ப மண்டபம் வந்து சேருவோம்.
இந்த மண்டபத்தின் வடபுறத்திலேதான் மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கிறது. அந்தச் சந்நிதிக்கு முன் அழகான மண்டபம் ஒன்று உண்டு. அங்குள்ள தூண்களில் எல்லாம் அழகு அழகான சிற்ப வடிவங்கள். நரசிம்மனது கோலம் இரண்டு. வழக்கமாக நாயக்கர் சிற்பத்தில் காணும் குறவன் குறத்தி வேறே. அனுமனது வடிவம் எல்லாம் இருக்கும். நல்ல காத்திரமான வடிவங்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிரம்பியவை. ஆனால் இந்த மண்டபத்தில் வௌவால்களும் துரிஞ்சல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு அசுத்தம் செய்து வைத்திருக்கும் என்பதையும் தெரிவித்து விடுகிறேன்.
துவஜஸ்தம்ப மண்டபத்தில் ஓர் அதிசயம். அங்குள்ள துவஜஸ்தம்பம். சந்நிதிக்கு எதிரே இராது. கொஞ்சம் வடபக்கமாக விலகி இருக்கும். இது என்ன திருப்புன்கூரில் நந்தி விலகிய மாதிரி இருக்கிறதே என்று கேட்கத் தோன்றும் நமக்கு. உடனே அர்ச்சகர் சொல்வார் 'ஆம், இங்கும் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காகத்தான் ஸ்தம்பம் விலகியிருக்கிறது' என்று. அது யார் நம்பாடுவான் என்று தெரிந்த கொண்டே மேலே நடக்கலாம். குறுங்குடியை அடுத்த மகேந்திரகிரியிலே பாணர்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் யாழ் வாசிப்பதில் வல்லவர்கள். இவர்களில் ஒருவன் குறுங்குடி நம்பியைக் காண வருகிறான். கார்த்திகை மாதம் சுக்லபக்ஷத்து ஏகாதசியன்று. வழியிலே பசியோடிருந்த பிரமராக்ஷஸன் ஒருவன் இவனைப் பிடித்துக் கொள்கிறான். நம்பியைத் தரிசித்து விட்டு வந்து அவனுக்கு இரையாவதாகச் சொல்லி விடைபெற்றுக் கோயில் வாயிலில் நின்று நம்பியைத் தரிசிக்க முயல்கிறபோது கோயிலில் கொடிமரம் மறைக்கிறது. ஆயினும் பக்தி சிரத்தையோடு பாடுகிறான். நம்பியும் பாணனுக்கு மறைக்காமல் இருக்கக் கொடி மரத்தை நகரச் சொல்கிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து, நம்பியைப் பாணன் தரிசிக்க வகை செய்கிறது. இதனால் மெய் புளகித்த பாணனும்.
எங்ஙனயோ அன்னைமீர்காள்
என்னை முனிவதுநீர்?
நங்கள் கோலத்திருக்குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்
தங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனி வாயொன்றினோடும்
செல்கின்றதென் நெஞ்சமே.
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை கைசிகப் பண்ணில் அமைத்துப் பாடுகிறான். பாட்டை அவன் பாடப்பாட நம்பியும் மகிழ்ந்து அவனை ‘நம்பாடுவான்' என்றே அழைக்கிறான். தன்னைப் பாடிய நம்பியை 'நம்மைப் பாடியவன்' என்று நம்பி அழைத்ததில் வியப்பில்லைதானே! நம்பாடுவான் என்ற பாணன் பாட்டை விரைவாகப் பாடுவதைக் கேட்ட நம்பி, காரணம் வினவ, தான் பிரமராக்ஷஸனுக்குக் கொடுத்து வந்த வாக்கைச் சொல்கிறான். நம்பியின் அருளால் பிரமராக்ஷஸனது பசி நீங்கிவிடுகிறது. அவன் தன்னிடம் வந்த நம்பாடுவானைப் புசிக்க மறுக்கிறான், இடை வந்த நம்பி சமாதானம் செய்து, ஒரு பாட்டின் கான பலனைத் தத்தம் செய்யுமாறு நம்பாடுவானிடம் சொல்கிறார். இதனாலேயே இத்தலத்தில் கைசிக ஏகாதசி விசேஷச் சிறப்பாக நடக்கிறது என்பர். கொடி மரம் நகர்ந்ததற்கும், கைசிக ஏகாதசி ஏற்பட்டதற்கும் காரணம் தெரிந்துகொண்டு நேரே நம்பியைத் தரிசிக்கச் செல்லலாம். குலசேகரன் மண்டபத்துக்கு முந்திய பத்தியில் ஒரு பெரிய மணி தொங்குகிறது. அந்த மணியிலே ஒரு பாடல் பொறித்திருக்கிறது.
செய்துங்க நாட்டுச் சிறைவாய்மன்
ஆதித்தன் தென்வஞ்சியான்
லியலொன்ற சில கலையாளன்
கன்னி விசாகம் வந்தோன்
நயமொன்று கொல்லம் அறுநூற்று
நாற்பத்து நாலில் அன்பால்
அயனும் பணிய மணியளித்தான்
நம்பிக்கு அன்புகொண்டே
என்பது பாட்டு, இதிலிருந்து திருவிதாங்கோட்டு மன்னன் ஒருவன் நம்பியின் பக்தனாய் விளங்கி, இம்மணியைக் கோயிலுக்கு அளித்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். குலசேகரன் மண்டபத்தில் நின்றே மூலவராய் நின்ற அழகிய நம்பியைத் தரிசிக்கலாம். நல்ல அழகான வடிவம். அவரது மேனி, உள்ளே சிலையும் வெளியே சுதையுமாக இருக்கிற கோலம். அதனால் தைலக் காப்புத்தான் நடக்கிறது. உபய நாச்சியார், மார்க்கண்டேயர், பிருகு, எல்லாம் உடன் எழுந்தருளியிருக்கிறார்கள். கருவறையை அடுத்த கட்டில்தான் வைஷ்ணவ நம்பி என்ற உத்சவர் இருக்கிறார். இவர் பக்கலில் உபயநாச்சியார், நீளாதேவி, குறுங்குடி வல்லித் தாயார் எல்லாம் இருக்கிறார்கள். இவரை வைஷ்ணவ நம்பி என்பானேன் என்றால் அதுதான் உடையவர் இட்ட தாஸ்ய நாமம் என்பார்கள். ஸ்ரீ பாஷ்ய காரராம் ராமனுஜர் இத்தலத் துக்கு வந்த போது இந்த நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அந்த
குறுங்குடி நரசிம்மன்
ராமானுஜர் இட்ட பெயரே வைஷ்ணவ நம்பி என்பதாகும். அழகிய நம்பி யையும் வைஷ்ணவ நம்பி யையும் தொழுது வெளிவந்து பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் தென்பக்கத்தில் லக்ஷிமிநரசிம்மனும், ஞானப்பிரானான லக்ஷிமிவராகனும் தனித் தனிக் கோயிலில் இருப்பர். குறுங்குடி வல்லித் தாயாருக்கும் ஒரு தனிக்கோயில் உண்டு. மேலப் பிராகாரத்தில் தசாவதாரப் பெருமாள், ஸ்ரீனிவாசன், ஆண்டாள் எல்லாம் காட்சி கொடுப்பர். இவர்களையெல்லாம் தரிசித்துக் கொண்டு வடக்குப் பிராகாரத்தில் நடந்து தெற்கே திரும்பினாால் அங்கு ஒரு கோயில், அக்கோயிலில் சிவபிரான் லிங்க உருவில் இருப்பார். இவரையே மகேந்திர கிரிநாதர் என்றும் பக்கம் நின்ற பிரான் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோயிலுள் நடராஜர், சிவகாமி, சோமஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், எல்லாரும் செப்புச் சிலை வடிவில் குடும்பத்தோடு எழுந்தருளியிருக்கின்றனர். இவருக்குப் பக்கத்திலேயே கால பைரவருக்கும் தனிச் சந்நிதியிருக்கிறது. இதுவரை நமது க்ஷேத்திராடனத்தில் பெரிய பெரிய சிவன் கோயில்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைத்தான் கண்டிருக்கிறோம். இத்தலம் ஒன்றிலேயே பெரியதொரு பெருமாள் கோயிலில் சிவனும் பக்கம் நிற்கும் பிரானாக இருக்கிறார். சைவ வைஷ்ணவ பேதங்கள் எல்லாவற்றையும் அகற்ற, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் முயன்றிருக்கிறார்கள் என்பதை நாம் அறியும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறதல்லவா? இந்தப் பக்கம் நிற்பவர் பக்கத்திலேயே வீற்றிருந்த நம்பியும், பள்ளி கொண்ட நம்பியும் தனித் தனிக் கோயிலில் இருக்கிறார்கள். இவர்கள் பக்கத்தில் பூமியில் அழுத்தப் பெற்ற மகாபலியும் இருக்கிறான், தலையைக் கொஞ்சம் பூமிக்கு வெளியில் நீட்டிக் கொண்டு. கோயிலுள் நின்ற நம்பி என்னும் அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பியை எல்லாம் பார்த்து விட்டோம். இன்னும் கம்பீரமான நம்பி ஒருவன் உண்டு, அவன் மலைமீது ஏறி நிற்கிறான். அவனை மலைமேல் நம்பி என்பர். அவன் கோயில் கொண்டுள்ள இடம் இக்கோயிலில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. இரண்டு மூன்று மைல் வரைதான் வண்டிகள் செல்லக் கூடும். அதன்பின் இரண்டு மைல் நடந்தே செல்ல வேணும். அங்கே ஏழு எட்டடி உயரத்தில் மலைமேல் நம்பி சிலை உருவில். கம்பீரமான கோலத்தோடு நிற்பான். வசதியும் காலில் சக்தியும் உள்ளவர்கள் இவனையும் தரிசித்துத் திரும்பலாம்.
இவ்வளவு சொல்லி விட்டீரே, அந்த வாமனனாய் குறுங்குடிக்கே பெயரளித்த குறுகிய வடிவினனது வடிவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது என் காதில் லிழுகிறது. அந்த வாமனர். கோயிலுக்குத் தெற்கே நாலு பர்லாங்கு தொலைவில் உள்ள சத்திரத்திலுள்ள சந்நிதியில் இருக்கிறார். ஏன் அவருக்குப் பிரதான கோயிலில் இடம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நாம் அவரையும் ஒதுக்காமல் அங்கும் சென்று வணங்கியே வீடு திரும்பலாம்.
குறுங்குடி நம்பியைப் பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் நால்வரும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். இந்நம்பியின் அனுக்கிரகத்தாலேயே நம்மாழ்வார் திரு அவதாரம் செய்தார் என்பது வரலாறு. திருவாலித் திருநகரியில் பிறந்து தலங்கள் சென்று பரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டுக்கு எழுந்தருளியிருக்கிறார். அவரது கோயில் வடகிழக்கே அரை மைல் தூரத்தில் இருக்கிறது.
கோயில் அமைப்பு, மண்டபம், சிற்பங்களை எல்லாம் பார்த்தால் விஜய நகர நாயக்க மன்னர்கள் காலத்தில் இக்கோயில் விரிவடைந்திருக்க வேணும் என்று தெரிகிறது. திருக் குறுங்குடி அழகிய நம்பி உலாவில் இருந்து உதயமார்த்தாண்டர் என்ற அரசர் தம் பெயரால் சமர்ப்பித்த பந்தலின் கீழாக, ராமதேவர் என்பவர் தம் பெயரால் அமைத்த தனிப் பீடத்திலே நம்பி எழுந்தருளியிருக்கிறார் என்று அறிகிறோம். உதய மார்த்தாண்டர் சேர மன்னனாக இருத்தல் வேண்டும். ஒரு தாமிர சாஸனம் மூலம் விஜயநகரத்து அரசர்களுள் வேங்கட தேவ மகாராஜர் என்பவரும் இக்கோயிலில் அரிய திருப்பணிகள் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இவற்றையெல்லாம் ஆராய்ச்சிகளுக்கு விட்டுவிடுவோம். நாம், நம்பாடுவான் பாடிய நம்பியைத் தரிசித்து அதனால் அடையும் இன்பப் பேறுகளைப் பெற்ற திருப்தியோடேயே திரும்பி விடுவோம்.
30. சுசீந்திரம் தாணுமாலயன்
'உலகங்கள் எல்லாவற்றையும் இறைவன் உண்டாக்குகிறான் கொஞ்ச காலம் நிலைபெறச் செய்கிறான்; பின்னர் அவைகளை அழிக்கிறான்; இது அவனுக்கு விளையாட்டு. இந்த விளையாட்டானது காலத்தால் ஒரு தொடர்ச்சியாகவும், இடத்தினால் எங்கும் வியாபித்ததாயும் நடக்கிறது. நம்முடைய செயல் ஒவ்வொன்றும் அந்த விளையாட்டுக்கள் அடங்கியுள்ளளதுதான். அவனே நமக்குத் தலைவன். நமக்குப் புகலிடமும் அவனுடைய சரணங்களே' என்று விளக்கமாகக் கம்பன் ராமாவதாரம் என்னும் பார காவியம் எழுதத் தொடங்கும் முன்னர் பரம்பொருள் வணக்கம் செய்கிறான்.
உலகம் யாவையும்
தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும்
நீக்கலும் நீங்கலா
அலகிலா விளை
யாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே
சரண் நாங்களே.
என்பது அவனது பாட்டு. இதிலிருந்து உலகுக்கு எல்லாம் ஒருவனே இறைவன் என்பதை அறிகிறோம். அவனையே சிருஷ்டித் தொழில் செய்யும் போது பிரமன் என்கிறோம். காத்தல் தொழில் செய்யும்பொழுது விஷ்ணு என்கிறோம்; அழித்தல் செய்யும்பொழுது சிவன் என்கிறோம். இவர்களில் சிவன் விஷ்ணுவாக மாறுவதையும், விஷ்ணு சிவனாக மாறுவதையும் இருவரும் இணைந்து ஒரே கோலத்தில் இருப்பதையும் சில தலங்களில் முன்பே பார்த்திருக்கிறோம். ஆனால் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் ஒன்றாக இணைந்து நிற்கும் கோவத்தை-சிருஷ்டி திதி, சக்கரம் என்னும் முத்தொழில் செய்பவர்கள் மூவரும் இணைந்து நிற்கிற கோலத்தை நாம் இதுவரையில் காணவில்லை. அந்தத் தாணு, மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் கோலத்ைைதக் காண்பதற்குச் சுசீந்திரம் என்ற தலத்துக்குச் செல்ல வேண்டும்.
சுசீந்திரம் செல்ல, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து முதலில் நாகர்கோயில் செல்ல வேணும். அங்கிருந்து கன்யாகுமரி செல்லும் பாதையில் நாகர்கோவிலிலிருந்து மூன்று மைல் சென்றால் சுசீந்திரம் வந்து சேரலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலேயே செல்லலாம். இல்லையென்றால் பஸ்ஸிலேயே செல்லலாம். பழையாறு என்ற ஆற்றின் கரையில் இருக்கிறது சுசீந்திரம். ஆற்றின் தென் கரையிலிருந்து முந்நூறு அடி தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் வாயில் செல்லுமுன்பே கோயிலுக்கு உட்புறம் உள்ள தெப்பக் குளத்தைப் பார்க்கலாம். அங்கு இறங்கிக் கால் கைகளையெல்லாம் சுத்தம் செய்து கொள்ளலாம். கையில் காமரா இருந்தால் கோயில் கோபுரத்தையும் குளத்தையும் சேர்த்து ஒரு படம் பிடித்துக் கொள்ளலாம், நல்ல அழகான படமாக அது அமைவதைத்தான் பார்த்திருக்கிறோமே.
கோயில் வாயிலில் நூற்றி முப்பத்தி நான்கு அடி உயரமுள்ள கோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கும். இங்கேயுள்ள கோபுரத்தின் முன்னர் உள்ள மண்டபத்தின் மேல் முகப்பில் சுதையால் செய்த சிலைகள் உண்டு. நடுவில் சிவ பெருமான் இடபாரூடராய் தேவியோடு எழுந்தருளியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் மகாவிஷ்ணு கருடாரூடராய்க் காட்சி அளிக்கிறார். இனி மண்டபத்துள் நுழையலாம். இது 132 அடி நீளமும் 32 அடி அகலமும் 24 அடி உயரமும் உள்ள பெரிய மண்டபம், பெரிய பெரிய தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. தூண்களின் மேல், பாயும் சிங்கங்கள் இருக்கின்றன. மண்டபத்தின் மேற்குக்கோடி கூரைக்குக் கீழே பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து தவக்கோலத்தில் இருக்கும் சிலை ஒன்று இருக்கிறது. தேவியர் மூவரும் ஏன் தவம் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளத் தல வரலாற்றைக் கொஞ்சம் திருப்பவேணும்.
அத்திரி முனிவர் தம் மனைவி அனசூயாதேவியுடன் இங்குள்ள வனத்தில் வாழ்ந்திருக்கிறார். அனசூயை கற்பொழுக்கத்தில் சிறந்தவளாக இருந்திருக்கிறாள். அவளை ஆசிரமத்தில் விட்டு விட்டு அத்திரி இமயமலைக்குத் தலம் செய்யப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இச்சமயத்தில் நாரதர் கலகம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இரும்புக் கடலைகளைக் கொண்டு வந்து பார்வதி, லக்ஷிமி, சரஸ்வதி மூவரிடமும் கொடுத்து வேக வைத்துத் தரச் சொல்லியிருக்கிறார். அவர்கள் அது இயலாது என்று சொல்லவே அந்த இரும்புக் கடலைகளை அனசூயையிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அந்த அம்மையார், தமது கற்பின் மகிமையால் வேக வைத்துக் கொடுக்கிறார். இதைப் போய் தேவியர் மூவரிடமும் சொல்லிவைக்கிறார் நாரதர், தேவியர் ஏவிய வண்ணமே தேவர்கள் மூவரும் அன சூயையின் கற்பைப் பரிசோதிக்க வருகின்றனர், அத்திரி ஆசிரமத்துக்கு அகதிகளாக வந்தவர்களை உபசரித்து உணவு பரிமாற அனசூயை முனைகிறபோது, தேவர் மூவரும் அவள் பிறந்த மேனியாகவே தங்களுக்கு அன்னம் பரிமாற வேண்டும் என்கின்றனர். அனசூயையோ தன் கற்பின் மகிமையால் தேவர் மூவரையுமே மூன்று குழந்தைகளாக்கி அவர்களுக்குச் சோறூட்டுகிறாள். நாரதர் மூலம் விஷயம் தெரிகிறார்கள் தேவியர் மூவரும். உடனே மூவரும் அனசூயையிடம் வந்து தங்கள் கணவர்கள் சுயரூபம் அடையத் தவம் கிடக்கின்றனர். அனசூயை தேவர் மூவரையும் பழைய உருவங்களைப் பெறும்படி அருளுகிறாள். அவள் வேண்டிக்கொண்டபடியே தேவர் மூவரும் இணைந்து, ஒரே உருவத்தில் அந்தத் தலத்தில் தங்கி விடுகின்றனர், என்பது கதை.
தேவியர் தவம் செய்த காரணத்தைத் தெரிந்த கொள்ள முனைந்த நாம், தாணு. மால், அயன் மூவரும் இணைந்து நிற்கும் காரணத்தையுமே தெரிந்து கொண்டோம். இனி கோயிலுள் நுழையலாம். வாயிலைக் கடந்ததும் ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது இம்மண்டபம் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே மன்மதன், ரதி, அர்ச்சுனன், கர்ணன், முதலியோரது சிற்ப வடிவங்கள் இருக்கின்றன, ஊஞ்சல் மண்டபத்திலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வந்து கிழக்குச் சுற்றுக்குச் சென்றால் அங்கே தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தெற்குப் பிராகாரமும் கிழக்குப் பிராகாரமும் சந்திக்கும் இடத்தில் ஊட்டுப்புறை இருக்கிறது. தெற்குப் பிராகாரத்தின் ஆரம்பத்தில் வசந்த மண்டபம் உண்டு. அந்தப் பிராகாரத்தில்தான் நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர் முதலியோர் உள்ளனர். தெற்குப் பிராகாரத்தில் மேலக் கோடியில் ஐயனார் சந்நிதி. அதை ஒட்டியே ராமஸ்வாமி கோயில்.
ராமரும் சீதையும் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருக்கிறார்கள். லட்சுமணரும் அனுமாரும் கோயில் வாயிலில் நிற்கின்றனர். இந்த வடக்குப் பிராகாரத்திலே தான் சுப்பிரமணியர், காலபைரவர் எல்லாம். சங்கீதத் தூண்கள் வேறே இருக்கின்றன. இப்பிராகாரத்தின் வடகோடியில் சித்திர சபை. சித்திரசபையில் சுவரை ஒட்டிய பிராகாரத்திலே பெரிய ஆஞ்சநேயர் நிற்கிறார். கிட்டத்தட்ட பதினெட்டு அடி உயரத்தில் சிறந்த சிலை உருவில் கம்பீரமாக நிற்கிறார் அவர். சித்திர சபை ஆறடி உயரம் உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பத்திரண்டடி சதுரம் உடையது இம்மண்டபம், இங்கு கங்காளநாதர், காளி முதவியோர் கற்சிலைகளாக நிற்கின்றனர். இம்மண்டபத்தில் உள்ள சந்நிதியில் ஒரு கண்ணாடி வைக்கப்படிருக்கிறது. அதுவே நர்த்தன மூர்த்தியாகக் கருதப்படுகிறது.
ஊஞ்சல் மண்டபத்துக்குப் பின்னால் தாணுமாலயன் சந்நிதியை நோக்கி நந்தி இருக்கிறது. பன்னிரண்டு அடி உயரமுள்ள நந்தி சுதையால் அமைக்கப்பட்டதே. சந்தாசாகிபு இந்தப் பக்கம் வந்து இக்கோயிலில் உள்ள சிலைகளைப் பங்கப்படுத்தியபோது, இந் நந்தி அவன் கொடுத்த வைக்கோலைத் தின்று சாணம் போட்டது என்றும், அதன் பின்னரே அவன் சிலைகளை உடைப்பதை
சுசீந்திரம் கோயில் குளம்
நிறுத்தினான் என்றும் கர்ணபரம்பரை கூறுகிறது. நந்திக்குப் பக்கத்திலே கொன்றை மரத்தின் அடியிலே ஒரு லிங்கம். அனசூயையின் வேண்டுகோளுக்கிணங்கி மும்மூர்த்திகளே இங்கே லிங்கவடிவில் இருக்கின்றனர் என்பர். இந்தத் தலத்தின் தல விருட்சமும் கொன்றை மரம்தான்.
கொன்றை அடிநாதர் சந்நிதிக்குப் பக்கத்திலே கருடாழ்வார் சந்நிதி, இவற்றையெல்லாம் தரிசித்த பின்னரே துவஜஸ்தம்ப மண்டபத்தையும் கடந்து தாணுமாலயன் சந்நிதிக்கு வரவேணும், தாணுமாலயன் சந்நிதிக்குத் தென்புறமே விஷ்ணுவின் சந்நிதி, இங்கேதான் இங்குள்ள மண்டபங்களில் எல்லாம் பெரிய செண்பகராமன் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தை முப்பத்திரண்டு தூண்கள் தாங்குகின்றன. அத்தனை தூண்களிலும் அழகு அழகான சிற்பங்கள், செண்பகராமன் மண்டபம், உதயமார்த்தாண்ட மண்டபம் எல்லாம் கடந்தே தாணுமாலயனைத் தரிசிக்க வேணும். கருவறையில் தாணுமாலயன் லிங்க வடிவில் இருக்கிறார். திருமஞ்சனக் காலம் தவிர, மற்றைய நேரத்தில் கவசத்தால் மூடப்பட்டேயிருக்கும். இங்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பூமிக்குள் சென்று கன்னியாகுமரி தீர்த்தத்தில் கலந்து விடுவதாக நம்பிக்கை; இங்குள்ள கருவறையைச் சுற்றியே துர்க்கை, சங்கரநாராயணார் எல்லாம் இருக்கின்றனர்.
பக்கத்திலுள்ள வீரபாண்டியன் மண்டபத்தைக் கடந்தால் மகாவிஷ்ணுவின் சந்நிதிக்கு வருவோம். அவன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறான். எட்டு அடி உயரமுள்ள கம்பீரமான வடிவம். இந்த விஷ்ணு சிவ சந்நிதிகளுக்குப் பின்னுள்ள சுவரில் பள்ளிகொண்ட பெருமாள் வேறே இருக்கிறார். அவரையே அமர புஜங்கப் பெருமாள் என்பர். செண்பக ராமன் மண்டபத்துக்கு வடபுறம் இருக்கும் கோயில்தான் அறம் வளர்த்த அம்மையின் கோயில். இவள் செப்புச் சிலை வடிவில் இருக்கிறாள். தாணுமாலயனைத் தரிசிக்கப் பள்ளியறை நாச்சியார் என்ற வேளாள மாது தன் மகளுடன் வந்ததாகவும் அந்தப் பெண்ணைத் தாணுமாலயன் தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டதாகவும் அவளையே அறம் வளர்த்தாள் என்னு பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் வரலாறு. ஒவ்வொரு வருஷமும் மாசி மகத்தன்று தாணுமாலயருக்கும் அறம் வளர்த்தாளுக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவம் நடக்கிறது.
கோயிலை எல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டோம், இனி வெளியே வரலாம். ஆமாம், இக்கோயிலிலுள்ள மூர்த்தி தாணுமாலயன் ஆயிற்றே. இத்தலம் மட்டும் சுசீந்திரம் என்று பெயர் பெறுவானேன் என்று கேள்வி எழும் நம் உள்ளத்தில், அகலிகை கதை நமக்குத் தெரியும். இந்திரன் கௌதமரின் மனைவியான அகலிகையை விரும்பியதால் கௌதமர் அகலிகையைக் கல்லாகவும், இந்திரன் உடல் முழுவதும் யோனியாகவும் ஆகும்படி சபிக்கிறார். பின்னர் தேவர்கள் பிராத்தித்தபடி தேவேந்திரன் உடல் எல்லாம் கண்களாகும்படி சாபத்தை மாற்றுகிறார். அந்த இந்திரன் இத்தலத்துக்கே வந்து தவம் கிடந்து சாப விமோசனம் அடைகிறான். அவன் உடலும் சுத்திகரிக்கப்பட்டுப் பழைய உருவை அடைகிறான். இந்திரன் சுசி பெற்ற தலம் 'சுசி இந்திரம்' என்ற பெயரோடு வழங்குகிறது.
இங்குள்ள தாணுமாலயனை ஒவ்வொரு இரவும் தேவேந்திரனே பூஜை செய்கிறான் என்று ஒரு நம்பிக்கை. இங்கு அர்த்த ஜாம பூஜை கிடையாது. ஆனால் பூஜா திரவியங்களைச் சேகரித்து வைத்து விட்டு அர்ச்சகர்கள் நின்று கொள்வர். அர்த்தஜாம பூஜை அமராபதியால் நடப்பதால் மாலை பூஜை செய்தவர் மறுநாள் காலை கடைதிறக்கக் கூடாது என்பது கட்டளை. இது காரணமாக இங்கு பூஜைக்கு இருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில் கடை திறக்கும்போது 'அகம் கண்டது புறம் கூறேன்' என்று சத்தியம் செய்தே வாயில் திறக்க வேணும் என்பது உத்தரவு. தேவேந்திரன் கட்டளையிட்டபடியே இங்கு தாணுமாலயருக்கு, இக்கோயிலைக் கட்டினான் என்பது கர்ணபரம்பரை.
சேர மன்னர் பலர் இக்கோயிலை விரிவாக்கியிருக்கின்றனர். மண்டபங்கள், கற்சிலைகள் எல்லாம் விஜயநகர நாயக்க மன்னர்களால் மேலும் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும், இத்தலத்தில் தங்கள் புனிதத்தன்மையை நிலை நிறுத்தக் கொதிக்கும் நெய்யில் கை முக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இல் வழக்கத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவாங்கூரையாண்ட சுவாதித் திருநாள் ராமவர்ம ராஜாவே நிறுத்தியிருக்கிறார். இச்சுசீந்திரம் தாணுமாலயர் கோயில், திருவாங்கூர் மன்னர் ஆட்சியிலே இருந்து வந்திருக்கிறது. நாஞ்சில் நாடு தமிழ் நாட்டோடு இணைந்த போதுதான் இக்கோயிலும் தமிழகத்தோடு இணைந்திருக்கிறது. அது காரணமாகவே நாமும் இக்கோயிலுக்குச் சென்று, தாணு, மால், அயன் மூவரும் இணைந்த திருக்கோலத்தைக் கண்டு வணங்கும் பேற்றைப் பெறுகிறோம். கோயிலை விட்டு வெளியே வரும்போது கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாடிய சுசிந்தை மாலைப் பாடலையும் பாடிக் கொண்டே வரலாம்.
திங்கள் உன் கருணை காட்டும் - .
தீக்கண் உன் வெகுளி காட்டும்
கங்கை உன் பெருமை காட்டும்
கடுவும் உன் ஆண்மை காட்டும்
சிங்கம் நுண் இடையைக் காட்டச்
சிறையனம் நடையைக் காட்டும்
மங்கையோர் பாகா! தாணு
மாலயா சுசிந்தை வாழ்வே
என்பது பாடல் பாடலைப் படிக்கப் படிக்கச் சுவையாக இருப்பதில் வியப்பில்லை !
31. கன்னிக் குமரி
'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சி. அந்த முயற்சியில் இந்திரிய ஆசைகளை ஒடுக்குவதற்கான பல பயிற்சிகள் அடங்கியுள்ளன. அந்தப் பயிற்சிகள் எல்லாவற்றுக்கும், சகிப்புத்தன்மையும் கலங்காத உள்ளம் உடைமையுமே அடிப்படை. இந்தச் சகிப்புத் தன்மையில் நிலைத்து நின்றால்தான் ஆன்ம சக்திகள் வளர்ந்து தவ வலிமையும் ஞானமும் உண்டாகும். அதன் பின் ஒருவன் நாடுகின்ற மெய்ப்பொருள் கிட்டும்' என்று தவத்தின் பெருமையைப் பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அன்று இமவான் மகளான உமை கைலையில் உள்ள பரமேச்சுவரனை நோக்கித் தவம் கிடக்கிறாள், அவனையே காதலனாக அடைய. அந்தத் தவ மகிமையால் அவனையே கணவனாகப் பெறுகிறாள். ஆனால் அவளே இந்திய நாட்டின் தெற்குக் கோடியில் குமரிமுனையில் நின்று தவம் செய்கிறாள்.
இந்தத் தவம் மக்களையெல்லாம் உய்விக்க என்று அறிகிறபோது நாம் அன்னையின் கருணையை வியக்கிறோம். அன்னைக்கும் அத்தனுக்கும், தலம் தோறும் திருக் கல்யாணம் நடத்தி, அந்தக் கல்யாணக் கோலத்தை எல்லாம் கண்டு மகிழ்ந்த தமிழன், அன்னையை ஒரு நல்ல தவக் கோலத்திலும் நிறுத்திப் பார்க்க எண்ணுகிறான். கணவன் மனைவி குழந்தை குட்டிகள் என்று ஏற்பட்டு விட்டால், அன்னைக்கு உலக மக்களைப் பற்றி, அவர்தம் குறைகளைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரம் ஏது? அவள் கன்னிப் பெண்ணாக-எண்ணியதையெல்லாம் பெறும் தவம் செய்யும் தெய்வமாக இருந்தால் வேண்டுவன எல்லாம் கொடுக்க இயலும் அல்லவா? ஆதலால் தான் அன்னை பகவதி என்றும் கன்னியாக, அழகான குமரியாக, நின்று தவம் செய்து அருள் புரிகிறாள். அவள் அப்படி தவம் செய்யும் தலமே கன்னியாகுமரி. அந்தக் குமரிமுனைக்கே செல்கிறோம் நாம் இன்று.
கன்னியாகுமரி செல்வதற்கு, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலை விட்டு இறங்கி, கிட்டதட்ட ஐம்பத்திரண்டு மைல் காரிலோ, பஸ்ஸிலோ போக வேணும். காரிலே போனாலும், பஸ்ஸலேபோனாலும், நேரே குமரிக்குச் செல்ல வழியுண்டு. இல்லாவிட்டால் நாகர்கோவில் போய் அங்கிருந்து செல்லலாம். ஊருக்கு வடபுறம் மேடான பிரதேசத்தில் கார் நின்று விடும்; அதன்பின் சரிவாக இறங்கும் பாதை வழியாகத்தான் கன்னிக்குமரியின் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி எல்லை
என்று பாரதி பாடிய பாட்டு அப்போது ஞாபகத்துக்கு வரும். தமிழ் நாட்டின், ஏன், இந்திய நாட்டின் தெற்கெல்லையே இக்குமரிமுனைதானே? ஆதலால் நேரே அக்குமரி முனைக்கே செல்லலாம். அங்கு அரபிக்கடல், வங்காளக்குடாக் கடல், இந்து மகா சமுத்திரம் மூன்றும் சேர்ந்து அலை வீசிக்கொண்டிருக்கும். சாதாரண நாளானால் அம்முனையில் நின்றே காலையில் சூரியன் கடலில் இருந்த எழுகின்ற காட்சியைக் காணலாம். அது போலவே மாலையில் சூரியன் கடலில் குளிப்பதைக் கண்டு மகிழலாம்.
நீங்கள் அதிஷ்டக்காரர்களாக இருந்து, நீங்கள் செல்லும் தினம் பௌர்ணமியாக இருந்து விட்டாலோ, சூரியாஸ்தமனத்தையும் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காணும் பேறு பெறலாம். இந்தக் காட்சிகளைக் காண்பதற்கென்றே கன்னியாகுமரிக்கு ஒரு நடை நடக்கலாம். ஆனால் நாமோ நமது க்ஷேத்திராடனத்தில், குமரி முனையில் இருந்து தவம் செய்யும் பகவதியம்மையைக் கண்டு தரிசிக்க வந்தவர்கள் ஆயிற்றே! ஆதலால் கோயிலை நோக்கியே நடக்கலாம். கோயிலுள் செல்லுமுன் இந்த அம்மை இங்கு தவம் செய்வதைப் பற்றி நாட்டில் எழுந்திருக்கும் பல கதைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கதை; பரத கண்டத்தை ஆண்ட ஆதிப்பரத மன்னனது புதல்வர் எட்டுப்பேர்; ஆனால் குமரி என்று ஒரே புதல்வி. ஏழு அண்ணன்மாருக்கு ஒரு தங்கை வள்ளி என்றால், எட்டு அண்ணன்மாருக்கு ஒரு தங்கையாகக் குமரி பிறக்கிறாள்; வளர்கிறாள், எட்டு ஆண்மக்களுக்கும் ஒரு பெண்மகளுக்கும் நாட்டைப் பங்கிட்டுக் கொடுக்கிறான் பரதன், குமரியிலிருந்து ஆண்ட இடமே இன்றைய குமரிமுனை என்கிறது ஒரு கதை.
அன்னை செய்யும் தவத்தைக் குறித்தும் ஒரு கதை; வசுதேவரையும் தேவகியையும் கம்ஸன் சிறையில் அடைத்து விடுகிறான். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் கொன்று தீர்க்கிறான். அப்படிப் பிறக்கும் குழந்தை ஒன்றினால்தான் அவனுக்கு மரணம் என்று சோதிடர்கள் கூறி விடுவதால், ஏழு குழந்தைகளை இப்படிப் பறிகொடுத்த தேவகிக்குக் கண்ணன் பிறக்கிறான் சிறையில். வசுதேவருக்கு இந்தப் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. இரவோடு இரவாக யமுனையைக் கடந்து, கோகுலத்தில் யசோதையிடம் கண்ணனைச் சேர்த்து விடுகிறார். அங்கு பிறந்திருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் பக்கத்தில் கிடத்தி விடுகிறார். கம்ஸன் வந்து இந்தப் பிள்ளையை எடுத்துச் சென்று அதனைக் கொல்ல விழைகிறான். ஆனால் அந்தத் தெய்வக் குழந்தையோ அவனை இகழ்ந்து உதைத்துத் தள்ளிவிட்டு, அந்தரத்திலே மறைகிறது. இப்படி மறைந்த குழந்தையே திருமாலின் தங்கையான எல்லாம் வல்ல சக்தி. அந்த சக்தியே பகவதி என்னும் திருநாமத்தோடு இந்தக் கடற்கரையில் கையில் இலுப்பைப் பூ மாலை தாங்கிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். என்றும் கன்னியாக, குமரியாக நின்று தவம் செய்யும் பகவதியைத்தான் இன்று குமரி என்று வந்தித்து வணங்குகிறோம் நாம்.
இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் வேறொரு கதையும் உண்டு. பகன், மூகன் என்று இரண்டு அசுரர்கள் தேவர்களுக்கு இடுக்கண் செய்கிறார்கள். தேவர்கள் முறையிட இறைவன் தன்னுடைய சக்தியை இரு கூறாக்கி இரண்டு பெண் தெய்வங்களாக உருவாக்குகிறார். இந்தச் சக்தியில் ஒன்றே வடகோடியில் கங்கைக்
கன்னிக் குமரி
கரையில் காளியாகவும், மற்றொன்று தென் கோடியில் கடற்கரையில் குமரியாகவும் நின்று நம்மைக் காக்கிறார்கள். பகனுடனும் மூகனுடனும் போர் புரிந்து வெல்கிறார்கள். தேவர்கள் இடுக்கண் தீர்கிறார்கள். புரட்டாசி மாதம் சிவராத்திரி உற்சவத்தில் அம்மை, உச்சைசிரவஸ் என்னும் அமராபதியின் அசுவத்தில் அமர்ந்து போர்க்களம் செல்வதை 'அம்பு சாத்தல்' என்ற பெயரோடு விழா நடத்துகிறார்கள். இக்கதைகள் எல்லாம் எப்படியும் இருக்கட்டும். அன்னை பகவதி குமரி முனையில் நின்று தவம் செய்து அதனால் தவ வலிமை பெறுவது மக்களை உய்விக்கவே என்ற எண்ணத்தோடேயே கோயிலுள் நுழையலாம். கோயில் மிகவும் பெரிய கோயிலும் அல்ல; சிறிய கோயிலும் அல்ல. கடல் ஓரமாக உள்ள பெரு வெளியில் நான்கு புறமும் மதில் அமைத்துக் கோயில் கட்டியிருக்கிறார்கள். கோயிலின் பிரதான வாயில் வட பக்கம் இருக்கிறது. முதலில் ஒரு பெரிய பிராகாரம் உண்டு. அதை அடுத்தே துவஜஸ்தம்பம், பலி பீடம் முதலியன இருக்கின்றன. பகவதி அம்மை தினமும் இப்பிராகாரத்தைச் சுற்றி வருவாள். இந்தப் பிராகாரத்தை ஒட்டியே ஊஞ்சல் மண்டபம் இருக்கிறது. இதற்குள்ளே உள்ள அடுத்த பிராகாரம்தான் உள் பிராகாரம்; அங்கே மணிமண்டபமும், சபா மண்டபமும் இருக்கின்றன. மணிமண்டபத்தை ஆறு வட்டத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. மண்டபத்துச் சுவரின் மேல் வரிசையில் புராணச் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. மண்டபத்தின் மேற்புறத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேலே உள்ள உள் மண்டபத்தில்தான் கன்னிக்குமரி தவக் கோலத்தில் நிற்கிறாள், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில். இவள் கிரீடத்தில் பிறைச்சந்திரன் ஒளி தருகிறான். இவள் அணிந்திருக்கும் அணிகளில் வைர மூக்குத்தி மிகமிகப் பிரகாசமானது. கடலில் பிரயாணம் செய்பவர்க்குக் கலங்கரை விளக்குப் போல் ஒளிதரும் என்று உபசாரமாகக் கூறுவதும் உண்டு. வலக்கையில் மாலை தாங்கி, இடக்கையைத் தொடையில் பொருத்தி நிற்கிற எழில் சொல்லும் திறத்தது அன்று. அம்மையைக் கண் குளிரத் தரிசித்துவிட்டு திரும்பும்போது நம்முடைய உள்ளம் நிறைவுபெறும்; உடல் புளகிக்கும்.
இவளது அழகை அறிந்த அந்தச் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன், இவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறார். அதற்காக தேவர்களைக் கூட்டி தம் விருப்பத்தை வெளியிடுகிறார். தேவர்கள் எல்லாம் வந்து கூடிய இடமே சுசீந்திரத்தில் கன்னியம்பலம் என்று வழங்குகிறது. தாணுமாலயன் விருப்பம் அறிந்த தேவர்கள் மனம் கலங்குகிறார்கள். கன்னிக்குமரி திருமணம் செய்து கொண்டால் அவள் தவம் பழுதாகிவிடுமே, பின்னர் அசுரர்களை அழிக்க முடியாதே என்று வருந்துகின்றனர். இந்தச் சமயத்தில் நாரதர் வந்து, தேவர்களையெல்லாம் சமாதானம் செய்து. தாமே திருமணத்தை முன்னின்று செய்து வைப்பதாகச் சொல்கிறார். அவர் தாணுமாலயனிடம், கல்யாணத்துக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார். ஒன்று, கண்ணில்லாத் தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லாக் கரும்பு, இதழ் இல்லா புஷ்பம் இவற்றைச் சீதனப் பொருள்களாகக் கொண்டு வரவேண்டும் என்பது. இரண்டாவது, திருமண முகூர்த்தம் சூரிய உதயத்தில்; அதற்கு ஒரு நாழிகை முன்னமேயே மணமகன் மணவறைக்கு வந்துவிடவேண்டும் என்பது. மணமகனான தாணுமாலயன் இதற்கெல்லாம் அஞ்சாமல் கேட்ட பொருள்களையெல்லாம் வண்டி வண்டியா அனுப்பி வைக்கிறார். இடையில் உள்ள ஐந்து மைல் தூரத்தைக் கடக்க அர்த்த ராத்திரியே புறப்பட்டு விடுகிறார். நாரதர் பார்க்கிறார். உடனே சேவல் உருவெடுத்து சூரிய உதயத்தை அறிவிக்கும் உதயராகத்தைக் 'கொக்கரக்கோ' என்று கூவி அறிவித்து விடுகிறார். முகூர்த்த நேரம் தவறிவிட்டது. தாம் வழுக்கி விட்டோம் என்ற அவமானத்தோடேயே தாணுமாலயன் மேற் செல்லாமல் சுசீந்திரத்துக்குத் திரும்பி விடுகிறார்; இப்படி இவர் திரும்பிய இடமே இன்றும் வழுக்குப் பாறை என வழங்குகிறது.
சுசீந்திரத்துக்குக் கிழக்கே ஒரு மைலில் இந்த வழுக்குப் பாறை இருக்கிறது. இதில் சேவற் கோழியின் கால் தடமும், தாணுமாலயனது திருவடித் தடமும் காணப்படுகின்றன என்பர். இப்படி பகவதி தாணுமாலயன் திருமணம் தடைப்பட்டு விடுகிறது. அன்னை பகவதியின் தவம் தொடர்ந்து நடக்கிறது. அவளுக்கு வந்த பரிசுப் பொருள்களான பொன்னும் மணியும், நெல்லும் கரும்புமே இன்று குமரிக் கரையில் பல நிற மணல்களாகவும் பல குன்றுகளாகவும் பரந்து கிடக்கின்றன என்று கூறுவார்கள்.
கன்னிக்குமரியைத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பலபடக் கூறும். நெடியோன் குன்றம் தமிழ்நாட்டின் வட எல்லை என்றால் தொடியோள் பௌவம் தமிழ் நாட்டின் தெற்கெல்லை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பஞ்ச நாரி தீர்த்தங்களில் கன்னியாகுமரி கன்னி தீர்த்தம் என்னும் சிறப்புப் பெற்றது; 'குரங்கு செய் கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுவதால் ராமர் கட்டிய சேது. இவ்வளவு தூரம் பரவி இருந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. வட நாட்டிலிருந்து பலர் தென் திசைக் குமரியாட வருவார் என்பதும் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். ஆதியில் பாண்டியனிடமே இக்குமரித்துறை இருந்திருக்கிறது. குமரித்துறைவன் என்றே அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். அதன் பின்னரே சோழர் சேரர் ஆதிக்கம் இங்கு பரவியிருக்கிறது. குமரிக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்ததென்றும் அதுவே குமரிக் கண்டம் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். நாம் வந்தது ஆராய்ச்சி செய்ய அல்ல, அன்னை பகவதியைக் கண்டு தரிசிக்க. தரிசிக்கு முன்பே குமரித் துறையாடி, நம் பாவச் சுமைகளைக் களைந்து விட்ட அன்னையின் அருள் பெற்று வீடு திரும்புவோம். அது போதும் நமக்கு. நன்றி உரை
எனது தல யாத்திரைக் கட்டுரைகள் கிட்டத்தட்ட இருபத்தெட்டு மாதங்கள் தொடர்ந்து 'கல்கி'யில் வெளிவந்தன. இந்த இருபத்தெட்டு மாதங்களில் 120 தலங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில், கோயிலில் உள்ள மூர்த்தி, சிற்பச் செல்வங்கள் எல்லாவற்றையும் கண்டு வந்திருக்கிறோம். வாசக நேயர்கள் சிரமமில்லாமலேயே இத்தனை தல யாத்திரைகளையும் மானசீகமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். வாசகர்களை இத்தனை தலங்களுக்கும் அழைத்துச் செல்ல நான் இருபது வருஷ காலமாக இந்த யாத்திரையைச் செய்திருக்கிறேன். அன்பர் பலர், அதிலும் பெண் மக்கள் பலர் இத்தலயாத்திரைக் கட்டுரைகளைக் கூர்ந்து படித்திருக்கிறார்கள். பலர் பாராட்டிக் கடிதங்கள் எழுதி உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள், இன்னும் வடநாட்டுத் தலங்களுக்கும் இப்படி ஒரு யாத்திரை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறை அருள் கூட்டுவித்தால் அந்த யாத்திரையையுமே தொடங்குவோம், கொஞ்ச நாட்கள் கழித்து. கல்கி ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பணி சிறப்புடன் நிறைவேற உதவிய வேங்கடவனுக்கும் கன்னிக்குமரிக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.